[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50
அன்பினிய "பதிவுகள்" ஆசிரியர் நண்பர் திரு.வ. ந.கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம். அண்மையில் - கடந்த 20,21,22 ஜனவரி -2004 தேதிகளில், சாகித்ய அகாதெமியின் சார்பில்,நெல்லை ம.சு.பல்கலையில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு ( Three Days Seminar on 'LITERARY CRITICISM' at MSU, Thirunelveli ) நடந்தது. ம.சு.பல்கலையின் ஆங்கிலத்துறைப் பேராசிரியரும், வானம்பாடிக் கவிஞரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக் குழுத் தலைவரும் ஆன முனைவர் பாலா (ஆர்.பாலச்சந்திரன்) அவர்களின் முன் முயற்சியில் கருத்தரங்கு வெகுசிறப்பாக நடந்தது.
பல்கலையின் துணைவேந்தர் திரு சொக்கலிங்கம் தலைமை தாங்க, தமிழ்த்துறைத் தலைவரும், அறியப்பட்ட தமிழறிஞருமான- 'அறியப்படாத தமிழகம்' முதலான நூல்களின் ஆசிரியர்- முனைவர் தொ.பரமசிவம் தொடக்கவுரையாற்றினார். அந்த மூன்று நாள்களிலும் தமிழறிஞர்கள்/ஆங்கில இலக்கிய விமர்சகர்கள்/ தமிழ் இலக்கிய முன்னோடிகள், பெரும் பேராசிரியர்கள் - (Senior Doctorates), நெல்லை, மதுரை, சென்னை, திருச்சி, கோவை, புதுவை மற்றும் திண்டுக்கல் காந்திகிராமம் ஆகிய 7 பல்கலைக் கழகங்களைச்சேர்ந்த சுமார் 36 மூத்த பேராசிரியர்கள் ஆய்வுரைகளை (Research Papers) முன்வைத்தனர். (இதில் நான் மட்டும்தான் பள்ளிக்கூட வாத்தியாருங்கோ!)
அந்த மூன்று நாள்களிலும் நெல்லை ப.க.வைச்சேர்ந்த -பல்வேறு கல்லூரிகளின் ஆங்கில மற்றும் தமிழ்த்துறை சார்ந்த- 60 பேராசிரியர்களுடன் அங்கேயே முதுகலை படிக்கும் சுமார் 60 மாணவர்களும் பார்வையாளர்களாக - விவாதங்களிலும் - கலந்துகொண்டனர். ஒவ்வொரு நாளும் இரண்டு வேளைகள், ஒவ்வொரு வேளையும் இரண்டு அமர்வுகள், ஒவ்வொரு அமர்விலும் ஒரு தலைவர், ஒரு பொருண்மை உரை(Key Note), + இரண்டு அல்லது மூன்று ஆய்வுரை, ஒரு கருத்துரை என, 5 அல்லது 6 பேர். எனும்படியாக,
1.கட்டமைப்பியம் , கட்டுடைப்பியம்,
2.புதுமையியம் , பின்னைப் புதுமையியம்,
3.மார்க்சியம் , பெண்ணியம் ,
4.காலனியம் , பின்னைக் காலனியம்,
5.நாடகம் - நாட்டார் இலக்கியம்,
6.தலித்தியம் , மறுகட்டமைப்பியம்
ஆகிய 6 அமர்வுகள் நடந்தன.