
ORCID - https://orcid.org/0000-0002-7395-9699
ஆய்வுச் சுருக்கம்
பூம்புகார் என்பது காவிரிப்பூம்பட்டினத்தின் மற்றொரு பெயர். இது சிறந்த வாணிகத் தலமாகவும், துறைமுகமாகவும் பண்டைய காலத்தில் விளங்கியுள்ளது. இத்துறைமுகத்தின் வழியே நாட்டின் பலபகுதிகளுக்கும் சென்று உள்நாட்டு வாணிகத்தில் வாணிகர்கள் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி சீனா, இலங்கை, சாவகம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றும் வணிகம் செய்துள்ளனர். அதுமட்டுமன்றி அவர்கள் இத்துறைமுகப் பட்டினத்திற்கு வந்து தங்கியும் வாணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு பாய்மரக்கலங்களும், கப்பல்களும் பொருட்களை ஏற்றி வந்தவண்ணம் இருந்துள்ளன. அதுமட்டுமன்றி இந்நகரில் சிறந்த வாணிகர்களுக்கு எட்டி முதலான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான சிறப்புகளை உடையதாக விளங்கிய பூம்புகார் காப்பிய காலத்தில் கடல்சீற்றத்தால் அழிவுக்குள்ளானது. அதன் விளைவால் இன்று சிறிய கிராமமாக திகழ்கின்றது என்பதை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.
முக்கியச்சொற்கள்
வாணிகம், பூம்புகார், உள்நாட்டு வாணிகம், வெளிநாட்டு வாணிகம், காவிரிபூம்பட்டினம், துறைமுகம், கடல்வாணிகம்
முன்னுரை
பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்களின் கடற்கரை பட்டினமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம் எனும் பூம்புகார். இந்நகரில் பல்வேறு வாணிகங்கள் சிறப்பாக நடந்துள்ளன. அதிலும் குறிப்பாக பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்களும் இந்த பட்டினத்திற்கு வந்து தங்கி வாணிகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது. அதனை விரிவான இக்கட்டுரை ஆராய்கின்றது.
பூம்புகார்
பண்டைய தமிழகத்தின் சிறந்த துறைமுகங்களாக விளங்கியவைகள் பூம்புகார், தொண்டி, முசிறி, வஞ்சி, கொற்கை ஆகியவை. இவற்றுள் கடற்கரை வாணிகத்தில் தலைமை சான்றது பூம்புகாராகும். அது காவிரியாறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்த துறைமுகப்பட்டினம் என்பதால் புகார் என்று அழைக்கப்பட்டது. மேலும், பழைய பௌத்த மத நூல்களில் இது கவிரப்பட்டினம் என்று பெயர் கூறப்படுகின்றது. காகந்தி என்றும் இதற்கு ஒரு பழைய பெயர் உண்டு. பெரிப்ளுஸ் என்னும் கிரேக்க நூலில் இந்த துறைமுகம் கமரா என்று கூறப்படுகிறது. கமரா என்பது காவிரி பூம்பட்டினம் என்பதன் சுருக்கமாகும். தாலமி என்ற கிரேக்க யவனர் இத்துறைமுகத்தைச் சபரிஸ் துறைமுகம் என்று கூறுகின்றார். சபரிஸ் என்பது காவிரி என்பதன் திரிபு. (பழங்காலத் தமிழர் வாணிகம், பக்.72-73) என்று மயிலை சீனி வேங்கடசாமி கூறியுள்ளார்.
காவிரி ஆற்றின் முக துவாரம் ஆழமாகும் அகலமாகும் பல கப்பல்கள் தங்குவதற்கு ஏற்றதாகவும் இருந்தது. வாணிக கப்பல்கள் பாய்களைச் சுருட்டாமலும் பாரத்தை கழிக்காமலும் நேரே ஆற்றினுள் புகுந்து துறைமுகத்தை அடைந்தன. இதனை,
…………………. ……….. கூம்பொடு
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர்
இடைப் புலப் பெரு வழிச் சொரியும்
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே! (புறம். 30)
என்று சோழன் நலங்கிள்ளியின் புகார் துறைமுகத்தை உறையூர் முதுகண்ணன் புகழ்ந்துரைத்துள்ளார். மேலும், பும்புகார் துறைமுகத்தில் நாவாய் தங்கியிருந்தது பந்தியில் இருக்கும் யானைகள் அசைவதுபோல் அசைந்துக் கொண்டிருந்தன எனப் பட்டினப்பாலை கூறியுள்ளது.(பட்டி. 172 -175 )
பட்டினம்
கடற்கரையில் இருந்த வாணிக மையங்களைக் பட்டினம் என்று அழைத்தனர் (தமிழகம் ஊரும் பேரும், ப.33) என்று ரா.பி. சேதுப்பிள்ளை கூறியுள்ளார். பின்னாளில் உள்நாட்டு நகரங்களுக்கும் பட்டினம் என்ற பெயர் உருவாகியது.
