வெலிகம ரிம்ஸா முஹம்மத் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைக் கற்கை நெறிக்காக ஆய்வு ஒன்றைச் செய்தார். அந்த ஆய்வை ஒரு சில மாற்றங்களோடு "விடியல்" என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். இந்த விடியல் என்ற நூலினையே இங்கே ஓர் எளிய மதிப்பீட்டிற்காக நான் எடுத்துக்கொள்கின்றேன். ஏனைய இலக்கிய வடிவங்களைப் போன்று ஆய்வுத் துறையானது தொடக்கம், வளர்ச்சி, உச்ச கட்டம், முடிவு போன்ற வளர்ச்சிப் படிமுறைகளைக் கொண்டதல்ல.
ஆய்வின் நோக்கம், ஆய்வின் பொருள், முன்னர் ஆய்வு செய்யப்பட்டதா? அப்படியாயின் மீள் ஆய்வு செய்யப்பட வேண்டியதன் அவசியம் என்ன? இத்தகைய ஆய்வின் மூலம் சொல்ல வரும் செய்தி என்ன? போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக ஒரு ஆய்வு இருக்க வேண்டும். ரிம்ஸா முஹம்மத் இளம் ஆய்வாளர், கவிஞர், பன்னூலாசிரியர், சஞ்சிகையாசிரியர், ஊடகவியலாளர் என்ற வகையில் மூத்த எழுத்தாளர் மூதூர் முகைதீனின் கவிதைகளைத் தனது ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்.
நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத், முதலாவது அத்தியாயத்தில், கவிதை பற்றிய அறிமுகத்தைத் தந்துவிட்டு தான் எடுத்துகொண்ட ஆய்வின் பிரச்சனைகள், ஆய்வின் வரையறை, உள்ளடக்கம் பற்றிக் கூறுகின்றார். இரண்டாவது அத்தியாயத்தில் கவிதையின் வரைவிலக்கணம், கவிதையின் வகைகள், மரபுக் கவிதைகள் நவீன கவிதைகள் பற்றியும் பேசுகிறார். மூன்றாவது அத்தியாயத்தில் கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களின் கவிதைத் தொகுப்புகள், அவர் பெற்ற விருதுகள், பரிசில்கள், கௌரவங்கள் பற்றி மிகச் சிறப்பான முறையில் எழுதிச் செல்லுகிறார். நான்காவது அத்தியாயத்தில் "பிட்டும் தேங்காய்ப் பூவும்", "இழந்துவிட்ட இன்பங்கள்", "ஒரு காலம் இருந்தது" ஆகிய 03 கவிதைத் தொகுதிகளிலுள்ள கவிதைகள் பற்றியும் மிகவும் சிறப்பான எடுத்துக் காட்டுகளோடு பதிவு செய்து விளக்குகிறார். ஐந்தாவது அத்தியாயத்தில் கவிதைகளின் சமூக கலாசார பங்களிப்புகள் பற்றியும், வாசகர்கள் மத்தியில் கவிதை நூல்களுக்கான வரவேற்புப் பற்றியும் தனக்கே உரித்தான பாணியில் கூறுகிறார்.