இரசனைக்குறிப்பு : Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு இலங்கை தேசிய இனப்பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை காண்பித்த நாடகம் ! - முருகபூபதி -
சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தைப் பேச வைப்பதும்தான் கலை, இலக்கியத்தின் பிரதான நோக்கமாக இருக்கும். இருக்கவும் வேண்டும். அந்தவகையில் அண்மையில் நான் மெல்பனில் பார்த்து, வியந்த Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு நாடகம், எங்கள் சமூகத்தைப் பேசியிருக்கிறது. எங்கள் சமூகம் எனச்சொல்லும்போது, இலங்கையில் வாழும் இரண்டு மொழிகளைப்பேசும் மூன்று சமூகத்தினதும் அரசியல் மயமாக்கப்பட்ட வாழ்கையை பேசியிருக்கிறது. அத்துடன் இனக்கலவரத்தால் தாயகம்விட்டு அவுஸ்திரேலியா வந்த ஒரு தமிழ்க்குடும்பத்தின் புகலிட வாழ்வுக்கோலத்தையும் தலைமுறை இடைவெளியினூடாக சித்திரிக்கிறது.
வாக்கு வங்கிக்காக மதம், மொழி, இனம் சார்ந்து அரசியல் நடத்தி, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு வளமான நாட்டை சீரழித்து குட்டிச்சுவராக்கியவர்கள் அரசியல்வாதிகள். மக்கள் பலிக்கடாவானார்கள். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சிக்குள் உருவான வாரிசு அரசியல், மற்றும் அதிகாரப் போட்டியினால், இக்கட்சியிலிருந்து வெளியேறிய எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா தொழிலாளிகள், விவசாயிகள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், பெளத்த பிக்குகளை இணைத்தவாறு , அதற்கு ஐம்பெரும் சக்திகள் ( பஞ்சமா பலவேகய ) எனப்பெயர் சூட்டிக்கொண்டு, தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்தார். 1956 ஆம் ஆண்டு அவர் சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காக தனிச்சிங்களச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்ததையடுத்து, பிரச்சினை உக்கிரமடைந்தது.