
முன்னுரை
தமிழ்மொழி இனிமையானது. பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இலக்கியவளம், இலக்கணச் செழுமை கொண்டது. செம்மொழி அந்தஸ்து கொண்டது. சொல்வளம் நிறைந்தது. ஒரு சொல்லுக்கு பல பொருளும், பல சொல்லுக்கு ஒரு பொருளும் உடையது. இதுபற்றி தருவது நிகண்டுகளாகும். திவாகரநிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு என்று பல நிகண்டுகள் உள்ளன. சரணம், பாதம், கால், அடி, கழல், தாள் ஆகிய சொற்கள் அனைத்தும் கால் என்ற ஒரு சொல்லையேக் குறிக்கும்.கம்பராமாயணத்தில் இச்சொற்கள் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்து குறித்து ஆராய்வோம்.
திவாகரநிகண்டு
சரணம், பாதம், கால், அடி, கழல், தாள்
கம்பராமாயணத்தில் கால் என்பதற்கு பலசொல் ஒரு பொருள்
சொல்வளம் நிறைந்த நம் தமிழில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் உள்ளன. சரணம், பாதம், கால், அடி, கழல், தாள் ஆகிய சொற்கள் அனைத்தும் கால் என்ற ஒரு சொல்லையேக் குறிக்கும்.ஒரே சொல்லைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தாமல் அதேப் பொருளைக் குறிக்க வேறு வேறு சொல்லைக் கம்பர் பயன்படுத்தியுள்ளார்.
சரணம்
திருஅவதாரப்படலத்தில் திருமால் இராமனாக அவதாரம் எடுத்து இராவணனை அழிக்க இருப்பதாகக் கூறினார். எமது துன்பம் தொலைந்தது என்று கூறி, இந்திரன் உவகை அடைந்தான். தூய்மை மிகும் தாமரையில் வாழ்பவனான பிரம்மனும், சந்திரனைச் சடையில் அணிந்த சிவனும், மிக உயர்ந்த வானத்தே தேவர்களும், எமது இழிவு இன்றோடு ஒழிந்தது என்று உரைத்தனர். மிகப் பெரிய உலகத்தை உண்டவனான திருமால், கருடாழ்வார்மீது திருவடி வைத்து ஏறினான்.
“சேய் உயர் விசும்பு உளோரும் தீர்ந்தது எம் சிறுமை என்றார்
மா இரு ஞாலம் உண்டோன் கலுழன்மேல் சரணம் வைத்தான்”
(திருஅவதாரப்படலம் 204)
இப்பாடலில் சரணம் என்ற சொல் கால் என்ற பொருளிலேயே வந்துள்ளது.
பாதம்
அங்கதன் வந்து பொருதும் போது கும்பகர்ணன் அந்த மலையைத் தாக்கிய போது அந்த மலை எண்ண முடியாதபடி தூளாகிச் சிதறி வீழ்ந்தது. அதைக் கண்ட குரங்குக் கூட்டம் எமக்கு வலிமை தருவது யாதுள்ளது எதுவும் இல்லை என்று எண்ணி நிலை கெட்டது. அங்கதகுமாரரோ முன் வைத்த காலைப் பின் வைக்காதவனாய் பொருந்திய கோபமும் தானும் நின்றான்.
“ஏற்றபோது அனைய குன்றம் எண்ண அருந்துகளது ஆகி
வீற்று வீற்று ஆகி ஓடிவிழுதலும் கவியின் வெள்ளம்
ஊற்றம் ஏது நமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சென்ற பாதம்”
(கும்பகர்ணன் வதைப் படலம் 1400)
இப்பாடலில் பாதம் என்ற சொல் கால் என்ற பொருளிலேயே வந்துள்ளது.
கால்
கும்பகர்ணன் வதைப் படலத்தில் நீலன், கும்பகர்ணனுடன் போரிட்டு தோற்றபோது கைகள் சலித்துப் போக கால்களும் நிற்க முடியாமல் நிலைத்தடுமாற, தன் எண்ணம் நிறைவேற பெறாமல், நெய் தன்னிடம் பெய்யப்பெற்ற நெருப்பைப் போலக் கோபம் கொண்ட மனம் எரிகின்ற நீலனை அவன் உயிர் இளைத்துத் துடிக்கும்படி தனது இடக்கையால் அடித்தான் கும்பகர்ணன். ஆனால் இவன் ஆயுதம் இல்லாது வெறும் கையோடு இருக்கிறான் என்று எண்ணி வலியவனான அந்தக் கும்பகர்ணன் தனது மூன்று பிரிவுகள் கொண்ட சூலத்தை நீலன் மீது எரியவில்லை.