வணிகரின் இயல்பு
சங்ககால வணிகர்கள் பொருள் ஈட்டு நோக்கத்தோடு மட்டும் நடந்துக் கொள்ளவில்லை. மாறாக நாட்டு மக்களின் நன்மைக்காக நேர்மையோடு நடந்துக் கொண்டனர். இதனை,
கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது (பட்டி.210)
என்று பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றது. பிறர் பொருளையும் தம் பொருள்போல் எண்ணி வாணிகம் செய்தனர். இதனை வள்ளுவர்,
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். (குறள்- 120)
எனும் குறளில் பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும் என்று எடுத்துரைத்துள்ளார்.
வணிகத் துறைமுகம்
பூம்புகார் சங்க இலக்கியங்களில் சோழ நாட்டின் துறைமுகம் என்று கூறப்பட்டுள்ளது. அகநானூற்று பாடலில்,
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால், (அகம். 181)
வணிக பண்டங்கள் பூம்புகாரில் நிறைந்திருந்தமையை இவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளது.
வணிகக் குடிகள்
வணிகம் செய்த குடிகளைச் சார்ந்தவர்களுக்குப் பல்வேறு பெயர்கள் அவர்கள் வாழிடம், தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. என்பதையும் அவர்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தனர் என்பதையும், மேற்குக் கடற்கரையில் பூழியர், குட்டுவர், கிழக்குக் கடற்கரையில் கவுரியர், பரதவர், ஓவியர், அருவாளர் ஆகியோர் வாணிகத்தில் ஈடுபட்டனர். அதனால், அக்குடிகள் பொருள் வளத்தில் மேம்பாடு அடைந்தனர். அருவாளர்கள் வணிகத்தில் ஈடுபட்டது பற்றிய கல்வெட்டுச் சான்று கிடைத்துள்ளது.(சமணமும் தமிழும், ப.39) என்பதன்வழி அறியமுடிகின்றது.
வணிகர்களும் வேளிர் குடியும்
வணிகப் பட்டினங்களை வேளிர்குடியினர் ஆட்சி செய்தனர் என்பதை, கொற்கை, கோடிக்கரை, அழகன்குளம், மருங்கூர் பட்டினம், தொண்டி, நிகமம், சாலியூர், நெய்தலங்கானல், புகார், அரிக்கமேடு, எயிற்பட்டினம், நீர்பெயற்று, மாமல்லை போன்ற கடற்கரை வாணிக மையங்களில் வேளிர்கள் ஆட்சி செய்துள்ளனர். (ஆர். பூங்குன்றன், 22.02.1993) என்ற ஆர். பூங்குன்றன் உரையின்வழி அறியலாம்.
பூம்புகார் பன்னாட்டு மக்களும் வாணிகத்தின் பொருட்டு கலந்து வாழும் மாநகரமாக எழுச்சி பெற்றதை பட்டினப்பாலையும் சிலப்பதிகாரமும் பேசியுள்ளன. மேலும், பட்டினப்பாக்கம், மருவூர்ப்பக்கம் ஆகிய இருபெரும் வாழ்விடங்கள் சமூகத்தின் இருபெரும் பிரிவுகளைச் சுட்டியுள்ளன. வாணிக வளம்கொழிக்கும் நகரமாக புகார் எழுச்சி பெற்ற பின் சோழர்களின் தலைநகராக உருவாயிற்று. வாணிக வளர்ச்சியும் அப்போது இருந்த புவியியல் சிறப்புத் தன்மையும் புகார் சங்ககாலத்திறுதியில் சோழர் தலைநகராவதற்குக் காரணமாயிற்று. இந்நிலை காவிய காலத்திலும் களப்பிரர் காலத்திலும் தொடர்ந்தது. களப்பிரர் காலத்தில் எழுதப்பெற்ற அதிதம்மவாதமும் புகார் நகர வாழ்க்கையைச் சுட்டுகின்றது. (பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், ப.136) எனக் க. கைலாசபதி கூறியுள்ளார். இதன்வழி பூம்புகார் சோழர்களின் தலைநகரமாவதற்கு அதன் வாணிக சிறப்பே காரணம் என்பதை அறிய முடிகின்றது.
