உயிர்த்த ஞாயிறில் உயிரிழந்தவர்கள் நினைவாக! ஆறாவது ஆண்டையும் கடந்து செல்லும் ஆறாவடு! நீதியில்லா நாட்டில் நாதியற்றவர்களின் ஓலம்! - முருகபூபதி -
இம்மாதம் சித்திரைப் புத்தாண்டுடன், இலங்கை வரலாற்றில் சில விடயங்கள் கவனத்திற்குள்ளாகின்றன. 2019 ஆம் ஆண்டு இதே ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மூன்று நட்சத்திர விடுதிகளிலும் சில தற்கொலைக் குண்டுதாரிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 277 பேர் கொல்லப்பட்டனர். நானூறுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.40 வெளிநாட்டவர்களுடன் 45 பிள்ளைகளும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஆயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.
கடந்த ஆறு ஆண்டு காலத்திற்குள் அரசுகளும் மாறின, அதிபர்களும் மாறினார்கள். எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அரசு காலத்திலாவது உண்மைகள் கண்டறியப்படுமா? என்பதும் தெரியவில்லை. கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவிக்கு வருமுன்னர், அச்சம்பவம் நடந்த காலத்தில் அந்தப்பதவியில் இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. பிரதமராக இருந்தவர் பின்னாளில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் மாறிய ரணில் விக்கிரமசிங்கா.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் நிறைய மாற்றங்கள் நேர்ந்தன. குறிப்பிட்ட பதவிகளில் இருந்தவர்கள் தேர்தல்களின் மூலம் மாறினர். எம்.பி. பதவியே இல்லாமல் இருந்த கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியானர். அவர் வெளியேறியபோது, எம். பி. பதவியே இல்லாதிருந்த ரணில் விக்கிரமசிங்கா, சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் ஜனாதிபதியானார்.