* கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,


முன்னுரை

மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு ஐந்து வகையான ஏற்பாடுகள் உள்ளன. அவை நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்றுதொடர்பு கொண்டுதான் வலம் வர இயலுமே, தவிர்ந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அடையும். கம்பராமாயணத்தில் சுற்றுப்புறசூழலியல் குறித்து நாம் ஆராய்வோம்.

நான்கு வகையான சுற்றுச்சூழல் மாசுபாடு

நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய நான்கும் மாசுபாடு அடைகிறது.

1.நிலமாசுபாடு.
2.நீர்மாசுபாடு.
3.காற்று மாசுபாடு.
4.ஆகாய மாசுபாடு.

சுற்றுச்சூழல்-விளக்கம்

சுற்றுச்சூழல் என்பது பூமியில் உள்ள இயற்கை வளங்கள், உயிரனங்களை உள்ளடக்கியதாகக் கொள்ளப்படுகின்றது.

"சுற்றுச் சூழல் என்பது மண், மலை, நீர், காடு, கடல், ஆறு, குளம் போன்றவற்றையும், அவற்றில் அமைந்த உயிரினங்களையும் கொண்டது. உயிரினங்களைக் கொண்ட இவ்வுலகினை உயிரினச் சூழல் அல்லது உயிரினக் கோளம் என்று அழைப்பர். அதனை ஆங்கிலத்தில் Biosphere என்று கூறுவர். இன்னும் விரிவாக நோக்கினால் சுற்றுச்சூழல் என்பது நிலம், நீர், காற்று, வானவெளி, வெப்பம் ஆகியவற்றையும், மனிதன் உருவாக்கும் ஒழுங்கமைப்புகளையும், அவனது வாழ்க்கை நிலை, கலாச்சாரம், தொழில் நுட்பம், சமூக, பொருளாதாரம், சட்ட அமைப்பு, அரசியல், சுகாதார அமைப்பு முறைகளையும் தக்க வகையில் உள்ளடக்கியது ஆகும்" (இட்சுமி, ஜே.ஆர்., சுற்றுச் சூழலியல் கல்வித் திட்டம், ப.1)

"சுற்றுச் சூழல் (Environment) என்பதன் பொருள் சுற்றிலும் உள்ளவை என்பதாகும். (Environment means Surroundings). பிரஞ்சு மொழியின் என்விரான் என்ற சொல்லிலிருந்தே என்விரான்மென்ட் (Environment) என்ற பெயர் வந்தது. இதன் பொருள் சுற்றிலும் சூழ்ந்து வருவது சூழ் என்பதாகும். நம்மைச் சூழ்ந்துள்ள சூரிய ஒளி (Sun light), காற்று (Air), தண்ணீர் (Water), மண் (Soil) மற்றும் கண்களுக்குப் புலப்படாத நுண்ணியிரிகள் (micro organisms), தாவரங்கள் (Plants), விலங்குகள் (Animals), காடுகள் (Forest) ஆகிய அனைத்தும் சேர்ந்ததே சுற்றுச்சூழல் ஆகும். எனவே, நம்மைச் சூழ்ந்துள்ள அனைத்துமே சுற்றுச்சுழல் என்றழைக்கப்படுகின்றன. (சபினா, பி.எஸ்., சுற்றுச் சூழலியல் கல்வி, ப.1)

சூழ்நிலை இயல்

சூழ்நிலை இயல் பற்றி, "சுற்றுச் சூழல் சார்ந்த அறிவியலைச் சூழலியல் (Ecology) என்று குறிப்பிடலாம். Ecology என்ற வார்த்தை oikos என்றால் வீடு என்றும் logos என்றால் அதைப் பற்றி அறிவது என்றும் புரிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது. (சுசிலா அப்பாத்துரை, சுற்றுச் சூழல் கல்வி, ப.1)

கம்பராமாயணத்தில் நீர் மேலாண்மை

காவிரி ஆற்றின் நீர் மேலாண்மையையும், சரயுநதியின் மேலாண்மையையும் கம்பர் பாடியுள்ளார். சரயுநதியின் சிறப்பு குறித்துக் கூறும்போது சூரியத் குலத்தில் தோன்றிய எண்ண முடியாமல் பல அரசர்களது, பிறர் போற்றுவதற்குரிய நல்ல ஒழுக்கத்தின் இடையறாத தன்மையைத் தன்னிடம் கொண்டிருக்கும், அவ்வெள்ளத்தால் அமைந்த சரயு என்னும் ஆறு கடலால் சூழப்பட்ட இந்த உலகத்து உயிர்களுக்கு எல்லாம் தாய்முலை போலப் பலன் அளிப்பதாகும்.