“கைத்தலம் சலித்துக் காலும் குலைந்து தன் கருத்து முற்றான்
நெய்த் தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன் தன்னை“
(கும்பகர்ணன் வதைப் படலம் 1398)
இப்பாடலில் கால் என்று வந்துள்ளது.
அடி
அகலிகைப் படலத்தில் சாப விமோசனம் பெற்ற அகலிகையை ஏற்றுக் கொள்ளுமாறு கோசிக முனிவன் கௌதம முனிவனை வேண்டுமிடத்தில்
“அஞ்சன வண்ணத்தான் தன்
அடித்துகள் கதுவா முன்னம்
வஞ்சி போல் இடையாள் முன்னை
வண்ணத்தள் ஆகி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை
நீ அழைத்திடுக என்ன
கஞ்ச மா மலரோன் அன்ன
முனிவனும் கருத்துள் கொண்டான்“
(அகலிகைப் படலம் 484)
அஞ்சன வண்ணத்தானாகிய இராமனின் திருவடித்துகள் காலடித்துகள் பட்டவுடன் வஞ்சி போல் இடையாள் அகலிகை முன்பிருந்த வண்ணம் எழுந்து நின்றாள் நெஞ்சினால் பிழை செய்யாத இவளை நீ ஏற்றுக்கொள் என்று கோசிகன், கௌதமனிடம் கேட்டான்.
அடி இணை
யுத்த காண்டம் மருத்துமலைப் படலத்தில் இந்திரசித் எய்த பிரம்மாஸ்திர படையால் மயங்கி விழுந்த இலட்சுமணன் முதலானவர்களை மூர்ச்சைத் தெளிவிக்க மருத்துமலையைக் கொண்டு வர அனுமன் போனான். அனுமன் வருவதற்குள் மனம் தளர்ந்து இராமன் வருந்தும் போது சாம்பன் தோன்றும் இடம்.
“படி யினது ஆதலின் யாதும் பார்க்கிலென்,
முடிகுவென் உடன் என முடியக் கூறலும்
அடியிணை வணங்கிய சாம்பன் ஆழியாய்
நொடிகுவது உலகு என நுவல்வதாயினான்”
(மருத்துமலைப்படலம்2725)
இலட்சுமணன் மயங்கி கிடப்பதைக் கண்ட இராமன் அவன் இறந்துவிட்டான் என்ற முடிவுக்கே வந்து என் நிலைமை இவ்வாறு இருப்ப, பின் விளைவுகளைப் பாராமல் உடனே இறப்பேன் என்று இராமன் முடிவாகக் கூறினான். அப்போது அவனுடைய திருவடிகளை வணங்கிய சாம்பன் சக்கரப்படையை உடையவனே, நான் சொல்ல வேண்டுவது ஒன்று உள்ளது என்று சொல்லத் தொடங்கினான்.
இப்பாடலில் அடி இணை என்பது கால்களையேக் குறித்தது.
மலரடி
வாலி, அங்கதனிடம் பொன் அணியை அணிந்தவனே, இந்த இராமன் என் உயிர்க்கு இறுதியை உண்டாக்கினான் என்று நீ சிறிதும் எண்ணாதே. உன் உயிர்க்கு உறுதியைச் செய்து கொள்ள எண்ணுவாயாக. இவன் பகைவருடன் போர் செய்ய நேர்ந்தால் நீ துணையாகச் செல். தர்மத்தை ஆதரித்து நிலை பெற்று வாழும் உயிர்க்கெல்லாம் நலத்தைச் செய்பவனான இராமனின் மலர் போன்ற அடியை வணங்கி வாழ்வாயாக என்றான்.