வேந்தர்களும் நாணய அறிமுகமும்
பண்டைய தமிழர்கள் வாழ்க்கையில் பண்டமாற்று வணிக முறையே பெருவழக்கில இருத்தது. பண்டமாற்று முறையால் பண்டைத் தமிழ் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற்று வாழ்ந்ததைப் பல தமிழ் இலக்கியச் சான்றுகளிலிருந்து அறியலாம். இதனை,
பாலொடு வந்து கூழொடு பெயரும் (குறுந். 221)
எனும் பாடலின் வழி அறியலாம். இந்த பாடலில் பாலொடு வருபவர் அதற்கு மாற்றாக கூழைப் பெற்றுச் சென்றார் என்கிறது குறுந்தொகை. இவ்வாறு இருந்த வாணிகம் அரசுருவாக்கத்தின் காரணமாக நாணயங்கள் கொண்டு வாணிகம் செய்யும் முறை பயண்பாட்டுக்கு வருவதற்கு காரணமாக அமைந்தது. இதனை,
வேந்தர்களின் எழுச்சியை அடுத்து உள்நாட்டு வாணிகமும் வெளிநாட்டு வாணிகமும் மேலும் வளர்ச்சி நிலையை எய்தின. வாணிகத்திற்கு என வேளீரும் வேந்தரும் வெள்ளி, செம்பு, ஈயம் ஆகியவற்றால் வார்க்கபெற்ற காசுகளை வெளியிட்டனர். சென்ற நூற்றாண்டிலிருந்து தமிழ் மூவேந்தர்கள் வெளியிட்ட காசுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. கொற்கை, மதுரை, கருவூர், திருக்கோயிலூர், புகார் முதலிய இடங்களில் இக்காசுகள் கிடைத்துள்ளன. (The Chronology of the early Tamils, p.248. )
எனும் கூறிப்பின் வழி அறிய முடிகின்றது.
கலங்கரை விளக்கு
திசையைக் காட்டும் கலைங்கரை விளக்கு இன்று அனைத்து கடற்கரை துறைமுகத்திலும் அமைந்திருப்பதை நாம் அறிவோம். இதேபோல், அக்காலத்தில் பூம்புகார் துறைமுகத்திலும் கலங்கரை விளக்கு நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை இளங்கோவடிகள்.
இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கம் (சிலம்பு, கடலாடுகாதை,141)
என்று கூறியுள்ளதன் வழி அறிய முடிகின்றது.
செழிப்பான நகரம்
பூம்புகார் நகரம் செழிப்பான வாணிக நகரமாக விளங்கியது. இதை, சங்க காலத்தில் பல்வேறு பொருட்களை வைத்து வாணிகஞ் செய்யும் கடைத்தெரு அங்காடி எனப்பட்டது. அன்று பெரிய நகரங்களில் அங்காடிகள் இருந்தன. (கிருஷ்ணன். இரா., ப.24) பூம்புகாரில் இரவு நேரத்தில் அல்லாங்காடிகளும் பகல் நேரத்தில் நாளங்காடியும் செயல்பட்டன. கடைதெரு கொடியசையும் கடைகளைப் பெற்றிருந்தது. அக்கொடிகள் பல்வேறு பண்டங்களைக் குறிப்பிட நட பெற்றிருந்தன. இதனை,
மீன் தடிந்து, விடக்கு அறுத்து,
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்,
மணல் குவைஇ மலர் சிதறிப்
பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு நடைக் கொடியோடு
பிற பிறவும், நனி விரைஇ,
பல் வேறு உருவின் பதாகை நீழல்,
செல் கதிர் நுழையாச் செழு நகர் (பட்டி.176-183)
எனும் பட்டினப்பாலை வரிகள் மீனை வெட்டி, இறைச்சியை அறுத்து, அந்த தசையைப் பொரிக்கும் ஒலியையுடைய, பலர் புகும் கள் விற்கும் கடையின் முற்றத்தில், மணலைக் குவித்து மலர்களைச் சிதறிப் பலியைக் கொடுக்கும் கதவுகள் அருகே உள்ள கொடிகளுடன், வேறு பிற கொடிகளும், மிகவும் நெருங்கி, பல்வேறு உருவங்களில் இருந்தன. அக்கொடிகளினால், கதிரவனின் கதிர் நுழைய முடியாதபடி இருந்தது அந்தச் செழிப்பான நகர் என்று எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் புகாருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பெற்ற பண்டங்கள் பற்றியும் விளக்கமாக பேசுகின்றது.