“சரயு என்பது தாய்முலை அன்னது இவ்
உரவு நீள் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்”
(ஆற்றுப்படலம் 24)

ஆற்றில் அதிகமாகத் தண்ணீர் வருவதைப் பல வாய்க்கால்களாகப் பிரித்து, சோலைகள், தடாகங்கள், வயல்களில் நிறைத்து மீதமான நீர் கடலில் கலப்பதாகக் கூறுகிறார்.

முல்லை நிலத்தைக் குறிஞ்சி நிலமாகச் செய்தும், மருத நிலத்தை முல்லை நிலமாகச் செய்தும், அற்பப் பலனை அளிக்கும் நெய்தல் நிலத்தை நிகரற்ற பயனளிக்கும் மருத நிலமாகச் செய்தும், இவ்வாறு அந்தந்த நிலங்களில் உள்ள பொருள்களை எல்லாம் தத்தம் நிலங்களை விட்டு வேறு நிலங்களுக்கு செல்வதற்குக் காரணமான தன்மையால் உயிர்கள் பிறக்குமாறு செல்கின்ற தேவர், மனிதர், விலங்கு, தாவரம் எனும் நான்கு வகையான கதிகளில் ஒன்று மற்றொன்றாக மாறிப் பிறக்கும்படி செய்ய அவ்வுயிர்களைத் தொடர்ந்து போகின்ற பாவம், புண்ணியம் எனும் இரு வினைகளைப் போல அந்த வெள்ளம் சென்றது.

“முல்லையைக் குறுஞ்சியாக்கி மருதத்தை முல்லை ஆக்கி
புல்லிய நெய்தல் தன்னைப் பொருஅரு மருதம் ஆக்கி
எல்லைஇல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால்
செல்லுறு கதியில் செல்லும் வினை எனச் சென்றது அன்றே”
(ஆற்றுப்படலம் 29)

பெருமரங்கள், குறுமரங்கள், செடிகள், புதர்கள், புல்வெளிகள் கொண்ட காடுகள் மழைநீரைத் தக்கவைத்துக் கொள்ளும். இயற்கை வர்ணனையாக காடுகள், சோலைகள், தடாகங்கள் போன்றவைகளைப் பற்றியும் பாடியுள்ளார்.

“தாகுஉகு சோலைதோறும் சண்பகக் காவுதோறும்
போதுஅவிழ் பொய்கைதோறும் புதுமணல் தடங்கள்தோறும்
மாதவி வேலிப் பூகவனம்தோறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்புதோறும் உயிர் என உலாயது அன்றே”
(ஆற்றுப்படலம் 32)

கம்பராமாயணத்தில் இயற்கை வளத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தையும் பாடியுள்ளார். நிலம், நீர், காற்று, ஆகாயம் குறித்த மாசுபாடுகள் குறித்தும் இரைச்சல் மாசுபாடு குறித்தும் கம்பரே தம் இராமாயணத்தில் பாடியுள்ளார்.

1.நிலமாசுபாடு

இலங்கை எரியூட்டு படலத்தில் கல்லைக் காட்டிலும் வலிமையான புகை தொகையால் தேவலோகமும் இருளைப் பெற்றது. கொடி கட்டப்பட்ட உயரமான தேர்கள் யாவும் பெரிய மணிகள் பதிக்கப்பட்ட சக்கரங்களுடனே எரிந்து உறுப்புகள் தெரியாமல், ஒரே தொகுதியாய் திரண்டு விட்டன. (இலங்கை எரியூட்டு படலம் 1195)

இலங்கை எரியூட்டு படலத்தின் அனுமன் அரக்கர்களை அடித்து சிதைக்க அரக்கர்கள் துன்புற்றார்கள். அவர்களுடைய உடம்புகளில் இருந்து பெருகிய ரத்தத்தால் நிலம் சேராகும் படியும், எரித்த சிவந்த நெருப்பு தணியும்படியாகவும் ஆறாய்ப் பெருகி ஓடியது.

