(அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளன் எனும் அடையாளத்தின் முகவரியாளராக மிளிர்பவர் லெ.முருகபூபதி அவர்கள். அவரின் அகவை நாள் ஜூலை 13ம் நாளில், இச் சிறப்புக் கட்டுரை பிரசுரமாகிறது. எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்குப் பதிவுகளும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.)
1951ம் ஆண்டு ஜுலை 13ம் திகதி..... நிசப்தமான அந்த வெள்ளி இரவில் நுரை தள்ளி கரைநனைக்கும் அலையோசையைத் தவிர எங்கும் அமைதி. நீர்கொழும்பு மகப்பேறு வைத்தியசாலையில் 'வீல், வீல்' எனும் ஒரு குழந்தையின் அலறல் அந்த இரவின் அமைதியை கலைத்தது!
ஒரு அன்புத் தாய் குழந்தையை வாரியணைத்து உச்சி முகர்ந்து தந்தை லெட்சுமணனின் கரங்களில் பாலகனை ஒப்புவித்தாள். குடும்பத்தின் முதல் மகன் என்ற பெருமிதம் அவர் கண்களில் ஒரு புது ஒளியை தோற்றுவித்தது. தந்தை குனிந்து மழலையின் காதருகில் ஒரு மந்திரம் போல் "முருக....பூபதி " என நீட்டி விளித்து அவனை மெதுவாய் தாயின் அரவணைப்பிற்கு சொந்தமாக்கினார்.
அன்று அம்மழலையுடன் ஒட்டிக் கொண்ட 'முதல்' எனும் வார்த்தை அவன் வாழ்வில் நிரந்தரமாகவே அழியாச் சுடராய் அன்று ஏற்றிவைக்கப்பட்டது.
இலங்கையில் வடமேல் மகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு நகரில் 1954ஆம் ஆண்டு இந்து தமிழ்ப்பிள்ளைகளுக்காக தொடங்கப்பட்ட ஆரம்பப்பாடசாலை விவேகானந்தா வித்தியாலயத்தில் முதல் மாணவனாக 1954 ஆம் ஆண்டு விஜயதசமி தினமன்று ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்து தன் கல்விப் பயணத்தை ஆரம்பித்தார் முருகபூபதி, இவரின் மாணவ பதிவு இலக்கம் : 1.
இது முருகபூபதியின் முதலாம் 'முதல்'!
வருடங்கள் உருண்டோடின .......
1975ம் ஆண்டு இந்த இலக்கிய குழந்தையின் இருபத்தியொராவது பிறந்த நாள் பரிசாக இவர் எழுதிய 'கனவுகள் ஆயிரம்' எனும் முதல் சிறுகதை மல்லிகை இதழில் வெளிவந்தது. தான் பிறந்த நெய்தல் மண்ணின் வாழ்வை சித்தரிக்கும் கதை இது. தனது முதல் சிறுகதையே ஈழத்தின் முன்னணி இலக்கிய சஞ்சிகையில் வெளிவந்ததையிட்டு இந்த இளம் படைப்பாளிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அக்கதையை ஆயிரம் தடவைக்கு மேல் படித்ததாய் பின்னாளில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இந்த முதல் சிறுகதையை உள்ளடக்கிய ' சுமையின் பங்காளிகள்' எனும் முதல் சிறுகதை தொகுப்பிற்கு 1976ல் இலங்கை தேசிய சாகித்திய விருது கிடைத்தது.
ஆம், இது முருகபூபதியின் இரண்டாம் 'முதல்'!
இலங்கையின் மூத்த முற்போற்கு எழுத்தாளர் டொமினிக் ஜீவா கண்டெடுத்த முத்துக்களில் ஒன்று முருகபூபதி என்றால் மிகையாகாது. இவரது சிறுகதைகளைபுறக்கணித்த வீரகேசரி, தினகரன் பத்திரிகைகள் 1976 ஆம் ஆண்டு இவரது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய விருது கிடைத்ததும் முருகபூபதியின் படத்துடன் செய்திகளை வெளியிட்டு தமக்கு கெளரவம் தேடிக்கொண்டன.
