டால்ஸ்டாய், இவ்வகை டால்ஸ்டாய்களை அறிந்தே இருந்தார்… ஒரு சமயம், ஒரு இளைஞர் Yasnaya Polyanaவில் வர்ணித்தார்: ‘வாழ்வானது எளிமையாக மாறியுள்ளது: –ஆன்மா தூய்மை நிறைந்ததாக மாறியுள்ளது - இது, டால்ஸ்டாயின் தத்துவத்தைப் பின்பற்ற தொடங்கியதிலிருந்துதான்’ என்றார்.
டால்ஸ்டாய் என்னிடம் குனிந்து முணுமுணுத்தார்: ‘போக்கிரி. அனைத்தும் பொய். ஆனால் என்னைச் சந்தோசப்படுத்துவதற்காகவும் இருக்கக் கூடும்…’
ஆகவே, பலரும் இதை முயல்வாராயினும், இறுதிக் கணிப்பில் அவர்கள் தோல்வியையே தழுவினர் எனலாம். அவருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய எதை ஒன்றையும் முழுமையாய்ப் புரிந்ததாய் இல்லை.
ஆனாலும், என்னிடம், தமது வழமையான தலைப்புகளான-உலகளாவிய மன்னிப்பு, அண்டை வீட்டாரைக் காதலிப்பது அல்லது பரிசுத்த வேதாகமத்தை அல்லது உலகளாவிய உயரிய பௌத்தத்தைப் பற்றிக் கூறுவது – ஆகிய ஒன்றையும் என்னிடம் தொட்டார் இல்லை. ஏனெனில் மிக ஆரம்பத்திலேயே எனது ஈடுபாடுகள் குறித்து அவர் நன்கு அறிந்தவராய் இருந்திருக்கக் கூடும். ஆனால், இதனை மிக ஆழமான முறையில் நான் வரவேற்றிருக்கவே செய்தேன்.
பெண்கள் பொறுத்து அவர் பேசியவற்றை நான் மதித்தேன் இல்லை. காரணம் இப்பேச்சு, சில சமயங்களில் இயற்கைக்கு மாறாகவும் சற்றே பொய்மை கலந்ததாகவும் சில சமயம் மிக தனிப்பட்ட அந்தரங்க விடயங்களைத் தொடுவதாகவும் இருப்பதை நான் கண்டேன். யாரோ அவரை மிக ஆழமாகப் புண்படுத்தி இருக்க வேண்டும் என்றும் அக்காயத்தை அவர் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை என்பதாகவும் நான் கருதினேன்.
எனது முதல் சந்திப்பின் போது, அவர் என்னைத் தனது நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே எனது படைப்புகளான இருபத்தாறு பேரும் ஒரு பெண்ணும் மற்றும் Varenka Olesova ஆகியவை குறித்துப் பேச முற்பட்டார். இவ்வளவு குரூரமாக ஒருவர் கூறுவாரா? நான் சோர்வடைந்தேன்.
அதன் பிறகு நாணம் (blush) ஒரு ஆரோக்கியமான நங்கைக்கு பொருந்தி வராது என்பதை வலியுறுத்தத் தொடங்கினார்.
‘அவளுக்கு பதினைந்து வயது நிரம்பி அவள் ஆரோக்கியமாக இருப்பாளேயானால், யாராகிலும் அவளை முத்தமிடமாட்டானா என்றேதான் யோசிப்பாள். அவளது மனம், அவள் அறியாமலேயே இப்படித்தான் யோசிக்கும். இதைத்தான் எம்மவர் கற்பு என்றும் நாணம் என்றும் வர்ணிக்கின்றார்கள். ஆனால், அவளது உடல் அவளது மனதுக்கு கட்டுப்பட மறுத்து விடுகின்றது. மனதுக்குத் தெரியும்-இது தவிர்க்க முடியாதது, சட்ட பூர்வமானது, நிறைவேற்றப்பட வேண்டியது என்பது.
உனது Varenka Olesova ஒரு ஆரோக்கிய பெண்ணாக வர்ணிக்கப்பட்டுள்ளாள். ஆனால் அவளது உணர்வுகள் ஒரு நோஞ்சையின் அல்லது சோபை பிடித்த பெண்ணின் உணர்வுகள் - இவை முழு முட்டாள்தனமானது. அதன் பிறகு ‘இருபத்தாறு பேரும் ஒரு பெண்ணும்’ என்ற என் சிறுகதை குறித்துப் பேச ஆரம்பித்தார். இதன் போது துர்வார்த்தைகளைத் தாராளமாக, பிரயோகித்தார். இது முரட்டுதனமாகவும், என்னைப் பாதிப்படையவும் செய்தது.
