
மூகம் - சமுதாயம் என்ற இருநிலையை நாம் முதலில் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஒரு குறிப்பிட்ட இனக்குழுவில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள் எனத் தனிப்பண்பாட்டு அடையாளங்களின் நிலைப்பாடுகளை முன்நிறுத்துவதால், அவர்கள் ஒரு சமுதாயத்திற்கு உட்பட்ட மக்களாக மாறுகிறார்கள். ஒவ்வொரு சமுதாயத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் முறைகள் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளுக்கு ஏற்றார்போல் மாற்றமடைந்தும் காணப்படுகின்றது. ஆனால் சமூகம் என்பது இச்சமுதாயத்தை எல்லாம் உள்ளடக்கிக் கொள்வது. சமுதாயத்தில் ஏற்படக்கூடிய கலவரங்கள் அவை வெளியுலகிற்கு வரும்போது சமூகத்தின் நீட்சியாக உருவெடுக்கிறது. இந்நீட்சி எல்லைகளற்ற தீர்வாகவும், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளான சுவர், நசுக்கம், எதிர்ப்பதியம் போன்ற கதைகளிலிருக்கக்கூடிய சமூகச்சூழல் எவற்றை நோக்கி பயணிக்கிறது. அப்பயணிப்பில் மக்களின் பங்களிப்பு எவ்வகையில் உலவுகின்றது – அதற்கானக் காரணங்களும், சமூக மாற்றம் யாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற முனைப்பில் இக்கட்டுரை முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.
மையத்தின் பின்னணியில் சமூகப் பின்புலம்
சுவர் - சமூகத்தின் மீதும், சுற்றுச்சூழல் நன்மையை வெளிப்படுத்தும் அக்கறையோடு காட்டப்பட்டக் கதைபின்னல். மண்சுவராக ஆசிரியர் தன்னை அறிமுகப் படுத்தி, வீரண்ண னின் வீட்டு முன் நடக்கும் விபரீதங்களைக் கண்முன் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. முழுவதும் நகரத்தை மையமிட்டும், சமூகவியல் பார்வையில் - மகள்கள் குளிப்பதற்கு மறைவாக தெருவோரம் கட்டப்பட்ட சுவர் நாளடைவில் பொதுமக்கள் கழிக்கும் சிறுநீர் இடமாக மாறிப்போனது. நாளுக்கு நாள் இவை அதிகரித்துக் கொண்டும், இறுதியில் சிலரோடு சண்டையிடும் காட்சிகளும், அவற்றின் பலனாக முதுகெலும்பு உடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் காட்சிகளும் கதையின் வலுநிலை ஆழமாகப் பதிக்கப் பெற்றுள்ளது. “ஒரு நாள் பார்த்துப் பார்த்து சலித்தவர் இண்டர்வெல்லில் தியேட்டரில் மேனேஜர் ரூமிற்குள் சென்றார். ‘கக்கூஸ்கூட கட்டாம என்னடா தியேட்டர் கட்டுனீங்க’ என்று சப்தம் போட்டார். ‘புடிக்கலீண்ணா காசு வாங்கிட்டுத் திரும்பிப்போ, டிக்கட் குடு’ என்றார் மேனேஜர். வீரண்ணன் திகைத்தார்”(பக்236). “என் சந்தேகம் சரியென்று ஆகிவிட்டது. முதுகெலும்பு முறிந்து வீரண்ணனை உள்ளுர் எலும்பு முறிவு ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்த்தார்கள். அடுத்த நாளில் வீரண்ணன் பெரிய மகள் என்மேல் ஒரு அட்டையைக் கொண்டு வந்து மாட்டினாள். ‘சிறுநீர் கழிக்காதீர்கள். எச்சரிக்கை – நேற்றுச் சிறுநீர் கழித்த சண்டையில் இங்கு ஒருவர் உயிர் இழந்துவிட்டார்..’ என்னைப் பார்த்துத் தூரம் விட்டே நடக்க ஆரம்பித்தார்கள். நினைவுச் சின்னமாகிவிட்டேன் என்றிருந்தது”(பக்237). பொய்யான தகவல் என்றாலும் சில நாட்கள் கழித்து மீண்டும் தொடர்ந்து கொண்டது. கதையில் காட்டப்படும் வீரண்ணன் எனும் பாத்திரம் தன் வீடு துற்நாற்றத்தால் படும் துயரத்தை எண்ணி, அதனை சரிகட்ட பல முயற்சிகளும், அதனின் தாக்கமும் பெரும் வலியைத்தான் அவருக்குக் கொடுத்திருக்கிறது. கதையினை இருநிலையில் பார்க்கலாம். முன் சொன்னவை முதல் என்றாலும், மற்றொன்று தற்கால மனிதர்கள் செய்ய வேண்டியது என்னென்ன? எவை எவையென? இக்கதை சொல்லித்தரச் செய்திருக்கிறது. என்னதான் முற்பட்டாலும் இறுதியான சில காட்சிகள் “நேற்று இரண்டாம் ஆட்டம் சினிமா போய்விட்டு வந்தான் வீரண்ணின் புது மருமகன். நேரே என்னை நோக்கி வந்தான். என்மேல் உபாதை அபிசேகம் செய்துவிட்டு சிகரெட்டொன்றைப் பற்றவைத்துக் கொண்டான்”(பக்238). “பழைய குருடி கதவை திறடி” என்னும் சொலவடை போல் மேற் சொன்ன உதாரணங்கள் நிலை நிறுத்துகின்றன. பல அடுக்கடுக்கான காரணங்களைக் கொடுத்தாலும் சமூகத்தை நல்வழியில் மாற்ற புதிய தலைமுறைக்கு சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியம்.
நசுக்கம் - துன்பத்தை வடிவமாகக் கொண்டு குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தை வைத்துச் சொல்லப்படும் கதை. கைத்தறி மனிதர்களின் நிலைமை எப்படியிருக்கும் என எண்ணிப்பார்க்க வைத்திருக்கிறது. குறிப்பிட்ட பெயரினைச் சூட்டாமல், அவன் எனும் பொதுப் பெயரின் அடையாளமாகவும், கைத்தறித் தொழிலில் ஈடுபட்டு வரும் இப்பாத்திரம் தன் உறவுகளை இழந்தும், தனி மரமாக கைத்தறிச் சேலையை உற்பத்தி செய்யும் தொழிலைக் காட்சிப்படுத்தினாலும், பொருளாதார ரீதியான முன்னேற்றம் அப்பாத்தி ரத்திற்கும், அக்குடும்பத்திற்கும் தகுந்த வழித்தடங்களைக் கொடுத்திருக்க வில்லை. தன் உயிருக்காக அழைக்கழிந்து விழுந்து கிடக்கும் கடைசி நிமிடத்தில் தன் நினைவுகளைப் பின்னுக்குத்தள்ளி முன் நடந்ததை எண்ணிப்பார்க்கும் காட்சிகள் முதலில் கொடுக்கப் பட்டிருக்கிறது. கதையில் வறுமையின் போராட்டங்களை அடுக்கடுக்காகக் கொடுத்தி ருக்கிறார். “அவன் அப்பாவும் அம்மாவும் கிருத்திகா மரணத்தைத் தேடிப் போனதும் என்று தறிக்குழியை மூட வேண்டிய கட்டாயம் வந்து விடுமோ என்று நினைத்ததுண்டு. அதற்கும் நேரம் வந்துதான் அவனை இப்படிக் களிமண் குவியல் முன்னால் கொண்டுவந்து உட்கார வைத்துவிட்டது”(பக்384). ஒரு கைத்தறி மனிதனின் வாழ்வு போராட்டக்களமானது. ஏனென்றால் தற்கால மனிதர்களின் ஆடை கலாச்சார போக்கு கைத்தறி பக்கம் திசை திருப்புவதில்லை. கதையின் முக்கிய திருப்பமும் இதுவே. உழைத்து உழைத்து இறுதியில் தரைக்குழித் தரையில் வீழப்போகும் இறுதியானக் காட்சியும் கைத்தறி சமூகத்தின் உணர்வுகளைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இறப்பின் வலியையும், வழியையும் தனிப்பட்ட ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதன் வழியாக கைத்தறிச் சமூகத்தில் வாழும் மனிதர்களின் துன்பத்தையும், பொருளாதார மந்தத்தையும், நிலையில்லாத இவ்வாழ் வினை நிலைகொள்ள வைக்கத் தேவையான பாத்திரமாக படைக்கப் பட்டிருக்கிறது. நசுக்கம் - நசுங்கிப்போன கைத்தறி மனிதன்.
