
எழுத்தாளர் ஷோபா சக்தி தனது முகநூற் பதிவான 'எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும்' என்னும் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
"சமீபத்தில், மூத்த எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் இவ்வாறு எழுதியிருந்தார்: 'பிரபல பதிப்பகங்களில் குறிப்பாக மேற்குலகில், ஒருவர் செவ்விதாக்கம் செய்வாரெனக் கேள்விப்படுகிறேன். பிறிதொருவர் அதனைச் செய்யும்போது மூல ஆசிரியரின் படைப்பு மாற்றத்திற்குள்ளாகும் நிலையில், பிறகு அவரது பெயரை மட்டும் போடுவது சரியாகுமா என்ற ஐயம், எனக்கு நீண்டகாலமாக உள்ளது; இருவரின் பெயரைப் பாவித்தால் பொருத்தமாகலாம். இங்கு ஷோபாசக்தியின் செவ்விதாக்கம், மூல ஆசிரியரின் ஆக்கமொன்றை அவருடையதல்லதாக்கிவிட்டுள்ள ( உண்மையை) அவலத்தை, உணரமுடிகிறது! செவ்விதாக்கம் அதன் சொந்தப் படைப்பாளியால், அவர் திருப்திகாணும் வரை மேற்கொள்ளப்படுதலே முறையானது!'
அ.யேசுராசா அவர்கள் குறிப்பிடுவது போன்று, உலக மொழிகளில் இயங்கும் மதிப்புறு பதிப்பகங்கள் அனைத்துமே ஒரு பிரதியை வெளியிடும்போது 'எடிட்' செய்தே வெளியிடுகிறார்கள். அந்தப் பதிப்பகங்களிலேயே 'எடிட்' செய்வதற்கு என்று ஒரு குழு இருக்கும். சில பதிப்பகங்களில் 'எடிட்' குழுவில் ஆறுபேர் வரை இருப்பதுண்டு.ல்........ தமிழில் இந்த 'எடிட்' நடப்பதில்லையா என்று கேட்டால் அது நடக்கிறது. உதாரணத்திற்கு குறிப்பிடுவதானால், ஜெயமோகன் 'விஷ்ணுபுரம்' நாவலை எழுதிவிட்டு சுஜாதாவிடம் கொடுத்து 'எடிட்' செய்து தருமாறு கேட்டிருக்கிறார். சுஜாதா செய்யாததால், எம்.எஸ்ஸிடம் நாவலைக் கொடுத்து எடிட் செய்து தருமாறு ஜெயமோகன் கேட்டிருக்கிறார். எம்.எஸ்ஸின் உதவியுடன் அது நாவல் வடிவம் பெற்றது. இதை 'உள்ளே இருப்பவர்கள்' என்ற தன்னுடைய கட்டுரையில் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். ...... என்னுடைய நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும் பிற மொழிகளில் வெளியாகியபோது, 'எடிட்' செய்தே வெளியிடப்பட்டன."
ஷோபா சக்தியின் தமிழ்ப்படைப்புகள் எவையும் இன்னுமொருவரால் மொழிநடை , கருத்து , கதைப்பின்னல் எவையும் 'எடிட்' செய்யப்பட்டு வெளியிடப்படவில்லை என்று நினைக்கின்றேன். அவரது பிறமொழிப் படைப்புகள் மட்டுமே இவ்விதம் 'எடிட்' செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அது மேனாட்டு நடைமுறை. ஆனால் தமிழில் இவ்விதமான போக்கு இருப்பதாகத் தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரையில் நான் இவ்விதமான போக்குக்கு ஆதரவாளன் அல்லன். எழுத்தாளர் ஒருவரின் சுயத்தை அழிக்கும் அபாயமுள்ள போக்காகவே இதனை நான் கருதுகின்றேன்.
உதாரணத்துக்கு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பற்றி சோபாசக்தி குறிப்பிட்டிருந்தார். அது பற்றிய உண்மை, பொய் தெரியாது. ஆனால் ஜெயமோகனால் விஷ்ணுபுரம் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் எத்தனை மணி நேரமானாலும் பேச முடியும். எழுத முடியும். அவரது பிரதியை எடிட் செய்யும் ஒருவர் அவரது எழுத்தாளுமையை மீறியவராகவே இருக்க முடியும். வேண்டுமானால் இலக்கணப்பிழைகள், எழுத்துப்பிழைகளைத் திருத்த அவர் பிற்ர் உதவியை நாடியிருக்கக் கூடும். ஜெயமோகம் விஷ்ணுபுரம் எழுதுவதற்கு முன் எழுத்துலகில் நீண்ட காலம் இயங்கி வந்த ஒருவர். படுபட்சி எழுதியவர் புதியவர். எழுத்துலக அனுபவம் அற்றவர்.
