வாழ்க்கை ஓடிய ஓட்டத்தில் வெகு தூரம் போய்விட்டேன். ஏதோ தொலைத்தது போன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தேன் தொலைத்தது வேறு எதுவும் இல்லை. என்னைத்தான். அப்போதுதான் புரிந்தது எனக்;காக வாழ்க்கையை நான் வாழவே இல்லை என்று. அத்தகைய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், புனைவு சாராத பத்தி எழுத்துக்கள், திறனாய்வு போன்ற துறைகளில் தன் ஆளுமைகளைச் செலுத்தி வருபவர்தான் முருகபூபதி அவர்கள்;. ஒவ்வொரு கலைஞர்கள். எழுத்தாளர்களின் பிரிவின்போதும் அதனைப் பதிவாக்குவதிலும் அவர் காட்டும் அக்கறை அவரது பரிவுணர்வை வெளிப்படுத்தும் ஒரு செயலாகும். இலக்கியம் முதன்மையாகக் கற்றுத் தரும் பாடம் என்னவென்றால்; பரிவு காட்டுவதுதான். அதனை இவரின் செயலிலும், எழுத்துக்கள் மூலம் புரிந்து கொண்டேன்.
பழகுவதற்கு இனிமையானவர் முருகபூபதி அவர்கள். எனது அன்புத்தந்தை எஸ் அகஸ்தியரோடு மிக நெருக்கமான உறவு கொண்டிருந்தவர்;. இலங்கையிலிருந்த காலப்பகுதியில் 1983களில இருவரும் சந்தித்துள்ளனர். பின்னர் எனது தந்தை அகஸ்தியர் பிரான்சிற்கும் முருகபூபதி அவர்கள் அவுஸ்ரேலியாவிற்கும் புலம் பெயர்ந்தனர். ஆனால் தொடர்ச்சியாக இருவரும் கடிதத் தொடர்புகளில் இருந்திருக்கிறார்கள். அகஸ்தியருடன் இவர் மேற்கொண்ட நேர்காணலை இவரது ‘சந்திப்பு’ என்று நூலில் பதிவு செய்தமையை நன்றியுடன் நினவுகூர விரும்புகின்றேன்.
அத்தகைய அவரது உறவின் தொடர்ச்சி இன்றுவரை எமது குடும்பத்துடன் தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்வான விடயம். முக்கியமாக அகஸ்தியரின் ‘சுவடுகள்’ விவரண நவீனம் என்ற நாவல் 2023ஆம் ஆண்டில் வெளியிட்டவேளை, பல சிரமங்கள் மத்தியில் அவர் அந்நாவலை வெளிக்கொண்டு வருவதற்காகச் செய்த உதவியோ அளப்பரியது. என் இதயத்தில் அவை ஆழமாகப் பதிந்துள்ளது. மனிதர்கள் ஒருவர் ஒருவருக்குக்காட்டும் அக்கறையும் அன்பும் மேலானது. என்றும் அதனை நன்றியுடன் நான் நினைவிருத்துவதுண்டு. லண்டன் வரும் வேளைகளில் நான் அவரைச் சந்திப்பதில் மிக ஆர்வத்துடன் இருந்திருக்கின்றேன். தொலை நகல் வழியாக அவருடன் தொடர்புகள் தொடர்வது மகிழ்வுதருகின்ற விடயம். எனது தாயார் நவமணியின் சுகம் குறித்தும், எனது சகோதரி நவஜெகனி குறித்தும் தொடர்பு கொள்ளும் வேளைகளில் எல்லாம் அவர் விசாரிக்கத் தவறுவதேயில்லை. அத்தகைய ஒரு மனிதத்தை நேசிக்கின்ற ஒருவராவார்.
நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இரண்டு முறை தேசிய சாகித்திய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். வீரகேசரி நாளேட்டிலும் பணியாற்றிய அனுபவமுள்ள இவர் ஊடகவியலாளராகவும் இயங்கி வந்திருக்கிறார்;. லண்டனில் திரு. நடாமோகனின் மேற்பார்வையில் இன்றுவரை தொடரும் பாமுகம் FA TV யில் நான் தயாரித்து வழங்கும் ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்வில் இவரை மேற்கொண்ட நோர்காணல் மிகுந்த பாராட்டைப் பெற்றமையையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
அதே வேளை அந்நிகழ்வில் நான் மேற்கொண்ட நேர்காணலில் முப்பத்திமூன்று லண்டன்வாழ் தமிழ்ப் பெண் ஆளுமைகளை நான் தேர்ந்தெடுத்து ‘மகரந்தச் சிதறல்’ என்ற நூலை வெளியிட்டிருந்தேன். அந்நூல் குறித்து முருகபூபதி அவர்கள் அருமையான ஒரு பதிவினை மேற்கொண்டமையை இங்கே நன்றியுடன் கூற விரும்புகின்றேன். அந்நூலுக்கு 2017 ஆம் ஆண்டு இரா.உதயணன் இலக்கிய விருது வழங்கப்பட்டிருந்தமை மேலும் எனக்கு இரட்டிப்பு மகிழ்வைத் தந்த விடயம்.