“நூறிட மாருதி நொந்தார்
ஊறிட ஊன் இடு புண்ணீர்
சேறுஇட ஊர் அடு செந்தீ
ஆறிட ஓடினது ஆறாய்”
(இலங்கை எரியூட்டு படலம் 1238)

கடல் தாவு படலத்தில் ஆகாயத்தில் செல்லும் அனுமனின் தோற்றம் குறித்து கூறும்போது, நட்சத்திரங்கள் மேகங்களைக் கிழித்துக்கொண்டு கீழே உதிரவும், கடல் பொங்கி எழுவும், வானம் குழையவும், திசைகள் வெடிக்கவும், மேருமலை நடுங்கவும், மற்ற மலைகள் சாயவும், விரைந்து செல்லும் அனுமன் உலகம் அழியும் இறுதி காலத்தில் அனைத்தும் அழியும் படியான வேகத்தோடு வீசுகின்ற தன் தந்தையான வாயு தேவனை ஒத்தவனானான். (கடல் தாவு படலம் 27)

பிரம்மாத்திரம்

பிரம்மாத்திரம் என்பது இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வீக ஆயுதத்தை ஏவுவதற்கான ஒரு மந்திரமாகும்.இது அணு ஆயுதத்திற்குச் சமமான ஆற்றல் கொண்டது. பிரம்மாத்திரம் பிரம்மாவின் அத்திரமாகும். இலக்கை மொத்தமாக அழிக்கும் வலிமை கொண்டது. வேறு எத்தகைய அத்திரத்தையும் எதிர்க்கும் வலிமை கொண்டது.தேவர்களையும் அழிக்கும் வலிமை கொண்டது. இது அழிவைத்தரவல்லது.

பிரம்மாத்திரத்தின் தன்மை

இது ஒரு மந்திரத்தால் இயக்கப்படும். அணு ஆயுதத்தைப் போன்ற சக்தியைக் கொண்ட ஆயுதம் ஆகும்.இதை ஒரு எளிய அம்பு அல்லது புல் போன்ற சாதாரண பொருளின் மூலமும் ஏவ முடியும். மந்திரத்தால் அதற்கு சக்தியூட்டலாம்.இதை இயக்கும்போது, பெரும் தீப்பிழம்புகள் தோன்றும். நிலத்தில் வெடிப்புகள் ஏற்படும். கடுமையான வறட்சி உண்டாகும்.

பயன்பாடுகளும் விளைவுகளும்

இதைக் கடைசி ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஏனெனில் இது எதிரிகளை அழிப்பதுடன் பெரிய பகுதியையும் அழிக்கும் திறன் கொண்டது. இரண்டு பிரம்மாத்திரம் மோதினால் அது பிரளயத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கம்பராமாயணத்தில் பிரம்மாத்திரம்

இலட்சுமணன், இந்திரசித்தனை பிரம்மாத்திரத்தால் கொல்ல முயன்றபோது, இராமன் அதைத் தடுத்தான்.ஏனெனில் அது மூன்று உலகத்தையும் அழிக்கும் ஆற்றல் பெற்றது என்பதால் அதை ஏவ வேண்டாம் என்று அறிவுறுத்தினான்.நல்லறிவு உள்ள தம்பி அதனை ஏற்று, பிரம்மாத்திரம் செலுத்துவதை நிறுத்தினான்.

ஆனால் இந்திரசித்தனோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இலட்சுமணன் மேல் பிரம்மாத்திரத்தை விடுத்தான்.அனுமன் மேல் பிரம்மாத்திரத்தை விடுத்தான் என்பதை நாம் கம்பராமாயணத்தின் மூலம் அறியமுடிகிறது. (லிங்க்; இந்திரசித் மாட்சியும் வீழ்ச்சியும்)

