
இலக்கியவாதியும் ஊடகவியலாளருமான நிலாந்தன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து முன்னாள் ஆசிரியரும், தன்னலமற்ற தொழிற்சங்கவாதியுமான சிவராசா மாஸ்டர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை படித்தேன்.
அதனைப்படித்தவேளையில் சிவராசா மாஸ்டர் அவர்களுடனான முதல் சந்திப்பும், அவருடனான தொடர்பாடல்களும்தான் நினைவுக்கு வந்தது. அவர் குறித்த அஞ்சலியுடன், இந்த நனவிடைதோய்தற் குறிப்புகளை எழுதுகின்றேன்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஆயுதக்கிளர்ச்சி நடந்தது. அக்காலப்பகுதியில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – கலாநிதி என். எம். பெரேரா மற்றும் பீட்டர் கெனமன் ஆகியோர் தலைமை தாங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சமசமாஜக்கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்த கூட்டணி அரசு பதவியிலிருந்தது.
ஆயுதம் ஏந்திய இயக்கமாக ஜனதா விமுக்தி பெரமுன உருவாகி, அதில் அங்கம் வகித்த ஏராளமான சிங்கள இளைஞர்களினால், அந்த கிளர்ச்சி எழுச்சிகொண்டது. எனினும் அரசின் அடக்குமுறையினால் அந்தப்போராட்டம் முறியடிக்கப்பட்டு, பலர்கொல்லப்பட்டனர், மேலும் பலர் சிறைவைக்கப்பட்டனர். கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் வெலிக்கடை, போகம்பர, மகஸின், அநுராதபுரம், யாழ்ப்பாணம், உட்பட பல பிரதேசங்களில் அமைந்திருந்த சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் கொழும்பில் நீதியரசர் அலஸ் தலைமையில் குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நடைபெற்றது. அக்காலப்பகுதியில் இலங்கை ஊடகங்களில் அந்த விசாரணைகள் தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. இன்று போல், அக்காலப்பகுதியில் உடனுக்குடன் செய்திகளை படிப்பதற்கான ஊடக சாதனங்கள் இருக்கவில்லை.
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடெங்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு கூட்டங்களும் நடந்தன. இந்த இயக்கம் கொழும்பு மலே வீதியில் அப்போது அமைந்திருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிமனையிலிருந்து தொடங்கியது. தோழர் லீனஸ் திஸாநாயக்கா இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ஆசிரியர் சங்கத்தின் தலைவராக தோழர் எச். என். பெர்னாண்டோ, செயலாளாராக தோழர் சித்ரால் ஆகியார் இயங்கினர். இச்சங்கத்திலிருந்து, சிங்களத்தில் குரு ஹண்ட , தமிழில் ஆசிரியர் குரல் , ஆங்கிலத்தில் Teachers Voice ஆகிய பத்திரிகைகள் வெளிவந்தன.
ஆசிரியர் குரல் ஏட்டின் ஆசிரியர் குழுவில் கொழும்பு விவேகானந்தா கல்லூரி ஆசிரியரும், கம்யூனிஸ்ட் கட்சித்தோழருமான ஸி. மாணிக்கவாசகர் என்னை இணைத்துவிட்டார். இவர் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவரான ஸி. குமாரசாமியின் தம்பியாவார். அக்காலப்பகுதியில் விவேகானந்தா கல்லூரியில் மாலை நேர வகுப்புகளுக்கு அதிபராக பணியாற்றியவர்தான் சிவராசா மாஸ்டர்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபை உறுப்பினராக இணைந்திருந்த எனக்கு அறிமுகமானவர்தான் சிவராசா மாஸ்டர். புன்னகை பூத்த முகம். அமைதியாக அர்த்தமுடன் பேசும் இயல்புகொண்டவர். மாணவர்களை ஒரு தந்தையின் பரிவோடு அரவணைத்து பாடங்களை சொல்லிக்கொடுத்தவர். பல மாணவர்களை தமது வீட்டுக்கு அழைத்து பாடம் சொல்லிக்கொடுப்பார்
எழுத்தாளர் சங்கம், கூட்டுறவுப்பதிப்பகத்தையும், அதற்கென ஒரு வாசகர் வட்டத்தையும் உருவாக்கியிருந்தது. இந்த இரண்டு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கனை திரட்டும் பணிகளிலும் அவர் ஈடுட்டார். எழுத்தாளர்கள் காவலூர் இராசதுரை, ஐ. சாந்தன், மேமன்கவி ஆகியோரின் நூல்களை எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம் வெளியிட்டது. சிவராசா மாஸ்டர் அதிலும் இணைந்திருந்தார். அத்துடன் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற இயக்கத்தின் செயற்பாடுகளிலும் ஈடுபட்டார். ஹல்ஸ்டொப்பில் இருந்த சட்டத்தரணி துரைசிங்கம் அவர்களின் இல்லத்தில் வாராந்தம் நடைபெறும் அரசியல் வகுப்புகளிலும் கலந்துகொள்வார்.