எதிர்ப்பதியம் - கதையின் முதன்மை அழுத்தமாக “தண்ணீர்” என்ற சொல்லாடல் நிலைத் திருக்கிறது. இச்சொல்லை உணர்த்தும் வகையில் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலத் தேவைக்காக விளங்கும் தண்ணீர் முரண்பாட்டைப் பேசும் கதையாக வாசிக்கும் போது மனதில் தோன்ற வைத்திருக்கிறது. இருந்தாலும் முழுமையானக் கதையோட்டங்கள் மிகவும் குறுகலான வட்டத்தில் நின்று ஆழமானச் சமூகப் புரட்சியை விதைத்திருக்கிறது. பிறந்த ஊரிலிருந்து வாழ வழித்தேடி பிழைத்து வந்து முப்பது வருஷமாகவும் நிலைப்பெற்று, ஓரிடத்தில் கூலிக்காரனாகயிருந்து முதலாளியானாலும், “உங்க மொழி, எங்க மொழி” போன்ற வார்த்தைகளும் கதையில் ஏதோ ஒரு பிரிவினம் வலுவாக அடித்திருக்கிறது. “தண்ணி கேக்கறீங்கடா தண்ணி.. எங்க ஊர் தண்ணி உங்க ஊருக்கு வேனுமா.. போங்கடா உங்க ஊருக்க” தீப்பொறி எப்போதோ விழுந்து விட்டதுதான். பல சமயங்களில் பரவும் அணையும். ஆனால், இந்த முறை தண்ணீர்ப் பிரச்சனையைக் காட்டித் தீப் பரவிவிட்டது. இந்த தீயை அணைக்கப் பல வருஷங்கள் ஆகலாம். அணைந்துவிட்டது போலத் தோன்றிப் பயமுறுத்திக் கொண்டிருக்கலாம். தீப்பொறியை ஊதிப் பெரிதாக்குபவர்கள் சாப விமோசனமின்றி நொந்து சாகவேண்டும் என நினைத்தான் நாகப்பன்”(பக்129). மற்றும் “அவங்க அப்படித்தான் சொல்றாங்க. நீ இங்க பொறந்து வளர்ந்தவனா இருந்தாலும், உன் ரத்தம் வேறதான்னு”(பக்129). கதைக்குள் இருவேறு ஊர்களில் நடப்பவைகளாகக் காட்டிக் கொள்ளாமல், ஓர் ஊரினுள் நடக்கும் பிரச்சனையாக மட்டுமே இவற்றை எடுத்துக்கொள்வது கடினம். நாகப்பனை வைத்து சொல்லப்பட்டாலும், கதைக்குள்ளிருக்கும் கதைக் கதையாக எடுத்துக்கொள்ளாமல் தற்காலத்தில் நடக்கும் - நடந்த – நடந்து கொண்டிருக்கிறக் காவிரிப் பிரச்சனையை முன்வைத்து எழுதப்பட்டதாக வெளிப் படுகிறது. ஏனென்றால், கதையினுடைய அம்சங்கள், வாசிக்கும் தளங்களின் பதிவுகள் இவற்றை ஒத்தும் நிற்கின்றன. நாகப்பனின் வீடு சிதைந்த நிலைமையோடு, வாழை மரங்கள் அழிக்கப்பட்டு கிடக்கும் காட்சிகள் முதலில் தொடங்குகிறது. ஊரில் உள்ளவர்களின் நிலை - மனைவி, குழந்தைகளை ஊருக்கு அனுப்புதல் என்று சிந்திக்கும் வேலையில் மலைச்சாமியின் உரையாடலோடு அடுத்தத் தளத்திற்கு நகர்கிறது.