2.நீர் மாசுபாடு

இலங்கை எரியூட்டு படலத்தில் இலங்கைக்கு அனுமன் வைத்த தீயினால் அத்தீயிலிருந்து சிதறி மேலே செல்வனவாகிய பெரிய நெருப்புப் பொறிகள் கீழே வீழ்வனவாகி, இடிக் கூட்டங்கள் போல எல்லா இடத்திலும் வெடித்தன. அத்தீப்பொறிகளைப் பெற்ற கடல் கொதித்தது. அதிலிருந்த மீன்கள், மீன் கூட்டங்கள் துடித்து உயிர் ஒடுங்கின. (இலங்கை எரியூட்டு படலம் 1192)

அனுமன் கடலைத் தாவிச்சென்ற போது அவன் உடம்பிலிருந்து வீசிய காற்றால் திசைகளில் எல்லை வரையில் பரவி இருக்கும் கடல்கள் முழுவதும் கலங்கியது. அதனால் பல யோசனை தூரம் நீண்ட உடம்பினைப் பெற்றனர் என்று மக்களும் நூல்களும் சொல்லும் திமிங்கிலங்களும் மற்றும் உள்ள மீன்களும் இறந்து மிதந்தன. திமிங்கலத்தை விழுங்குவது திமிங்கிலங்கிலம் (கடல் தாவு படலம் 37)

இராவணன் மந்திரப்படலத்தில் ஏற்கனவே அனுமன் இலங்கைக்கு தீ வைத்ததால் ஊரே எரிந்தது. அங்குள்ள கிணறுகளில் நீர் சுரப்பதற்குப் பதில் இரத்தம் சுரக்கின்றது. இந்நகரத்தில் இடப்பட்ட தீ இன்னும் அடங்கவில்லை. அகில் புகையும், நாவியும் பொருந்தப்பெற்ற மங்கையரின் நறுமணக் கூந்தலிலிருந்து தீப்பற்றிய நாற்றம் எங்கும் வீசுகின்றது.இங்ஙனமாகவும் நாம் எல்லாம் உண்டு, உடுத்தி இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்று இராவணன் கூறினான்.

"ஊறுகின்றன கிணறு உதிரம் ஒண்ணகர்
ஆறுகின்றிலது அழல் அகிலும் நாவியும்"
(இராவணன் மந்திரப்படலம் 24)

3.கடல் நீர் மாசுபாடு

எதையும் பருகும் நெருப்பு நிறைந்து உள்ளளவும் சென்று எரிந்ததால் மாளிகைகளில் உள்ள பொன்னாலான பொருள்கள் உருகி ஓடி, கடல் நடுவில் புகுந்தன. கடல் நீர் பட்டதால் உருகிய பொன், கருகி நீண்ட பெரிய தண்டுகளாய் திரண்டு விளங்கின. (இலங்கை எரியூட்டு படலம் 1193)

சாப மொழிகளைப் போல விரைவாக உலகை உண்கின்ற நெருப்பு அது. மலைபோலும் நிமிர்ந்து நின்ற மணிகள் பதித்த மாளிகைகளும், வரிசையாக நிற்கும் சோலைகளும், அந்த நெருப்பால் எரிக்கப்பட்ட பின்பு நிற்குமோ கருகி சரிந்து விட்டன. தரையும் பொன்னாக இருந்ததால் அதுவும் வெந்து உருகி ஓடிவிட்டது.

“உரையின் முந்து உலகு உண்ணும் எரி அதால்
வரை நிவந்தன பல் மணி மாளிகை
நிரையும் நீள் நெடுஞ் சோலையும் நிற்குமோ
தரையும் வெந்தது பொன் எனும் தன்மையால்”
(இலங்கை எரியூட்டு படலம் 1194)

கடல்தாவு படலத்தில் ஊழிகாலத்துக் காற்றைப்போல அனுமன் செல்லும் வேகத்தைத் தாங்க முடியாமல், அதற்கு முன் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்த முதலைகளும், மீன்களும் இப்போது துள்ளுதல் ஒழிந்தன. சுறாமீன்கள் வேதனையால் தத்தளித்தன. பனை மீன்கள் இறந்தன. இவற்றைப் பெற்ற கடல் கலங்கி வீசியெறிந்த அலைகள், அனுமனுக்கு முன்பே இலங்கை நகரத்தின் மேல் மோதின.(கடல்தாவு படலம் 22)

4.ஆகாய மாசுபாடு

மாதர்கள் வருந்திய பான்மை பற்றி கூறும் போது மங்கையர்கள் நெடுந்தூரம் பரவிய புகை வானத்தை மறைத்துக் கொண்டதால், தான் போன திசை என்னது என்று அறியாமல் வாய் விட்டு அழுதார்கள்.

