
எழுத்தாளர் இரா முருகவேளின் 'நக்சல்பாரி' இயக்கத்தைப்பற்றிய 'நக்சல்பாரி' நூல் பற்றிய நல்லதோர் அறிமுகத்தைத் தருகின்றது எழுத்தாளர் சுகுணா திவாகரின் இந்த முகநூற் பதிவு. நக்சல்பாரி இயக்கத்தை முன்னெடுத்தவர் சாரு மஜூம்தார் . நக்சல்பாரி என்பது மேற்கு வங்கக் கிராமம் ஒன்றின் பெயர். இப்பதிவை முழுமையாகக் கீழே தந்துள்ளோம் -
சுகுணா திவாகர் எழுதிய முகநூற் பதிவு:
2022ல் ஆனந்த விகடனில் சாரு மஜூம்தாரைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதினேன். சாரு கொல்லப்பட்ட 50வது ஆண்டு அது. மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் இருந்த, இருக்கும் பல தோழர்களுக்கு சாரு மஜும்தார் பற்றிய கட்டுரை ஆனந்த விகடன் போன்ற ஒரு வெகுஜன இதழில், அதுவும் நான்கு பக்கங்களுக்கு வெளியானது ஓர் இன்ப அதிர்ச்சி. பலரும் நெகிழ்ச்சியுடன் தொடர்புகொண்டு பாராட்டினர்.
கீழ்வெண்மணி படுகொலைகளை நிகழ்த்திய கோபாலகிருஷ்ணநாயுடுவைக் கொன்ற நக்சல்பாரி தோழர்கள் குறித்த வெப்சீரிஸ் திரைக்கதைக்காக, கீழ்த்தஞ்சையில் கள ஆய்வு செய்தபோது அந்த அழித்தொழிப்புடன் தொடர்புடைய பல தோழர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் பகிர்ந்துகொண்ட பல தகவல்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஆச்சர்யமானவை என்பது ஒருபுறம். இன்னொருபுறம் இயக்கம் தொடர்பான தகவல்களிலும் ஒருவர் சொன்னதற்கும் இன்னொருவர் சொல்வதற்குமிடையில் முரண்பாடுகள் இருக்கும். காரணம் நக்சல்பாரி இயக்கம் ஒரு தலைமறைவு இயக்கம். அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் பற்றிய முறையாக ஆவணப்படுத்தப்பட்ட, தொகுக்கப்பட்ட வரலாறு கிடையாது. பல விஷயங்கள் செவிவழிச்செய்திகள்தான்.
பொதுப்புத்தியிலோ ‘நக்சலைட்’ என்றால் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என்ற பிம்பத்தை ஊடகங்களும் திரைப்படங்களும் உருவாக்கியிருந்தன.
ரஜினி நடித்த ‘ராணுவ வீரன்’ திரைப்படத்தில் சிரஞ்சீவி நக்சலைட்டாக நடித்திருப்பார். ஒருவரை நக்சலைட் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ள வித்தியாசமான சோதனையை வைத்திருப்பார்கள். பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் சிலநிமிடங்கள் பிடித்திருக்கவேண்டும். அப்போதுதான் இயக்கத்தில் சேர்ப்பார்கள். அதாவது எந்தச் சூழலிலும், எந்த சித்திரவதையிலும் அவர்கள் ரகசியத்தை சொல்லிவிடக்கூடாது என்பதற்கான பரிசோதனையாம் அது. இப்படிப்பட்ட கேலிக்கூத்துகள் ஒருபோதும் நக்சல்பாரி இயக்கத்தில் நடந்தது கிடையாது.
படத்தை தயாரித்தது, நக்சல்பாரிகளை வேட்டையாடிய எம்.ஜி.ஆர் ஆட்சியின் அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனின் ‘சத்யா மூவீஸ்’. திரைப்படத்தையே காவல்துறைக்கு சமர்ப்பித்திருப்பார்கள்.
‘குருதிப்புனல்’ படத்தில் கமல்ஹாசன் நக்சல்பாரிகளைப் பெண்பித்தர்களாகச் சித்திரித்திருப்பார். ‘கோ’ படத்தில் குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்பவர்களுக்கு உதவுபவர்களாகச் சித்திரித்திருப்பார்கள். 80களில் வெளியான ஓர் ஆனந்த விகடன் இதழில் ‘நக்சலைட் ஜோக்ஸ்’ என்னும் பக்கங்களைப் பார்த்து அதிர்ந்துபோனேன். முழுக்க நக்சல்பாரிகளை ஜேப்படி திருடர்களாக சித்திரித்த அசட்டு நகைச்சுவைத் துணுக்குகள். தினத்தந்தி ‘தீ கம்யூனிஸ்ட்’ என்றுதான் எழுதும்.
