டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' எனக்கு மிகவும் பிடித்த அவரது நாவல்! - வ.ந.கிரிதரன் -
(ஓவியம் - AI)
செப்டம்பர் 9 என் அபிமான எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான டால்ஸ்ட்டாயின் பிறந்த நாள். அவரது நாவல்கள் எல்லாமே சிறந்த படைப்புகள். உலக இலக்கியத்தில் முதல் தரப்பில் வைத்துப் போற்றப்படுபவை.
இவரது படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த படைப்பாகப் புத்துயிர்ப்பு (Resurrection) நாவலைக் கூறுவேன். அதற்கு முக்கிய காரணம் அது அறிமுகமானபொது எம் நாடிருந்த சூழல். எண்பதுகளின் ஆரம்பம். நாட்டில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆயுதமயப்படத்தொடங்கியிருந்த காலகட்டம். இளைஞர்கள் மக்கள் பற்றி, தொழிலாளர், விவசாயிகள் பற்றி, மார்க்சியம் பற்றியெல்லாம் சிந்திக்கத்தொடங்கியிருந்த காலம்.
டால்ஸ்டாய் மதவாதியாக இருந்தபோதும், தன் புனைகதைகளின் இறுதியில் மதரீதியிலான தீர்வினை எடுத்துரைத்தபோதும், அவரது கதைகளில் மானுடரின் வாழ்க்கை, வர்க்க வேறுபாடுகள் ஏற்படுத்தும் மானுடர் மீதான பாதிப்புகள், சமூக அநீதி கண்டு கொதிக்கும் மானுடச் சிந்தனைகள் இவையெல்லாம் நிறையவே இருக்கும். அவை என்னை மிகவும் கவர்ந்தவை.