
எழுத்தாளர் அநாதரட்சகன் தனது முற்போக்குச் சிந்தனையுடைய எழுத்துக்களால் நன்கு அறியப்பட்ட ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றை நூல்களாகத் தந்துள்ளார். இத்தொகுதியில் ஈழத்தில் இருந்து வெளிவந்த புனைவுகளிலிருந்து தனது கருத்தியலுக்கு மிக நெருக்கமாக வரக்கூடியவற்றையும் தேவையின் பொருட்டு எழுதியவற்றையும் தொகுப்பாக்கியிருக்கிறார்.
மக்கள் எழுத்தாளர் கே. டானியலில் இருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கின்ற சிவ ஆரூரன் வரை அவர்களின் படைப்புகள் குறித்த பார்வையை முன்வைத்திருக்கிறார். ஒவ்வொரு படைப்புகளிலும் தனது வாசிப்பனுபவத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதோடு சமூக முன்னேற்றங் கருதியவற்றையும் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். படைப்புகளின் காலம், அவற்றின் உள்ளடக்கம், அவற்றின் சமூகப்பெறுமதி ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுவதோடல்லாமல் எதிர்காலத்தில் நிவர்த்திக்கவேண்டியவற்றையும் குறித்துரைக்கின்றார்.
இந்நூலில் அகில், மொழிவரதன், ஷெல்லிதாசன், க.நவம், க. சின்னராஜன், கே.ஆர் டேவிட், இ. இராஜேஸ்கண்ணன், மு. சிவலிங்கம், சிவ. ஆரூரன், மூதூர் மொகமட் ராபி, மலைமகள், நெல்லை க. பேரன், ச. முருகானந்தன் ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புகள் பற்றியும்; கே.டானியல், கோகிலா மகேந்திரன், எஸ். புஸ்பராஜன், நந்தி, ஐ. சாந்தன் ஆகியோரின் நாவல்கள் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.
சிறுகதைத்தொகுதிகள் பற்றிக் குறிப்பிடுகின்றபோது ஒரு சிறுகதையின் வெற்றி என்பது வாசக மனதில் நுட்பமான அதிர்வுகளை எழுப்பி அதன் அனுபவங்களை எல்லையற்று விரித்துச் செல்வது என்ற பொதுவான கருத்துக்கு ஏற்ப படைப்பாளிகளின் கதைத் தொகுதிகளில் தான் கண்டுகொண்ட நல்ல கதைகளைச் சுட்டிக் காட்டுவதோடு அவற்றின் இலக்கியப் பெறுமானங் குறித்தும் உரைத்துள்ளார்.
யாழ்ப்பாணச் சமூகத்தின் கடந்துபோன வாழ்வின் மீதான நினைவு மீட்டலை இனங்காணும் படைப்புகள் பற்றிய பார்வைகளில் ஐ.சாந்தனின் ‘சித்தன் சரிதம்’ நாவல் பற்றி நோக்கப்பட்டுள்ளது. இது ஐம்பதுகளில் இருந்த யாழ்ப்பாணத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. யாழ்ப்பாணச் சமூகத்தில் கடந்த காலத்தில் நடந்தேறியவற்றைக் காரண காரியங்களுடன் விளங்கிக் கொள்ளவும் இந்நாவல் வாசகனுக்கு உதவுகிறது. நெல்லை க. பேரனின் ‘ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்’ என்ற சிறுகதைத்தொகுப்பும் அன்றைய சமுதாயத்தில் நிகழ்ந்த புதிய மாற்றங்களின் வேஷத்தைப் புரிந்து கொண்டு பழையவற்றைக் கட்டுடைத்து மாற்றத்தோடுகூடிய மறுமலர்ச்சியை வரவேற்கும் விதத்தில் எழுதப்பட்டமை சிறப்புக்குரியது என்கிறார். உலகமயமாக்கலும் முதலாளியமும் விளைவித்த விரைவான சமூக மாற்றத்தினால் பல பண்பாட்டுக் கூறுகளை நாங்கள் இன்று இழந்துவிட்டோம். அவை பற்றிய ஏக்கங்களுங்கூட