இப்படி கொச்சைப்படுத்துபவர்கள் பலருக்கு ‘நக்சல்பாரி’ என்பது மேற்குவங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் என்பதுகூட தெரியாது என்பதுதான் வினோதம்.
1992ல் ஜெயமோகன் எழுதி ஆனந்தவிகடனில் வெளியான ‘துணைவன்’ சிறுகதையும் நக்சல்பாரி இயக்கத்தின் அடிப்படையே தெரியாமல், கொச்சைப்படுத்தி எழுதப்பட்ட சிறுகதை. அந்தக் கதையையே வெற்றிமாறன் திரைப்படமாக இயக்கப்போகிறார் என்றதும் அதுகுறித்து நான் விரிவாக எழுதினேன். பிறகு டைட்டிலில் மட்டும் ஜெயமோகன் பெயர் இருந்தது. ஜெயமோகன் கதைக்கு சம்பந்தமேயில்லாமல் அந்தப் படம் உருவாகியிருந்தது.
’கண் சிவந்தால் மண் சிவக்கும்’, வேலுபிரபாகரனின் ‘கடவுள்’ போன்ற திரைப்படங்கள் நக்சல்
பாரிகளை நேர்மறையாக அணுகிய படங்கள் என்றாலும் சமீபத்தில் வெற்றிமாறனின் ‘விடுதலை’ ஓரளவுக்கு பலராலும் பேசப்பட்ட படமாக, பல குழப்பங்கள் இருந்தாலும் மா.லெ இயக்கத்தை நேர்மறையுடன் அணுகிய படமாக அமைந்தது.
சமீபத்தில் வெளியான ‘தண்டகாரண்யம்’ திரைப்படமும் மாவோயிஸ்ட் இயக்கம் பற்றி நேர்மறையாக அணுகியிருந்தது.
தமிழில் பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’ முதல் பாட்டாளியின் ‘கீழைத்தீ’ வரை நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றிய புனைவுகள் உள்ளன. ஆனால் கட்டுரைத் தொகுப்புகள் குறைவு அல்லது இல்லவே இல்லை. ம.க.இ.க ‘நக்சல்பாரி : புரட்சியின் இடிமுழக்கம்’ என்று சிறுவெளியீட்டை வெளியிட்டுள்ளது. மற்றபடி தியாகுவின் ‘சுவருக்குள் சித்திரங்கள்’, கலியபெருமாள், தமிழரசன் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகங்களில் நக்சல்பாரி இயக்கம் குறித்து பேசப்பட்டாலும் அவை இந்திய அளவிலான விரிவான வரலாற்றைப் பேசவில்லை.
மா.லெ இயக்கப்பின்னணி கொண்ட தோழர், எழுத்தாளர் இரா.முருகவேள் உயிர்மை இதழில் தொடராக எழுதி, உருவாகியுள்ள ‘நக்சல்பாரி - ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல’ புத்தகம், ஓரளவுக்கு அந்தக் குறையைத் தீர்த்துள்ளது.
நக்சல்பாரி எழுச்சியின் பின்னணி, சாரு மஜீம்தார் முன்னெடுத்த அழித்தொழிப்பு இயக்கம், அதன் பின்னடைவுகள், தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகள், ஆந்திரா, தெலங்கானா, தண்டகாரண்யத்தில் மக்கள் யுத்தக்குழு போன்ற மா-லெ இயக்கங்களின் வெவ்வேறான உத்திகள், ஈழத்தில் நடந்ததைப்போல் பீகாரில் மா-லெ இயக்கங்களுக்குள் நடந்த சகோதரப்படுகொலைகள், நந்திகிராம், சிங்கூர் போராட்டங்கள், சமீபமாக மாவோயிஸ்ட்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் என விரிவாகப் பேசியுள்ளது. இன்னமும்கூட விரிவாகப் பேசலாம் என்றாலும் முன்பு சொன்னதைப் போல் ஆவணப்படுத்தப்பட்ட, ஆதாரபூர்வமான தகவல்கள் குறைவு என்பது ஒரு முதன்மை சிக்கல்.
சி.பி.எம் கட்சியையும் மேற்குவங்க அரசையும் முற்றிலும் எதிர்நிலையில் நிறுத்தாமல் இந்திய அரசியல் சட்டகத்திலும் உலகமயமாக்கலுக்குப் பின்பும் அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் நூல் சுட்டிக்காட்டுகிறது. அதேபோல் இறுதியாக உலகம் முழுவதும் ஆயுதப்போராட்டத்துக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள், காரணங்கள், காலாவாதியான உத்திகள் ஆகியவற்றையும் முருகவேள் விமர்சனப்பார்வையுடன் முன்வைத்திருக்கிறார். அவசியம் படிக்கவேண்டிய நூல்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









