தாஜ்மஹாலைக் கட்டிய மன்னர் ஷாஜகானின் தந்தையான முகலாய மன்னர் ஜஹாங்கீர் (Emperor Jahangir) இறுதி காலத்தில் மரணப் படுக்கையிலிருந்தபோது, அவரது உதவியாளர் ஒருவர்,“இந்த இறுதிக் காலத்தில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள், மகாராஜா?” என்று கேட்டபோது, அவர்,“காஷ்மீர் மட்டுமே; மற்றவை பிரயோஜனமில்லை,” என்றார்.
இதிலிருந்து, தற்போதைய அரசுகளான பாகிஸ்தான் மற்றும் இந்தியா — காஷ்மீர் நிலம் தொடர்பான செயல்களையும், அவர்கள் மனநிலையையும் — நாம் ஊகிக்க முடியும்.
அவுஸ்திரேலியாவிலிருந்து சென்ற எங்கள் ஆறு பேருக்குக் “காஷ்மீரில் பார்ப்பதற்கு என்ன உள்ளது?” என்ற கேள்வி வந்தபோது, அதற்கு என்ன பதில் சொல்லலாம்?
காஷ்மீர் — நீர்வளம், நிலவளம் கொண்ட பிரதேசம். வெண்பனியால் கம்பளித் தொப்பி அணிந்த மலைச் சிகரங்கள், நீரோடைகள், விரல்களைப் போல பரந்து விரியும் மரகத பள்ளத்தாக்குகள், கங்கைபோல இல்லாமல் இந்தியாவின் அழுக்கைச் சுமக்காத, பனி கரைந்து ஓடும் சுத்தமான ஆறுகள் என இயற்கையின் கொடைகள் நிறைந்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள அரண்மனைகள், கோட்டைகள், கோவில்கள் இங்கு இல்லை.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் இந்துக்கள், பின்னர் புத்தமதத்தினரைப் பின்பற்றியவர்கள், தற்போது இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுகிறார்கள். பௌத்தம் காஷ்மீர் வழியாக, மத்திய ஆசியா, கிழக்காசியா வரை பரவியது. இது சில்க் ரோடு எனப்படும் ஆசிய–ஐரோப்பிய வாணிகப்பாதையின் ஒரு கிளையாக இருந்தது.
காலப்போக்கில் மதங்கள், மக்கள், அவர்களின் கலாச்சாரம் எல்லாம் உருமாறிவிட்டது. காஷ்மீர் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மக்கள் தொகை குறைவான இந்துக்கள் வாழும் ஜம்மு பள்ளத்தாக்கு, பௌத்தர்கள் வாழும் லடாக் பிரதேசம் ஆகியவை அடங்கும். தற்பொழுது முழு மாநிலமும் காஷ்மீர் மற்றும் லடாக் எனும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பார்வையில் இது சாணக்கியமான முடிவு. ஆனால் காஷ்மீரிகளுக்குள் உள்ளூர்க் கடுப்பு இருப்பது, பலருடன் பேசும்போது வெளிப்பட்டது. காஷ்மீரிகள் இந்திய ஆதிக்கத்தை விரும்பவில்லை, ஆனால் பாகிஸ்தானையும் வெறுக்கிறார்கள் என்பதும் எனக்குப் புரிந்தது.
எங்கள் பயணத்தில், யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற இடம் காஷ்மீரில் தேடினால், அது முகலாயர்களின் பூந்தோட்டமே. இந்தியாவில் காஷ்மீர் ‘மேய்ச்சல் நிலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. செம்மறியாடுகளைத் தவிர, ‘சாங்க்தாங்கி’ (Changthangi) எனப்படும் ஆட்டிலிருந்தே பாஷ்மினா (Pashmina) என்ற விலையுயர்ந்த நுண்ணிய கம்பளி பெறப்படுகிறது. கம்பளித்
துணிகளும், காஷ்மீர் நில விரிப்புகளும் இங்கு பிரபலமானவை. பழத்தோட்டங்களும், ‘சஃப்ரான்’ (Saffron) எனப்படும் வாசனைத் திரவியங்களும் இங்கு கிடைக்கும்.
காஷ்மீரில் சில இடங்களுக்கு நடந்து செல்ல முடியாது; ஹெலிகாப்டர் அல்லது குதிரை மூலமாகவே செல்ல முடியும் என்று எங்கள் வழிகாட்டி கூறினார்.
விமானத்திலிருந்து இறங்கி, ஹோட்டலுக்குச் செல்லும் வழியிலேயே இத்தகைய அறிமுகத்துடன் எங்கள் காஷ்மீர் பயணம் தொடங்கியது. வழியெங்கும் வாகன நெரிசல் காணப்பட்டது. சில இடங்களில் வாகன ஓட்டம் மந்தமானபோது, கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ்நாட்டைப் போல ஆங்கிலம் எழுதப்பட்டிருப்பதை கவனித்தோம். ஆனால் தமிழ்நாட்டைப் போல ஆங்கிலத்தை தமிழில் எழுதாமல், அவர்கள் ஆங்கிலத்தை நேரடியாக ஆங்கிலத்தில் எழுதினர். அரச நிறுவனங்களைத் தவிர, இந்தியாவின் பிற மாநிலங்களில் காணும் மாதிரி இந்தி எழுத்துகளை இங்கு அதிகமாகக் காண முடியவில்லை.
