ஜப்பானில் இறங்கிய ஆரம்ப நாட்களில் பார்த்தபோது புரிந்து கொள்ளாது சந்தேகத்துடன் , எனக்குள் அடிக்கடி கேள்வி எழுப்பியபடி இருந்த ஒரு விடயம் பல யப்பானிய உணவுகளிலிருந்த பச்சை நிறம் : பச்சை கேக் உணவுக் கடைகளில் கண்ணாடிகள் ஊடாக பார்க்க முடிந்தது , பச்சை ஐஸ்கிரீமை தெருவில் மாணவர்கள் உண்டார்கள்,பச்சை சொக்கிலேட் வித்தியாசமாகக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்தது, பலர் குடிக்கும் சோடாவும் பச்சை வர்ணமாக இருந்தது. யப்பானில் நான் கோக்கோ கோலாவைக் காண முடியவில்லை. யப்பானியர்கள் பச்சைத் தேயிலை குடிப்பது எனக்கு ஏற்கனவே தெரிந்தாலும், அவர்கள் உணவுப் பொருட்களில் பச்சைத் தேயிலை எனும் மச்சா தேயிலை சேர்த்துக் கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில நாட்கள் எடுத்தது.
டோக்கியோவிலிருந்து, நாகோயா என்ற பெரிய நகரத்திற்கு பஸ்ஸில் போகும் பாதை, வளைவுகள் மலைகள் நிறைந்தது. ஒரு பக்கம் பச்சை சிவப்பு என வர்ணம் கலந்த மலைச்சிகரங்களின் நிரந்தர அணிவகுப்பு மறுபக்கம் தூரத்தில் அமைதியான நீல வர்ணத்தில் பசுபிக் சமுத்திரம் என்பது அழகான காட்சி , அதுவும் இலையுதிர்காலம் கண்ணுக்குக் கல்யாண விருந்தாக இருந்தாலும், என் மனதில் வெளியே தெரியும் அழகிற்கு மாறாக உள்ளே இருப்பது நமக்குத் தெரியாது. கோபத்தில் கொதிக்கும் நிலமும், பொங்கி அதிரும் கடலும் நினைவுக்கு வந்தது. யப்பான் மூன்று கண்டங்களின் நிலத் தட்டுகள் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் நிலநடுக்கம், எரிமலை, சுனாமி என்ற இயற்கை அழிவுகள் நமது தவிர்க்க முடியாத உறவினர்கள்போல் வந்து தங்கிப் போவன.
யப்பான் எங்கும் எரிமலை பொங்கும் கனிவளம் கொண்ட மண்ணை தன்னகத்தே கொண்ட மலைப்பிரதேசங்கள் அமைந்திருப்பதால் அதற்கான லாபங்களும் உள்ளது . யப்பானியர்கள் தேயிலையைப் பச்சை நிறத்தில் குடிப்பார்கள். நாங்கள் இலங்கை இந்தியாவில் குடிப்பது கறுப்பு தேயிலை, அது உண்மையில் நொதிக்கப்பட்ட இலை. சீனர்கள் தேயிலையைப் பச்சையாகக் குடித்தாலும் அவர்கள் தேயிலையை ஊறவிட்டுக் குடிக்கிறார்கள. ஆனால் , யப்பானியர்கள் மாறாக இலையை அரைத்துக் குடிப்பார்கள் (Matcha Teas): அது பெரிய சடங்காக நடைபெறும் .