மரங்கொத்தி புத்தகங்கள் - நடேசன் -
அவுஸ்திரேலிய பத்திரிகையான த ஏஜ் (The Age ) வார இதழ் கலைப் பகுதியில் சினிமா மற்றும் புத்தகங்களின் விமர்சனங்கள் இடம்பெறும். அந்தப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் அதிக விற்பனையில் உள்ள புத்தகத்தின் பெயர் இடம் பெறும். கடந்த இரண்டு வருடங்களாக அவுஸ்திரேலியாவில் அதிக தொகையில் விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் முதல் மூன்று இடத்தையும் பெற்றபடி இருந்தது சுவீடிஸ் மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி மாற்றப்பட்ட மூன்று நாவல்கள்;. இந்த மூன்று நாவல்களும் ஒருவரால் எழுதப்பட்டது. வெளிநாட்டு புத்தக வரிசையில் அமெரிக்க அல்லது பிரித்தானிய புத்தகங்கள் மட்டுமே நான் அறிந்தவரையில் கடந்த 20 வருடங்களும் அவுஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையாகின்றன. வேறு மொழியில் வந்த நாவல் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் முன்னணியில் இருப்பது ஒரு புதுமையான விடயம்.
The Girl with the Dragon Tattoo
The Girl who played with fire
The Girl who kicked the hornets’ nest
BY STIEG LARSSON
வாசிப்பதற்கு ஆவல் கொண்டு வாங்க நினைத்துவிட்டு இந்த நிலையில் இந்த மூன்று பத்தகங்களின் கனதியையும் விலையையம் பார்த்து பின்பு சிறிது யோசிப்பேன். வாங்கினால் வாசிப்பேனா அல்லது இடையில் விக்கிரம் சேத்தின் சூட்டபிள் போய் ( Vikram Seth-A Suitable Boy) அரைவாசியில் விட்டது போல் இவற்றையும் இடையில் நிறுத்திவிடுவேனோ என நினைத்துப் பார்ப்பேன். ஓவ்வொரு புத்தகமும் சராசரி 550 பக்கங்களுக்கு மேல் உள்ளவை. புத்தகக் கடைகளில் எட்டிப் பார்த்துவிட்டு விலகிச் செல்வேன். பின்பு மூன்று நாவல்களும் நியூஸ் பிரிண்டில் மலிவு விலையில் ஒன்றாக வந்தபோது சிறிது கவரப்பட்டாலும் நேரமின்மையால் சுவிஸ் சொக்கிலேட்டை பார்த்து விலகிச் செல்லும் நீரிழிவு வியாதிக்காரர் போல் விலகினேன்.
ஒரு முறை தொழில் முறை மாநாடு நிமித்தம் ஜெனிவா செல்லக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஐரோப்பிய விடுமுறையாக மாற்றியபோது பயணத் துணையாக இருக்கட்டும் என மெல்பேன் விமான நிலையத்தில் உள்ள புத்தக சாலையில் வாங்குவதற்கு கையை வைத்த போது முதல் நாவலில் சினிமாவாக எடுக்கப்பட்டதாக எழுதி இருந்தது. வாசிக்கத் தொடங்கியபின் கீழே வைக்க முடியவில்லை. இளம் வயதில் இருந்த போது மட்டுமே இரவுநேரத்தில் தொடர்ச்சியாக விடியும் வரை வாசிப்பது வழக்கம். அதன் பின் பல்கலைக் கழகம் வேலை அத்துடன் தொலைக்காட்சி என்பவற்றால் அதிக நேரம் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் விடை பெற்றுக்கொண்டது. முப்பது வருடங்களுக்குப் பின் இரவுகள் விழித்திருந்து அதிகாலை வரை வாசித்தவை இந்த நாவல்கள்தான்.