சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'என் முதல் ஆசிரியர்' பற்றிய சிந்தனைகள் (3) - ஜோதிகுமார் -
ஜெயகாந்தனின், சில நேரங்களின் சில மனிதர்களின், ‘கங்காவின்’ முகமே இறுதியில் மாறிவிடுகின்றது. குடிக்கின்றாள், சிகரெட் பிடிக்கின்றாள். அவளது உதடுகள் கூட, மனுவலின் உதடுகள் போலவே கருமைத் தட்டி போகின்றது.
முன்னுரையில், ஜெயகாந்தன், பின்வரும் பொருள்பட எழுதுவார்: “இப்படியெல்லாம் நடக்குமா? இப்படியெல்லபம் நடக்கிறதா? இப்படியெல்லாம் நடக்கலாமா? இக்கேள்விக்கெல்லாம், வாழ்க்கையானது ‘ஆம் ஆம்’ என பதில் கூறுகிறது.
இதே கேள்வியை, ஐத்மாத்தாவும், கையில் எடுத்துள்ளார் எனலாம்.
மனுக்குலத்தின் காலம் முழுவதிலும், மனிதர்கள், வாழ்க்கைத் தொடர்பில், ஜெயகாந்தன் எழுப்பிய இதே கேள்வியை கையில் எடுத்து பதில் வழங்கியுள்ளனர்.
ஐத்மாத்தாவும், தன் பங்குக்கு இதே கேள்வியை பரிசீலித்துள்ளார். ‘வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்குமா? இது சாத்தியமா? வாழ்க்கை இப்படியும் மாறுமா? அல்லது மாறி அமையுமா'-இதுவெல்லாம் ஐத்மாத்தா எழுப்பிய கேள்விகளின் சாரமாகின்றது.
இவ் அடிப்படையிலேயே அவர் தனது ஓவியத்தையும் தீட்ட முனைந்துள்ளார்
அதாவது, அவரது இந்த ஓவியத்திற்கும், தமிழ் இலக்கியம், இதுவரை முன்னிறுத்தி இருக்கக்கூடிய ஓவியத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் எம்மை சிந்திக்கவே செய்கின்றன.
‘அக்கினி பிரவேசத்தின் முடிவை மாற்றி எழுதிப்பார்த்தேன். இப்படி நடக்குமா? ஆம்,ஆம் என பதில் கூறியது வாழ்க்கை.
கேள்வி: அப்படியெனில், இவ்வாழ்க்கையை கட்டுவித்தது யார்? இதே மனிதன் தான். விடை இதுவெனில், இதனை மாற்றி அமைக்க வேண்டியதும் அவனது கடமையாகின்றது.