
16.11.2025, ஞாயிறு வீரகேசரி, தன் முன் பக்கத்திலேயே, பெரிய அளவில், இரு படங்களை வெளியிட்டது. முதலாவது படம்: இந்திய உயர்ஸ்தானிகர் (சந்தோஷ் ஜா சுமந்திரன்-சாணக்கியன் ஆகியோரை சந்தித்து அளவலாவுவது. இரண்டாவது: விடுதலை சிறுத்தைகளின் தலைவரான தொல்.திருமாவளவனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு சந்தித்து ‘சமஷ்டி'யை’ வலியுறுத்துவது. மேற்படி இரு படங்களும், ஒருபுறமிருக்க, ஜேவிபி அரசானது தான் நிறைவேற்ற போவதாய் கூறியுள்ள, புதிய அரசியல் அமைப்பில், 13வது திருத்தத்தை (அதாவது மாகாண சபையினை) உள்ளடக்குவதா அன்றி தூக்கி வீசுவதா என்று தீவிரமாய் சிந்தித்து வரும் இந்நிலையில் ‘சமஷ்டி’ உச்சரிக்கப்படுவது, முக்கியத்துவம் வாய்ந்தது.
மறுபுறத்தில், இந்தியாவை கத்தரிக்க வேண்டுமென்றால், 13ஐ கத்தரித்தாக வேண்டும் என்பது முதல் விதி. மேலும், தமிழ் மக்களை தொடர்ந்து கனவு நிலையிலேயே ஆழ்த்தி வைத்திருக்க வேண்டுமென்றாலும், முதலில் 13ஐ கத்தரித்தாக வேண்டும், என்பது இரண்டாவது விதி. இவ்விரு விதிகளுமே, எமது புலம்பெயர் அரசியலுக்கு உவப்பானது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், 13ஐ தூக்கியெறிவது, மறுபுறத்தில் ‘சமஷ்டி’யை உள்ளடக்கவே செய்யும். மொத்தத்தில், இவை அனைத்தையும் சுருக்கினால், அது சமஷ்டியா அல்லது 13 என்றா என்பதில்தான், ஒருவகையில், முடியும். இப்பின்னணியிலேயே, இவ்விரு சந்திப்புகளும் முக்கியத்துவம் பெறுவன.
ஆக, இவ் இழுபறிகள், அனைத்துமே, வடக்கு அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு உவப்பாக இருந்துள்ளதோ, அதுபோலவே, எமது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கும் இவ்விழுபறிகள், உவப்பானதாகவே இருக்கின்றன. காரணம், இந்நாட்டின், மாபெரும் அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அவ் ஆட்சியை வலிதான முறையில் அவர்கள் தக்க வைத்து கொண்டதும் மேற்படி அரசியல் சார்ந்தது என்பதில் ஐயமில்லை.
மறுபுறம், இப்போக்குகள், அதாவது, சமஷ்டியை வலியுறுத்துவதும் (பொன்னம்பலம் குழுவினர்) மற்றும், இதற்கெதிராய் மாகாண சபைகளை அல்லது மாகாண சபை தேர்தலை வலியுறுத்தும் சுமந்திரன் போன்றோர், ஆகிய இருவருமே, இந்தியாவுக்கு இஷ்டப்பட்டவர்களாகவே தோற்றுவர். இருந்தும், இம்முரண்களை அடிப்படையாக கொண்டு, இயங்கும் இந்தியாவின் இந்திய-இலங்கை வெளியுறவு கொள்கையை கண்ணோட்டமிடுமிடத்து, அங்கே சிற்சில மாற்றங்கள் அண்மை காலங்களில் ஏற்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
2
கனவுகளில் மிதப்பதும், கனவுகளில் வாழ்வதும், கனவுகளில் திரிவதும் எமது தீவிர அரசியலின் அடிப்படைகளாகின்றன. கனவுகளில் மிதப்பதென்பது இன்று நேற்று முளைத்த புதிய ஒன்றல்ல. முள்ளிவாயக்காலில் எம்மவரை பலிக்கொடுத்த காலந்தொட்டு, இவ்வகை கனவு நிலை அரசியலில், கேட்பார் கேள்வியற்ற நிலையில், தமிழ் மக்களிடையே தோய்ந்து கிடப்பது விரவி வேரோடிய ஒன்று. முள்ளிவாய்க்காலின் பின், இன்று, இதே அரசியல், ஒரு புதுவித பரிணமிப்பை பெற்று, ஆனால், அதே தோற்றப்பாட்டில் இயங்க முற்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.