“என்னுயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணாது
உன்னுயிர்க்கு உறுதி செய்தி, இவற்கு அமர் உற்றது உண்டேல்
பொன்னுயிர்த்து ஒளிரும் பூணாய், பொதுநின்று தருமம் நோக்கி
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலரடி சுமந்து வாழ்த்தி”
(வாலி வதைப் படலம் 382)
இப்பாடலில் மலரடி என்பது கால்களையேக் குறித்தது.
கழல்
அரசியல் படலத்தில் மாட்சிமை மிகுந்த அந்த அயோத்தி நகருக்கு அரசனாக இருப்பவன் அரசர்களுக்கு அரசரான சக்கரவர்த்தி ஆவான். அவன் தனது ஒப்பற்ற அரசாட்சியை ஏழு உலகங்களிலும் நடைபெறும் படிச் சிறந்து நின்றவன். இராமாயணம் எனும் சிறந்த காவியத்திற்குத் தலைவனான இராமன் என்னும் சிறந்த வீரக்கழலை அணிந்தவனைப் பெற்றுத் தந்த நல்ல தருமத்தின் உருவத்தை ஒத்தவன்.
“இம்மாண் கதைக்கு ஓர் இறை ஆயஇராமன் என்னும்
மொய்ம் மாண் கழலோன் தருநல் அறமூர்த்தி அன்னான்”
(அரசியல் படலம் 169)
இப்பாடலில் கழலோன் என்ற சொல் கால் என்ற பொருளிலேயே வந்துள்ளது.
தாள்
மீட்சிப் படலத்தில் சத்ருக்கணன் எல்லோரையும் வணங்குதல் என்று குறிப்பிடும் போது, இராமன் தன் தம்பியும் பரதனுடன் பிரியாது இருப்பவனுமான சத்ருக்கணனை நீண்ட தன் கைகளால் எடுத்துப் பருத்த இரண்டு தோள்களால் தழுவி அணைத்துக்கொண்ட பின்பு, அந்த இரண்டு தம்பியர்க்கும் தன்னுடைய இனிய துணை போன்ற சுக்ரீவன் முதலிய நண்பர்களை இன்னார் என அறிமுகம் செய்து வைத்தான்.. தன் நிலை பெற்ற உயிருக்கு ஒப்பாகுமாறு வந்த அவர்கள் பரதன்,சத்ருக்கணன் என்ற இருவரின் அடிகளையும் வணங்கினர்.
“இன்னுயிர்த் துணைவர் தம்மைக் காட்டினான் இருவர் தாளும்
மன்னுயிருக்கு உவகை கூர வந்தவர் வணக்கம் செய்தார்”
(மீட்சிப் படலம் 4224)
இப்பாடலில் தாள் என்ற சொல் கால் என்ற பொருளிலேயே வந்துள்ளது.
சரணம், பாதம்
கும்பகர்ணன் வதைப்படலத்தில் கும்பகர்ணன், அங்கதனுடன் உரையாடும்போது, உன் தமையன் இராவணனைத் தனது வாலில் கட்டிப் பிணைத்து வலிமை மிகுந்த நான்கு திசைகளிலும் பரவிச்சென்று மூன்று முனைகளைக் கொண்ட நீண்ட வேலை ஏந்திய சிவனுடைய தாமரை மலர் போன்ற அழகிய திருவடியைப் பணிந்த கொடும் போரில் வல்ல வீரனான வாலியின் புதல்வன். நான் உன்னை எனது வாலில் கட்டி போர்க்களத்தில் நின்றுள்ள இராமனுடைய திருவடிகளைப் பணியுமாறு செய்வேன் என்று அங்கதன் கூறினான்.
“நும்முனை வாலில் சுற்றி நோன் திசை நான்கும் தாவி
மும்முனை நெடுவேல் அண்ணல் முளரிஅம் சரணம் தாழ்ந்த
வெம்முனை வீரன் மைந்தன் நின்னை என் வாலின் வீக்கி
தெம்முனை இராமன் பாதம் வணங்கிடச் செல்வேன் என்றான்“
(கும்பகர்ணன் வதைப் படலம் 1404)
சரணம், பாதம் இரண்டும் கால் ஒரே பொருளைக் குறிக்கிறது ஒரே பாடலில் வந்துள்ளது.
