சங்க இலக்கியத்தில் பாலைத்திணை மரங்கள் - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -
முன்னுரை
பண்டைய தமிழர் விலங்கியல், தாவரவியல் பற்றிய புலமை பெற்றிருந்தனர். ஓரறிவு முதலான உயிர்களைக் குறித்த செய்திகள் தொல்காப்பியம் தொடங்கி சங்ககாலம், சங்க மருவிய இலக்கியங்கள் ஆகியவற்றில் காணக்கிடக்கின்றன. அவை நேரடியாகவும் மறைமுகமாகவும் அடைமொழியாகவும், உவமைகள் வாயிலாகவும் கூறப்படுகின்றன. குறிப்பாக உயிரினங்களோடு இயைந்த தமிழர் தம் வாழ்வியல் தொடர்பையும் உயிரினங்கள் பற்றிய வாழ்வியல் பதிவுகளையும் சங்க இலக்கியம் விரிவாக விளக்கிக் காட்டியுள்ளது. அவற்றில் மரங்களின் வகைகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பாலை நிலம்
காதலால் கூடிக் கலந்த இருவரது பிரிவு ஒழுக்கத்தினைக் குறிப்பது பாலைத்திணையாகும். இவை அகத்திணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கோடைக்காலத்தில் எங்கும் வெப்பம் பொறுக்கமுடியாத நண்பகலில் மரங்களெல்லாம் காய்ந்து கரிந்து நிற்கும் வெஞ்சுரம் மழையே இல்லாத கொடிய நிலம் என்று பாலை நிலம் பற்றிக் குறிப்பிடுவர்.
குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை என்ற நான்கு திணைக்கும் நிலம் வகுத்த தொல்காப்பியர் பாலை என்றோர் நிலம் வகுக்கவில்லை.இதனை,
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் (தொல்.பொருள்.5)
எனும் சூத்திரம் வழி தெரிந்து கொள்ளமுடிகிறது.