திரு. பிரேம்ஜி ஞானசுந்தரன் அவர்களது ‘பிரேம்ஜி கட்டுரைகள்’ என்ற நூலின் வாயிலாக கனடிய மண்ணில் அவரைப்பற்றிய தெளிவும், அறிவும் வெளித்தோற்றமாக அனைவராலும் அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிட்டியமையை நினைவு கூரமுடியும். இருப்பினும் பிரேம்ஜீ அவர்களுக்கு ஒரு அறிமுகம் தேவைதானா என்னும் கேள்வியும் என்மனதில் உதிக்கின்றது.
ஈழத்தில் உள்ளவர்களில் ‘பிரேம்ஜீ’ என்றால் தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு அவரது எழுத்துப்பணி அவரை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால் ஞானசுந்தரன் என்றால் எல்லோரும் இவர் யார் என்று மூக்கில் விரலை வைக்கக்கூடும். இலை மறைகாயாக இருந்து பெரும் பணிகளை ஆற்றி தமது சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்தவர் பிரேம்ஜி எனப்படும் ஞானசுந்தரம் அவர்கள். அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஞானசுந்தரன். திருநெல்வேலியல் கற்ற அவர் கொழும்பு சென்று அங்கு பெம்புறூக் உயர் கல்வி நிறவனத்தில் இணைந்து பெற்ற கல்வியைத் தொடர்ந்து இந்தியாசென்று பட்டதாரியாகத் திரும்பினார்.
மதபேதம், சாதிபேதம், இனபேதம் கடந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்னும் உயரிய நோக்கத்தைத் தன் மனதிருத்தி அதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்தான் இன்று எங்கள் பேசுபொருளாக கிடைத்தவர். கனடாவில் வாழ்ந்து தனது வாழ்கைக் கனடவிலேயே முடித்துக்கொண்டார். பிரேமஜி அவர்கள். 1947 இல் பரமேஸ்வராக் கல்லூரியல் கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே சமூக மாற்றத்திற்கான அமைப்பைக் கட்டி எழுப்பவேண்டும் என்ற நோக்கத்தோடு “சுதந்திர இளைஞர் சங்கத்தை’ உருவாக்கி அச்சுவேலியில் காந்தி பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்து பெரும் ஊர்வலத்தோடு நடத்தி முடித்தார். பின்னர் கொழும்பு பெம்புறூக் கல்லூரியில் இணைந்து படித்தார். ஈழத்திற்கு வந்திருந்த நாமக்கல் கவிஞரைச் சந்தித்ததன் பின்னர் இந்தியா சென்று கற்பதற்கு முடிவு செய்தார். ஆங்கு வி.க. வ.ரா போன்றோரதும் சுவாமிநாத சர்மா ஆகியோருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பையும் பெற்றக்கொண்டார். ஆவர் அங்கிருந்த காலத்தில் “முன்னணி” என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1949இல் இலங்கைக்கு வந்த பிரேம்ஜீ “தேசாபிமானி’ பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றினார். 1951இல் “சூரியா அச்சகத்தினை” ஆரம்பித்தார். வாலிப முன்னணி என்ற பத்திரிகையில் “பிரேமா” என்ற பெயரில் எழுதிவந்தார். அனால் மலையாளப் பத்திரிகை ‘நவசகத்தி’யில் பணியாற்றிய ராமகிருஸ்ணனின் ஆலோசனையின் படி பிரேம்ஜி என்று மாற்றிக் கொண்டார். அந்தப் பெயரே இன்றுவரை நிலைத்து வாழுகின்றது. 1953இல் “சுதந்திரன்” பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றி வந்தார். இக்காலகட்டத்தில் “தேசாபிமானி” பத்திரிகையிலும் எழுதுகின்றார் என்பது தமிழரசுக்கட்சியினரின் கண்டனத்திற்கு ஆளானது. ஆனால் எஸ்.ஜே.வி. அதனை ஏற்றுக்கொள்ளாது அவரைத் தொடர்ந்து வைத்திருந்தார். ஆனால் 1956இல் சுதந்திரனில் இருந்து நீக்கப்பட்டார். 1954 ஜுன் “முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை” ஆரம்பித்தனர். பிரேம்ஜியே இதன் பொதுச் செயலாளராக தெரிவுசெய்யப்பட்டு தொடர்ந்துபணியாற்றி வந்தார். அதன் வேலைத்திட்டம், நோக்கம் என்பனவற்றை வகுத்துத்தந்தவரும் இவரேயாவார்.
