நெறியாளர்: முனைவர். ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை ஆய்வுத் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் – 635 601

- எழுத்தாளர் பாமா -
தலித் இலக்கியம் தோன்றிய காலம் முதல் இன்று வரை பல்வேறு இலக்கியங்கள் தோன்றிவிட்டன. காலத்திற்கேற்றவாறு தீண்டாமைகள், ஏற்றத்தாழ்வுகள் நவீனமயமாக்கப்பட்டு செல்கின்றன. எவையாக இருப்பினும் அவற்றை அறிந்து அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்ய வேண்டும். அந்த வகையில் சமூகத்தில் நிகழும் அவலங்களை ஆவணப்படுத்தும் வகையில் தன்னுடையச் சிறுகதைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தவர் தலித் பெண் எழுத்தாளர் பாமா. அவர் 'ஒரு தாத்தாவும் எருமையும்' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலில் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு விதமான வாழ்வியல் சிக்கல்களைச் சமூகத்திற்கு நேரடியாக சித்திரித்தவர். தன்னுடைய படைப்புகளில் யதார்த்தமானக் கதைப் பாத்திரங்களைக் கொண்டு சாதி என்னும் சமூக கட்டமைப்பை உடைக்க முயற்சித்தவர். தலித் என்று அடையாளப்படுத்தும் தலித் மக்களின் அடக்குமுறைகளையும், ஒடுக்கு முறைகளையும் உடைத்தெறிய பல்வேறு பரிணாமங்களில் பயணித்தவர். .
சாதிரீதியான ஒடுக்குமுறையால் ஏற்பட்ட நிலமைகள் அடிப்படையில் தலித் மக்கள் வறுமையாலும் தீண்டாமை போன்ற கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணாச்சி சிறுகதையில் ‘‘ஒரு பறத் தாயாளியாடா எனிய அண்ணாச்சின்னு சொல்லுறது“1 என்று மேல் சாதிக்காரர் ஜெயசங்கரின் கூற்று மரியாதை நிமித்தம் காரணமாகக் கூட அண்ணாச்சி என்று தலித் மக்கள் மேல் சாதிக்காரரை அழைப்பதற்குத் தடையிருந்த நிலையை உணர்த்துகிறது. மேலும், சக மனித உரையாடல் உரிமையை மறுக்கபட்டிருந்த நிலையைக் காட்டுகிறது. “பார்ப்பனரல்லாதாரிடமிருக்கும் கொடுமை பார்ப்பனர்கள் காட்டும் கொடுமைகளை விட சில விஷயங்களில் சற்று அதிகம் என்றே சொல்ல வேண்டும்”2 என்ற வாக்கியத்தில் கூறப்பட்டுள்ள அதிகமான கொடுமைகளுள் மேல் சாதிக்காரை உறவுமுறை வைத்து கூறுவது தவறு என்று சொல்லும் கொடுமையும் ஒன்றாகும்.
“பணம் வசதி இருந்தா மட்டும் போதுமாங்க சாதியில்லன்னு ஆகிப் போகுமா எம்புட்டுப் பணம் இருந்தாலும் கீச்சாதி கீச்சாதி தாங்க. இவுங்களுக்குப் பணம் இப்ப வந்ததுங்க”3 என்று பச்சையம்மா சகுந்தலாவிடம் கூறுகிறாள். அப்போது தலித் மக்கள் எத்தகைய உயர்ந்தப் பொருளாதாரம் பெற்று பதவிரீதியில், பொருளாதாரரீதியில் உயர்ந்தாலும் தீண்டாமை என்ற ஒடுக்குமுறை தலித் மக்களிடம் இன்றும் நிலவிக் கொண்டுதான் வருகிறது. அப்போது பார்க்கையில் நவீனமயமாக்கப்பட்ட இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுகளிலும் தலித் மக்களைப் பார்க்கும் பார்வை புறத்தில் உயர்ந்த மாதிரி இருந்தாலும் அகத்தில் தலித் மக்கள் குறித்த மனநிலை முன்னேறவில்லை. தீண்டாமை நிலை தோன்றவதற்கு அடிப்படையாக இருப்பது தீட்டு, சுத்தமின்மை போன்ற கருத்தாக்கங்கள் ஆகும். இக்கருத்தாக்கங்கள் ஒரு தலைபட்சமாக தலித் மக்களின்மேல் சுமத்தப்படுகின்றன. பச்சையம்மா தலித் மக்களை வீட்டில் விட்டால் நல்ல காரியம் விளங்குமா என்று கூறும் இடத்தில் பிராமணர்களின் கொள்கைத் தாக்கம் அனைத்துச் சாதியினரிடமும் பரவச் செய்துள்ளனர். தீண்டாமை என்ற பூட்டிற்குத் தீட்டு, சுத்தமின்மை என்ற சாவி உருவாக்கப்பட்டு கடவுள் என்ற பெயரால் பூட்டி சாவியைத் தூக்கி வீசி அடிக்கப்பட்டார்கள். தலித் இனத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் பொருளாதார ரீதியில் சமுதாயத்தில் உயர்ந்து வாழ்கிறார். ஆனால் பச்சையம்மா எவ்வளவு பொருளாதாரம் ஈட்டி அதனைத் தக்க வைத்து வாழ்ந்தாலும் அவர்கள் கீழ்ச்சாதிகாரர் என்று கூறுவதில் பொருளாதாரத்திற்கும் தீண்டாமைக்கும் சம்பந்தம் இல்லை என்று புரிகிறது. “முந்தைய காலங்களில் தலித்துக்களைப் பிறர் தொடுவதும் அவர்கள் மற்றவர்களைத் தொடுவதும் அனுமதிக்கப்படாத நிலையும்; அதைத் தொடர்ந்து பிற சாதியினர் வாழும் வீதிகளுக்குள்ளும் அவர்களது வீடுகளுக்குள்ளும் தலித்துக்கள் அனுமதிக்கப்படாத நிலையும் நிலவின”4 தலித் மக்கள் மேல் சாதியினர் வாழும் வீடுகளுக்குள்ளும், வீதிகளுக்குள்ளும் செல்ல அனுமதி இல்லாமல் இருப்பதைத் தெரிவிக்கிறது. எனவே, தலித் மக்கள் படித்து மேல்சாதிக்காரர்களுக்குச் சமமாக பொருளாதாரம் ஈட்டி அதனைத் தக்க வைத்து வாழ்ந்தாலும் அவர்களுடைய இறந்த காலத்தை நினைவூட்டி இழிவுச் செய்யப்படுகிறார்கள்.