பெப்ருவரி 5 அன்று இலங்கைப் பாராளுமன்றத்தில் 'பொதுஜனபெரமுன' கட்சியின் முக்கிய ஆளுமையான நாமல் ராஜபக்ச இனவாதத்தைக் கக்கத் தொடங்கியபோது தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான லக்மாலி ஹேமச்சந்திரா உடனடியாகவே அதற்கெதிராகக் கடுமையான பதிலடி கொடுத்திருக்கின்றார். சுதந்திரதின நிகழ்வில் யுத்தத்தை வென்ற இராணுவத்திற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லையென்று நாமல் ராஜபக்ச இனவாதத்தைக் கையிலெடுத்தபோதுதான் லக்மாலி ஹேமச்சந்திரா இவ்விதம் பதிலடி கொடுத்தார். 1989இல் பிறந்த லக்மாலில் ஹேமச்சந்திராவின் இவ்வுரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. சிங்கள இளந்தலைமுறையினர் எவ்வளவுதூரம் காலத்துடன் மாறி வந்திருக்கின்றார்கள் என்பது நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையினைத் தருகின்றது. தமிழ் , முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரும் லக்மாலி ஹேமரத்தின போன்று தம் இன அரசியல்வாதிகள் இனவாத்த்தைக் கையில் எடுக்கும் சமயங்களில் அவர்களைத் தட்டி வழி நடத்த வேண்டும். நெறிப்படுத்த வேண்டும். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதில் இனவாதத்தை எந்நேரமும் கையிலெடுப்பதைக் கண்டிக்க வேண்டும்.
நேற்று லக்மாலி ஹேமச்சந்திரா ஆற்றிய சிங்கள உரையினை நான் கேட்கவில்லை. ஆனால் அவர் குறிப்பிட்டது பற்றிய இலங்கை டெய்லி நியூஸ் பத்திரிகைச் செய்தி பார்த்தேன். அது பற்றிய Hisham's Insights யு டியூப் சானல் பார்த்தேன். அப்பொழுதுதான் லக்மாலி ஹேமச்சந்திராவின் உரையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டேன். அந்தக் காணொளிக்கான இணைய இணைப்பினை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.
லக்மாலி ஹேம்ச்சந்திராவின் டெய்லி நியூஸ் செய்தியின் தமிழாக்கம் இதுதான்:
"கடந்த காலத்தில் இனவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு எம்முடையது. . 30 வருட யுத்தம் பாரிய பொருளாதார மற்றும் சமூகச் சேதங்களை ஏற்படுத்தியது. அதற்கான பொறுப்பை அப்போதைய அரசியல் தலைமை ஏற்க வேண்டும். நம் அனைவருக்கும் இனவாதத்திற்கு உதவாத அல்லது அதை ஊக்குவிக்காத அரசியலை முன்னெடுக்கும் பொறுப்பு உள்ளது. சில கட்சிகள் இந்த நாட்டின் மக்களை இன, மத மற்றும் கலாச்சார ரீதியாக பிரிப்பதற்காக தங்கள் அரசியலை திட்டமிடுகின்றன. சில அரசியல்வாதிகள் இந்த நாட்டின் சிங்கள மற்றும் பௌத்த மக்கள் இனவாதத்திற்கு ஆளாகக்கூடியவர்கள் என்று காட்ட முயற்சி செய்கின்றனர். அவர்களின் அரசியல் சிங்கள பௌத்த மக்களை தவறாக வழிநடத்துவதை மையமாகக் கொண்டுள்ளது. நமது நாட்டின் சாதாரண மக்கள் அவர்களை ஆதரிக்கும் ஒரு குழு அல்ல.
நாட்டிற்காக நிற்பவர்கள் தாங்கள்தான் என்று அவர்கள் காட்ட விழைகின்றார்கள். ஆனால் மக்கள் அவர்களை நம்பவில்லை. இருப்பினும், சிங்கள பௌத்த மக்களை இலக்காகக் கொண்ட பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் அனைவரும் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மக்கள் இனவாதத்தை விரும்புவதில்லை. நாம் நல்ல முறையில் செயல்படுகிறோம். ஒரு பேரிடர் சூழ்நிலையில் மக்கள் வலியை உணர்கிறார்கள். நாமும் வலியை உணர்கிறோம். இந்த நாட்டின் மக்கள் இனவாதத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்கள் சுயமரியாதைக்காக வாக்களித்தனர். நாம் யாரையும் அவமதிக்கத் தேவையில்லை."
பாராளுமன்றத்தில் இனவாதத்தை தேர்தலில் தோற்ற கட்சிகள் எழுப்ப முற்படும்போதெல்லாம் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு இனவாதிகளைத் தோலுரித்துக் காட்டுகின்றார்கள். மிகவும் ஆரோக்கியமான செயற்பாடு. வரவேற்கத்தக்க செயற்பாடு. இவ்விதமான செயற்பாடுகளை அனைவரும் இன , மத, மொழி வேறுபாடற்று ஆதரிக்க வேண்டும். ஆதரித்துக் குரல் கொடுக்க வேண்டும்.
இந்த உரை லக்மாலி ஹேமசந்திராவை நாட்டு மக்கள் அனைவரும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது. அறிந்து கொள்ள வைத்திருக்கின்றது. அவரையிட்டுப் பெருமைகொள்ள வைத்துள்ளது.
Hisham's Insights யு டியூப் சானல் - https://www.youtube.com/watch?v=O6ZQ10qqZag [ இந்தக் காணொளி லக்மாலி ஹேமச்சந்திராவின் உரையின் முக்கிய அம்சங்களை எடுத்துக்காட்டி விளக்கம் தருகின்றது. ]
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