இப்படியான பல காலமாகத் தேயிலை விளையும் யப்பானிய பிரதேசம் நாங்கள் சென்ற சீசுவாகா ( Shizuoka) பகுதியாகும். நமது ஊர்களில் தேயிலைச் செய்கை காலனி ஆதிக்கத்தில் உருவாக்கியதால் பெருந்தோட்டப் பயிராக விளைகிறது. ஆனால் , யப்பானில் சிறிய தோட்டங்களாக உள்ளதாகத் தெரிகிறது. நமது ஊரில் விவசாய நிலங்கள் போல் அவை பரம்பரையாக கை மாறுகிறது இந்த ஊர் பச்சை பசேலென்ற ஊராக இருந்தபோதிலும் இங்கு சனத்தொகை அதிகமில்லை. இளைஞர்கள் வேலைகள் தேடி, பெரிய நகரங்கள் சென்று விட்டால் பல வீடுகள் பூட்டப்பட்டிருப்பதாக வழிகாட்டி ரிச்சாட் கூறினார். சில வீடுகளில் வயதானவர்கள் மட்டும் குடியிருப்பதாகவும் கூறினார் . இதற்கு முக்கிய நியாயங்கள் மக்கள் அதிகம் இல்லாத இடங்களில் வேலை வாய்ப்பு இல்லை . இதன் விளைவாகப் பார்க்கக்கூடியது யப்பானில் பல இடங்களில் முன்பு அமைக்கப்பட்ட ரயில் வண்டிகள் இப்பொழுது தேடுவாரற்று உள்ளன. மக்கள் இல்லாத வெறும் கிராமங்களை பார்ப்பதற்கு நகரங்களிலிருந்து வருகிறார்கள். இது யப்பானுக்கு மட்டும் உரியதல்ல, நகரமயமாக்கம் உலகளாவிய விடயமாக பல இடங்களில் நடந்து வருகிறது . யப்பான் அமரிக்காவில் நடந்து முடிந்தவிட்டது. இந்தியா ,சீனா போன்ற நாடுகளில் இப்பொழுது நடைபெறுகிறது.
இப்படியான ரயில்கள் தற்போது உல்லாச பிரயாணிகள் அழைத்துச் செல்ல பாவிக்கிறார்கள். எங்களது மலைநாட்டு எல்ல பிரதேசத்திற்கு செல்லும் ரயிலைப் போன்றது. ரயில் பிரயாணம் அழகான வெளிப்புறக் காட்சிகளைக் கொண்டது. யன்னல் அருகேயுள்ள இருக்கையில் அமர்ந்தபடி ஆறுகள், அதன் மேல் அமைந்த பாலங்கள், நீர்வீழ்ச்சிகள் என கந்தர்வ உலகத்தில் அந்த ரயில் பிரயாணம் அமைந்தது.
எங்களது இந்தப் பயணத்தில் ஒரு மச்சா தேநீர் சடங்கில் நாங்களும் பங்கு பற்றினோம். அந்த சடங்கு நடந்த இடம் கொயோட்டா. அதுவும் தேயிலைக்குப் பெயர் பெற்ற இடம். நாங்கள் சென்ற இடம் ஒரு 16 சந்ததிகளாக மச்சா தேயிலை வியாபாரம் செய்யும் ஒருவரது இரு மாடி வீடு. அது அக்கால யப்பான் வழக்கப்படி மரங்களால் அமைந்த வீடு.
அந்த வீட்டில் உள்ள பெண் ஒருவர் சுவிட்சர்லாந்து ஆண் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். அந்த சுவிஸ் மாப்பிளை வீட்டோடு இருந்து தேயிலை வியாபாரத்தைக் கவனித்துக்கொள்கிறார். அக்காலத்தில் நமது யாழ்ப்பாணத்து மாப்பிள்ளைமார் வீட்டோடு தங்கி தொழில் பார்ப்பதை அப்பொழுது நினைவு கூர்ந்தேன். ஏற்கனவே ஸ்ரிபன், யப்பானியராக மாறியிருந்தாலும், அவரது ஆங்கில உச்சரிப்பு எங்களுக்கு வசதியாக இருந்தது .