தனது முதல் நாவலையே , அதுவும் திரைப்பட 'ஸ்கிரிப்ட்'டை நாவலாக்குவதற்கு சோபாசக்தியைப் பாவித்த எழுத்தாளர் டிலுக்ஷன் மோகனால் ஒரு மேடையில் அவரது படுபட்சி நாவலைப்பற்றி , தமிழ் எழுத்துலகம் பற்றி, உலக இலக்கியம் பற்றி மணிக்கணக்கான விபரிக்க முடியுமா? எழுத முடியுமா? எவ்வித எழுத்துலக அனுபவமும் இல்லாமல் , கதைக்கருவை , சம்பவங்களை மட்டுமே பிரபல எழுத்தாளார் ஒருவர் மூலம் எழுத வைப்பதால் என்ன இலாபம் வளர்ந்து வரும் எழுத்தாளர் ஒருவருக்கு இருக்க முடியும்? அவரது ஆளுமையை முளையிலேயே கிள்ளிப்போடும் செயலாகவே இவ்விதமான செயற்பாட்டினை நான் கருதுகின்றேன். அவர் நிறைய வாசிக்க வேண்டும், நிறைய எழுத வேண்டும். வாசிப்பு, எழுத்தும் அவரை நல்லதோர் எழுத்தாளராக உருவாக்கும்.
இன்னுமொரு விடயம்.. இந்நாவலை எழுதியவர் தனக்கேற்பட்ட இலங்கைப்புலனாய்வுத் துறையினரால் இழைக்கப்பட்ட அநீதிகளைப் பேட்டியொன்றில் விபரித்திருந்தார். இவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாம் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் ஏற்பட்டவை என்றும் அதில் தெரிவித்திருக்கின்றார். 2010இல் தான் விமானப்பொறியியல் படிக்கத் தொடங்குகின்றார். இரத்மலானை விமானப் பொறியியல் படிக்கும் கல்லூரியில் படிக்கின்றார். உண்மையில் இந்தப் புத்தகம் வெளிவரும் வரையில், இவரது இந்த நேர்காணலைப் பார்க்கும் வரையில் ஊடகங்கள் எவற்றிலும்ம் குறிப்பாகத் தமிழ் ஊடகங்களில் எவற்றிலும் நான் இவ்விதமாக விமானப்பொறியியல் படிக்கும் தமிழ் மாணவனுக்குப் பல அநீதிகள் புரியப்பட்டதாக வாசித்ததில்லை. அறிந்ததில்லை. நீங்கள் யாராவது அறிந்திருந்தால் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தற்போதுள்ள முக்கிய விடயம்? 'படுபட்சி' நாவலில் மொழி நடை, இலக்கணப்பிழைகள், எழுத்துப்பிழைகள் மட்டும்தான் திருத்தப்பட்டுள்ளனவா அல்லது திருத்தியவரின் சொந்தக் கருத்துகளும் அதில் விதைக்கப்பட்டுள்ளனவா என்பதுதான். அவ்விதம் விதைக்கப்பட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. அது கதாசிரியரின் கருத்து அல்ல.
'படுபட்சி'க் கதாசிரியர் டிலுக்ஸன் மோகனின் நேர் காணல் 'தி இந்து ' பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் தலைப்பு - ‘தமிழன் என்பற்காகவே ஒரு நாடு நிராகரித்ததைத் தாங்க முடியவில்லை’ - ‘படுபட்சி’ நாவலாசிரியர் டிலுக்ஸன் மோகன் நேர்காணல்'. அதில் கதாசிரியர் தெரிவித்திருக்கும் கூற்றுக்களில் சில வருமாறு:
1. இலங்கையில் இருக்கிற விமானங்கள் அனைத்தும் ‘அசம்பிள்’ பண்ணியது. அங்கு தயாரித்தது அல்ல. அதனால் இலங்கையின் முதல் விமானத்தை நான்தான் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. பிறகு அது என் கனவாகவும் மாறியது. ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரிங் கல்லூரியில் சேர்ந்தேன். என் வகுப்பில் நான் மட்டுமே தமிழ் மாணவன். பாடப்புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் சிங்களத்தில்தான் பாடம் எடுப்பார்கள்.
எனக்குச் சிங்களம் தெரியாது. சுயமாக படித்து தயார்ப்படுத்திக் கொண்டேன். ஒரு விமானம் உருவாக்குவதற்கான அனைத்தையும் தெரிந்துகொண்டேன். அது தொடர்பாகப் பேராசிரியர்கள் முன் நடத்திக் காட்டிய ‘பவர்பாயின்ட் பிரசன்டேஷன்’ அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். பிறகு 40 நிமிடம் அவர்கள் தனியாக விவாதித்துவிட்டு,“அனுமதி வழங்க மாட்டோம்” என்றார்கள்.