கழல், தாள்
இராமனின் மேனி அழகை சொல்லும் பாடல் பாலகாண்டம் உலாவியல் படலத்தில் அமைந்துள்ளது.
“தோள்கண்டார் தோளே கண்டார்
தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்”
(உலாவியற் படலம் 1028)
கால், தாள் இரண்டும் கால் ஒரே பொருளைக் குறிக்கிறது ஒரே பாடலில் வந்துள்ளது.
பாதம்,அடி,தாள்
இராமன், சீதை திருமணம் முடிந்து கைகேயியையே முதலில் வணங்கினான்.
“கேகயன் மா மகள் கேழ்கிளர் பாதம்
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி
ஆய தன் அன்னை அடித்துணை சூடி
தூய சுமத்திரை தாள் தொழலோடும்”
(கடிமணப்படலம் 1200)
இப்பாடலில் பாதம், அடி தாள், ஆகிய மூன்றும் கால் ஒரே பொருளைத் தந்தன. இம்மூன்று சொற்களும் ஒரே பாடலில் வந்துள்ளது.
கால், தாள்
மீட்சிப் படலத்தில் இராம -இராவண யுத்தம் முடிந்த பிறகு அயோத்தி வந்த இராமன் அன்னையரை வணங்கினார். கேகயன் மன்னனின் மகளான கைகேயியையே முதலில் காலில் படுமாறு விழுந்து வணங்கினார். பின்பு அடுத்த கூந்தலை உடைய கோசலை, சுமித்திரை என்ற இரண்டு தாயாரின் அடிகளையும் முறைப்படி வணங்குகின்ற சிவந்த கண்களை உடையவனான இராமனை அந்தத் தாயார் இருவரும் அன்பு மிகத் தழுவிக்கொண்டு தங்களின் செந்தாமரை மலர் போன்ற கண்களினின்றும் சிந்திய நீரால் நீராட்டும் தொழிலையும் செய்தார்கள்.
“கைகயன் தனயை முந்தக் கால் உறப்பணிந்து மற்றை
மொய்குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கு செங்கண்
ஐயனை மலர்கள் தாமும் அன்புறத் தழுவித் தம் தம்
செய்ய தாமரைக் கணீரால் மஞ்சனத் தொழிலும் செய்தார்”
(மீட்சிப் படலம் 4217)
இப்பாடலில் கால், தாள் ஆகிய இரண்டும் ஒரே பொருளைத் தந்தன.ஒரேப் பாடலில் இவ்விரண்டு சொற்களும் வந்துள்ளது.
நளினபாதம்,கழற்கால்
தசரதனிடம் கைகேயி பெற்ற வரத்தால் வனம் புக பணிக்கப்பட்ட இராமனைக் கண்டு கோசலை திகைத்து நின்று
“புனைந்திலன் மௌலி குஞ்சி
மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன் என் கொல் என்னும்
ஐயத்தாள் நளின பாதம்
வளைந்த பொன் கழற் கால் வீரன்
வணங்கலும் குழைந்து வாழ்த்தி
நினைத்தது என் இடையூறு உண்டோ
நெடுமுடி புனைதற்கு என்றாள்”
(நகர்நீங்கு படலம் 294)
இவ்வாறு நளின பாதம், கழல், கால் என்பது பாதம் என்பதையேக் குறிக்கிறது. ஒரே பொருள் தரும் சொற்களாகும்.
முளரித்தாள்
பள்ளிப்படைப் படலத்தில் பரதன் தசரதனின் தாமரைப் பாதங்களை வணங்க
“மூண்டு எழு காதலால் முளரித்தாள் தொழ
வேண்டினென்”
(பள்ளிபடைப்படலம் 826)
முளரித்தாள் என்றே வந்துள்ளது.