இத்தளத்தின் கதை மையம் மேற்சொன்ன வாக்கியங்களில் உணரலாம். ஓவ்வொரு காரணமும் தற்கால நிகழ்வையொத்து அமைந்திருக்கிறது. ஊரைவிட்டு தப்பிச்செல்லும் காட்சிகளும் விறுவிறுப்பைக் கொடுத்தாலும், இறுதியானக் காட்சிப்பிணைப்பில் சிறிய குன்றின் நடுவில் நிலைபெறும் காட்சி முக்கியமானதொரு விவாதத்தை முன் வைக்கிறது. எல்லாம் கடந்து போனாலும், தன்னோடு கொண்டு வந்த முனியப்பன் எனும் கல்லைச் சாமியாகப் பாவித்துத் தன் தோளில் வைத்து நாகப்பன் கொண்டு வருகிறான். இடையே தடுத்து நிறுத்தும் ஒருவனின் உரையாடல் - அகதிகள் எனும் சொல்லின் எத்தனிப்பு என “அகதி என்ற வார்த்தையின் அர்த்தம் பற்றி அவன் எப்போதும் நினைத்துப் பார்த்ததில்லை. இந்த வார்த்தையாலேயே அவன் இனி அழைக்கப்படுவான் என்ற எண்ணம் வந்தது”(பக்133).
“எதிரில் நின்றிருந்தவனின் கோபத்திற்கு முன் முனியப்பன் நிலைத்திருப்பாரா என்ற எண்ணம் வந்தது. பல தலைமுறைகளாய்ப் பதியக் கல் போட்ட இடத்திலிருந்து முனியப்பன் நகர்ந்ததில்லை. சொந்த நிலமா என்ற கேள்வி வந்தாயிற்று. அகதி என்று அவச் சொல்லில் வேதனைப்பட்டாயிற்று. முனியப்பனுக்கு இப்படியொரு கதி வந்துவிட்டதே என்றிருந்தது. நான் மடடும்தானா, முனியப்பனும் அகதியா.”(பக்134). முடிவும் சில நேரங்களில் முடியாமல் நின்று செல்லும். நிலம் யாருக்கும் சொந்தமில்லை. நிலம் எல்லோருக்கும் சொந்தம். இவ்விருப்போக்குகள் பல நேரங்களில் முரண்படவும், நேர்படவும் செய்யும். ஆனால் நாகப்பன் என்ற மனிதனும், முனியப்பன் என்ற கடவுளும் இந்நிலங்களின் பங்கீடுதலுக்கு அர்த்தம் கொடுப்பவராக தோன்றவில்லை. இது கதையிலும் சரி, தற்கால நாடுகளில் நடைபெறும் அடக்கு முறைகளிலும் சரி எதிர்;ப்பதியம் ஆபத்தானது தான்.
பாத்திரங்களிலிருந்து வெளிப்படும் முரண்கள்
மாற்றத்தினைத் தேடிச்செல்லும் மனிதர்களின் மனங்கள் எவற்றையும் அலசிப் பார்ப்பது, சிந்தித்துப் பார்ப்பது, எதிர்கால முக்கியத்துவம், இவற்றை எங்கிருந்து அடையாளம் காணவேண்டும் என்பதை முதலில் தெரிந்து வைத்தல் அவசியமானது. அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே பெரும் சிரமங்கள் இருக்கக்கூடிய காலக்கட்டத்தில், வாழ்க்கை அணுகுமுறையின் எதார்த்தச்சூழல் நடைமுறைக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்வதும் முக்கியம் வாய்ந்ததே. சுவரில் தென்படும் வீரண்ணன் – வீரண்ணனின் மருமகன் இவ்விரு மனிதர்களின் செயல்பாட்டு ஆளுமைகள் குறிப்பிடத்தக்க முரண்பாடுகளை முன்னெடுக்கிறது. தன் இருமகள்கள் குளிப்பதற்காகவும், அவர்களின் மானத்தைக் காப்பாற்ற உருவெடுக்கும் மண்சுவர் - அச்சுவரைப் பாதுகாக்க ஐம்பது வயதுடைய வீரண்ணன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வரிசைப்படுத்தப் படுகின்றன.
