நனவிடை தோய்தல் (18) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்! - விடியலை வருடிய தாலாட்டு - இந்து.லிங்கேஸ் -
சேவல்கூவி எம்சயனம் கலைந்தவேளை அதிகாலை 4 மணியிருக்கும்.அரசமர இலைகள் பழுத்து மஞ்சளாய் காற்றில் அவை பறந்து மண்ணைத்தழுவிய வேளையது. நேற்றைய இரவில், தென்றல் சுகமாக எம்மைவருடிய பொழுதில், கொட்டிய மழையில்,குளித்த மல்லிகை பூத்து பரவசப்படுத்திக்கொண்டிருக்க நானும், நண்பர்களும் இந்த விடியலில் ஏ.எஸ்.கே (கனகரட்ணம்) மாஸ்ரரிடம் ஆங்கில பயிற்சி வகுப்புக்காகச் செல்கின்றோம்.மணி இப்போது 4.30தாண்டியிருக்கும். வேய்ந்த வீட்டின் தாழ்வாரத்து ஓலைகளிலிருந்து சொட்டிய மழைநீரின் சத்தத்தைத்தவிர ஊர்சனம் இன்னும் உறக்கத்தில் நிசப்தம். மார்கழியின் விசுவாசமா இது?
ஊரும்,ஊரின் அழகும்,பூக்களின் வாசங்களும், நண்பர்களின் அந்த நேரத்து சிலேடைச் சொற்களும் மனசை உசுப்பிவிட விடிந்தும் விடியா வெளிச்சமில்லாத்தெருக்களுக்குள் சேர்ந்தே ஊடுருவிய சைக்கிள்கள் பிரதான வீதி தாண்டி மெதுவாக இப்போ மாஸ்ரரின் வீட்டடி வந்து சேர்கின்றன.அங்கே சில இளஞ்சிட்டுக்கள் தமக்குள் முணுமுணுத்தபடி சைக்கிள்களை ஓரங்கட்டிவிட்டு மண்ணைப்பார்த்தபடி, எம்மைப்பார்த்தும் பார்க்காதவர்கள்போல வகுப்புக்குள் நுழைய,ஒன்றாய் வந்த எங்கள் கூட்டத்தின் சில கண்களும் கனவுகளில் மிதந்தபடி! மனசுக்கு விடை தெரியா சிறகடித்துப்பறந்த வயதது.இரண்டு பல்ப் மட்டுமே வெளிச்சம்தர வெள்ளை பெனியனும், வேட்டியுமாக மெல்லிய புன்னகை பூத்தபடி உள்ளே வருகின்றார் ஏ.எஸ்.கே.
"குட் மோர்னிங்" என்ற அவரது சொற்பதம் எம்மை ஆசீர்வதிக்க அவர் வீட்டுக்கடிகாரம் 'டொங் டொங்'கென 5 தடவை ஒலித்து ஓய்கிறது.இன்றுதான் கிரமர்கிளாஸ் ஆரம்பம் என்பதால் வகுப்பு நிரம்பி வழியுது. 'இளசுகளா,சிட்டுக்குருவிகளா ஒருகை பார்க்கலாம்' என கேள்விகளுக்கு இரு தரப்புக்களிலுமிருந்து கைகள் உயர்கின்றன. ஒன்றேகால் மணித்தியாலம் எப்படிப்பறந்ததோ தெரியவில்லை. "இன்றைக்கு இதுபோதும்"என மாஸ்ரர் கூற "ஐயா ஆள விடு" என ஓர்குரல் எழ வகுப்பறை சிரிப்பொலியால் அதிர்ந்தது.