பிறகே நான் கண்டு கொண்டேன்: இவரது இந்த துர்வார்த்தைப் பிரயோகமானது குறித்த ஒரு விடயத்தை மிகச் சரியாகச் சுட்டிக்காட்டவும் தனது இலக்கை அடைய வேண்டும் என்ற மனநிலையில் இருந்தும் பிறந்தது எனக் கண்டு கொண்டேன். ஆனாலும், நான் ஆழமாகப் பாதிப்புற்றேன். இருந்தும் நான் முரண்பட்டேன் இல்லை. சடுதியாக அவர் என் மீது பரிவுகாட்ட தொடங்கினார். என் வாழ்வு பற்றியும் நான் வாசிக்கும் நூல்கள் பற்றியும் கேட்டறிந்தார்.
‘அவர்கள் கூறுவது போல் நீ உண்மையில் நன்கு வாசித்தவன்தானா? கொரெலென்கோ (இவரது கண்ணில்லா இசைஞன் என்ற படைப்பு பெயர் பெற்றது) ஒரு இசை வல்லுனன் தானா?
‘இல்லை. நான் அப்படி எண்ணவில்லை’
‘அப்படியா… அவரது கதைகள் உனக்குப் பிடித்தவைதானா’
‘மிகவும்’
‘ஆம். அவர் வித்தியாசப்பட்டே உள்ளார். இவ் வேற்றுமைகளின் காரணம் அவர் ஒரு கவிஞர் என்பதே. ஆனால் உன்னில் எந்தவொரு கவிஞனையும் கண்டேனில்லை’
‘Weltmann ஐ வாசித்திருக்கின்றாயா?’
‘வாசித்திருக்கின்றேன்’
‘சிறந்த எழுத்தாளன். எளிமையானவர். மிகைப்படுத்தி கூறுபவர் அல்ல. சில நேரங்களில் கோகோலை விட சிறந்தாய்க் காணப்படுகின்றார். அவர் பால்சாக்கையும் அறிந்திருந்தார். கோகோல், Marlinskyஐ பிரதி செய்தவர்…”
‘கோகோல் Hoffmann, Sterne, Dickens ஆகியோரால் செல்வாக்கு செலுத்தப்பட்டவர்’ - உடனே கூறினார்: ‘நீ உண்மையில் வாசித்திருப்பது போலத்தான் தெரிகின்றது. பாதுகாத்துக்கொள். நிறைய படிப்பது ஆபத்தானது. Koltsov இதனால்தான் பாழாகி போனார்’
என்னை வழியனுப்ப வந்தபோது அவரது கரங்களைச் சுற்றிப்போட்டு என்னை முத்தமிட்டார்.
‘நீ ஒரு உண்மையான விவசாய முஜீக். ஏனைய எழுத்தாளர்களின் மத்தியில் கடின சூழலைத்தான் அனுபவிக்கப் போகின்றாய். ஆனால், யாதொன்றும் உன்னைப் பயமுறுத்த விட்டு விடாதே. நினைப்பதைக் கூறி விடு. அது முரட்டுத்தனமாய் இருக்கலாம். போகட்டும். புத்திபூர்வமான மக்கள் அதனை நேசிக்கவே செய்வர்’.
இம் முதல் சந்திப்பு என்னில் இரு மனநிலைகளை தோற்றுவித்தது. ஒன்று இவரை சந்தித்ததற்காகப் பெருமையும் கர்வமும் கொண்டேன். ஆனால் அவரது சம்பாசனை என்பது அவர் என்னைக் குறுக்குவிசாரணை செய்வதாகவே இருந்தது. இந்த மனிதரா Cossacks, Kholstomer, War and Peace ஆகிய நவீனங்களை எழுதிய கனவான்? அப்படியென்றால் அவர் ஒரு நாகரிக மொழிநடையில் பேசி இருப்பாரே. இதை விடுத்து எனக்கு ‘புரிய வைக்க’ வெகு சாதாரணமான மொழியை பாவித்து விட்டாரே. வருத்தப்பட்டேன். இது, அந்நேரத்தில் அவர் மீது நான் வைத்திருந்த ஆழமான மரியாதையையும் தகர்ப்பதாய் இருந்தது.
மறுமுறை, அவரை நான் Yasnayaவில் சந்தித்தேன். மழை தூறிக் கொண்டிருந்தது. இலையுதிர் காலம். ஒரு தடித்த மேல் கோட்டும் உயரமான கனத்த பூட்சையும் அணிந்திருந்தார். என்னைப் பேர்ச் மரங்கள் நிறைந்திருந்த தோப்பொன்றுக்கூடாக அழைத்துச் சென்றார். சிறு குழிகளையும் பள்ளங்களையும் குட்டைகளையும் ஒரு இளைஞனின் லாவகத்தோடு தாவிக் கடந்தார். மேலே தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளைகளில் படிந்திருந்த நீர்துளிகளைக் குலுக்கி தனது தலையில் போட்டுக் கொண்டார். இதன்போதே, Fet எப்படி Schopenhauerரை மிகத் தெளிவூட்டும் முறையில் அவருக்கு விளங்கப்படுத்தினார் என்பதைக் கூறினார். பின்னர் நின்று ஈரமுற்றிருந்த பேர்ச் மரங்களின் அடியை அன்போடு தடவி கொடுத்தார்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.