மஞ்சள் கழல்
கங்கைப் படலம் மூன்றாவது பாடல் காமன் ஐங்கனையான் தாமரை, முல்லை, அசோகு, மா, நீலம் என்பன அவனது மலரம்புகள் மன்மதனது 5 அம்பையும், இராமனது கூறும் கணையையும் அளந்து தனக்கு உவமையாகாது என்று தள்ளும் நயனங்களைக் கொண்டவள் சீதை. அவள் கொடிய இடங்களையும் வெல்லும் தன்மை கொண்டவை. அந்தக் கண்களால் சீதை தேனுண்டு துஞ்சும் களிக்கும் வரி வண்டுகள் கூந்தலை மொய்க்கும் அழகிய வண்டுகள் தாமரை மலர்களை மொய்ப்பதையும், அந்தத் தாமரை மலர்களை மைந்தனாகிய இராமனின் திருவடிகள் இகழ்ந்து சிரிப்பதையும் கண்டாள் ’அஞ்சு அம்பையும் ஐயன் தனது என தொடங்கும் பாடலில்
“துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின்படி சுழலும்
ஞ்சங்களை மஞ்சள் கழல் நகுகின்றது கண்டாள்”
(கங்கைப்படலம்612)
இப்பாடலில் மஞ்சள் கழல் என்பது காலையேக் குறித்தது.
குரைகழல், அதிர்கழல்
கும்பகர்ணன் வதைபடலத்தில் இலட்சுமணனுக்கும், கும்பகர்ணனுக்கும் போர் நடைபெற்றது. வெவ்வேறு பொருள்களை யாசிக்கின்றன போன்றவையான இலட்சுமணனுடைய அம்புகள் ஒருவரின் கையையும், ஒருவரின் தலையையும், மற்றொருவரின் ஒலிக்கின்ற வீரக் கழல் அணிந்த இரண்டு கால்களையும், இன்னொருவரின் இரு தோள்களையும் மற்று உள்ளோரையும் பெற்றுக் கொண்டமையால் மேலும் பகைவரைப் பெறாத வறுமையை அடைந்தன வாயின.
“ஒருவரைக் கரம் ஒருவரைச் சிரம் மற்று அங்கு ஒருவர்
குரைகழல் துணை தோள் இணை பிற மற்றும் கொளவலால்”
(கும்பகர்ணன் வதைப் படலம் 1437)
இப்பாடலில் குரைகழல் என்ற சொல் அமைந்துள்ளது.
கவந்தன் படலத்தில் சூரியனுக்கு மகனான பொன் போன்ற, ஒளி பொருந்திய நிறத்தோடு திகழும் சுக்ரீவனை நேருக்கு நேர் சந்தித்துத் தழுவிக்கொண்டு அவனோடு இனிய முறையில் நட்புக் கொண்டு, அவனுடைய துணையால் நீண்ட மூங்கில் போன்ற தோள்களை உடைய சீதையைத் தேடுவது சிறந்தது என்று கவந்தன் கூறினான். ஒலிக்கின்ற வீரக் கழலை உடைய இராமனும், இலட்சுமணனும் அவ்வாறே செய்யச் சம்மதித்தனர்.
“கதிரவன் சிறுவனான கனகவாள் நிறத்தினானை
எதிரெதிர் தழுவி நட்பின் இனிதமர்ந்து அவனின்நீண்ட
வெதிர்பொரும் தோளினானை நாடுதல் விழுமிது என்றான்
அதிர்கழல் வீரர் தாமும் அன்னதே அமைவதானார்“
(கவந்தன் படலம் 1181)
இப்பாடலில் அதிர்கழல், குரைகழல் என்ற சொற்கள் வந்துள்ளது.
சேவடி
உருகாட்டுப்படலத்தில் அனுமன், இராமனது ஆணையினால் இலங்கை சென்று அசோகவனத்தில் இருந்த சீதையைச் சந்தித்தான். முன் சென்மத்தில் தவம் செய்த காரணத்தினால் பிராட்டியே உன் திருவடியை வந்து காணக்கிடைத்தது எனக்கு என்று எண்ணினான்.
"மடந்தை நின் சேவடி வந்து நோக்கினான்"
(உருக்காட்டு படலம் 510)
இப்பாடலில் சேவடி என்ற சொல் பாதம் என்ற பொருளிலேயே வந்துள்ளது.
பொற்பாதம்
வீடணன் அடைக்கலப்படலத்தில் இராமன், வீடணனுக்கு அடைக்கலம் அளிக்க எண்ணி சுக்ரீவனிடம் அவனை அழைத்துவரக் கூறினான். சுக்ரீவன், வீடணனிடம் சென்று விரைந்து வந்து இராமனின் பாதங்களை வணங்கவருமாறு கூறினான்.