எம்மிடம் இன்றுவரை உள்ளன. இவற்றை நினைவுபடுத்தும் இராஜேஸ்கண்ணனின் ‘கிராமத்து மனிதர்கள்’ பற்றி எழுதும்போது “ஒரு தனிமனிதனுக்குரிய அடையாளத்தை அவன் வாழ்ந்து சென்ற கிராமமே வழங்குகின்றது. அம்மனிதர்களின் தொழில்முயற்சிகள், உணவுமுறைகள், பழக்க வழக்கங்கள், பெயரிடும்முறை, பாரம்பரிய மருத்துவம், சடங்காசாரங்கள் என இன்னும் பல அக்கிராமத்தின் பண்பாட்டு வழக்காற்றினுள் அடங்குகின்றன. இவற்றையெல்லாம் எடுத்துரைக்கின்ற வகையில் இக்கதைகள் அமைந்துள்ளன.” என்று குறிப்பிடுகின்றார். இவற்றை அநாதரட்சகன் சிறுகதைகள் என்ற வடிவத்தில் வைத்து நோக்கினாலும் இராஜேஸ்கண்ணனின் இந்நூல் அவ்வடிவத்தையும் மீறி, கதைகூறும் புனைவு மரபையும் கிராமிய மக்களின் வாழ்வை வெளிப்படுத்தக்கூடிய பண்பாட்டுக்கூறுகள் இணைந்த புனைவு சாரா மரபையும் கொண்டதாக அமைந்துள்ளது.
அடக்குமுறைக்கு எதிரான எழுத்துக்கள் மீது அநாதரட்சகனின் கவனம் அதிகம் குவிந்துள்ளமையும் காணலாம். கே. டானியலின் ‘கானல்’ பற்றி எழுதுகின்றபோது, சாதிப்பெருமிதம் கொண்ட உயர் சாதியினர், சாதியத்தைச் சொந்த வாழ்வில் கைவிடும்போதுதான் சமூகத்தின் சமத்துவமின்மையும் தீண்டாமையும் ஒழியும் என்றும் அப்படியொரு உயர்நிலை சாத்தியமாகுமா என்பதையே கானல் காட்டுகிறது என்றும் குறிப்பிடுகிறார். 60 களில் இருந்து எழுதிய கே.ஆர் டேவிட்டும் தனது எழுத்துக்களில் அரசியல் என்பது மாற்றத்துக்கானது அதில் இடதுசாரிகளின் பண்பு தவிர்க்கமுடியாதது என்பதைத் தனது கருத்தியலாகக் கொண்டவர். க. சின்னராஜனின் ‘தண்ணீர்’ சமூகத்தின் அடிநிலை மாந்தர்களின் பிரச்சினைகளை அனுதாபத்துடன் நோக்குவதுடன் அறம் சார்ந்த முரண்களின் மீது கேள்வி எழுப்புவதையும் அவதானிக்கிறார். இவ்வகையில் சாதிய அடக்குமுறைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டனவாக உள்ள இப்படைப்புக்கள் பற்றிய பார்வைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மலையகப் படைப்பினைத் தந்த நந்தியின் ‘தங்கச்சியம்மா’ குறித்தும் எழுதியுள்ளார். இது 1977 இல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்த நாவலாகும். இணக்கங் காணமுடியாத சாதியப் பகைமைக்குள்ளிருந்து மக்களை விடுவிப்பதற்கு அவர்கள்மீது கருணை காட்டுங்கள் எனக் கோருவதுடன் நாகரிகத் தமிழ்ச் சமூகத்தில் சாதியால் புறக்கணிக்கப்பட்ட மக்களை உன் சக மனிதனாக எவ்வாறு நீ நடாத்தப் போகிறாய் என்கிற அறச்சீற்றத்தினையும் மிதமான குரலில் எழுப்புகிறார். 60 களில் காலடி பதித்த மலையகப் படைப்பாளிகள் வரிசையில் மொழிவரதனின் படைப்புக்களையும் நோக்குகின்றபோது, மலையக மக்கள் மீதான அடக்குமுறைகள், சுரண்டல்கள், ஊழல்கள், போலித்தனங்கள் ஆகியவற்றைக் கண்டு அவை மீதான எதிர்ப்புக் குரலை தனது கதைகளில் எழுப்பி அல்லற்படும் தொழிலாளர்கள் தடைகளை அறுத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கான திசை மார்க்கத்தைக் காட்டுவதற்கான சில கதைகள் மொழிவரதனிடம் இருப்பதையும் எடுத்துரைக்கின்றார்.
