1. வண்ணத்தின் கரும்புகைகள்.
கொதி நிலையில்
கூடி இருக்கும்
இனிப்புக் கடைகளின் கூட்டம்
கொய்து கொண்டிருந்தது
சுவையின்
பூசனங்களை.
அம்மாவும்
அக்காக்களும்
அடுப்படியில்
சுட்டவைகள்
நாட்பட
சுவைக்க முடிந்தது
வியாபிக்கும்
அன்பில்.
திசை மாறிப் போன
தீபாவளியை
சாளரத்தின்
வழியே
சற்றே ஏங்கிக் பார்க்கிறேன்
ஜாலம் காட்டும்
வானத்தில்
ஐய்யாவோடு
அச்சம் கொண்டு
வெடித்த
ஓலை வெடியின்
அணுக்கமும் மகிழ்வும்
வாய்க்கவே இல்லை
இப்போதானவர்களுக்கு
கைப்பேசிகளில்
காட்சிப் படுத்துவதாகவே
வாழ்க்கை
வாய்த்துப்போனதால்.
2. பறித்ததன் பொல்லாப்புகள்.
இரவைக் கொஞ்சம்
எடுத்து
எவருக்கும் தெரியாமல்தான்
வைத்திருந்தேன்.
தூக்கமாக வந்து
தொந்தரவு செய்கிறது
பகல் முழுவதும்
சோர்வாக.
3. துலாவி எடுக்காத வெளிச்சம்.
வீட்டிற்குள்
விழுந்த
விண்மீனை
விடிய விடிய
பிடிக்க முயன்றோம்.
களைப்பைக் கொடுத்து
காணாமல் போனது
பாரிய இன்பத்தில்
தள்ளி.
4. வேகாத சமையல்.
குளம் குட்டைகளில்
நிரம்பிய
வாக்குறுதிகளால்
குழாயில்
கொட்டுகிறது
வெறுமை
அள்ள முடியாத
துயரத்தில்.
5. வன்மக் கூடாரம்.
விழித்துவிட்ட
பொழுதில்
நன்றியைத் தவிர
வேறெதுவும்
தோன்றவில்லை
எப்பொழுதும்.
வெளியில் வந்து
பார்க்கும்
இவ்வுலகில்
ஒரு நாள்
கூடி இருப்பது
மகிழ்ச்சி தான்.
இன்றைய நாளில்
நடக்கும்
எதுவும்
எங்களுக்குத் தெரியாது
முன் கணிப்பாகக்கூட.
நிச்சயமாக நிகழ்ந்துவிடும்
ஜனாஸாத் தொழுகையைத்தவிர.
வந்துவிட்ட
உம்மா
இருப்பதற்கான
உறுதிகள் செய்துவிட்டார்
காற்று சுமந்தச் செய்திகளை
கச்சிதமாக வீட்டில் பகிர்ந்து
கவலையாகவோ கண்ணீராகவோ
மாற்றுவதற்கு.
வாப்பா மஹ்ரீப்க்கு
வீடு வந்து
சேர்ந்து விட்டால்
ரொட்டிகள் சுட மாவு
கிடைத்துவிடும்
பழகியப் பசிக்கு ஆறுதலாக.
பாடசாலை முடித்து
வீடு வந்துவிட்டால் மட்டுமே
உம்மாவுக்கு நிம்மதியில்
பொங்கியெழும்
தாய்ப் பாசத்தின் வாஞ்சைகள்.
தேவைகளின் பொருட்டாக
பிரியும்
நாங்கள்
மறுபடியும்
சந்திக்கும்
இரவின் பிரார்த்தனையில்
வழிகிற
கண்ணீர் நின்றதாக இல்லை
எப்பொழுதும்
உம்மாவுக்கும்
வாப்பாவுக்கும்.
எங்கள் கதவுகளின்
பூட்டுகளுக்கும்
தாழ்பாள்களுக்கும்
மதிப்புகள் இல்லை.
அந்நியர்கள்
அனுமதியின்றி உள்ளே
வரலாமெனும்
வாழ்கையை
நாங்கள் வாழ்வதால்.
