
அறிமுகம்
தனது, 23ம் வயதில் சேதுபதி தமிழாசிரியனாய் இருந்த பாரதியை, ஜி.சுப்ரமணிய ஐயர் அழைத்து செல்கின்றார் (பத்திரிகை தொழிலில் ஈடுபடுத்தும் பொருட்டு). இரண்டு வருடங்களில், அவனோ புதுமையாக வலம் வருகின்றான். அவனது வியக்க வைக்கும் மொழிபெயர்ப்பு திறனும், பெண்கள் பொறுத்தும் சாதிய கீழ்நிலையில் ஜீவிக்க கூடியவர்கள் பொறுத்தும், இன ஒற்றுமை பொறுத்தும் அவனுள் கொந்தளிக்கும் எண்ணக்கருக்கள் அறிஞர்களையும் திகைக்க வைக்கின்றது. ஆங்கிலேயரின் ஆட்சியின்பால் சமரசமற்ற வெறுப்பணர்வை உமிழும் அவன், அவர்களின் ஆதிக்கத்தின் சூட்சுமங்களை கண்டுணரும் கூர்மதி படைத்தவனாகவும் இருக்கின்றான். மக்கள் சைன்யத்தை வாஞ்சையுடன் நெருங்கும் அவன், தனது எழுத்தை அவர்களுக்காகவே அர்ப்பணிக்க முடிவு செய்கின்றான். இவ்வளவுமாய் இல்லை என்றால், இல்லை என்பதே உறுதியான விடையாகின்றது. கைலாசபதியின் வார்த்தைகளில் கூறுவதானால்: “அவனது பார்வை பாயாத இடமே இல்லை” எனலாம்.
24 வயது இளைஞனாய் பாரதி, பின்வருமாறு எழுதுகின்றான்:
“அனேக நூற்றாண்டுகளாக நித்திரை போய்க் கொண்டிருந்த ஓர் பெருந் தேசமானது இப்போது கண் விழித்து ஏற முயற்சி பண்ணும் சமயத்தில் அமுக்கி விடுவது இலேசான காரியமாகுமா”
(பக்கம்: 280)
இங்கே, மூன்று விடயங்கள் காணக்கிட்டுகின்றன:
1. அனேக நூற்றாண்டுகளாய் நித்திரை கொண்டிருந்த ஒரு தேசம்
2. அது, இப்போது, கண் விழித்து எழும் (அரசியல் உணர்வு பெற்றதாய்).
3. அதனை அமுக்கி விடுவது, அத்தனை இலேசான காரியமாக போவதில்லை என்பது.
இம்மூன்று அம்சங்களுமே, அன்றைய இளைஞனான பாரதியின் மனதை வியாப்பிப்பதாய் இருந்தன என்பதை அப்படியே படம்பிடித்து காட்டுவதாய் உள்ளது.
முதல் இரண்டு அம்சங்களும், இந்தியா என்ற பெருந்தேசத்தின் அன்றிருந்த யதார்த்தம் சம்பந்தமானது. இறுதியானது, முகிழ்த்தெழக்கூடிய அப்புதிய யதார்த்தத்திற்கு எதிராக பிரிட்டி~hர் அன்று கைக்கொள்ள கூடிய ஆதிக்க அரசியல் சம்பந்தமானது.
கண் விழிப்பதும் - எழுவதும் - அதனை அமுக்குவதும் - பின், அம் அமுக்கதலுக்கு எதிராக கிளர்ந்தெழுவதும் ஓர் புதிய அரசியல் வீச்சை அல்லது முகிழ்க்கும் ஒரு புதிய அரசியல் முனையை சுட்டிக் காட்டுவதாய் உள்ளது.
இத்தகைய ஒரு சூழலில்தான், அன்றைய இந்தியாவில், வங்கம் பிரிபடுகின்றது. இதற்கெதிராய், முழு நாடுமே கொந்தளித்து போர் ஜ}வாலை வீசுகின்றது.
ஓங்கி அடிக்கும், இப் போர்க்குணம் கொண்ட தேசிய அலையை, இவ் இளைஞன் உள்வாங்கி கொள்கின்றான். மறுபுறத்தில், இதற்கெதிராக எழக்கூடிய அரசியல் இவன் எவ்விதம் பங்கேற்று எதிர்வினையாற்ற துணிகின்றான் என்பது கேள்வியாகின்றது.
அதாவது, அன்றைய காலனித்துவ ஆங்கிலேயரின் மனநிலையான, இப்போராட்ட அலையை எவ்விதம் கட்டுப்படுத்தலாம் - அல்லது தமது ஆதிக்கத்தை தொடர்ந்திருக்க இங்கே யாவன செய்யலாம் எனும் அரசியலின் மத்தியில், இவன் செயலாற்ற வேண்டி உளது.
வேறு வார்த்தையில் கூறுவதானால், இரு சைன்யங்களுமே தத்தம் வாள்களை தீட்டி கொள்கின்றன.
ஆங்கிலேயர், அந்தமான் செலூலர் ஜெயிலை கட்டி முடிக்கும் தருவாயில் (1906) பாரதி எனும் இவ் இளைஞன் தன் அரசியலில் குதிக்க வேண்டி உள்ளது.