1958 தாஸ்கண்ட் எழுத்தாளர் மகாநாட்டில் கலந்துகொண்டார். இலங்கை வானொலி, ரூபவாகினி போன்றவற்றில் பணியாளர் சபையில் கடமையாற்றியதோடு, யாழ் பல்கலைக்கழகத்தை இன, மத சார்பற்ற ஒரு பல்கலைக்கழகமாக ஆக்குவதற்கும் ஆலோசனைக்குழுவில் பதவிவகித்தார். பல துறைகளிலும் கால் பதித்துக்கொண்ட பிரேம்ஜி ஒரு கொள்கைசார்ந்த சமூப்பணியாளராகத் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று அவாக்கொண்டு நின்றவர் பிரேம்ஜி. அதனை எவ்விதமும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதற்காக ஒத்த நோக்கம் கொண்ட எழுத்தாளர்களை இணைத்து ஒரு பாலமமைக்கவேண்டும் என்னுத் நோக்கத்தை முன்வைத்து உழைத்து வந்தார். அவரது உழைப்புச் சாதாரணமானதன்று மிகவும் கரடுமுரடானது. எழுத்தாளர்களை இணைப்பது என்பது மிகவும் கடினமானதாக இருந்தது. சிங்கள எழுத்தாளர்களையும் ஒன்றிணைப்பதா? தமிழ் எழுத்தார்கள் மட்டும் தனித்தியங்குவதா? என்ற எண்ணம் பல்வேறு எழுத்தாளர்கள் மத்தியில் எழுந்தமைக்கு நீண்டகாலமாக ஈழத்தில் புரையோடிப்போயிருந்த சிங்கள-தமிழ் வகுப்புவாதம் காரணியாக அமைந்தது. இதற்கு சிங்களவரின் அரசியல் வாதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் எண்ணையூற்றி வளர்த்தனர். இதனால் சிங்கள- தமிழ் எழுத்தாளர்களின் ஐக்கியம் சந்தேகத்திற்கிடமானதாக அமைந்திருந்தது. இதற்கிடையே இருபாலாரையும் ஒன்றிணைக்கும் மாபெரும் முயற்சியில் ஈடுபட்டவர் பிரேம்ஜி என்பது அரசியல் மட்டத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. இலக்கியத்தையும் ஏனைய கலை வடிவங்களையும் பண்டிதர்களினதும் ஆதிக்க வர்க்கதினரதும் பிடியிலிருந்து விடுவித்து மக்கள் உடமையாக்குவதும், கலை இலக்கிய வடிவங்களை யதார்த்த பூர்வமாகச் சித்தரிப்பவையாக்கி, மக்களின் எதிர்கால வாழ்வுக்கு ஒளியூட்டத்தக்க வகையில் முற்போக்குப் பாதையில் இட்டுச் செல்ல வைப்பதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டிருந்தவர் பிரேம்ஜு எனத் துணிந்து கூறக்கூடியளவிற்கு அவரது இடையறாத, தளராத முயற்சி இடம்பெற்றிருந்தது என்பது அவரோடு நன்கு உறவாடியவர்களால் உணரப்பட்டிருந்தது.