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும்,
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி (பட்டி.185-192)
இப்பட்டினப்பாலை அடிகள் கடலில் வந்த நிமிர்ந்த நடையையுடைய குதிரைகளும், வண்டிகளில் வந்த கரிய மிளகு மூடைகளும், வட மலையில் பிறந்த பொன்னும், குடகு மலையில் தோன்றிய சந்தனமும் அகிலும், தென் கடலின் முத்தும், கீழ்த் திசைக் கடலின் பவளமும், கங்கை ஆற்றினால் உண்டான பொருட்களும், காவிரி ஆற்றினால் உண்டான பொருட்களும், ஈழத்து உளவும், மியன்மாரின் பொருட்களும், அரிய பொருட்களும் பெரிய பொருட்களும், நிலத்தை நெளிக்கும்படி திரண்டு ஒன்றோடொன்று கலந்து இருந்தன என்று பூம்புகார் பல்வேறு பகுதிகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பினைக் காட்டுகின்றது.
பூம்புகாரின் வாணிகம் உலக அளவிற்கு பரவலாக வளர்ச்சியடைந்ததால் பன்னாட்டு குடிமக்களும் பல்மொழி பேசும் மக்களும் இங்கு குடியேறினர். அதனால், தமிழகத்தில் வாழ்ந்த பூர்வகுடிகளுடன் மொழிபெயர் தேய்த்து மக்களும் கலந்து வாழும் நிலை காலப்போக்கில் உருவானது. அதனால், பூம்புகார் வலிமைமிக்க வேந்தர்கள் ஆளுகையில் இருந்தது. பத்துப்பாட்டு காலத்தில் நகரமாக இருந்தது காலப்போக்கில் பல்வேறு இனமக்கள் வாழும் மாநகரமாக காட்சியளிக்க ஆரம்பித்தது. இதனால் ஒருவருக்கு ஒருவர் பகை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. அதனால், மக்கள் திரளை அடக்கியாள்வதற்கு படையும் தேவைப்பட்டது. குறிப்பாக யவனர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரபியர்கள் போன்றவர்கள் வந்து இந்து குடியேற ஆரம்பித்தனர். அவர்கள் தனி சேரிகளில் தங்கியிருந்தனர் என அறியப்படுகின்றது. (பெருங்கதை, காண்டம்-1, காதை-4இ அடி-8) இவர்கள் தமிழ் குடிகளோடு பகையின்றி வாழ்ந்தனர்.
உள்நாட்டு வாணிகம்
கடற்கரை பட்டினங்களில் கப்பல்களின் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொருட்களை வாணிகம் செய்துள்ளனர் பண்டையத் தமிழர்கள். இதனை, கொற்கை, தொண்டி, பூம்புகார், சோபட்டினம் முதலான தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலிருந்து நாவாய்களில் புறப்பட்டுச் சென்ற தமிழ் வாணிகர் கிழக்குக் கடல் ஓரமாகவே நாவாய்களைச் செலுத்தி நெல்லூர், கலிங்கப்பட்டினம், தம்ரலிப்தி(வங்காள தேசத் துறைமுகப் பட்டினம்) முதலான பட்டினங்களுக்குச் சென்றனர். பிறகு கங்கையாறு கடலில் கலக்கிற புகார் முகத்தின் ஊடே கங்கையாற்றில் நுழைந்து கங்கைக் கரையில் இருந்த பாடலிபுரம், காசி (வாரணாசி) முதலான ஊர்களில் வாணிகம் செய்து திரும்பினார்கள். (பழங்காலத் தமிழர் வாணிகம், பக்.33-34) என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவதிலிருந்து அறிய முடிகின்றது.