வேறு வார்த்தையில் கூறுவதானால், இவனது இள மனம் எதனை கவ்வக் கூடும் என்பது கேள்வியாகின்றது – அதாவது, உருப்படியற்ற நைந்து போன ஓர் எழுத்தையா அல்லது எரிதழல் பற்றி எரியக்கூடிய தீவிரம் படைத்த ஓர் எழுத்தையா என்பது கேள்வியாகின்றது.
2
பாரதி பொறுத்து கூறும் போது, “துறவிகள், சாதுக்கள் ஆகியவற்றின் வாயிலாகவே பாரதி இந்திய அரசியலில் பிரவேசிக்கின்றான்” எனக் கூறப்படும் கருத்தை நாம் சற்று அவதானமாகவே அணுக வேண்டி உள்ளது.
விவேகானந்தர் முதற் கொண்டு, தயானந்த சரஸ்வதி, ஆதி சங்கரர், கேசவ சந்திரசேகர் - ஆகியோரின் தத்துவங்கள் இவனுக்கு அத்துப்படி என்றாலும் மேற்படி கூற்றை நாம் சற்று நிதானமாகவே அணுக வேண்டியது நன்று. சுருக்கமாக கூறுவதெனில், பல நூற்றாண்டுகளாக, இந்தியாவில் துருப்பிடித்து கிடக்கும் சிந்தனைகளுக்கு மாறான ஒரு புதிய சிந்தனையை ஒரு புதிய அரசியல் தரிசனத்தை உருவாக்க காலம் அன்று கனிந்ததாய் தோன்றுகின்றது.
அதாவது, ஓர் ஐம்பது வருடங்களாய், காலம் காலமாய் இங்கே புரையோடி கிடக்கும் ஓர் மரபை தூக்கியெறிந்துவிட்டு அல்லது சாதியை–சதியை அரவணைக்க கூடிய சிந்தனைகள் அனைத்தையும் துவாம்சம் செய்துவிட்டு ஓர் புதிய சிந்தனையை நிர்மானித்து முன்னெடுக்க வேண்டிய தேவை எழுகின்றது.
பெரும் தூக்கத்திலிருந்து எழும்பும் புதிய மனிதர்களின் முகங்களில் விழிக்க வேண்டிய தேவை அங்கே எழுகின்றது.
இதனாலா, மதுரை சேதுபதி கல்லூரியின் தமிழ் ஆசிரியர் எனும் வரையறையை நிராகரித்து ஒரு காட்டாற்றின் வெள்ளத்தில் சங்கமிக்க இவன் துணிவு கொள்கின்றான் என்பது கேள்வியாகின்றது.
இவனது விழிகளில் சுடர் விட்டு எரிந்திருக்க கூடிய கனலை, வினோதத்துடன் அவதானித்திருக்க கூடிய ஜீ.சுப்ரமணிய ஐயர், இவன் தமிழாசிரியனாய் இருக்க விதிக்கப்பட்டவன் அல்லன் என முடிவு செய்து, இவனை தனது ‘சுதேச மித்திரனுக்கு’ கொண்டு வந்து சேர்த்த போது காலம் 1905.
வாஞ்சையுடன், இவனை அழைத்து வரும், ஜி.சுப்ரமணிய ஐயரே ஓர் மாபெரும் சுதந்திர போராளியாவார். ஆங்கிலத்தில் ஹிந்து பத்திரிகையை இவர் எவ்விதம் துவக்கினாரோ (20.09.1878) அதே போன்று சுதேச மித்திரன் பத்திரிகையையும், தமிழில் இவர் 1891இல் துவக்கினார்.
பலமுறை சிறைவாசம் சென்றவர். சிறையில் (Leprosy) தொற்றுக்கு இலக்காகும் அவர், இறுதியில் தனது அறுபத்தியொராவது வயதில் அந்நோய்க்கே பலியாகிய தீவிர நாட்டு பற்றுடையவர்.
3
“விவேகானந்தர், கேசவ சந்திரன், தயானந்த சரஸ்வதி போய் விட்டார்கள். இவர்களும்தான் என்ன… இப்போதைக்கு, ஏதோ கடுகத்தனை நௌரோஜி ஒருவன் இருக்கிறான்…”
1906இல், இவ் இளைஞன் மேற்படி வரிகளை எழுதியுள்ளான்.
மேற்படி அரசியலில், அனாதையாகி விட்ட ஓர் தர்மசங்கட நிலைமையை இவை எதிரொலிப்பதாய் இருக்கின்றது.