இவ்விதமாக முனைப்புடன் செயற்பட்ட பிரேம்ஜீ அவர்களைப் பொதுச் செயலாளராகக் கொண்டு 1954 ஜுன் 27ல் “முற்போக்கு எழுத்தாளர் இயக்கம்” அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக அதன் பொதுச் செயலராளராகக் கடமையாற்றினார். “புதியதோர் உலகைக் காண்போம் போரிடும் உலகை வேருடன் சாய்ப்பபோம்” என்னும் பாரதியின் கனவை நனவாக்கவேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டவர் அவர். அதற்காகத் தன்னை முற்போக்கு எழுத்தாளர் அமைப்புடன் இணைத்தக்கொண்டு காலமெல்லாம் அதற்காக உழைத்த பெருமகனாவார். கொள்கைப்பிடிப்பும், தெளிவும் கொண்ட ஒருவராக தான் கொண்ட இலட்சியத்தில் சளைக்காமல் இறுதிவரை உழைத்து வந்தவர்.
ஈழத்து எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கு இந்திய எழுத்துக்களை குறிப்பாக தரமற்ற எழுத்துக்களை கொண்ட நூல்களையும் சஞ்சிகைகளையுமம் பத்திரிகைகளையும் இறக்குமதி செய்வதனைத் தடைசெய்யவேண்டும் என்று ஆலோசனைகளை முன்வைத்து அதற்காக வாதிட்டவர். இதனால் தமிழ் நாட்டுடனான உறவு பாதிக்கப்படும் என்றும் தமிழகத் தமிழருக்கும் ஈழத்துத்துத் தமிழருக்கும் இடையே உள்ள நெருக்கம் பாதிக்கப்படும் என்றும், தமிழ் இலக்கியத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்றெல்லாம் பிரேம்ஜி சிவஞான சுந்தரம் அவர்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர் தமிழ்பேசும்மக்களின் பிரதிநிதிகள் எனத் தம்மைக் காட்டிக்கொண்ட மேல்மட்டத்தினர். அத்தோடு சிறுகதைகள் இலக்கியமாகுமா? ஏன்றெல்லாம் எள்ளி நகையாடினர். தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் சீரழிக்கப் போகின்றார்கள், என்றெல்லாம் போர்க்கொடி தூக்கினார்கள். இலக்கியம் இலக்கியத்திற்காகவே, கலை கலைக்காகவே என்ற பண்டித்துவ மேதாவித்தனக் கோட்பாட்டை முன்வைத்தார்கள். இலக்கியம் சமுதாயத்திற்காக, அது மக்களின் நலனுக்காக அமையவேண்டும் என்ற முற்போக்கு சிந்தனையை எதிர்த்து போர்க்கொடி தூக்கினர் தமிழ் அரசியல் வாதிகள். இதற்கெல்லாம் ஆடிக்கொடுக்காத பிரேம்ஜு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு தமிழ் இலக்கியப்பரப்பில் தெளிவோடு விளக்கங்களை அளித்துவந்தார். “இலக்கியம் என்பது மரபுக்கு உட்பட்டது” என்றனர் பழமைவாதிகள் ஆனால் பிரேம்ஜுயும் அவரைச் சார்ந்தவர்களும் மக்களின் வாழ்க்கையோட்டத்தின் காலவளர்ச்சிக்கேற்ப இலக்கியம் மாற்றம் பெறும் மரபும் மாற்றமுறும் என்று வாதிட்டனர். இதனடிப்படையில் ஈழத்தில் தரமான சிறுகதை இலக்கியங்கள் தோன்ற வித்திட்டவர் பிரேம்ஜீ சிவஞானசுந்தரம் என்றால் மிகையாகாது.