“வானத்தை நெடும் புகை மாய்த்தலால்
போன திக்கு அறியாது புலம்பினார்
தேன் அகத்த மலர் பல சிந்திய
கானகத்து மயில் அன்ன காட்சியர்”
(இலங்கை எரியூட்டு படலம் 1186)

மேக கூட்டங்கள் தான் பருகிய நீர் முழுவதும் அற்றுப் போகும்படி பெரிய மலைகளின் சிகரங்களில் எல்லாம் பெய்து மீண்டும் கடலில் இருந்த நீரை முகப்பதற்காகச் சென்றன. அவ்வாறு பூளைப்பூவைப் போல வெண்ணிறமாக சென்ற மேகங்கள் இலங்கையில் இருந்து எழுந்த கொடும் புகை முற்றிலும் சுற்றிக்கொள்ள செல்லும் வழி அறியாமல் வானிலே சுற்றித் திரிந்தன. (இலங்கை எரியூட்டு படலம் 1213)

மிகுதியான வெப்பம் கொண்ட புகை எல்லா உலகையும் சூழ்ந்து கொண்டதால், வெள்ளியங்கிரியான கயிலை மலை மற்ற மலைகளைப் போலக் கருநிறம் பெற்றது. வெள்ளைஅன்னங்களும், கருப்புக் காக்கைகளின் உருவம் அடைந்தன. பாற்கடல் மற்ற கடல்களைப் போலக் கருமை உற்றது. திசையின் எல்லையில் உள்ள திக்கு யானைகளும் மற்றைய யானைகளும் நிறத்தால் வேற்றுமை தெரியாதவை ஆயின. (இலங்கை எரியூட்டு படலம் 1214)

நாட்டுப்படலத்தில் அயோத்தியில் பல்வேறு புகைகள் எங்கும் விளங்கின என்று கூறும்போது பெண்கள் கூந்தலுக்கு இடும் அகிலின் புகையும், சமையல் கூடங்களில் உண்டாகும் புகையும், விளங்குகின்ற கரும்பு ஆலைகளில் உண்டாகும் வாசம் மிகுந்த புகையும், நான்கு வேதங்களைச் சொல்லுகின்ற வேள்வியில் உண்டாகும் புகையும் கலந்து மேகங்களைப் போல் எல்லா இடங்களிலும் விளங்கின.

“அகில் இடும் புகை அட்டில் இடும் புகை
நகல் இன் ஆலை நறும் புகை நான்மறை
புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும்”
(நாட்டுப்படலம் 73)

இப்பாடலில் ஆலையிலிருந்து வரும் புகை நறும்புகை என்று கூறப்படுவதால் இடர் தரும் புகையை ஆலையிலேயே சுத்தம் செய்து பின்பே வெளியில் காற்றில் கலக்குமாறு செய்துள்ளனர் என்பது பெறப்படுகிறது. இந்த வகையான நல்ல புகையால் சுற்றுச்சூழல் மாசுபடாது.

காற்று மாசுபாடு

இலங்கை எரியூட்டு படலத்தில் அரக்கர்கள் உற்ற அவலம் குறித்து கூறும்போது, எமனைத் தூக்கி விழுங்கும் ஆற்றல் பெற்ற அரக்கர் தீயில் இருந்து தப்ப வானுலகத்துக்கு மேலேறி செல்லும்போது நீண்ட புகையின் கொழுந்தாகிய நுனி தம்மைச் சூழ்ந்து கொள்ள அதனால் மூச்சு விட முடியாதவர்களாகி அப்புகையால் பற்றப்பட்டு அதிலே அழுத்தி மயக்கம் அடைந்து அங்கிருந்து கீழே உள்ள நெருப்பிலே விழுந்து இறந்தனர். (இலங்கை எரியூட்டு படலம் 1206)