புலம்பெயர் மக்களின் வஞ்சம் தீர்க்கும் மனோநிலையும், இவற்றை விட, பனை மரங்களின் வற்றாத சுகந்தமும், இவ்வகை அரசியலுக்கு இம்மக்களிடை அடித்தளம் அமைத்தாலும், இம்மக்கள் குடியேறி உள்ள நாடுகளான புலம் பெயர் நாடுகளின் (மேற்கு) நலன்களோடு இத்தகைய சிந்தனைகள் கைகோர்ப்பதிலேயே புதிய அரசியல் உருவெடுக்கின்றது. இலங்கையின் அமைவிடம் அல்லது பூகோள அரசியல் தோற்றுவிக்க கூடிய ஓர் அரசியலானது மேற்கின் சார்பில் இந்த புலம்பெயர் மக்களின் மேற்படி ஆதங்கங்களோடு, இணைய இவ்வகை கனவுகள் செழிப்படைகின்றன. ஆனால், இத்தகைய கனவுகளுக்கு, எமது இளைஞர்களும் யுவதிகளும் பலிகடாக்களாகும் நிகழ்ச்சி நிரல் காலம் காலமாய் தொடர்வதாயுள்ளது. இவ்வகை அரசியலின் விளைபயனாகவே, எமது வட மாகாண சபையின் முன்னால் முதலமைச்சரான நீதியரசர் விக்னேஸ்வரன் ஐயா முதல், அண்மை காலத்திய வைத்திய கலாநிதியான ராமநாதன் அர்ச்சுனா வரையில் சிம்மாசனம் ஏறி அமர்வதும் இவ் அரசியலாலே, - அல்லது இவ்வகை கனவுகளாலேயே.
இவர்கள் ஒற்றை ஆட்சி அமைப்பை இங்கே ஒட்டுமொத்தமாய் நிராகரிப்பதும், ஆனால் அதேசமயம் இந்நாட்டு பாராளுமன்ற நடவடிக்கைகளில், துடிப்பாக பங்கேற்று சத்திய பிரமாணம் செய்து கொள்வதும் எவ்விதம், என்பதை எமது மக்கள் சரியாக புரிந்து வைத்திருக்கின்றார்கள் அல்லது புரிய வைக்கப் படுகின்றார்கள். ஆனால், அண்மை காலத்தில் இவ் அரசியலுக்கு முடிவு கட்டும் போக்கானது எமது மக்களிடை முளைவிட தொடங்கியுள்ளதை ஜேவிபியின் அண்மைய வெற்றி நிரூபிப்பதாய் உள்ளது. ஆனால், உண்மையை கூறுவோமானால், இது திடீரென தோன்றிய ஒரு புதிய முளை அல்ல. அங்கஜன் ராமநாதன் முதற்கொண்டு இன்றைய இளங்குமரன் வரை இப்போக்கானது இம்மக்களிடை சூல்கொண்டு வளர்ந்துள்ளது எனலாம். இவர்களுக்கு, இம்மக்கள் தரும் இந்த அங்கீகாரமானது, கனவுகளில் மிதக்கும் ஓர் அரசியலை நிராகரிக்கும் எண்ணப்பாட்டை வலியுறுத்துவதாக உள்ளது என்பதிலேயே இதனது முக்கியத்துவம் அடங்கி உளது.
இருந்தும், இதனால் மாத்திரம், இம்மக்கள் தமது தேசிய கேள்வியை மறந்து விட்டனர் என்று கூறுவதும் பிழையானதே. நடந்து முடிந்த, உள்ளுராட்சி தேர்தலும் இவ்வகையில் எமது கருத்தை கவருவதுதான். சுருங்கக்கூறின், ‘மக்களுக்கான’ ‘தேசியம்’ என்பது சமூகத்தின் யதார்த்தங்களுடன் பிண்ணி பிணைய வேண்டிய தேவையையே, மேற்படி உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள், வலியுறுத்துவதாக இருக்கின்றன.
மறுபுறத்தில், இந் நடைமுறை யதார்த்த சூழலில் இருந்து கத்தரித்துக் கொண்டு, எமது கனவுகளில் தொடர்ந்து காலம் தள்ளும் செயற்பாடுகளை, எமது புலம்பெயர் அரசியல் தமது முகவர்களுக்கூடாக ஊக்குவித்து வந்தாலும், இவ் உசுப்பேற்றும் நிகழ்வானது பெருமளவில் இன்று விலை போவதாக தெரியவில்லை. இருந்தாலும், இச்சூழலில் சமஷ்டியை வலியுறுத்துவதும், ராமநாதன் அர்ச்சுனா போன்றோரை பாராளுமன்றத்தில் அழ வைப்பதும் நடந்தேறும் நிகழ்ச்சிகளாகத்தான் இருக்கின்றன. இதற்கு இன்னுமொரு சான்றுதான் கஜேந்திரகுமார் அவர்கள், திருமாவளவனை சந்தித்து சமஷ்டியை வலியுறுத்தும் மேற்படி படமாகும்.