நகரத்தைப் பின்புலமாகக் கொண்டு திரையறங்கம், பள்ளிக்கூடம் என அதிகப்படியான மனிதர்கள் உலவும் வெளிகளைக் காட்டித் தந்திருக்கிறார். அக்காட்டல் திரையறங்கிற்கு வருகிறவர்கள் - பள்ளிக்கூட சிறுவர்கள் - வேலை நிமித்தமாக செல்லும் மற்றவர்களென, அச்சுவரினை மையமிட்டு சிறுநீர் கழிக்கக்கூடிய ஒரு வடிவத்தைக் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். சமூக பின்புல நிலையை அறிவது அச்சமூகத்தில் வாழும் மனிதர்களின் செயல்பாட்டினைக் குறிப்பது. வீரண்ணன் அச்சுவரைக் காப்பாற்ற திரையறங்கு மேனேஜர் – பொது மனிதர்கள் இருவர் இவர்களுடன் சண்டையிட்டு, மருத்துவமனைக்கு செல்லும் காட்சிகள். தன் உறவுகளின் மதிப்பு அடையாளங்களைக் காப்பாற்ற மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பார்க்க வைத்திருக்கிறது. ஆனால் மருமகனின் எதிர்மறையானப் போக்கு வீரண்ணனை நிலைகுலைய வைத்திருக்கிறது.
சுவரை உயிராகக் கொண்டு காப்பாற்றி வந்தவர். எல்லோரியடமும் சண்டையிட்டு வந்த வீரண்ணன், தன் மருமகன் வீட்டில் எதிரிலிருக்கும் திரையறங்கில் படம் பார்த்துவிட்டு, அம்மண் சுவரில் சிறுநீர் கழிப்பதும், அக்காட்சிகளைப் பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கும் நிலைமையும், கதையினை ஒரு கோணத்தில் நிலையாக இருக்க விடவில்லை.
நசுக்கம் நெசவாளக் குடும்பத்தில் பிறந்த ஒருவனின் வாழ்க்கை நிலையாமையை முன்னிறுத்துவது. தனிப்பட்டவரின் வாழ்வாக அவற்றைப் பார்க்காமல் நெசவாளச் சமூகத்தின் கீழ் நிலையை உணர்த்தியிருக்கிறது. பிழைப்பு – பிழைப்பின் வழிநின்று மேற்கொள்ளப்படும் இத்தொழிலில் சரியான பொருளாதார நிலை மந்தமடைந்துதான் காணப்பட்டிருக்கிறது. பொதுப்பெயரில் அடையாளப்படுத்தும் அவன் எனும் பாத்திரத்தின் உறவுகளான கிருத்திகா, தந்தை, தாய் இவர்களின் இறப்பு துக்கத்தை முன்வைத்தாலும், தனிப்பட்ட ஒருவனாக இத்தொழிலை முன்நடத்தி வாழ்வது கடினமான நிலையாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. தற்காலத்தில் இதற்கு நேர்மறையாகவே அதிநவீனக் கருவிகள் வந்துவிட்டது. கைத்தறியில் இருக்கக்கூடிய நுணுக்கங்களை விடவும், கருவிகளின் பணி வசீகரதனமாகவே வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு இக்கைத்தறித் தொழிலைச் செய்வதும் வருமானத்திற்குப் பெரும் இழப்பீடே.