“ஏன்?” என்றேன். “நீ தமிழன். இதை விடுதலைப் புலிகளுக்காகத் தயாரிக்க இருக்கிறாயா? அவர்கள்தான் படிக்க வைக்கிறார்களா?” என்று கேட்டார்கள். என் கனவு ஆரம்பத்திலேயே சிதைந்தது. இது முடிந்த மறுநாள், புலனாய்வுத் துறையினரால் கடத்தப்பட்டு ‘நான்காவது மாடி’க்குக் கொண்டுச் செல்லப்பட்டேன். அது ஒரு சித்தரவதை. அதை எப்படி விளக்கினாலும் மற்றவர்களால் ஓரளவுக்குத்தான் புரிந்து கொள்ள முடியும். அதை அனுபவித்து, உயிரோடிருப்பதே பெரிய விஷயம். ‘புலிகளுக்காக விமானம் தயாரித்து, எங்கே குண்டு போடப் போகிறீர்கள்?’ என்கிற ஒரே கேள்வியை நான்கு நாட்களாகத் திரும்பத் திரும்பக்கேட்டு சித்தரவதைச் செய்தார்கள். இதே போல பல ரணங்கள், கொடுமைகள். பிறகு இலங்கையில் இருந்து தப்பி ஆஸ்திரேலியாவுக்கு அகதியாகச் சென்றேன். இப்படி சொல்லிக் கொண்டே போக முடியும். அந்த வலிகள்தான் இதை எழுதத் தூண்டியது.
2. "‘புலிகளிடம் கைப்பற்றிய விமானம்’ என்று நீங்கள் தயாரித்த விமானத்தை இலங்கை விமானப்படை, காட்சிக்கு வைத்திருப்பதாக நாவலில் கூறியிருக்கிறீர்களே... அது உண்மைதானா? - உண்மைதான். விமானம் தயாரிக்கக் கூடாது என்று கடுமையாக மிரட்டிய பிறகும் யாருக்கும் தெரியாமல் ஒரு விமானத்தைத் தயாரித்தேன். ஒரு கட்டத்தில் அதைத் தெரிந்துகொண்டு என்னைப் பிடித்துச் சித்தரவதை செய்தார்கள். பிறகு நான் தயாரித்து மறைத்து வைத்திருந்த விமானத்தை அவர்கள் கைப்பற்றிச் சென்றார்கள்.
அதைத்தான் அவர்கள் வைத்திருக்கிறார்கள். ரத்மனாலை என்ற இடத்தில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட விமானம் ஒன்றையும் நான் தயாரித்த விமானத்தையும் வைத்திருக்கிறார்கள். அது என்னுடையது என்பது அவர்களுக்கே தெரியும். "
3. "அடுத்து என்ன எழுதுகிறீர்கள்? - பெரு நாட்டின் பின்னணியில் ஒரு நாவலை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். என் ‘கேர்ள் பிரண்ட்’ பெரு நாட்டைச் சேர்ந்தவர். அவருடன் அங்கு சென்றிருக்கிறேன். அங்குள்ள மனிதர்களின் கஷ்டம் எனக்கு இலங்கையில் இருக்கும் உணர்வைத் தந்தது. அதனால் அதன் பின்னணியில் நாவல் எழுதுகிறேன். அங்கு மனித கடத்தல் எப்படி நடக்கிறது, அவர்கள் எப்படி அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் என்கிற பின்னணியிலான கதையாக இருக்கும்."
இந்நேர்காணலில் சில முரண்பாடுகள் உள்ளன:
ஓரிடத்தில் தான் உருவாக்கிய விமானத்தையே படையினர் இரத்மலான விமானப்படைத்தளத்தில் வைத்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார். இன்னுமோரிடத்தில் புலிகளின் விமானத்துடன் தன் விமானத்தையும் வைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.ஓரிடத்தில் விமானத்தை இரகசியமாகத் தயாரித்து ஒளித்து வைத்திருந்ததாகக்கூறுகின்றார். ஒரு விமானமொன்றை இவ்வளவு எளிதாக, யாருக்கும் தெரியாமல், மறைவாகச் செய்ய முடியுமா? அது முறையாக இயங்குகின்றதா என்றெல்லாம் இயக்கிப் பார்க்கத் தேவையில்லையா? ஓரிடத்தில் விடுதலைப்புலிகளுக்காகச் செய்கின்றாயா என்று கேட்டார்கள் என்கின்றார். அப்போது யுத்தம் மெளனித்து ஆண்டுகள் கடந்து விட்டன. களத்தில் புலிகள் இல்லை.
இவையெல்லாம் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. யுத்தம் முடிந்த பிறகு இவ்விதம் தமிழ் இளைஞர் ஒருவர் விமானம் செய்திருந்தால், அதனைப் படையினர் கைப்பற்றியிருந்தால் மிகப்பெரியு செய்தியாக வந்திருக்க வேண்டுமே! ஏன் வரவில்லை?
சுய அனுபவத்தின் அடிப்படையில் என்று கூறப்பட்டிருந்தாலும், புனையப்பட்ட சுய அனுபவ நாவலோ என்னும் சந்தேகம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