பாரதியின் மீதும், பாரதிதாசன்மீதும் மிகுந்த பற்றுக்கொண்டவர் பிரேம்ஜி அவர் பாரதிபற்றியும் பாரதிதாசன் பற்றியும் குறிப்பிடும்போது “பாரதி ஒரு சகாப்தத்தின் கவி. அந்த சகாப்தத்தால் சிருஷ்டிக்ககப்பட்ட கவி. அதோடு அவன் காலத்தோடு, மக்களின் வாழ்வின் தேவையோடு வளர்ந்த கவி, எனவேதான் சாகாக்கவியாக, வளரும் கவியாக அவன் வாழ்கிறான். வழிகாட்டும் விடிவெள்ளியாகத் திகழ்கிறான்” என்றவர் “பாரதிதாசன் - பாரதிக்குப் பின் தமிழகத்தில் தோன்றிய கவி. மகாகவி இன்றைய தமழ் உலகில் ஈடும் இணையுமற்று, ஒப்பாதுமிக்காருமற்றுத் திகழும் மகோன்னதமான கவிதா மேதாவிலாசம் பாரதிதாசன். நாம் வாழும் வையத்தில் வாழும் எந்தக் கவிஞனுக்கும் இரண்டாந்தரமற்ற உலக மகாகவிகளில் ஒருவன். உலகத்திற்கு “ஒரு புதுமையான-புதிரான’ கவிஞன். எனப் பாரதிதாசனைப் புகழ்ந்து பல்லக்கில் ஏற்றுகின்றார். அது அவரது உள்ளத்தெளிவைப் புடம்போட்டுக்காட்டி நிற்பதனை உணர வழிவகுக்கின்றது.
பிரேம்ஜுயைப் பற்றி “எழுத்துலகப் பொன்னாண்டு” என்னும் நூலை ஈழத்துச் சோமு எனப்படும் சோமகாந்தன் அவர்கள் எழுதியுள்ளமையும், “பிரேம்ஜு கட்டுரைகள்” என்னும் கட்டுரைத் தொகுப்பு 2008ல் வெளியிட்டிருந்தமையும் பெருமைப்படத்தக்கன இந்த நூலில் பேராசிரியர் தில்லைநாதன், மற்றும் எழுத்தாளர் செ.யோகநாதன் ஆகியோர் பிரேம்ஜுயைப் பற்றி எழுதிய குறிப்புக்கள் அவரைப்பற்றிய தெளிவையும் உள்ளடக்கத்தையும் தருகின்றன. “இலக்கியம் சமுதாயத்துடனும் வாழ்வுடனும் மக்களின் பிரச்சினைகளுடனும் பிரிக்க முடியாதவாறு இணைந்து பிணைந்து பின்னிக்கிடக்கிறது என்றும் மக்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை ஊட்டி அவர்களுடைய எதிர்காலத்துக்கு கோடுடிட்டுக்காட்டி நல்வாழ்விற்காகவும், பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் மக்கள் நடத்தும் போராட்டத்தில் அவர்களின் போராயதமாகவும் வழிகாட்டியாகவும் திகழவேண்டும் என்றும் நாம் ஆணித்தரமாக கூறுகின்றோம். நல்லதிற்கும் கெட்டதிற்குமிடையில், தர்மத்திற்கும் அதர்மத்திற்குமிடையில், சுபீட்சத்திற்கும் சுரண்டலுக்குமிடையில் நடைபெறும் போராட்டத்தில் இலக்கியமும் இலக்கியகர்தாவும் முன்னையவற்றின் பக்கதில் நின்றேயாகவேண்டும்” என்று பிரேம்ஜு ஞனசுந்தரம் அவர்கள் குறிப்பிடுவதில் இருந்து அவரது சிந்தனைவளம், அவரது தமிழ்ப் புலமை, கருத்துக்களம் என்பன வெளிப்படுகின்றன.
நல்லை ஆறுமுக நாவலரின் போராட்டத்தை வியந்து போற்றும் பிரேம்ஜு அவர்கள் காலணித்துவ பிரித்தானி அரசாங்கத்திற்கும் மேலைத்தேய மதம்பரப்பும் கொள்கையை எதிர்த்துப்போராடிய ஒரு கர்மவீராராக ஆறுமுகநாவலரைக் காண்கின்றார் என்றால் அவரது நாட்டுப்பற்று, மொழிப்பற்று எத்துணை ஆளமான சிந்தனை ஓட்டத்தைக் கொண்டுள்ளது என்பதும் வெளிப்படை.பிரேம்ஜி தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராக, சமுதாய நலனை மனதில் கொண்டு ‘எல்லோரும் எல்லாமே பெறவெண்டும்’ என்னும் எண்ணம் கொண்டவராக மக்கள் மகிழ்ந்திருக்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து அதற்காக உழைத்த ஒரு கர்மவீரராகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.