ஜனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு தினம்! காந்திக்கு 'மகாத்மா' பட்டத்தை அளித்தவர் ரவீந்திரநாத் தாகூர்! - முருகபூபதி -
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்...? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவாக மாறினார் ....? என்பதற்கெல்லாம் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன.
தற்காலக் குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் ஆசியாக்கண்டத்தில் ஒரு காலத்தில் பிறந்து - வாழ்ந்து - மறைந்தார் என்று சொல்லிக் காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்கள் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன.
இந்திய தேசிய கீதமான ஜனகனமண பாடலை இயற்றிய வங்கக் கவிஞர் இரவீந்திர நாத் தாகூர்தான் காந்திக்கு மகாத்மா என்ற பெயரைச்சூட்டினார்.
இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதப்போர்களையும் மௌனத்துடன் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் நடத்தி இன்று வரையில் இதுபோன்ற அகிம்சைப் போர்களை எதற்காகவும் தொடரலாம் என்ற முன்னுதாரணத்தையும் அன்றே விதைத்துவிட்டுச் சென்றவர்தான் அண்ணல் காந்தி!