டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 04 - ஜோதிகுமார் -
“ஆழ்கடலின் மிகப் பெரிய சுறா. கரையோரத்துச் சிறுமீன்களில் ஒன்றல்ல இவர்.”
தனிமையும் மௌனமும், ஒன்றுசேர,ஒரு மோன நிலையில் தரிசிக்க தெரிந்த மனிதர். இவ்விரண்டையும் பல்வேறு மனிதர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தம் வாழ்நாட்களில் சந்தித்து இருக்கலாம். கண்ணதாசனில் இருந்து கலாம் வரையிலும் அல்லது பாரதியில் இருந்து கைலாசபதி வரையிலும் இவை இரண்டினதும், (தவத்தின் வலிமையானது) அவரவர் தெரிவு செய்யும் மட்டங்களிலேயே இருப்பதாய் இருக்கும். அதாவது, அவர்கள் எந்த மட்டங்களில் எவ்வாறு இவற்றை தரிசித்தனர் என்பதற்கான விடை அவர்களின் செயற்பாட்டின் சாரமாக வெளிப்படவே செய்யும்
(எழுத்திலும்).
‘தனிமை கண்டதுண்டு
சாரம் நிறைந்ததம்மா’
என்ற வரிகளின் ஆழத்தைக் கண்டுப்பிடித்து கோடிட்டவர் கைலாசபதி.
இதனைப் போலவே, தனிமையின் அழகை, தன்னளவில் கண்ணதாசனும் காணத்தவறினார் இல்லை:
‘தவத்துக்கு ஒருவரடி
தமிழுக்கு இருவரடி…’
எனக் கண்ணதாசனும் ஓர் உரையின்போது கூறியதும் கவனிக்கத்தக்கதே.