"வழுவல்இல் அபயம்உன் பால்
வழங்கினான் அவன் பொற்பாதம்
தொழுதியால் விரைவில் என்று
கதிரவன் சிறுவன் சொன்னான்"
(வீடணன் அடைக்கலப்படலம் 426)
மென்கால்
இராமன் தன்னை ஏற்றுக் கொண்டவுடன் வீடணன் செந்நிறக் குழம்பு தோய்ந்த பஞ்சுதானோ என்று சந்தேகிக்ககூடிய இயல்பில் சிவந்த மெல்லிய பாதம் கொண்ட தேவியைப் பிரித்த பாவி இராவணனுக்கு தம்பி என்னை வருக என்று சொல்லி அருளினானே என்று கூறினான்.
" பஞ்செனச் சிவக்கும் மென்கால்
தேவியைப் பிரித்த பாவி"
(வீடணன் அடைக்கலப்படலம் 428)
விராதன் பெருமானுடைய திருவடிப் பெருமையை
" ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவர் முன் உவந்து உறையும்
…………………………………………………………………………………………………..
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால் துடைத்தாய் நீ"
(விராதன் வதைப் படலம் 60)
தாள், திருவடி
இராம இலட்சுமணர், சுக்ரீவன் உள்ளிட்டோர் மகேந்திரமலைக்கு வருகிறார்கள்.அனுமன் கடலைத்தாவும் நோக்கத்தில் நிற்பதை
“பொருவரு வேலைதாவும் புந்தியான் புவனம்தாய
பெருவடிவு உயர்ந்த மாயோன் மேக்குஉறப் பெயர்த்தாள்போல்
உருஅறி வடிவின் உம்பர் ஓங்கினான் உவமையாலும்
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரியநின்றான்”
(மயேந்திரப்படலம் 1027)
இப்பாடலில் தாள், திருவடி என்ற இரு சொற்களும் வந்துள்ளன.
சேவடி, பொன்கழல்
அரசியல் படலத்தில் உலகம் முழுவதும் ஒரே குடையின்கீழ் தசரதன் ஆட்சி செய்வதைக் குறிப்பிடுகிறான். தன்னை எதிர்க்கும் அரசர்களின் வன்மையை வேலால் தாக்கி அழிப்பதால் வேல் மழுங்கும். மழுங்கிய வேலைத் தீட்டிக் கூராக்குவதால் அவனது வேல் தேயும். தன்னைப் பணிகின்ற அரசர்களுடைய மணிகள் பதித்த நீண்ட மகுடங்கள் படுவதாலே, அவன் காலில் அணிந்துள்ள பொற்கழல் தேய்ந்துவிடும்.
“யாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மே வரும் கை அடை வேலும் தேயுமால்
கோவுடை நெடு மணி மகுட கோடியால்
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால்”
(அரசியல்படலம் 176)
இப்பாடலில் சேவடி, பொன்கழல் இரு சொற்களும் வந்துள்ளன.
பாதுகம்-
திருவடி என்று பொருள்.வாலி வதைப்படலத்தில் வாலி அம்புபட்டு தரையில் வீழ்ந்து கிடந்ததைக் கண்ட அங்கதன் பலவாறாகப் புலம்பினான்.
"பஞ்சின் மெல் லடியார் பங்கன்
. பாதுகம் அலாது யாதும்"
(வாலி வதைப்படலம் 378)
என்று சிவபெருமானின் திருவடி என்று வரும்போது பாடப்பட்டுள்ளது.
முடிவுரை
தமிழின் சிறப்புகள் பலவற்றுள் பல சொல் ஒரு பொருளாகக் குறிக்கும்சொற்கள் உள்ளன என்பதை நிகண்டுகள் கூறுகின்றன. கால் என்ற சொல்லைக் குறிக்கும் படியாக சரணம்,பாதம், அடி, கழல், தாள், பாதம் ஆகிய சொற்கள் தமிழில் உள்ளன. இச்சொற்கள் தனித்தனியாகவும், ஒரேப் பாடலிலும் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். கம்பராமாயணத்தில் கம்பர் இச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.செல்வம்.கோ,கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை 2016.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி ,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









