ஆய்வாளர் மன்னர் மன்னனின் திராவிடம் பற்றிய கருத்துகள் பற்றி..... - நந்திவர்மப்பல்லவன் -
- ஆய்வாளர் மன்னர் மன்னன் -
அண்மையில் யு டியூப் காணொளி ஒன்று பார்த்தேன். ஆய்வாளார் மன்னர் மன்னனுடையது. Saattai யு டியூப் சானலிலுள்ள நேர்காணல். இதனைத் தனது தர்க்கங்களுக்கு ஆதாரங்களாகக் காட்டும் தமிழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர் என் முகநூற் பதிவொன்றுக்கான எதிர்வினையாகப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=507VJQgMg68
சரி உதவிப் பேராசிரியர் பகிர்ந்திருக்கின்றாரே இவர் என்னதான் கூறுகின்றாரென்று பார்ப்போமே என்று பார்த்தேன். இதில் அவர் கூறிய பல கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. அவற்றைப் பட்டியலிடுகின்றேன்.
1. ஒற்றெழுத்து சொல்லுக்கு முதலில் வராது.
இக்கூற்று பொதுவாகச் சரியென்று பட்டாலும் , ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இதற்கெதிராகவும் தர்க்கிக்க முடியும். உதாரணத்துக்கு ஒரு வசனத்தை எடுப்போம். அது - நான் திரைப்படம் பார்த்தேன். இதன் முதலெழுத்து நா. நெடில். இவ்வசனத்தில் முதற் சொல்லான நான் என்பதைப் பிரித்து எழுதினால் அது எப்படி இருக்கும்? இப்படி இருக்கும் - ந்+ஆ+ன் . அதாவது நான் என்பதன் முதல் எழுத்து ந். இப்படிப்பார்த்தால் இவ்வசனத்தின் முதலெழுத்து ஒற்றெழுத்தில் ஆரம்பமாகின்றது எனத் தர்க்கரீதியாக வாதிடலாமல்லவா.
2. இரண்டாவது திராவிடம் என்பது வடமொழி. தாய் மொழிக்கு எப்படி அந்நிய மொழியில் பெயர் வைக்கலாம்? அப்படி யாராவது வைப்பார்களா?
இதற்கு என் பதில்: தமிழ் மொழியில் பல சொற்கள் பல திசைகளிலிருந்து வந்து சேர்ந்துள்ளன. அவ்வகையில் தமிழில் பல வட சொற்கள் அடங்கியுள்ளன. சுதந்திரம், சுந்தரம், பிரபாகரன், இப்படிப் பல. பலர் தம் குழந்தைகளுக்கு இவ்விதம் அந்நிய மொழியில் பெயர்களை வைக்கின்றார்கள். இதற்குக் காரணம் இம்மொழிச் சொற்கள் அவ்வளவுதூரம் தமிழில் கலந்துள்ளன. பாரதியாரின் கவிதைகள் பலவற்றில் வட சொற்கள் உள்ளன. உதாரணத்துக்கு வீர சுதந்திரம் வேண்டி நின்றார் என்னும் கவிதையினைக் கூறலாம்.
திராவிடம் என்னும் சொல்லை மேனாட்டு அறிஞரான கால்ட்வெல் தென்னிந்திய மொழிபேசும் மக்கள் அனைவரையும் குறிப்பதற்குப் பயன்படுத்தினாலும் , வடமொழியில் தமிழ் என்பதைக் குறிக்கவே பயன்பட்டது என்பர் தேவநேயப் பாவாணர் போன்ற மொழி அறிஞர் பலர். எனக்கும் அதில் உடன்பாடே.
மேலும் மன்னர் மன்னன் 17ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் யாராவது திராவிடம் என்னும் சொல்லைப்பாவித்துள்ளனரா என்று கேள்வி கேட்கின்றார். பின்னர் அதை மறந்து போய் வடமொழியில் திராவிடம் என்னும் சொல் பாவிக்கப்பட்டதையும் ஏற்றுக்கொள்கின்றார்.