3
முள்ளிவாய்க்காலை அடுத்து, சர்வதேச நீதி கோரல் என்றும், ஜெனிவா கூட்டத்தொடர் என்றும், சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்துவது என்றும் கிட்டத்தட்ட 20 வருடங்களாய் தமிழ் மக்களை இழுத்தடித்து இங்கு தொடர்கதையாக உள்ளது.
அண்மைகாலத்தில், பங்களாதேஷின் ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையானது இவ்வகையில், இவ்வகை அரசியலுக்கு ஊக்கம் தரும் ஓர் விடயமாக தென்படலாம். (காசா படுகொடுலைகளை மறப்போம் என்றால்!) ஆனால் ஷேக் ஹசீனாவின் மரண தண்டனையை நாம் வரவேற்பது என்பது, அவருக்கு அபயம் கொடுத்துள்ள இந்தியாவுக்கு எதிராக நாம் இறங்குவது என்றாகிவிடும். அதாவது, இம்மரண தண்டனையானது எமது கனவு சஞ்சாரங்களை பலப்படுத்தினாலும் இரு கேள்விகள் இங்கே முளைப்பதாய் உள்ளன. முதலாவது, ஷேக் ஹசீனாவின் கதை போன்று எம்மவர்களும் ‘விடயங்களை’ வலியுறுத்த முடியுமா? மற்றது இந்தியாவுக்கு எதிராக மீண்டும் ஒரு போர்க் கொடியை தூக்குவது எம்மால் சாத்தியமாகுமா?
ஆனால், தென்னிலங்கை அரசியலானது, இவ்விடயங்களில், நிதானங்களை கைப்பிடிப்பது அவதானிக்க தக்கதாகின்றது. ஆனால் எம்மவரின் நிலைமையோ வித்தியாசமானது. புலம்பெயர் தமிழ் இயக்கங்களால் ஊக்கப்படுத்தப்படும் எம்மவருக்கு எமது கனவுகளே முக்கியமானவை. நிதானங்கள் அவசியமானவையாக இருக்கின்றன. நடுநிசி ஆவிகளின் குரலில் பேசுவதும் (“ஊடறுப்பு” அல்லது ‘தரிசனம்’ போன்ற நிகழ்வுகளை பார்ப்பது நன்று). அதற்கூடு, எமது கனவுநிலை அரசியலை கட்டியெழுப்பி, ‘உக்ரைனியருக்கான தமிழர் இயக்கம்’ முதல் ‘சமஷ்டி’ வரையிலான கோரிக்கைகளை முன்வைத்து மக்களை உசுப்பேத்துவதும் வாடிக்கையாகின்றது.
மேற்கின் அரசியலை நன்கு புரிந்து வைத்துள்ளதால்தான் நாங்கள் இப்படியெல்லாம் செயற்பட்டு இதற்கூடு மேற்கை கையாள்கிறோம் என மார்தட்டும் இவர்களை மேற்கின் அரசியலும் நன்கு புரிந்து வைத்திருக்கின்றது. (முருங்கை மரத்தில் அட்டகாசமாக ஏறப்போகின்றேன் என அடம் பிடித்தால் யார் வேண்டாமென கூறப்போவது). ஆனால், இப்படியாக இவர்கள் மேற்கை கையாண்டு, கையாண்டு, இங்கே 20 வருடங்கள் ஓடி தீர்ந்துவிட்டன – தீர்வொன்றும் கிட்டாமலேயே.
கூடவே, எத்தனை இறப்புகளையும் கொலைகளையும் நாம் கடந்த காலத்தில் கண்டிருந்தாலும், இன்றும் எமது ‘போட்டுத்தள்ளும்’ ஆர்வம் மட்டும் குறைந்ததாயில்லை. (திபாகரனின் கோரிக்கைகளை கூர்ந்து நோக்கவும்). இதனடிப்படையிலேயே ‘சமஷ்டி’ என்பதும் ‘சர்வதேச நீதிமன்றம்’ என்பதும், ‘கையாள்வோம்’ என்பதும் சலிப்படையாது எம்மிடை காலம் காலமாக பேசப்பட்டு வந்துள்ளன. இப் பாரம்பரிய போக்கானது, அண்மைக்காலங்களில், முக்கியமாக ஜேவிபியினர் அரசபீடம் ஏறிய பின், பன்மடங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளமையை, ஒரு தற்செயலான நிகழ்ச்சி, என வரையறுக்க முடியாதிருக்கின்றது.
