தமிழ் பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டக் கட்டமைப்பு முறைகள் – சில முன் வரைவுகள் - முனைவர் வே. மணிகண்டன், இணைப்பேராசிரியர் & தமிழாய்வுத்துறைத் தலைவர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம் -
முன்னுரை
கல்வி என்பது உடல் மற்றும் மன வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்ற ஒரு சமூக அமைப்பாகும். சமுதாயத்தில் நன்னடத்தையுடன் கூடிய திறன் சார்ந்த மானுடத்தை உருவாக்குவதில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கல்வியை முறையாகப் பயில பாடத்திட்டக் கட்டமைப்பு முறையானது முதன்மையானதாகத் திகழ்கிறது. கால மாற்றத்திற்கு ஏற்பப் பாடத்திட்ட வடிவமைப்பு என்பது தன்னகத்தே பற்பல மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் துறைச் சார்ந்த முதன்மைச் செயல்பாடாகப் பாடத்திட்ட வடிவமைப்பு திகழ்கிறது. இப்பாடத்திட்ட வடிவமைப்பானது, தமிழ்ப் பட்டப் படிப்பிற்குக் கட்டமைக்கப்படும் திறன் குறித்து ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்ப் பட்டப்படிப்பிற்கான பாடதிட்டக் கட்டமைப்பு முறைகள் – சில முன் வரைவுகள்’ எனும் தலைப்பில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
இலக்கிய இலக்கணத் தொடர்புடையது
தமிழின் தொன்மையான இலக்கணங்களைத் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்வதால் மொழியின் தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் அறிய ஏதுவானதாக அமைகிறது. மேலும், இலக்கியங்களின் வாயிலாகத் தமிழ் மொழியின் தொன்மை, சமூக அறநெறிகள், வாழ்வியல் முறைகள், பண்பாட்டு நெறிகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள முடிகிறது. தொன்மையான இலக்கிய இலக்கணங்களை கற்கும் மாணவர்களால் சமுதாயத்தில் நன்மதிப்புகளை உருவாக்கும் இயலும் என்பது திண்ணம்.