தன் முதல் சிறுகதையின் படைத்தலை பற்றி ஒரு பேட்டியில் இப்படி நனவிடை தோய்கிறார் அவர் :
"மல்லிகை ஆசிரியர் 1970-1971 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து மாதாந்தம் கொழும்புக்கு வரும்பொழுது நீர்கொழும்பிலிருக்கும் அவரது சகோதரர் குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக வருவார். அச்சமயங்களில் ஏற்கனவே இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட நீர்கொழும்பூர் முத்துலிங்கம், மு.பஷீர், மற்றும் செல்வரத்தினம், தருமலிங்கம், சந்திரமோகன், பவாணிராஜா, நிலாம் உட்பட பலர் அவரைச்சந்தித்து கலந்துரையாடுவார்கள். இச்சந்திப்புகள் பெரும்பாலும் நீர்கொழும்பு கடற்கரையில் இடம்பெறும். நானும் ஆர்வமுடன் கலந்துகொண்டு உரையாடுவேன். மல்லிகை ஜீவாவுடன் விவாதிப்பேன். அச்சமயம் ஜெயகாந்தனைப்பற்றி அவர் காரசாரமான விமர்சனக்கட்டுரைத்தொடர் எழுதிக்கொண்டிருந்தார். அத்தொடர் எமது கலந்துரையாடலில் விவாதப்பொருளாகும். எனது கருத்துக்களை கூர்ந்து அவதானித்த ஜீவா ஒருநாள், “ நிறைய விவாதிக்கிறீர். நீரும் எழுதலாமே” என்றார். அவர் தந்த உற்சாகத்தில் கனவு என்ற சிறுகதையை எழுதினேன். அச்சிறுகதை நீர்கொழும்பு பிரதேசத்தில் கடற்தொழிலை நம்பி வாழும் மக்களைப் பற்றியது. அதனை, செல்வரத்தினம் (இவர் தற்போது பிரான்ஸில் இணையத்தளம் நடத்துகிறார்) நீர்கொழும்பூர் முத்துலிங்கம் ஆகியோரிடமும் காண்பித்தேன. அதற்கு முன்னர் எமது பிரதேச மக்களின் பேச்சு மொழி வழக்கில் எவரும் படைப்பிலக்கியம் படைத்திருக்கவில்லை. குறிப்பிட்ட கனவு கதை மீனவ மாந்தரின் கனவுகளின் சித்திரிப்பாக அமைந்திருந்தமையால் 'அதனை எதற்கு அனுப்பவிருக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். 'மல்லிகைக்கு' எனச்சொல்லிவிட்டு தபாலில் அனுப்பினேன். கனவுகள் ஆயிரம் எனத்தலைப்பிட்டு ஜீவா அதனை மல்லிகை ஜூலை இதழில் பிரசுரித்தார்."
இவ்வெற்றிகள் தானாக அவர் மடியில் வந்து விழவில்லை.... உழைப்பு... உழைப்பு.... உழைப்பு! வெற்றியின் இரகசியம் என்ன என்ற கேள்விக்கு அவர் சொல்லும் விடை : ஆள் பலம், அரசியல் பலம், பண பலம் என்றைக்குமே தற்காலிகமானதுதான். ஆன்ம பலம்தான் நிரந்தரமாைனது. அதுதான் உழைப்பின் அடிப்படை!
அந்த 'முதல்' புது நூற்றாண்டிலும் தொடர்ந்தது.....
2001ல் முருகபூபதி எழுதிய 'பறவைகள்' எனும் முதல் நாவதுக்கு இலங்கை தேசிய சாதித்ய விருது பெற்று கெளரவிக்கப்பட்டார்.
இது இவரின் மூன்றாம் 'முதல்'!
முருகபூபதியின் 'முதல்' தரிசனத்தை பீடத்தில் வைத்துவிட்டு இந்த இலக்திய ஆளுமை நடந்து வந்த பாதையை சிறிது பார்ப்போமா?
வாயில் வெள்ளிக்கரண்டியுடனும் கையில் தங்கத் தட்டுடனும் பிறந்தவனல்ல இவர். தான் கடந்து வந்த முள் பாதையை இப்படி ஒரு பேட்டியில் நனவிடை தோய்கிறார் முருகபூபதி :
"எனது அப்பா நான் பிறந்து சில வருடங்களில் எனது பெயரில் முருகன் லொட்ஜ் என்ற சைவஹோட்டலை நீர்கொழும்பு பிரதான வீதியில் பஸாரில் தொடங்கினார். அப்பா ஒரு பரோபகாரி. இரக்கசிந்தனையுள்ளவர். பசி என்று வந்தவர்களுக்கெல்லாம் பசிபோக்கியவர். அதனால் சற்று பொறுப்பில்லாமலும் நடந்துகொண்டவர். கடன் தொல்லைக்கும் ஆளானவர். சிறிது காலத்தில் அந்த சைவஹோடட் ல் நட்டத்தினால் மூடப்பட்டது. வீடு வறுமையில் வாடியது. அப்பா வேலை தேடி அலைந்தார்.