இலங்கை எரியூட்டு படலத்தில் முதலில் ஒரு வாமன வடிவாய் சென்று மாவலி தனக்குக் கொடுக்க, மூவுலகங்களையும் தன் அடிகளால் தாவி அளந்து கொள்ளும் பொருட்டு, வேறொருவம் கொண்டு ஓங்கி வளர்ந்த கரிய நிறமுடைய திருமாலின் திருமேனி போல வெம் புகையானது மேல் எழுந்து எங்கும் சென்று பரவியது. (இலங்கை எரியூட்டு படலம் 1189)

காடு அழிப்பு

மலர்கள் கரிந்து, தளிர்கள் பொறியாகி சிதற, இலைகளாகிய நாவும் கரிந்து சிறிய கிளைகள் சாம்பலாகி, மேலுள்ள பொருட்கள் யாவும் இவ்வாறு கரிந்து நீண்ட பருத்த வேர்களும் கரிந்து போக சோலைகள் முற்றிலும் கரியாய் கருகிப் போயின. (இலங்கை எரியூட்டு படலம் 1201)

நந்தவனங்கள் அழிந்த காட்சி பற்றி கூறும் போது ஊழியின் இறுதி காலத்தில் தோன்றும் என்று கூறப்படும் காலாக்கினி என்னும் கொடிய நெருப்பு உண்டு வற்ற செய்யும் மீன் முதலிய நிறைந்த கடல்கள் போல அங்கிருந்த நந்தவனங்கள், அகில் மரங்கள், நறுமணம் மிகுந்த சந்தன மரங்கள் முதலிய குற்றமற்ற பல மரங்களில் பொருந்திய நறுமணம் உலகம் முழுவதையும் சூழ்ந்து கமழ எரிந்து அழிந்தன.

“அகருவும் நறுஞ்சாந்தமும் முதலிய அனேகம்
புகர்இல்நல் மரத்து உறுவெறி உலகுஎலாம் போர்ப்பப்
பகரும் ஊழியில் காலவெங் கடுங்கனல் பருகும்
மகர வேலையின் வெந்தன நந்தவனங்கள்”
(இலங்கை எரியூட்டு படலம் 1211)

இரைச்சல் மாசுபாடு

நகரப்படலத்தில் சங்குகளின் ஒலி, ஊது கொம்புகளின் ஒலி, மகர வீணைகளிலிருந்து பெருகும் ஒலி, மத்தளங்களின் ஒலி, கின்னரம் என்னும் இசைக்கருவிகளின் ஒலி, குழல் முதலிய துளைக்கருவிகளின் ஒலி, மற்றுமுள்ள பல்வகை இசைக்கருவிகளின் ஒலி ஆகிய இவ்வொலிகளின் பெருமுழக்கம், கடல் ஒலி சிறப்பற்றுத் தாழ்வுறும்படி எங்கும் நிறைந்திருக்கும்.

“வளை ஒலி வயிர் ஒலி மகரவீணையின்
கிளை ஒலி முழவு ஒலி கின்னரத்து ஒலி
துளை ஒலி பல் இயம் துவைக்கும் சும்மையின்
விளை ஒலி கடல் ஒலி மெலிய விம்முமே”
(நகரப்படலம் 154)

திரு அவதாரப்படலத்தில் கலைக்கோட்டு முனிவனை அழைத்து வரச் சென்ற போது காகளம் என்னும் இசைக்கருவியும், இன்னும் பல்வேறு இசைக்கருவிகளும், ஒலிக்கும் கடலைக்காட்டிலும் மிக அதிகமாக முழங்கவும், அமர்ந்து பாடும் மாகதர்கள் பாடவும், அரிய முறையறிந்த அந்தணர்கள் வாழ்த்து வழங்கவும், இனிமையும், செந்நிறமும் இணைந்தவாயினை உடைய வனிதையர்கள் பல்லாண்டு பாடவும், கடல் போன்ற படை சூழ்ந்து வரவும், தசரதன் சூரியனைப் போலச் சென்று, அரிய வழிகளைக் கடந்து, உரோமபாதனின் அழகிய அங்க நாட்டை அடைந்தான். ( திரு அவதாரப்படலம் 237)

