1. அதன் பொருட்டான அறம்
குலவையிடும்
குளவிகளின்
பறத்தலுக்கு
காரணங்கள்
அநேகமிருந்தன.
அன்றைய
உணவு தேடலும்
அதன் பிறகான
கூடமைத்தலும்
கொஞ்சலில்
கூடி மகிழ்வதுமென.
கொத்த வேண்டுமென்ற
குறிப்புகளெவையும்
இல்லைதான்
கடுக்கிறதென
கதறும்
மனிதனின்
இடை புகுதலின்
இன்னல் வரை.
2. வெக்கை முடிச்சுகள்.
தாழாத்துயரின்
தரை தொடும் ஆசையை
எளிதாக்கிய
நிழல் சரிவுகள்
துண்டுகளாகிப்போயின.
துவண்ட கிளைகளில்.
வழிந்த கண்ணீர்
மரத்தைச் சுற்றி
இலைகளாக நிரம்பி.
இயந்திரமாகிய
இதயத்தால்
பெயர்க்க முடிந்தது.
அடித்தூரின்
ஆணி வேரை
அற்ப கணங்களில்
இலகுவாக.
பிடித்த மண்தான்
கெட்டிப்பட்டிருந்தது.
பால்ய உறவின்
அணுக்கப் பிணைப்பில்
பாறைக்கம்பிகளின்
பாதகத்தை எதிர்நோக்கி.
சேமித்த ஆக்ஸிஜனை
செய்வதறியாத
வேர் முடிச்சுகள்
சொட்டிக் கொண்டிருந்தன
இரத்தத்தை
சொல்ல முடியாத
துயரை நினைத்து.
அட்சரேகையில்
நோகி நெளிந்து
சுற்றிய பூமியில்
எங்கோ
நிகழ்ந்தது
கொப்பளிக்கும்
கோப வெறுப்புகள்
உணர்வுக் கொதிப்பில்
ஒத்திசைவற்ற
ஓலத்தில்.
இவர்களின் கருவிகளில்
கூடிய
கியூபிக், ரிக்டர்
மில்லி மீட்டரளவுகளின்
கூராய்வுகள்
நடந்த வண்ணமே
இருந்தன
நிழலில் ஒதுங்கி
நிர்ச்சலனமற்று
எப்பொழுதும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.