பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஏற்பாட்டில் நடந்த ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு! - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
2021இல் பதினொரு மணிநேரம் இணைய வழியில் சிறப்புற நிகழ்ந்த பேராதனைத் தமிழ்த்துறையின் 5ஆவது சர்வதேசத் தமிழியல் மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி நூல் குறித்து இந்தியத் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான அம்ஷன் குமார் எழுதிய கட்டுரை 'எதிர்ப்புக் குரல்களை முன்னிறுத்தும் ஈழத் தமிழ் நாடகங்கள்'
(பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஏற்பாடு செய்த ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு 2021 டிசம்பர் 15 ஆம் திகதியன்று இணையவழியூடாக, காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டினை நேரடியாக நடத்தத் திட்டமிட்டிருந்த போதும் அது இயலாமல் போனது. உலகளாவிய ரீதியில் பரவிய கொரோனாப் பெருந்தொற்றினால் இலங்கையும் அடிக்கடி பொதுமுடக்கங்களை எதிர்கொண்டு இயல்புவாழ்க்கை பாதிப்புற்ற நிலையில், இம்மாநாட்டினை இணையவழியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
”ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம்” என்பதைப் பிரதான தொனிப்பொருளாகக் கொண்டமைந்தது ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டு. ஆய்வுக்கட்டுரைகள் பொதுவெளியில் கோரப்பட்ட போது, ஒழுங்கமைப்புக் குழுவினருக்குக் கிடைத்த ஆய்வுக்கட்டுரைகள் புலமையாளர் குழுவினால் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு தரத்தின் அடிப்படையில் 29 கட்டுரைகள் மட்டுமே ஏற்கப்பட்டன. மாநாட்டில் அவற்றை அளிக்கை செய்வதற்கான அனுமதி ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது.
திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்த, மாநாட்டினைத் ஆரம்பித்து வைத்த தமிழ்த்துறையின் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையுரையை ஆற்றினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் எம். டி. லமாவன்ச மற்றும் கலைப்பீடத்தின் பீடாதிபதியான கலாநிதி ஈ. எம். பி. சி. எஸ். ஏக்கநாயக்க ஆகியோர் முறையே பிரதம அதிதி, சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு உரையாற்றியதோடு, தமிழ்த்துறையின் இச்சிறப்பான முன்னெடுப்பினை வாழ்த்தி மகிழ்ந்தனர். அத்தொடக்க நிகழ்வில் இடம்பெற்ற ஆதார சுருதி உரையினைப் பேராசிரியர் சி. மௌனகுரு நிகழ்த்தியிருந்தார். தொடக்க நிகழ்வில் நிறைவாக மாநாட்டின் இணை ஒருங்கிணைப்பாளரான கலாநிதி செல்லத்துரை சுதர்சன் நன்றியுரையை நிகழ்த்தினார்.