மேலும் எழுதுவான்:
“சென்ற ஐம்பது வருடங்களாக இந்நாட்டிலேயே பல ஜன சங்கங்களையும், சமய நிலைகளையும், ராஜாங்க மாதிரிகளையும் திருத்தி விட வேண்டும் என்று பகீரத பிரயத்தனங்களை செய்து பார்க்கின்றார்கள். இவர்களது முயற்சிகள் பெரும்பாலும் அரைக் காசுக்கு பயன்படவில்லை. இம்மாதிரி இவர்கள் இன்றும் ஐம்பது வருடங்கள் முயன்ற போதிலும் திவலை பயன்பட போவதில்லை” (பக்கம்: 145)
ஒரு நீதியான சமூகத்தை ஆதர்சமாக கொண்டு, மனுகுலம் இங்கே செய்யும் போராட்டம், காலம் காலமாக தொடர்வதுதான். கற்பனாவாத சோசலி~ காலம் தொட்டு இவை இப்படியாக இருக்கலாம். மனுகுலம் இவ்வாறு உருப்படியற்ற விடயங்களில் ஏன் ஈடுபடுகின்றது – நௌரோஜி உட்பட - இதன் உண்மை விளைவு யாதாயிருக்க கூடும் என்ற இவனது சிந்தனை, இவனை இவ்விள வயதிலேயே கப்பி பிடிப்பதாய் இருக்கின்றது. மனிதர்கள், ‘பகீரத பிரயத்தனங்களை’ செய்து பார்ப்பதை இவன் அவதானிக்கின்றான். பின்னரே, இனி ஒரு விதி செய்ய வேண்டும் என இவன், தேர்ந்து கொள்கின்றான்.
இதற்கான, ‘கூர்மதி’ மாத்திரமின்றி ‘திராணியும்’ தேவையுறுகின்றது என்பது உண்மையே. மறுபுறத்தில், இரண்டுமே, சமயங்களில், ஒன்றாய் பயணிக்கக்கூடும் என்பதும் உண்மையே.
இந்த பின்னணியில்தான், இவ்விளைஞன், தன் அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டி உளது.
4
1906 ‘சக்கரவர்தினியில்’ பின்வருமாறு எழுதுகின்றான்:
“உலக வாழ்க்கை மிகவும் நம்பத்தகாததாகத்தான் இருக்கின்றது. எந்த நிமிசத்திலே மரணம் சம்பவிக்குமோ அல்லது எந்த நிமிசத்திலே நீக்க முடியாத நோய் வந்து சேருமோ (என்பதனை) நம்மால் நிச்சயித்து கூற இடமில்லை… எத்தகைய புயல்கள்… சுழிகள்… பாறைகள்… நடுவே சிற்சில இன்பங்கள்… மறுபடியும் சுழிகள், பாறைகள் புயற் காற்றுகள்… சில சில ஆறுதல்கள்…” (பக்கம்: 235).
இப்படியாக, வாழ்வின் சாரத்தை உள்வாங்கும் இவன் “இமை பொழுதும் சோராதிருத்தல்” என்ற நிலைக்கு வந்து சேர்வது, இயல்பானதே.
டார்வின் கூறுவார்:
“ஒரு மணித்தியாலத்தை அர்த்தமற்றதாய் கழிக்க சம்மதிக்கும் மனிதனுக்கு, வாழ்வின் உண்மை பெறுமதி யாது என்பது தெரியாமலே போகும்”.
ஆனால், பாரதியின் விடயத்தில், வாழ்வின் பெறுமானத்தை மிக கவனத்துடன் இவன் பார்த்துள்ளான் என்பதனையே இவனது மேற்படி வரிகள் சுட்டிக் காட்டுவனவாக இருக்கின்றது.
தியாக சிரத்தையுடன், கௌதம புத்தர் காலந்தொட்டு இன்றுவரை முகிழ்த்திருக்க கூடிய அறிவு அல்லது தத்துவ மரபு அனைத்தையும் உள்வாங்கி, அவை எதைத்தான் இதுவரை இங்கே, பிரசவித்துள்ளது என்பதையும் ஊகித்து அன்று வீசியிருக்க கூடிய தேசிய பெருங்கடலின் அலைகளில் இவன் சங்கமிக்க துணிகின்றான்.
இத்திராணியுடனேயே, இவன், சுப்ரமணிய ஐயரின் விழிகாட்டலுக்கு உட்பட்டு, காங்கிரசின் கதவையும் தட்டுகின்றான். இருந்தும், அங்கே அவன் திலகரின் அரசியலாலேயே ஆகர்சிக்கப்படுகின்றான், என்பது உண்மையாகின்றது.
இருந்தும், திலகரின் அரசியல் என்பது இவனுக்கு போதுமானதாக இருக்குமா என்பதும் கேள்வியே.
சுருக்கமாக கூறினால், இரண்டு வருடங்களில், அன்றைய இந்தியாவின் கடந்த காலத்தை, வாழ்வு பொறுத்த எண்ணப்பாட்டை, இன்று முகிழ்க்கும் தேசிய போர் அலையை–மேலும் முக்கியமாக மக்கள் அனைவரையும் அரவணைக்க இவ்விளைஞனை காலம் எதனை நோக்கி நகர்த்தக் கூடும். அவனது வரிகளையே இரவல் பெற்று, சற்றே மாற்றி கூறினால்:
“தண்ணீர் விட்டா வளர்ந்தாய்…
சர்வேசா…
இப்பயிரை கண்ணீரால் நனைத்தாய்
இனி,
கருக்க திருவுளமோ…?”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