பூம்புகாரில் பிறநாட்டு வணிகர்கள்
தமிழக வாணிகர் வெளிநாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே வெளிநாட்டு வாணிகர்களும் பூம்புகார் வந்து வாணிகம் செய்தார்கள். இதனை,
பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பும் (சிலம்பு, 5: 10-12)
பயனுள்ள வாணிகம் பற்றி அறியாத யவனர்கள் குடியிருப்புகள்ள அமைந்த இடமாகவும், வெவ்வேறு இடங்கலிலிருந்து மரக்கலங்களின் உதவியால் புலம் பெயர்ந்து வந்த மக்கள் தங்கள் வாணிகத்தை இனிமையாக மேற்கொள்ள சிறந்த துறைமுகப் பகுதியையும் பூம்புகார் விளங்கியமையை இச்சிலப்பதிகார அடிகள் குறிக்கின்றன. மேலும்,
மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கம் (சிலம்பு, 6: 43)
வேற்றுமொழிபேசுவோர்களும் பூம்புகாரில் இருந்தமையை இவ்வடி எடுத்துரைக்கின்றது. அதுமட்டுமன்றி,
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம் (பட்டி. 216- 218 )
தம் தாய்மொழி மட்டும் அல்லாது பல மொழிகளையும் கற்ற புலம் பெயர்ந்த மக்கள், ஒன்றாக இனிமையாக வாழும், குறையாத சிறப்பினையுடையது பூம்புகார் பட்டினம் எனப் பட்டினப்பாலை கூறியுள்ளது. இதன்வழி பூம்புகாரில் வெளிநாட்டு வாணிகம் சிறப்பாக நடந்தமையை அறியமுடிகின்றது.
சீனத்தோடு வணிகம்
கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சீனத்திற்கும் புகார் வழியாக மிளகு ஏற்றுமதி செய்ய பெற்றது. (பழங்கால தமிழர் வாணிகம், ப.128) பூம்புகாருக்கு கொண்டு வரப்பட்ட பட்டு பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் கூறப்பட்டிருப்பினும் சீனர்கள் தமிழ்நாட்டிற்கு வந்ததற்கான சான்றுகள் அதில் எங்கும் காணப்படவில்லை. சீனர்கள் சாதக நாடு வரை பயணம் செய்து பட்டினை அங்கு விற்றுவிட்டு சென்றிருக்க வேண்டும் (பழங்கால தமிழர் வாணிகம், பக்.66 -70) அல்லது சாதகத்திற்குச் சென்ற தமிழ் வணிகர்களோ பட்டினைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து விற்றிருக்க வேண்டும்.
இலங்கையோடு வணிகம்
பட்டின பாலையில் ஈழத் துணவும் (பட்டினப்பாலை, அடி .191) என்று கூறுவதால் இலங்கை வணிகர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து வணிகம் செய்தனர் என்று கூறப்படுகின்றது.
சாவக தீவிற்கும் பூம்புகாருக்குமான வணிக உறவு
கிபி. இரண்டாம் நூற்றாண்டில் சாவகதீவை புண்ணியராசன் எனும் அரசன் அரசாண்டு வந்தான். அக்காலத்தில் சோழநாட்டைக் கிள்ளிவளவன் எனும் அரசன் அரசாண்டு வந்தான். கிள்ளிவளவனிடம் புண்ணியராசன் தூது அனுப்பினான் அது வணிகத் தூதாக இருக்கக்கூடும். பூம்புகாருக்கு கப்பலில் வந்தவர்கள் கிள்ளிவளவ சோழனைக் கண்டனர். பிறகு அரவணை அடிகளையும் கண்டு தரிசித்தனர் என்பதை,
கிள்ளி வளவனோடு செழுதகை வேண்டி
கள்ளவிழ் தாரோய் கலத்தோடும் போகிக்
காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள்பிறப் புணர்ந்தாங்கு
ஓதினன் என்றியா னன்றே யுரைத்தேன் (மணிமேகலை, 25: 14 -19)
மணிமேகலை இவ்வாறு கூறியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்குமிடையே வாணிக உறவு இருந்ததையும் அது பூம்புகாரில் நடைபெற்றதையும் அறிய முடிகின்றது.