போர்க்கால வாழ்வியலுடன் தொடர்புபட்ட பல படைப்புக்களையும் அநாதரட்சகன் வாசிப்புக்குட்படுத்துகிறார். போருக்குப் பின்னரான தமிழர் வாழ்வைப் புரிந்து கொள்வதற்கு ச. முருகானந்தனிடம் பல கதைகள் உள்ளன. அவை வாசகனை அலைக்கழிக்காமல் கதையை நகர்த்திச் செல்லும் வல்லமையுடைய மொழியைக் கொண்டுள்ளன. அதேபோல் மலைமகளின் ‘புதிய கதைகளில்’ வரும் பெண்போராளிகள் அப்பழுக்கற்ற படிமங்களாக நெஞ்சை நிறைக்கிறார்கள். அவர்களது மனவுலகம் மென்மையானது புனிதமானது சாய்வில்லாதது ஆளுமைச் சிதைவில்லாதது என்பதையும் இக்கதைகள் உணர்த்துவதனைக் குறிப்பிடுகிறார்.
சமூகத்தில் நிலவும் போலிகளை இனங்காட்டி சமூக மாற்றத்தைக் கோரும் படைப்புக்கள் பற்றியும் அநாதரட்சகன் தனது பார்வையை முன்வைத்திருக்கிறார். மு. சிவலிங்கத்தின் ‘ஒரு விதை நெல்’ என்ற சிறுகதைத் தொகுதி சமூக நீதியை மறுத்து அதிகாரம் செய்வோர் மனித விரோதிகள் என்றும், சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் சமத்துவமின்மையைப் பேணிவரும் அதிகார வர்க்கத்தின் இழிவுகளை வன்மத்துடன் கூற முனையும் கதைகள் அவையெனவும் குறிப்பிடுகிறார். ஷெல்லிதாசனின் ‘எங்களில் ஒருத்தி’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இருண்ட பகுதிகள் மீது ஒளிபாய்ச்சி அவற்றை வாசகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளதோடு தனிமனித நடத்தைகளுங்கூட சமூகத்தின் அடையாளமே என்கிறார். அற ஒழுக்கங்கள் மனிதர்களின் குணாதிசயங்கள் சமூக உறவுகளின் பிரச்சினைகள் பற்றியெல்லாம் செறிவாகச் சொல்லியிருக்கும் சிவ. ஆரூரனின் சமூக அக்கறையையும் புனைவுத் தர்க்கத்தையும் மெச்சுவதாக தனது பார்வையை அநாதரட்சகன் முன்வைக்கிறார். மூதூர் மொகமட் ராபியின் ‘இலுப்பம் பூக்கள்’ என்ற சிறுகதைத்தொகுப்பு பாடசாலை நிர்வாகம் தொடர்பில் ஏற்படுகின்ற அதிகாரிகளது மேலாண்மைப் போக்குகள் அலைக்கழிப்புக்கள் மனித உறவுகளில் ஏற்படுகின்ற சிக்கல்கள் முரண்கள் முதலான கள யதார்த்தங்களின் அனுபவ வெளிப்பாடுகளைக் கொண்டவனாக அமைந்தவை என்கிறார்.