அவரது இயல்புகள் நெஞ்சத்திற்கு நெருக்கமானவை. கொழும்பில் நடைபெறும் மாதாந்த இலக்கிய சந்திப்புகளிலும் அவர் ஆர்வமுடன் கலந்துகொள்வார். 1976 ஆம் ஆண்டு நாடாவிய ரீதியில் நடந்த பொது வேலைநிறுத்தத்திலும் அவர் கலந்துகொண்டமையால், தமது வேலையையும் இழந்தவர்.
1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அரசு, குற்றவியல் நீதி ஆணைக்குழுவை இரத்துச்செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்தது. அதனால், ஜே.வி. பி. என்ற மக்கள் விடுதலை முன்னணி, மீண்டும் எழுச்சிகொண்டது. எனினும் அந்த எழுச்சியை பொறுக்கமாட்டாத ஜே. ஆரின் அரசு 1983 இனக்கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியே பொறுப்பு என்று குற்றம் சுமத்தி அவ்வியக்கத்தை தடைசெய்தது.
ரோகண விஜேவீரா உட்பட பல தோழர்கள் மீண்டும் தலைமறைவானார்கள். தோழர் லயனல் போப்பகே கைதாகி தடுத்துவைக்கப்பட்டார். ரோகண விஜேவீராவின் மனைவி, ஶ்ரீமதி, இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவர் எச். என். பெர்னாண்டோவின் தங்கையாவார். அதனால், எச். என். பெர்னாண்டோவும் அரசினால் தேடப்பட்டார். அவ்வேளையில் இவர் யாழ்ப்பாணத்தில் தலைமறைவாக வாழநேரிட்டது. இவரை அங்கு பாதுகாத்தவர்தான் சிவராசா மாஸ்டர்.
எச். என் பெர்னாண்டோ உடல்நலம் குன்றியிருந்த வேளைகளில் இவரது தேவைகளை ஒரு உடன்பிறந்த சகோதரன்போன்று கவனித்தவர் சிவராசா மாஸ்டர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் மண்டபத்தில் 1986 ஆம் ஆண்டில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ள தீர்வைக்கோரி சில யோசனைகளை முன்வைத்து மாநாடு நடத்தியது.
இம்மாநாட்டில் கவிஞர் புதுவை இரத்தினதுரை உட்பட பலரும் கலந்துகொண்டனர். சிவராசா மாஸ்டரும் பங்குபற்றினார். நல்லூர் நல்லை ஆதீனத்தில் மதிய உணவுவேளையின்போது எச். என் . பெர்னாண்டோவை அழைத்துவந்தார் சிவராசா மாஸ்டர். அதுநாள் வரையில் எச். என். பெர்னாண்டோ எங்கிருக்கிறார் என்ற தகவல் எம்மில் பலருக்கும் தெரியவில்லை. நீண்ட நாட்களின் பின்னரே எச். என். பெர்னாண்டோவை நான் அங்கு சந்தித்தேன். சிவராசா மாஸ்டர் தன்னை எவ்வாறு கவனித்துக்கொண்டார் என்று எச். என். பெர்னாண்டோ மிகுந்த நெகிழ்ச்சியோடு சொன்னார்.
2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் நாம் நான்கு நாட்கள் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடத்திய அனைத்துலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் சிவராசா மாஸ்டர் கலந்துகொண்டார். சிறந்த வாசகரான அவர், தமது வாசிப்பு அனுபவத்தை உரையாடல்களின் மூலம் எம்முடன் பகிர்ந்துகொள்வார்.
எளிமையாக உறவாடிய ஒரு சகோதரனை இழந்துவிட்ட துயரத்துடன் இந்த அஞ்சலிக்குறிப்பினை சமர்பிக்கும் அதே வேளையில் சிவராசா மஸ்டரின் குடும்பத்தினரின் துயரத்திலும் பங்கேற்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