வணிகர்களுக்குப் பட்டம்
வணிகத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு எட்எ, காவிதி போன்ற பட்டங்கள் சங்க காலத்திலும் காப்பியக் காலத்திலும் வழங்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம் சாயலன் எனும் பூம்புகாரின் வணிகன் எட்டிப் பட்டம் பெற்றிருந்ததை,
எட்டிச் சாயலன் இருந்தோன் தனது
பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையில் (சிலம்பு, அடைக்கலகாதை,163-164)
என்ற அடிகளில் எடுத்துரைத்துள்ளது. அதுபோல் மணிமேலை பூம்புகாரின் வணிகன் தருமதத்தன் மதுரைக்குச் சென்று வாணிகம் செய்து பாண்டிய அரசனிடம் எட்டிப் பட்டம் பெற்றதை,
வாணிக மரபின் வருபொருள் ஈட்டி
நீள்நிதிச் செல்வனாய் நீணில வேந்தனில்
எட்டிப் பூப்பெற்றுஇருமுப்பதிற் றியாண்டு
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினான் (மணி, 22: 111-114)
என்று கூறியுள்ளது.
வரிவசூல் (சுங்கம்)
பூம்புகார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களுக்குச் சோழ அரசனுடைய அலுவலர்கள் சுங்கம் வாங்கினார்கள். சுங்கம் பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாகப் பொருட்களின் மீது சோழ அரச முத்திரையான புலி முத்திரையைப் பொறித்தார்கள் என்பதை பட்டினப்பாலை,
நல் இறைவன் பொருள் காக்கும்
தொல் இசைத் தொழில் மாக்கள்,
காய் சினத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாஅபோல,
வைகல்தொறும் அசைவு இன்றி
உல்கு செயக் குறைபடாது
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல,
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்,
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்,
அளந்து அறியாப் பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல் அணங்கினோன்
புலி பொறித்து …… (பட்டி.120-135)
எனும் பாடலடிகளில், நல்ல அரசனின் பொருட்களைப் பாதுகாக்கும், பழம் பெருமையுடைய சுங்கத்தை வசூலிப்பவர்கள், சுடும் கோபத்தைக் கொண்ட கதிர்களையுடைய சூரியனின் தேரில் கட்டப்பட்ட குதிரைகளைப் போல், நாள்தோறும், சோம்பல் கொள்ளாது சுங்க வரியைக் குறைவுபடாமல் வசூலிப்பார்கள். மழைமேகம் கடலிலிருந்து முகந்த நீரை மலைமீது பொழியவும், மலையில் பொழிந்த மழை நீரை ஆறுகள் வழி கடலுக்குக் கொண்டு சேர்க்கவும், மழை பொழியும் பருவம் போல, கடலிலிருந்து நிலத்திற்கு கொண்டு வரவும், நிலத்திலிருந்து கடலுக்கு கொண்டு செல்லவும், அளந்து அறிய இயலாத பல பொருட்கள் எல்லையற்று வந்து குவிந்திருக்க, பெறுவதற்கு அரியதாகிய பெருங்காவலையுடைய வலிமை பொருந்திய மிகுந்த அதிகாரம் கொண்ட அதிகாரியொருவன் சோழ மன்னனுக்கு உரிய புலிச் சின்னத்தைப் பொறித்து வைத்தான் என்று கூறுகின்றது.