‘இதுதான் சீசன். நான் ஒரு கட்டிடப் பொறியாளர். பெங்களூரில் படித்தேன். இனி சொந்தமாக உல்லாசப் பயணத் துறையில் ஒரு நிறுவனம் தொடங்குகிறேன்,” என்று அப்துல்லா என்ற இளைஞர் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்களுக்குக் கடைசி நாளில், கடைவீதிகளுக்குச் ஷாப்பிங் செல்ல நேரம் ஒதுக்கி வைத்திருப்பதாகச் சொல்லி, எங்களை ஹோட்டல் வாசலில் இறக்கிவிட்டுச் சென்றார்.
மாலையில் உடனே, மன்னர் ஜஹாங்கீர் உருவாக்கிய ஷாலிமார் தோட்டத்துக்கு (Shalimar Garden) சென்றோம். இது ஶ்ரீநகரில் எங்கள் ஹோட்டலுக்கு அருகே, பாரசீக பூந்தோட்ட பாணியில் அமைந்தது.
பாரசீக பாணி என்றால் என்ன? பாரசீக பூந்தோட்டங்கள் இன்று–நேற்று உருவானவை அல்ல. 3,500 ஆண்டுகளுக்கு முன்பே — அலக்சாண்டர் படையெடுப்புக்கு முன்பாகவே — உருவாகி, பரிணாமம் அடைந்தவை. பாரசீகத்தின் மீது படையெடுத்த மங்கோலியர்கள், இதை உலகெங்கும் கொண்டு சென்றார்கள். பாரசீக பூந்தோட்ட வடிவங்களை, பாரசீக தரைவிரிப்புகளிலும் காணலாம்.
பாரசீக பூந்தோட்டங்களை அமைக்கும் போது, அரசர்கள் பூமியில் சொர்க்கத்தை உருவாக்குவதாகக் கருதினர். அவை அழகுக்காக மட்டுமல்ல; ஆன்மிக அர்த்தத்துடனும் அமைக்கப்பட்டன — ஆபிரகாமிய சிந்தனையில் வரும் ஆதாம்–ஏவாள் தங்கிய ஏடன் தோட்டத்தை பிரதிபலிக்க வேண்டும். பிற்காலங்களில், நகரங்களின் கட்டிடக்கலையில் இப்படியான பூந்தோட்டம் முக்கிய அங்கமாக அமைந்தது.
பாரசீக பூந்தோட்டங்கள் நாற்சதுர வடிவில், சுற்றிலும் உயர்ந்த சுவர்களுடன் இருக்கும். நான்கு மூலைகளிலும் உயர்ந்த மரங்கள், மத்திய பகுதியில் நீர்நிலை, அதில் தோட்டத்தின் பிரதிபலிப்பு, மேலும் ஓய்வுக்கான மாளிகை அமைந்திருக்கும்.
ஶ்ரீநகரில் முக்கியமான இடமாக ஷாலிமார் தோட்டத்துக்குப் பயணிகள் அதிகம் வருகிறார்கள். குளிர்காலத்தில் பனி மூடியிருக்கும் இப்பகுதி, நாங்கள் சென்ற சித்திரை மாதத்தில் வண்ணமயமான மலர்களால் குலுங்கிக் கொண்டிருந்தது. டால் ஏரிக்கு அருகில் இருப்பதால், கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை எப்போதும் இல்லை.
இந்த பூந்தோட்டத்தின் பிரதிகள் பிற்காலத்தில், மன்னர் ஷாஜகானால் டெல்லியிலும், லாகூரிலும் உருவாக்கப்பட்டன. இதேபோன்ற, ஆனால் வித்தியாசமான பாணி ஜப்பானியர்களிடமும் உள்ளது.
இங்குள்ள இந்திரா காந்தி நினைவுத் ட்யூலிப் பூங்கா, நாங்கள் சென்ற வேளையில் பல வண்ண மலர்களால் குலுங்கிக் கொண்டிருந்தது. இது ஆசியாவின் மிகப் பெரியதாகும். கடந்த ஆண்டு நெதர்லாந்து சென்றபோது, மகரந்த ஒவ்வாமையால், ட்யூலிப் பூந்தோட்டங்களுக்கு செல்லத் தவிர்த்தேன். ஆனால் இங்கு சென்றுவந்தேன். இரு பூங்காக்களும் அருகருகே இருப்பதால் எங்களுக்கு வசதியாக இருந்தது.
டால் ஏரியில் படகுப் பயணம் கடைசி நாளில் இருந்ததால், எட்டிப் பார்த்து சில புகைப்படங்கள் எடுத்து, ஹோட்டலுக்குத் திரும்பினோம். இப்போது பயணிகள் அதிகம் வருவதால், டால் ஏரி கரைகளில் அழுக்காக இருப்பதைப் பார்த்தோம்.
அன்றைய நாள் எங்கள் வயதைப் போலவே விரைவாகப் பறந்து சென்றது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.