வில்லின் ஒலி கேட்ட தொலைவு

கம்பராமாயணத்தில் இராமன் வளைத்த வில்லின் ஒலி தசரதனின் அயோத்திக்கும், பரசுராமர் தவம் செய்து கொண்டிருந்த மகேந்திர மலைக்கும், இலங்கையிலும் வானத்தில் தேவர்களுக்கும் கேட்டது என்ற செய்தி காணப்படுகிறது.அவ்வளவு தொலைவில் உள்ள இடம் வரையிலும் ஒலி கேட்டது என்றால், அது இரைச்சல் மாசுபாடாகத்தான் இருந்திருக்கும். லிங்க்; இராமன் வளைத்த வில்லும் வில்லின் ஒலி கேட்ட தொலைவும் )

எழுச்சிப்படலத்தில் தானை சென்ற தோற்றம் குறித்துக் கூறும்போது, சங்குகளும், முரசுகளும் மேகத்தின் முழக்கத்தைப் போல முழங்கி வரும் சேனையிலே அழகிய-அகன்ற இந்த அவனியின் அரசர்கள் பலரும் வந்து கூடினார்கள். அவ்வரசர்களின் விரிந்த வெண்கொற்றக்குடைகளும், வீசும் வெண்சாமரைகளும் படைக்கு மேலே நிறைந்திருப்பதால் அச்சேனை வெண்ணுரை நிறைந்த கங்கை ஆற்றை ஒத்திருந்தது. (எழுச்சிப்படலம் 707)

எழுச்சிப் படலத்தில் சங்கு, வேங்குழல், ஊது கொம்பு, தாளம், எக்காளம், மங்கலமான பேரிகை ஆகியவற்றின் பேரொலி மேகத்தின் முழக்கமான இடி ஒலியை வென்றது. பூச்சர தொங்கல்களும், பட்டுக்குடைகளும் மயிர் பீலி குடைகளும், சூரியனது வெயிலை விரட்டியடித்தன. அங்குள்ள வெண்கொற்றக் குடையைக் கொண்டு இங்கு, தான் ஒப்பாக அமையால் சந்திரன் வெட்கமடைந்து விலகிப் போனான். இவ்வாறான சிறப்புகளுடன் தேவர்களும் மருட்சியடையும் படியாக தசரதன் சென்றான். இந்திரனைப் போலப் பெருஞ்செல்வம் பெற்ற தசரதன், இவ்வாறு புறப்பட்டுப் போகும்போது வேத மந்திர கீதங்களின் ஓசை, வலம்புரி சங்குகள் முழங்கும் ஓசை, அந்தணர்களின் வாழ்ந்தொலி, ஆரவாரிக்கும் முரசொலி, கட்டுத்தறியை முறிக்கும் யானைகளின் பிளிறும் பேரொளி, அரசனுக்கு நாழிகை அறிவிக்கும் கடிகைமார்கள் நேரத்தை அறிவிக்கப் பாடும் பாடல் ஒலி ஆகியன எட்டு திசைகளிலும் எழுந்தன.

“மந்திர கீதஓதை வலம்புரி முழங்கும் ஓசை
அந்தணர் ஆசிஓதை ஆர்த்து ஏழு முரசின் ஓதை
கந்து கொள் களிற்றின் ஓதை கடிகையர் கவியின் ஓதை
இந்திரதிருவன் செல்ல எழுந்தன திசைகள் எல்லாம்”
(எழுச்சிப் படலம் 758)

வரைக் காட்சிப் படலத்தில் பல்வேறு ஒலிகள் கேட்கின்றன என்பதனை அந்த மலையில் இருந்து புதிதாக பிடித்த யானைகளைக் கட்டிப் போடுபவர்கள் தாமே சொந்தமாகக் கட்டிய பாடலைப் பாடுகின்ற ஓசை, கள் குடித்த ஆடவர் பெண்களிடம் காமக்குறிப்போடு குழறிப் பேசும் ஓசை, வேசிகளிடம் அல்குலில் அணிந்து கொண்ட மேகலாபரணம், காமப் போரிலே எழுப்பும் ஓசை, மத வெறி கொண்ட யானைகள் மதக்களிப்பினால் வீறிட்டுப் பிளிரும் ஓசை ஆகியன அப்பாடி நகரில் எழுந்தன (வரைக்காட்சிப் படலம் 837)

முதற் போர் புரிபடலத்தில் ஒலி

இராவணன் வில் நாண் ஒலி கேட்டு வானரங்கள் அஞ்சி நடுங்கின. தேவரும் அஞ்சுமாறு இராவணன் தன் கொடிய கண்களில் இருந்து தீப்பொறி பறக்க வில்லின்நாணை செவ்விய முறையில் அணிந்த தோலுறை மூடிய கையால் தெறித்தான். அவ்வளவில் குரங்கினங்கள் சிதறி பக்கத்தில் எல்லா இடங்களிலும் நிலைக்கெட்டு சிதறி ஓடின.