இப்போக்கு இப்பாத்திரத்தைத் துரத்தியிருக்கிறது. கதை வெளிப்படுத்தும் மையம் அக்கதைக்கு மட்டுமே உயிரோட்டமாக இருந்துவிடாது. அது ஒரு சமூகப் பின்னணியில் நிற்கும் துயரங்களை எடுத்துரைப்பது.
எதிர்ப்பத்தியம் முக்கியமானதொரு பின்னடைவுச் சிந்தனைக் கொண்டது. வேற்று மாநிலத்தில் முப்பது வருடங்களாக வாழ்ந்துவரும் நாகப்பன் எனும் மனிதனின் அடையாளங்கள் முழுமைப் பெறவில்லை. அங்கே பூர்வக்குடிகளாக இருக்கும் மனிதர்களின் நிலைப்பாடு அது அவர்களுக்கான அடையாளத்தை மீட்டெடுக்கிறது. காவிரிப் பிரச்சனையை அலசியிருக்கிறது. தமிழ் நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று அங்கே பலப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். நாகப்பனும் ஓர் தமிழன். கர்நாடக மாநிலத்தில் தன் அடையாளத்தை மறைத்து வாழவேண்டியச் சூழல் அங்கே உள்ளது. கூலிக்காரனாக இருந்து முதலாளியானாலும்கூட அகதிகளாகத்தான் அங்கு வசிக்கும் மனிதர்கள் நடத்தியிருக்கின்றனர்.
மக்களின் ஒப்புமை நிலைமையை பகுப்பாய்வில் நிறைய சிரமங்கள் தென்படுகிறது. ஒரு நாட்டில் குறிப்பிட்ட மாநிலத்திற்கு, குறிப்பிட்ட மாநில மக்கள் வாழ்ந்தாலும் அம்மனிதர்கள் அகதிகளாக இருக்க வேண்டிய நிலைப்பாட்டை இக்காவிரிப் பிரச்சனையினூடாக விவாதித்திருக்கிறார். நாகப்பனை மட்டுமல்ல. முனியப்பன் எனும் கடவுள் என்கிற எண்ணம் கொண்ட கல்லை நடுவதற்கும் இடம்கொடுக்க மறுக்கின்றனர். கடவுளுக்கே நிலம் இல்லாதபோது சகமனிதர்களுக்கு அரிதாகக்கூட கிடைப்பது இல்லை. இவ்வித முரண்பாடுகளைக் களைவது கடினமான செயல்.
முடிவுரை
அகம் - புறம் - புறவயப்பட்டக் காட்சிகளே தலைதூக்கி நிற்கிறது. மையங்களின் அடிப்படைத் தன்மைகள் துன்பங்களை வழிந்து சொல்லியிருக்கிறது. பாத்திரங்களை அதற்குப் பலிகிடாவாக ஆக்கியிருக்கிறார். சுவர், நசுக்கம், எதிர்ப்பதியம் அகத்தில் இருக்கக் கூடிய அழுக்கினை அகற்றாமல், புறத்தில் வெளிர் நிறத்தைக் காட்டியிருக்கிறது. சமூகத்தின் பார்வையும் புறத்தின் காட்சியாகவேப் பிரதிபலிக்கிறது. மனத்தின் தூய்மையை உணராமல், உடலில் வாசனையைக் கூட்டுவது எந்த விதத்தில் நியாயம். சக மனிதர்களைச் சக மனிதர்களாக எண்ணாமல், மனத்திலிருக்கும் களைகளைக் களையாமல் சமூகத்தினைச் சீர்படுத்துவது கடினமே. இக்கதைகள் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
உசாத்துணை நூல்கள்
முதன்மை நூல் - சுப்ரபாரதிமணியன்.,2012 'சுப்ரபாரதிமணியன் கதைகள்' சென்னை,காவ்யா வெளியீடு.
பார்வை நூல் - தொகுப்பாசிரியர் கே.பி.கே.செல்வராஜ், “சுப்ரபாரதிமணியன் படைப்பும் பகிர்வும்”2005. சென்னை, காவ்யா வெளியீடு.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