ஜனஸாக்ளை
தின்ற
பூமி
சலிப்புகள் கொண்டாலும்
புதிதாக வேறொன்றும்
காரணம்
இருக்கப் போவதில்லை.
தூரக் கேட்கும்
அழுகுரலின் இடையறாத சத்தத்திற்கு.
வாப்பா வேலைக்கு போகிறார்.
உம்மா விறகெடுக்கப்போகிறாள்.
நான் படித்துவிடச்
செல்கிறேன்
சிறு வேலைகளும்
பெரும்பாடுகளாகும்
சூழ்நிலையில்.
பறவைகளின் ஒலியைப் போல
எங்கள் எல்லோருக்கும்
இடையறாத
இக் குண்டுகளின்
சத்தம்
பழகித்தான்
விட்டது
பயம் கொள்ளமுடியாமல்
நாங்கள்
பயணிப்பதற்கு.
நான் தூங்கிவிட்டதாக
இரவில்
அழுது புலம்பும்
வாப்பாவுக்கும் உம்மாவுக்கு
எப்பொழுதும்
என் எதிர்காலம் பற்றிய
கவலைகள் இருந்தது.
பேனா பிடிப்பேனா
பேராயுதம் ஏந்துவேனா
என்பதாக.
இரண்டாவதை
ஏற்பதில்
எங்களுக்கு
எந்த வருத்தமும் இல்லை
ஷஹீதை
நாங்கள் விரும்பினாலும்
எடுக்க வைத்ததற்கு
நீங்களுமொரு காரணம் என்பதை
கவனத்தில்
வைத்து
மறுக்காமல் இருந்தால்.
வழி வழியாக இப்படியாகவேதான்
இங்கு வாழ்க்கை இருந்ததாம்
நாளையின் நம்பிக்கையில்
வாப்பா பிறந்து
அவருக்கு
நான் பிறந்தபொழுதும் மாறாமல்.
பாடசாலையில்
வாப்பாவை தொலையக்கொடுத்த
சலீம்
தொடையில் சாய்ந்து
அழுததில் ஒழுகிய சளி
இப்போதும்
பிசுபிசுப்பாக இருக்கிறது.
எனக்கும் அழ வேண்டும்
போலத்தான் தோன்றுகிறது.
வராத கண்ணீருக்கு
நான் என்னதான் செய்யமுடியும்.
பல நாள்
விடிந்துவிட்டதாக எழுப்பும்போதுதான் தெரிகிறது
தூங்காமலையே போர்வைக்குள்
மரக்கட்டையாக கிடந்திருக்கிறோமென்பது.
சூழும் கருமேகங்கள்
மழையாக மாறவே இல்லை.
இங்கு
வறண்ட பூமியாக
வாழும் மனிதர்கள்
குண்டு மழை பொழியும்
பொறுப்புகளை
ஏற்றுக் கொண்டதால்
எம் பெண் பிள்ளைகளுக்கு
இங்கு
பெரு மதிப்பு இருக்கிறது.
இன அழிப்பின்
ஈன துரோகத்தில்
எழும்புக்கூடாக தேய்ந்தாலும்
உயிர் பிடித்து
வாழ்கிறார்கள்
உணவெல்லாம் மலடாக
உண்பதாக இருந்தாலும்
உயிர் உற்பத்தியில்
ஈனர்களுக்கு இடைஞ்சலாக.
இவ்வாறான பொழுதில்
இங்கு
யாவும் மாறலாம்தான்
அபகரிக்கும்
இந்த அக்கப்போரைத்தவிர.
6. மிதக்கும் பெட்டகங்கள்.
சாவை
மொண்டு
வந்தவன்
மிடறுகளில்
மிதக்கிறான்.
விழித்துவிடுவதால்
மோத்தல்
வாடிக்கையாகிறது
அவனுக்கு.
கரையும் கவலைகள்
கண்ணீராக
வழிகிறது
மனையிடம்
கஜானா நிரம்புவதாக
மகிழ்கிறது
அரசுகள்.
எப்பொழுதாவது
கொத்துக் கொத்தாக
உதிர்ந்தால்
அப்பொழுது
கவலைப் படலாம்.
அதுவரை
அவன்
அரசின்
நிதிக் கொள்முதல்
நியாயப் பெட்டகம் தான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.