அந்த அந்த தேநீர் சடங்கில், அவர்கள் எங்களைச் சுற்றி இருக்கவைத்து ஒரு அரைத்த தேயிலைத் தூளை எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்து எங்கள் ஊரில் முட்டை கோப்பி அடிப்பதுபோல் சில நிமிடங்கள் அடித்தார்கள் நாங்கள் முட்டை கோப்பி அடிக்க பனை ஈர்க்கைப் பயன்படுத்துவது போல் இவர்கள் மூங்கிலால் செய்த ஒன்றால் சிறிது சுடுநீரைவிட்டு நுரைக்கும்வரை அடித்தார்கள் . அதன்பின் சுடுநீர் ஊற்றி தேநீர் தந்தார்கள் . நமது தேநீரில் போல், இங்கு சீனி சேர்க்கமுடியாது. அது மட்டுமல்ல கேக்கோ பிஸ்கட்டு என எந்த இனிப்பு பலகாரங்களை, தேநீரைக் குடித்து முடித்தபின் உண்ண முடியும். அதாவது தேநீரைக் குடித்தபின் அதன் சுவையை நாக்கில் அதிக நேரம் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவாகும் .
மச்சா தேயிலைக்கு தற்போது உலகம் முழுவதும் அதிகம் தேவை உள்ளது. காரணம் அதில் புற்றுநோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன எனப் பல புற்று நோய் நிபுணர்கள் சொல்வதால் எங்கள் வீட்டில், நாங்கள் யப்பான் போக முன்பே மச்சா தேயிலை பாவனைக்கு வந்துவிட்டது. தேயிலையின் முழுப்பகுதியும் நாங்கள் குடிப்பதால் நிச்சயமாக அதிக உயிர்ச்சத்துகள் முக்கியமாக உயிர்ச்சத்து C , கனிப்பொருட்கள் அமினோ அசிட்டுகள் என்பன உட்செல்லும் என்பது பொது அறிவே .
மச்சா தேயிலையின் விலை அதிகம்: சாதாரணமாகப் பச்சைத் தேயிலை செடியிலிருந்து வருடத்தில் ஐந்து முறை எடுக்கப்படும். ஆனால் மச்சா தேயிலை வருடத்தில் ஒரு முறையாகும். மச்சா தேயிலை குறைந்தது மூன்று கிழமைகள் நிழலில் வளர்க்கப்படவேண்டும். நிழலில் வளரும் போது கஃபின்(caffeine) அதிகமாகிறது. நாங்கள் தேயிலை காப்பி குடிக்கும் போது உற்சாகம் அடைவதற்குக் காரணம் இந்த கஃபின் ஆகும் . அது எங்கள் மூளை நரம்புகளை உற்சாகப்படுத்துகின்றன.
சிறந்த இலைகளே பார்த்துக் கிள்ளப்பட்ட இலைகள் உடனே நீராவியில் மிகக் குறைந்த நேரம் அவிக்கப்பட்டு (15 விநாடிகள்) பின்பு அதிக வெப்பத்தில் காய வைத்து அரைக்கப்பட்டு விற்பனையாவதால் இதனது பெறுமானம் அதிகம். ஆரம்பத்தில் கல்லுரல்களில் (stone grinder) அரைக்கப்பட்ட தேயிலை இப்பொழுது இயந்திரத்தால் அரைக்கப்படுகிறது . ஒரு காலத்தில் பல தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் இப்பொழுது சிலர் மட்டுமே தேவையாகிறது .
யப்பானின் இந்த மச்சா தேயிலையின் ஆரம்பம் சீனாவே. அக்கால அரசசபைகளில் பாவிக்கப்பட்டது அப்போது அரைத்த தேயிலை பெரிய கட்டியாகச் சேகரித்துப் பயன்படுத்தப்படும். அது 9ம் நூற்றண்டளவில் பௌத்த துறவிகளால் யப்பானுக்கு கொண்டுவரப்பட்டது . ஆனால் சீனாவில் இப்பொழுது அரைத்த மச்சா தேயிலை பாவிப்பது இல்லை . தற்போது யப்பானுக்கு, சீனா வியட்னாம் மச்சா தேயிலை ஏற்றுமதி செய்தாலும் அவை தரம் குறைந்தவை என்பதால் உணவுப் பொருட்களோடு சேர்ப்பதற்காகவே பாவிக்கப்படுகிறது.
தேயிலை விளையும் நாட்டில் பிறந்து, தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த ராகலையில் வேலை செய்த நான் தேயிலை பற்றி யப்பானில் அறிந்து கொண்ட விடயங்கள் அதிகம்.
[ தொடரும் ]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.