பெண்கள் குறித்த எழுத்துக்களைத் தொடர்ச்சியாகத் தருகின்ற கோகிலா மகேந்திரனின் ‘சந்தனச் சிதறல்கள்’ நான்கு குறுநாவல்களைக் கொண்டது, பெண்மனம் குறித்த தனது அனுபவங்களை இக்குறுநாவல்கள் பகைப்புலமாகக் கொண்டுள்ளன. மத்தியதர வகுப்புப் பெண்கள் தம்மீது திணிக்கப்பட்ட ஒழுக்க நியமங்களைக் கடந்து அறிவார்ந்து செயற்படுகின்ற ஓர்மத்தை பல இடங்களில் பதிவு செய்துள்ளார். தங்கள் உணர்வுகளுக்கு தாங்கள் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதோடு தன்மானமும் தன்னம்பிக்கையும் தற்சார்பு உடையவர்களாகவும் பெண்கள் படைக்கப்பட்டுள்ளமை சிறப்பானது.
புகலிடத்திலிருந்து எழுத்து முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அகில், க. நவம் ஆகியோரின் தொகுதிகள் பற்றிய பார்வைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் க. நவம் ‘பரதேசம் போனவர்கள்’ என்றொரு தொகுப்பைத் தந்துள்ளார். அவரின் எழுத்து சக மனிதர்கள்மீது கவலை கொள்கிற எழுத்தாக உள்ளது. பரதேசம் போனவர்களது நெருக்குதல், மனப்போராட்டங்கள் போலித்தனங்கள் ஆகியவற்றை மிக மென்மையான மொழிநடையில் நவம் படைத்துள்ளமையை எடுத்துக்காட்டுகின்றார். அதேபோல் அகிலின் ‘கூடுகள் சிதைந்தபோது’ என்ற சிறுகதைத் தொகுதியும் இரண்டு களங்களிலும் கொண்டிருக்கும் அக்கறைகளை யதார்த்தப் பண்பும் சமூகப்பிரக்ஞையும் இணைந்த வகையில் வெளிப்படுத்தியுள்ளமையை இனங்காண்கிறார்.
அநாதரட்சகனின் தொடர்ச்சியான வாசிப்பும் எழுத்தின் மீதுள்ள தீராத வேட்கையும் இவ்வாறு வித்தியாசமான களங்களிலிருந்து வெளிவந்த படைப்புகள் மீது பார்வையைச் செலுத்தக் காலாக அமைந்துள்ளன. தமிழர்தம் கடந்துபோன பண்பாட்டு வாழ்வு, அவ்வாழ்வின்மீது அதிகார வர்க்கமும் அரசியல் மாற்றக்களங்களும் ஏற்படுத்திய தாக்கங்கள், அவற்றிலிருந்து மக்கள் விடுதலையடைவதற்கு வெளிப்பட்ட எழுச்சிக்குரல்கள், மக்கள் தம் மனங்களில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் ஆகியவற்றை இத்தொகுதியில் பல்வேறு புனைவுகளை வாசிப்புக்கு உட்படுத்துவதன் ஊடாக அநாதரட்சகன் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். மூன்று தலைமுறைப் படைப்பாளிகளின் படைப்புக்களைத் தொடர்ச்சியாக வாசிப்புக்கும் அவதானிப்புக்கும் உட்படுத்தியதாலேயே இத்தொகுதி சாத்தியமாகியுள்ளது. இருளை விரட்டும் ஒளிப்பொட்டுகளாகிய இப்படைப்புகள் ஊடாக அவற்றை எழுதிய படைப்பாளிகள் புதிய தலைமுறைகளுக்கு குவிமையப்படுத்தப்படுகிறார்கள். அந்த முயற்சியே ஈழப்படைப்புக்கள் மீதான ஆய்வுகளுக்கும் வரலாறெழுதுகைகளுக்கும் உதவக்கூடும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