4
ஜேவிபியின் வருகையுடன், இலங்கையின் புவிசார் அரசியல், புதுவேகம் காண முற்பட்டுள்ளது. சீனா-ஜேவிபி, ஒப்பந்தமானது பரிணமித்து, கட்சி அளவிலும், இது, செய்து முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மறுபுறத்தில், இது, இந்தியாவின், இலங்கை சார் அக்கறைகளை, பன்மடங்கு உயர்த்துவதாய் உள்ளது. இப்பின்னணியிலேயே, ரணில்-ராஜபக்ஷ - மைத்திரி ஆகிய அனைவரையும் நீதிமன்றில் ஏற்றி விசாரிக்க அல்லது முடிந்தால் உள்ளே தள்ளிவிட சதியாலோசனை ஒன்று நடைபெறுகின்றது என்ற செய்தியும் உலாவுகின்றது.
இப்புள்ளியிலேயே, சர்வதேச சக்திகள் இத்தகைய உள்நாட்டு சக்திகளுடன் இணைந்து, கூட்டு சேரும் நிலவரமும் தோன்றி உள்ளது. அதாவது ஒரு உள்நாட்டு நிலவரமும் ஒரு வெளிநாட்டு நிலவரமும் ஒன்றிணைந்து ஜேவிபி அரசை, ஆதிக்கத்திலிருந்து அகற்ற திடசங்கற்பம் பூணும் ஒரு சூழல் உருவாகின்றது. ஏனெனில், ரணில்-ராஜபக்ஷ , மைத்திரி ஆகியோர் பிரதிபலித்த அரசியலை ஜேவிபியினர் என்றுமே பிரதிபலிக்க போவதில்லை என்பது தெளிவு. இந்த பின்னணியில்தான், அண்மையில் திருச்சி ஸ்ரீரங்க தேவஸ்தானத்தில், ரணில், பூஜை செய்வதும் நிகழ்ந்தேறுகின்றது.
இவ்வகை பூஜைகளுக்கு, முன்னதாக பிரதமர் ஹரிணி மாத்திரம் அல்லாமல், எமது எதிர் கட்சி தலைவரான சஜித்தையும் இந்தியா வரவேற்றிருப்பது குறிக்கத்தக்கதுதான். இதற்கிடையில், வருட இறுதியில், டில்வின், டில்லிக்கு போக திட்டம் வகுத்துள்ளார் என கூறப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
5
மேற்படி நகர்வுகளுக்கு எதிரானதாக, நேட்டோவின் ராணுவ புலனாய்வு புகழ் அரூஸ், தமிழ் மக்கள், இன்று, ஒட்டுமொத்தமாக இந்தியாவை நிராகரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றார். இதற்கு ஏற்றாற்போல் திபாகரனும் இந்தப் பழமும் புளிக்கத்தான் புளிக்கும் என்பது போல் எழுதி தள்ளுகின்றார். இவற்றுடன் ராமநாதன் அர்ச்சுனா, ஒரு புறம் பாராளமன்றத்தில் கண்ணீர் வடிக்க இதற்கு போட்டியான சிறிதரனோ, தன் பங்குக்கு, தமிழர்கள் தரைப்படை, கடற்படை, ஆகாயப்படை என வைத்திருந்த ஓர் இனமாகும் என்பதனை அங்கிருப்பவர்களுக்கு சுட்டிக் காட்டுவதில் ஈடுபடுகின்றார்.
இச்சூழ்நிலையிலேயே, இந்தியாவின் கரிசனையும் செயல்பட வேண்டியுள்ளது. அதாவது, ஜேவிபி அரசினது சீனத்து உறவு அல்லது கச்சை தீவின் இழுபறி அல்லது ரணில் அடிக்கடி கூறும் இலங்கை-இந்திய பாலம் அமைப்பது தொர்பாக இந்தியா செயல்பட்டாக வேண்டியுள்ளது.
வேறு வார்த்தையில் கூறுவதானால், ஜேவிபி அரசுடன் திருப்தி கொள்ளல் என்பது இந்தியா போன்ற ஒரு பிராந்திய வல்லரசுக்கு முடியுமா என்பது தெரியவில்லை. இதனாலோ என்னவோ இலங்கையின் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும், அடுத்தடுத்ததாய் இந்தியாவிற்கு அழைக்கப்படுகின்றார்கள். இக்காரணத்தினாலேயே, 13ஐ புலம்பெயர் தமிழர்களாலும் அல்லது அவர்களின் உள்நாட்டு முகவர்களாலும், மறுபுறத்தில், தெற்கின் இனவாத அரசியல்வாதிகளாலும், எதிர்க்கப்படுவதை இந்தியா மௌனமாய் வரவேற்பதாக தெரிகின்றது.
[ தொடரும் ]



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