காலமாற்றத்தில் பூம்புகார்
உலகில் எல்லாம் மாற்றத்திற்கு உட்பட்டதே ஆகும். அவ்வகையில் முச்சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களின் நகரங்கள் பல கால ஓட்டத்தில் அழிந்துபோனதை நாம் அறிவோம். அதேபோல், காலவோட்டத்தில் பூம்புகார் அழிவுக்கு உள்ளாகிய நிலையிலும் மீண்டு தற்போது சிறிய கிராமமாக விளங்கி வருகின்றது. இதனை, வாணிகப் புகழ்பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புயற் காற்றடித்து வெள்ளப்பெருக்கெடுத்து நீரில் முழுகி விட்டதை மணிமேகலை கூறுகிறது. ஆனால், இப்பட்டினம் அடியோடு முழுகி விடவில்லை. வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் இப்பட்டினம் நெடுங்காலம் பேர் பெற்றிருந்தது. கி.பி. 10 நூற்றாண்டில் இருந்த பட்டினத்து அடிகள் (பட்டினத்து பிள்ளையார்) காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர். அவர் துறவியாவதற்கு முன்பு இப்பட்டினத்தில் பேர்போன கப்பல் வாணிகனாக (மாநாய்கனாக) இருந்தார். பிற்காலச் சோழர் காலத்திலும் காவிரிப்பூம்பட்டினம் பேர் பெற்றிருந்தது. பிறகு இப்பெரிய பேர்போன பட்டினம் சிறப்புக் குன்றிச் சிறிது சிறிதாகப் பெருமை குறைந்து இப்போது குக்கிராமமாக இருக்கிறது. இங்கு அண்மையில் தொல்பொருள் துறை ஆய்வாளர்கள் நிலத்தை அகழ்ந்து பார்த்தபோது பல பழம்பொருட்கள் கிடைத்தன. அவை இப்பட்டினத்தின் பழங்காலச் சிறப்புக்குச் சான்றாக இருக்கின்றன. (பழங்காலத் தமிழர் வாணிகம், ப.89) என்பதன் வழி அறிய முடிகின்றது.
முடிவுரை
பண்டைய காலத்தில் தமிழரின் மிகச் சிறந்த அடையாளமாக வணிகத் தளமாக பூம்புகார் விளங்கியது. அதுமட்டுமன்றி இந்நகரத்திற்கு பல்வேறு மொழி பேசும் மக்களும் வந்து தங்கி தங்கள் பொருட்களை விற்பனை செய்துள்ளனர். நாலங்காடி, அல்லங்காடி ஆகிய கடை வீதிகளும் இருந்துள்ளன. பல்வேறு நாடுகளுக்கு இத்துறைமுகத்தின் வழியே பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பக் காலத்தில் பண்டமாற்று முறையாக இருந்த வாணிகம் காலப்போக்கில் அரசுடைமை பொருளாதாரம் தோன்றியதன் அடிப்படையில் நாணயங்கள் கொண்டு வாணிகம் செய்யும் போக்கு உண்டானது. பூம்புகார் துறைமுகத்தில் கலங்கரை விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. இத்துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் நேராக பண்டங்களை இறக்கும் இடங்களுக்கே வருமாறு இத்துறைமுகம் அமைந்திருந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த துறைமுகப் பட்டினம் இன்று சிறிய கிராமமாக மாறிப்போனது உட்பட பல்வேறு செய்திகளை இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொண்டோம்.
துணைநூற்பட்டியல்
இராமசுப்பிரமணியம். வ.த.(உரை), சிலப்பதிகாரம் மூலமும் உரையும், திருமகள் நிலையம், சென்னை, 2012.
இளங்குமரன். இரா, பெருங்கதை, மாணவர் பதிப்பகம், சென்னை, 2004.
கிருஷ்ணன். இரா., பண்டைத் தமிழரும் வாணிகமும், இந்திய ஆய்விதழ், 2019, XII.
குன்றக்குடி அடிகளார்(உரை), திருக்குறள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, 2015.
கைலாசபதி க., பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், மக்கள் வெளியீடு, சென்னை, 1978.
சேதுப்பிள்ளை. ரா.பி., தமிழகம் ஊரும் பேரும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2005.
துரைசாமிப்பிள்ளை ஔவை. சு., மணிமேகலை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2019.
புலியூர் கேசிகன், அகநானூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2010.
புலியூர் கேசிகன், குறுந்தொகை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2010.
புலியூர் கேசிகன், புறநானூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2010.
பூங்குன்றன். ஆர்., அடுபோர் வேளிர் வீரை முன்றுரை, கருத்தரங்கஉரை, பொறையாறு, 22.02.1993.
மோகன். இரா (உரை)., பத்துப்பாட்டு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2004.
வேங்கடசாமி. மயிலை சீனி., பழங்காலத் தமிழர் வாணிகம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1978.
வேங்கடசாமி. மயிலை. சீனி., சமணமும் தமிழும், கழகம், திருநெல்வேலி, 1954.
Sivarajapillai. K.N., The Chronology of the early tamils, Maven Books, Chennai, 2021.
மின்னஞ்சல்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,
https://orcid.org/0000-0002-7395-9699



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









