கனடாத் தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகளைப் பொறுத்தவரையில் பலர் அதற்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். இவர்களைப் பட்டியலிட்டால் ஒரு பக்கம் போதாது. பொதுவாகக் கனடாச் சிறுகதைகளைப் பற்றி எழுதிய இலக்கியத் திறனாய்வாளர்களில் பலர் தவிர்த்திருக்கும் எழுத்தாளர் ஒருவர் தவிர்க்கப்பட முடியாதவர். அவர் குறைவாகவே சிறுகதைகள் எழுதியிருந்தாலும், கனடாவில் சிறுகதைகள் வளர, வளம் பெறப் பங்களிப்பு செய்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர். கலை, இலக்கிய, அரசியல் இதழான, பத்திரிகையான 'தாயகம்' பத்திரிகையின் , சஞ்சிகையின் ஆசிரியராக விளங்கிய எழுத்தாளர் ஜோர்ஜ். இ.குருஷேவைத்தான் குறிப்பிடுகின்றேன்.
- எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ் -
இவரது முக்கியமான ஆரம்பக் காலத்துச் சிறுகதையொன்று அது கூறும் பொருளையிட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று தமிழர்களின் ஆயுத ரீதியிலான யுத்தம் முடிந்து விட்டது. ஆனால் யுத்தம் முடிந்து இன்று வரையில் அக்காலகட்டத்துத் தவறுகளை, மனித உரிமை மீறல்களையிட்டு இன்னும் நாம் விரிவாக ஆராயவில்லை. சுய பரிசோதனை செய்யவில்லை. மிகவும் எளிதாகக் கண்களை மூடிக்கொண்டு கடந்து செல்கின்றோம்.
ஆனால் யுத்தம் பெரிதாக வெடித்த காலகட்டத்திலேயே இவர் அதில் இடம் பெற்றிருந்த தவறுகளுக்கெதிராகப் பலமாகக் குரல்கொடுத்திருக்கின்றார். அவற்றைக் களைய வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். போராட்டம் என்னும் பெயரில் ஆளுக்காள் ,ஒருவரையொருவர் துரோகிகளாக்கி மண்டையில் போட்டிக்கொண்டிருந்த காலகட்டத்தைக் கடுமையாக விமர்சிக்கும் இவரது சிறுகதையான 'ஒரு துரோகியின் இறுதிக் கணங்கள்’ கருத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டிருக்கும் கதையென்றாலும், அதன் பொருளையிட்டு முக்கியமானது.
துரோகியாக்கப்பட்டு மண்டையிலை போடப்பட்ட ஒருவன் தன் கதையை விபரிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் கதை வாசிப்பவர் உள்ளங்களை உலுப்பும் தன்மை மிக்கது. எளிய நடையில் பின்னப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே மின்னும் வசனங்கள் வாசிப்பவர் உள்ளங்களைத் தட்டி எழுப்புவை.
'ஐயா, அமைதியாய் அன்றாடம் கஞ்சியைக் குடித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு இந்தப் போர் அர்த்தம் இல்லாதது. ஆனால் மனிதன் சுதந்திரம் அடைய வேண்டும். சுதந்திரம்... இவர்கள் வரையறுத்த சுதந்திரம் அல்ல.. சுதந்திரம் வெறும் பூகோள எல்லைகளுக்குள் வகுக்கப்பட்ட சுதந்திரம் அல்ல. உக்கிப் போன இந்த மனங்களுக்கு , சிந்தனைக்குள் சிறைப்பட்டுப் போயிருக்கும் இந்த உயிர்களுக்குக் கிடைக்க வேண்டிய சுதந்திரம்'
'வெறும் சுவரொட்டிகள் விடுதலையைப் பெற்றுத் தருமா? எனது குரல் தனித்ததால்தான் நான் இறந்து போனேன். நான் பேசும் போதெல்லாம் நீங்கள் கருத்துச் சொல்ல வந்தீர்கள். நான் குரல் கொடுத்தபோது நீங்கள் மறைந்து போனீர்கள். நீங்களும் என்னோடு இருந்திருந்தால்...எங்கள் குரல் உயர்ந்திருக்கும்'
'இந்தச் செம்பாட்டு மண்ணில் இரும்பு அதிகமாமே. சிந்திய இரத்தம் செறிந்ததாலோ?"
இவ்விதமான கூற்றுகள் இக்கதையை வாசித்த பின்னரும் வாசகர்தம் என்ணங்களில் நிலைத்திருக்கும், சிந்திக்க வைக்கும்.
இச்சிறுகதை அக்கால அரசியற் சூழலை மட்டும் விமர்சிக்கவில்லை. அச்சூழலில் நிகழ்ந்த அநியாயங்களைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சமூகத்தையும் விமர்சிக்கின்றது.
இறந்தவர் பார்வையில் இலங்கையின் மூத்த எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் 'புகையில் தெரிந்த முகம்' படைத்திருக்கின்றார். நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளரான ஒரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு' நாவலும் இறந்தவர் பார்வையில் விரியும் நாவலே. அவ்வகையில் 'ஜோர்ஜ் இ.குருஷேவி'ன் ஒரு துரோகியின் இறுதிக்கணங்கள் சிறுகதையும் அத்தகையதே. இச்சிறுகதையை விரிவான ஒரு நாவலாக எழுதினால் அது முக்கியமானதொரு நாவலாக அமையும் சாத்தியமுண்டு.
மார்கழி 1989 வெளியான தேடல் சஞ்சிகையில் பிரசுரமான கதையினை வாசிக்க விரும்பினால் அதனைப் பின்வரும் இணைய இணைப்பில் வாசிக்கலாம் - https://noolaham.net/project/51/5030/5030.pdf