முருகபூபதி அவர்களின் ‘சொல்ல மறந்த கதைகள்’, ‘சினிமா: பார்த்ததும் கேட்டதும்‘ போன்ற அவரது சிறப்பான நூல்களுக்கு நான் எழுதிய கருத்துகள் ‘பதிவுகள்’ இணையத்தளத்திலும் இலங்கை பத்திரிகைகளிலும் பிரசுரம் கண்டமையை மகிழ்வுடன் தெரிவிக்க விரும்புகின்றேன். உண்மையில் முருகபூபதி அவர்களின் எழுத்து நயமும், விடயங்களைக் காட்சிப்படுத்தி அவர் விபரிக்கும் பாங்கும் பாராட்டுக்குரியனவையாகும். எந்த விடயத்தை வாசிக்கும்போதும் வாசகர்களைக் கவர்ந்திழுத்து அந்த விடயத்துள் கட்டிப்போட்டுவிடும் ஆற்றல் அவரின் எழுத்தின் வீரியம் என்றே கூறவேண்டும். சமூக நல்லிணக்கம் என்பது பரஸ்பரம் இரு சாராருமே நல்லிணக்கம் என்ற புள்ளியில் சந்தித்துக் கொள்வதுதான். வெறும் நினைவுக் குறிப்புகளாக இல்லாமல் பல சமூகப் படிப்பினைகளையும், உயர்ந்த சிந்தனைகளையும், வலுவூட்டும் கருத்துக்களையும் கொண்டதாக அவரது நூல்கள் கனதியாகத் திகழ்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
அசுர வேகத்தில் உலகம் மாற்றங்களை அடைந்து கொண்டிருக்கிறது. நாமும் அசுர வேகத்தின் மாற்றங்களைப் பார்த்து மனசால் துடித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த மாற்றங்கள்தான் வரலாறாகின்றன என்பதையும் உணர்கின்றோம். அடுத்து ஒரு மனிதனுக்கு கற்றுக் கொடுக்கின்ற ஒரு முக்கிமான ஆசான் யாரென்றால் அவனது கடந்துபோன அவனது வயதுதான். புதிய வயது தோன்றுபோது எல்லாம் பழைய வயது எங்கே போனது என்றுதான் நான் எண்ணுவதுண்டு. ஏனென்றால் பழைய நினைவுகளின் மகிழ்ச்சியான தருணங்கள்;; அடிக்கடி எம்முள் நினைவுகளாக மாறிக்கொண்டே இருப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அந்த நினைவுகள் தான் எம்முள் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால் அத்தகைய மகிழ்வான நினைவுகளை சில கருமேகங்கள் வந்து அதனை மறைத்து விடுவதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஏமக்கு ஏற்பட்ட துன்பங்கள், இழப்புகள், அவமானங்கள், உடல் வாதைகள் எல்லாமே மனதைக் கருக்கிவிடும். ஆனால் ஒரு இலக்கியவாதியின் எழுத்து, இலக்கியம், பேச்சு எல்லாமே ஒரு வெளிச்சத்தைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது எனக் கருதுகின்றேன். அந்தவகையில் இவற்றினுடாகவே எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் வெளிச்சமாகி இன்றும் அவர் ஒளி பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.
அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னி;ட்டு முருகபூபதி அவர்களின்;; ‘யாதுமாகி பாகம் (02)’ 2025 மின்னூலைப் பார்க்க முடிந்தது. அந்நூலில் முப்பது ஈழத்து ஆளுமைப் பெண்களை அசத்திப்போட்டு அற்புதமாகப் பதிவிட்டிருக்கிறார். எமக்கு ஒரு வெளிச்சத்தைச் சுடரவிட்ட முருகபூபதி அவர்களின் செயல் மிகுந்த பாராட்டுக் குரியதாகும். அந்நூலில் என்னையும் இணைத்தமைக்கு நெஞ்சார அவருக்கு இவ்வேளை நன்றி கூறுகின்றேன். அவரது கட்டுரையின்; குறிப்பில் எனது தந்தை அகஸ்தியர் குறித்தும், எனது இலக்கியம் குறித்தும், நான் வாழ்ந்த பிரான்சு நாட்டு மக்களின் எனது அனுபவம் குறித்தும், இலக்கியத்துறையில் என்னை ஊக்கப்படுத்தும் எனது தாயார் நவமணி குறித்தும், எனது மகன் அகஸ்ரியின் (சிம்பா) ஓவியக்கலையைப் பற்றியும் சுட்டிக்காட்டியமை என்னை அசத்திப்போட்டது என்றே கூறுவேன்.
முன்னேற்றம், விடுதலை எழுச்சி என்றெல்லாம் கோஷம் போட்டுக்கொண்டு இருப்பவர்களைவிட, எழுத்து அளவில் மட்டும் நில்லாமல் இலங்கையில் வறிய மாணவர்களுக்கு கல்வியைத் தொடரும் முகமாக ‘இலங்கை மாணவர் கல்வி நிதியம்’ ஒன்றை அமைத்து முருகபூபதி அவர்கள் பல ஆண்டுகளாக செய்து வரும் சமூகப் பணி அவரை ஒரு மகத்துவம் மிக்க மனிதனாகக் காட்டுகிறது என்றுதான் கூறுவேன்.
இன்றைய கால கட்டத்தில் மனிதர்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக நிகழ்வுகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. மகிழ்வு தரும் தருணங்களைத்தான் மனிதன் இப்போ தேடி அலைகின்றான். அறிவும் அன்பும் நிறைந்த முருகபூபதி அவர்களது பிறந்ததின மகிழ்வான இந்த நேரத்தில் பல விடயங்கள் நினைவுச் சரங்களில் பெருக்கெடுத்தாலும் சிறு துளியை இங்கே பதிவிட்டிருக்கிறேன். சிறந்த தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகிற்கு பங்காற்ற வேண்டுமென இப்பிறந்த தினத்தில் இனிதாக வாழ்த்தி நிற்கின்றேன். எல்லோரும் மகி;ழ்வாக இருப்போம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.