படித்தோம் சொல்கிறோம்: திரௌபதையின் மரணவாக்குமூலம் கதையாகும் விந்தை ! ( அமரர் சை. பீர் முகம்மதுவின் பயஸ்கோப்காரனும் வான்கோழிகளும் !! - முருகபூபதி -
இளம்பராயத்தில் தாடிக்காரர்களைத்தேடிய ஒருவர், வாசிப்புப்பழக்கம் ஏற்பட்டதும் தாடிக்காரர்களின் நூல்களை நூலகத்தில் தேடித்தேடி படித்தவர், காலப்போக்கில் ஒரு எழுத்தாளனாகவே தன்னை நிலைப்படுத்திக்கொண்டவர்.
அவர் இலங்கையரோ தமிழகத்தவரோ அல்ல. அவர்தான் மலேசிய தமிழ் இலக்கியத்தை உலகப்பார்வைக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்ற நோக்கோடு அயராமல் இயங்கிய சை.பீர்முகம்மது. கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி மறைந்துவிட்டார்.
அவரை பல வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் சந்தித்தேன். அந்த பட்டிமன்றத்தில் ஒரு மலேசிய பேச்சாளர், அவரது பெயரில் பீரும் இருக்கிறது மதுவும் இருக்கிறது என்று வேடிக்கையாகச்சொல்லி சபையை கலகலப்பாக்கினார்.
எனது வீட்டுக்கு அழைத்து விருந்துகொடுத்தேன். அவர் இலக்கியவிருந்து படைத்து விடைபெற்றார். அன்று முதல் எனது இலக்கிய நண்பர்கள் பட்டியலில் இணைந்தார். மலேசியாவுக்கு நான் அவரது விருந்தினராகச்சென்றபோது நீண்டபொழுதுகள் அவருடன் இலக்கியம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. கலை, இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், என விரிவான உரையாடலுக்கு உகந்த படைப்பாளி. வெறும் படைப்பாளியாக மாத்திரம் திகழாமல் இலக்கிய யாத்ரீகனாகவும் அலைந்தவர். 1942 இல் கோலாலம்பூரில் பிறந்த பீர்முகம்மது, 1959 முதல் எழுதினார்.