எங்கள் வீடும் வறுமைக்கோட்டில் இருந்தமையால், அதிகாலையே எனது அம்மா எழுந்து தோசை, இடியப்பம் தயாரித்து சட்ணி – சம்பலும் வைத்த கடகங்களுடன் பாட்டியையும் அக்காவையும் என்னையும் அனுப்பிவைப்பார். அந்த நெடிய கடற்கரையில் வந்து குவியும் கடற்றொழிலாளர்களின் காலைப்பசி போக்குவதற்காக ஏழு – எட்டு வயதில் அந்தத்தொழில் செய்துவிட்டு வந்துதான் பாடசாலைக்குச்சென்று வந்தேன்”.
இவருக்கு இலங்கை தமிழ் சமூகம், என்றும் போலவே, ஒரு முகவரி எழுதி முத்திரை குத்தி ஒரு சமூகப் பெட்டகத்தினுள் அடைக்க முயன்றது. சமூகம் போட்ட போர்வைகளை லாவகமாய் அகற்றி அவர் சொன்னது இது:
"அப்பாவின் பூர்வீகம் இந்தியா என்பதால் நான் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமானதன் பின்னர், ஐரோப்பிய நாடொன்றிலிருந்து ஒரு அன்பர், என்னை “இந்தியாக்காரன்”, ”வடக்கத்தியான்” என்று முகவரி தந்தார். நீர்கொழும்பிலிருந்தவன் என்ற காரணத்தினாலும் ”நீர்கொழும்பான்” என்றும் மற்றும் ஒரு முகவரி தந்தார்கள். ஆயினும் நான் நேசிக்கின்ற – என்னை நேசிக்கின்ற இலக்கியவாதிகள் இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழ்ந்து, ”மனிதன்” என்ற முகவரியைத் தந்திருக்கிறார்கள். அதனை தக்கவைத்துக்கொள்வதுதான் எனது வாழ்வும் பணிகளும்!"
விவேகானந்தா வித்தியாலயம் அரசுடைமையான பின்னர் ஆறாம் தர புலமைப் பரிசுக்கான பரீட்சையில் சித்தியடைந்து நீர்கொழும்பில் தமிழ் மகா வித்தியாலங்களோ மத்திய மகா வித்தியாலங்களோ இல்லாத காரணத்தால் யாழ் நகர் ஸ்ரான்லி கல்லூரியில் சேர அனுமதி பெற்று தன் கல்வியை தொடர்ந்தார்.
1977ல் வீரகேசரி நாளிதழில் தன்னை இணைத்துக் கொண்டார் முருகபூபதி. முதலில் வீரகேசரி நீர்கொமும்பு பிரதேச நிருபராக செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருந்தவர் எப்படி இலக்கிய உலகுடன் சங்கமித்தார் என்பதை இப்படி விளக்குகிறார்:
"சில அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள், இலக்கியக்கூட்டங்கள் தொடர்பாக செய்திகள் எழுதியிருந்தேன். இந்நாட்களில் மல்லிகை, பூரணி, புதுயுகம் சஞ்சிகைகளில் பல சிறுகதைகளையும் எழுதினேன். இது எனக்கு எழுத்துலகத்தில் காலூன்றி நிலைக்கலாம் எனும் தன் நம்பிக்கை வளர்த்தது. வீரகேசரியில் ஒப்புநோக்காளன் பதவியும் அடுத்து என் உழைப்பின் ஊதியமாய் துணை ஆசிரியர் பதவியும் என்னை வந்தடைந்தன. என் எழுத்துத் திறமையை இனங்கண்டு வீரகேசரியில் என்னை ஆதரித்த ஆசிரியர் கே. சிவப்பிரகாசத்தை என்றும் என் வாழ்நாளில் மறக்கமுடியாது.”
இது போல் எத்தனையோ நினைவுகள்.
தன் பத்திரிகை அனுபவங்களை சுவைபட 'சொல்ல மறந்த கதைகள்' எனும் நூலில் எழுதியுள்ளார் முருகபூபதி..
தானுண்டு தன் வேலையுண்டு என ஒதுங்கியிருக்காமல் பல இலக்கிய ஆழுமைகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு வேட்கையுடன் எமுதிக் கொண்டே இருந்தார். இவரின் வேட்கைக்கு களம் அமைத்துக் கொடுத்தது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இதுவே முருகபூபதியின் மறு தாய் வீடு.
1987ல் ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த பின்னர் தமிழ் எழுத்தாளர் சங்கம் எனும் படைப்பாளிகளுக்கான அமைப்பை அமைத்து இலக்கியம் சமைக்கிறார் முருகபதி. 2011ல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம இணைப்பாளராகச் செயல்பட்டார்.
முருகபூபதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் பன்முக கலாச்சார இணைப்பு மற்றும் சமூக ஒற்றுமைக்கு ஒரு சக்திவாய்ந்த தொடர்பாளராக இருந்து வருகிறார். தனது சொந்த புலம்பெயர்ந்த அனுபவம் மற்றும் ஆழமான கலாச்சார பாரம்பரியத்திலிருந்து உருப்பெற்ற அவர், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களை ஒன்று திரட்டி இலக்கியத்தை பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும் தனது வாழ்க்கையை புலம் பெயர் மண்ணில் அர்ப்பணித்துள்ளார் என்பது உண்மை.
ஊடகங்கள் மற்றும் இலக்கியத்தில் ஊறிய தனது பின்னணியைப் பயன்படுத்தி, தென்னிந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த முக்கிய எழுத்தாளர்களைக் கொண்ட இலக்கிய விழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினூடாக ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வுகள் கலாச்சார பரிமாற்றத்தின் முக்கிய தளங்களாக மாறியதுடன், தமிழ், சிங்களம் மற்றும் பரந்த அவுஸ்திரேலிய சமூகங்களிலிருந்தும் பார்வையாளர்களை ஈர்த்தது.
வரலாற்று ரீதியான இன மோதலால் பிரிக்கப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள எழுத்தாளர்கள் இடையே இங்கே பரஸ்பர புரிதலை ஊக்குவிக்க அவரின் முயற்சிகள் பெரிதும் உதவின. தோழர் லயனல் போபகே அவர்களுடனான உறவு இந்த புரிந்துணர்விற்கு மேலும் வலுச்சேர்த்தன. மொழி, இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம், ஒரு காலத்தில் தடைகள் இருந்த இடங்களில் பாலங்களை உருவாக்க முடியும் எனும் அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை.
மேலும் கோவிட் 19 தொற்றுக் காலத்தின் போது சமூகத்தை இணைக்க Zoom வழியாக மெய்நிகர் நிகழ்வுகளை நடத்தி போது எமது சமூகத்தின் பல மூத்த பிரஜைகள் இந்த மெய்நிகர் நிகழ்ச்சிகளில் உற்சாகமாக கலந்து கொண்டு தம் தனிமையை தொலைத்த கதைகள் உண்டு. அது மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளை இவை விரிவுபடுத்தின.
எழுத்தாளர் முருகபூபதி பல மட்ட அரச நிறுவனங்கங்களுடன் இணைந்து பன்முக கலாச்சார இலக்குகளை மேலும் வலுப்படுத்தி மேம்படுத்தி உள்ளார். அவரது நிகழ்வுகளில் பெரும்பாலும் உள்ளூர் நகர சபைகள் மற்றும் கூட்டாட்சி அலுவலகங்களின் பிரதிநிதிகளை வரவேற்று, சமூக கொள்கை வகுப்பாளர்களிடையே தொடர்பை ஊக்குவித்தன.
முருகபூபதி அவர்கள் பல வடிவங்களில் தம் எழுத்துக்களைப் பொறித்தார். சிறுகதை தொகுதி (8), கட்டுரை (15), புதின நூல் (1), சிறுவர் இலக்கியம் (1), பயண இலக்கியம் (1), கடித இலக்கியம் (1), நேர்காணல் தொகுப்பு (1) என பன்முக தலைப்புகளில் எழுதி வெளியிட்டுள்ள முருகபூபதி பல இலக்கிய பேட்டிகளையும் உரைகளையும் காணொலியில் பதிவிட்டுள்ளார்.
இவரது பல நூல்கள் அமேசன் கிண்டலில் மின்நூல் வடிவில் பதிவேற்றப்பட்டுள்ளன. இவை நிச்சயம் எமது இளம் சமுதாயத்தினரை கண்டடையும் என நிச்சயம் நம்பலாம். மேலும் இவரது புதிய மின்நூல் "காலமும் கணங்களும்" இவ்வாரம் அமேசன் கிண்டலில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதை ஜுலை 13ம் திகதி முதல் 17ம் திகதி வரை வாசகர்கள் இலவசமாய் பதிவிறக்கம் செய்து வாசிக்க முடியும். இந்நூலில் அவர் தனது எழுத்துலக பயணத்தில் சந்தித்த 25 ஆளுமைகளைப் பற்றி சுவாரசியமாய் எழுதியுள்ளார். Amazon link: https://shorturl.at/SpZYr
இலங்கையில் மல்லிகை, ஞானம் மற்றும் ஜீவநதி முதலான இலக்கிய இதழ்களில் அட்டைப்பட அதிதியாக கௌரவிக்கப்பட்டுள்ளார்.
"என் உழைப்பைக் கண்டு வியக்காதீர்கள். ஏனென்றால் எழுதுவதே என் தொழில்!" என்கிறார் இந்த தன்னடக்கச் சிற்பி!
விலகி நில்லுங்கள் !
அவர் எழுதட்டும்!
எழுத்துக்கள் ஓயும் வரை எழுதட்டும்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.