“அவ்வழி இராவணன் அமரர் அஞ்சத்தன்
வெவ்விழி நெருப்புக வில்லின் நாணினைச்
செய்வழிக் கோதையின் தெறிக்கச் சிந்தின
எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம்”
(முதல் போர் புரி படலம் 1080)

இடியானது இடிக்கும் போது வருந்தி ஒளிந்து கொள்ளும் பாம்பைப் போன்று, சில வானரங்கள் நிலைகுலைந்து ஓடின. சில வானரங்கள் மடிந்தன. சில வானரங்கள் அச்சம் கொண்டன. சில வானரங்கள் அழுதன. சில வானரங்கள் போர் செய்யும் களத்தில் உயிருடனே புரண்டு போயின. (முதல் போர் புரி படலம் 1081)

கரனுடைய சேனை இராமன் இருப்பிடம் அடைதல் பேரிகைகளின் முழக்கத்தால் ஆகாயத்தில் உள்ள மேகக் கூட்டம் நடுக்கம் கொள்ளவும், நீண்ட வில்களின் நாண்ஒலியினால் இடிகள் யாவும் அஞ்சி கலக்கம் அடையவும், படைகளின் ஆரவாரத்தால் கடல் அஞ்சித் தளர்ச்சிஎய்தவும். அரக்கர் சேனை போரிடுவதை விரும்பி இருந்த வீரரான இராமலக்ஷ்மணர் தங்கி இருந்த இடத்தை அடைந்தது. (கரன் வதைப்படலம் 416)

பேராரவாரம்

எதிர்கொள் படலத்தில் சனகன், தசரதனை எதிர் கொண்டு அழைத்தான். மிதிலை நோக்கி வருகின்ற சேனையோடு மேன்மேலும் பெருகுகின்ற களிப்பை உடைய சனக சேனை வந்து கலந்தபோது எல்லையில்லாப் பேரொலியோடு அலை வீசும் கடலோடு, ஓர் ஆறு பாய்ந்து கலக்கும்போது உண்டாகும் ஓசைபோலப் பேராரவாரம் தோன்றியது..(எதிர்கொள் படலம் 992)

இராமன், சீதை திருமணத்தின்போது மங்கல முரசங்கள் முழங்கின. சங்குகள் ஒலித்தன. நான்கு வேதங்களிலும் நாதங்கள் நிறைந்தன. தேவர்கள் ஆரவாரித்தனர். பல்வேறு கலைகள் ஆரவாரித்தன. பல்லாண்டு பாடல்கள் ஒலித்தன.வண்டுக்கூட்டங்கள் ஆரவாரம் செய்தன. கடல்களும் ஆரவாரம் செய்தன .(கடிமணப்படலம் 1199)

முடிவுரை

"சுற்றுச் சூழல் (Environment) என்பதன் பொருள் சுற்றிலும் உள்ளவை என்பதாகும். (Environment means Surroundings). பிரஞ்சு மொழியின் என்விரான் என்ற சொல்லிலிருந்தே என்விரான்மென்ட் (Environment) என்ற பெயர் வந்தது.

கம்பராமாயணத்தில் இயற்கை வளத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தையும் பாடியுள்ளார். நிலம், நீர், காற்று, ஆகாயம் குறித்த மாசுபாடுகள் குறித்தும் இரைச்சல் மாசுபாடு குறித்தும் கம்பரே தம் இராமாயணத்தில் பாடியுள்ளதையும் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1.இராம சுப்பிரமணியன்.வ.த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
2.இளம்பூரணர் உரை, தொல்காப்பியம்-பொருளதிகாரம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை, 1953
3.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்