உனது மண்ணில் பூக்கும்
இரவுகள் அழகாகி விடியும் கணங்களை
ரசித்த அதே உன் கண்கள்
இனி புலரப்போகும் காட்சிகளையும் நிச்சயமாக நேசித்திருக்கும்.
அத்தனை அழகல்லவா எம் தாய்மண்?
கடல் அழகு.
கடலில் வந்து விழும் செம்பொன் பரிதியின் அழகு.
நீலத்தை உடுத்துநிற்கும் வானமும் வடிவு.
ஊரைக்காக்க எழுந்து நிற்கும் கோபுரங்கள்
வழிகாட்டும் பனைகளும் தென்னைகளும்.
குளங்களும்,தாமரைகளும்.
விடியலை பறைச் சாற்றும் பறவைகள்.
மனதை வருடும் தவிலும்,நாதஸ்வரமும்.
காற்றைத் தழுவி எமக்குக் கடத்தும்
அரசமரம்,ஆலமரம், பூவரசு.
பச்சைப்பசேலென
காற்றில் அலைபோல் அசையும் பயிர்கள்
என எல்லாமே அழகல்லவா?
அத்தனை அழகையும் வாரி அள்ளிக் கொட்டிக்கொண்டேயிருந்த மண்ணில்தான் 'யாழ்ப்பாணம்' என்ற நகரமும் மழையிலும், வெயிலிலும், ஏன் 1974இல் தமிழாராய்ச்சி மாநாட்டிலும்கூட கண்ணுபடப்போவதாய் செழித்துக்கிடந்தது.
விடிந்ததும் அத்தனை அழகையும் ரசிக்க சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊரைச்சுற்றி வந்தால் சங்கிலியன் சிலையும், கோயில்களும்,தேவாலயங்களும், பள்ளி வாசல்களும், இன்னும் கொஞ்சத்தூரம் போனால் முற்ற வெளியும், யாழ் பொதுசன நூல்நிலையமும். எட்டிப்பார்த்தால் பண்ணைக் கடலும், கோட்டையும். இடையிடையே சந்திக்குச்சந்தி கிணறுகளும், மரக்கறிச் சந்தைகளும், யாழ் கல்லுண்டாய் வெளியும் என மனசுக்கு நெருக்கமாய்,விழிகளுக்குக் குளிர்ச்சியாய் நிரம்பிக்கிடந்தன.
எம் வாழ்வோடு ஒட்டிக்கிடந்த இவற்றிற்குள்தான் திரையரங்குகளும் எம்மை மகிழ்வித்தன.மகிழ்வித்தன என்று சொல்வதை விடவும்,எம் வாழ்வோடு கூடிநின்று உறவாடும் சொந்தங்களாகப்பங்காற்றின என்பதே மெய்.
"யாழ்ப்பாணத்துக்குள் மட்டும் இவ்வளவு தியேட்டர்கள் தேவைதானா?"என்ற கேள்வியை நீ கேட்கலாம்!
மனோஹரா, ராஜா, வின்சர், லிடோ, வெலிங்டன், ஸ்ரீதர், ராணி, சாந்தி, ஹரன், றீகல், றியோ என அத்தனை சினிமாத்திரையரங்குகளும் காலச்சக்கரத்திற்குள் எல்லாமே சுமாராக மக்களால் உச்சரிக்கப்பட்டு இயங்கிக்கொண்டிருந்த காலமது. சினிமா ரசிகர்களை வரவழைத்து ஒவ்வொரு அரங்கிற்குள்ளும் நுழைய வைத்தது அன்றைய சுழற்சி! பெரும்பாலான மனங்களின் ஆறுதலுக்கு இருந்த முக்கிய இருப்பிடங்களில் ஒன்று சினிமா!
"இந்த இரண்டரை மூன்று மணித்தியாலங்களுக்குள் எல்லாவற்றையும் மறந்துபோ" என கட்டிப் போட்டது இத்திரையரங்குகளும்,அங்கே ஓடிய படங்களும்தான்!
ஒவ்வொரு திரையரங்குக்கும் ஒவ்வொரு கதையிருக்கும். நண்பர்களாக, உறவினர்களாக ,மணமக்களாக, தன்னந்தனியாக,காதலர்களாக என ஏதோ ஒரு நினைவுடன் ஒவ்வொன்றும் காட்சியாக மனத்திரைக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் என் மனத்திரைக்குள் 'வின்சர்' தியேட்டர் நெருங்கி வந்து, ஆரத்தழுவி தன் அத்தனை அழகையும் வானத்திற்கும்,நிலா வுக்கும் நிகராய் வாழைக்குலைகளும்,தோரணங்களும் கட்டி, மலர்கள் தூவி நிமிர்ந்து நிற்கின்றது!
அடுத்து அடுத்து அத்தனை திரையரங்குகள் இயங்கிக் கொண்டிருந்தபோது,புதிதாக கட்டப்பட்டதுதான் 'வின்சர்'. ஆரம்பத்தில் புதிய வின்சர் என்றே பேசப்பட்டது.அந்தக்கட்டடக்கலைதான் அன்று எம்மை வியக்கவைத்தது."நகரின் நடுவே அந்தளவு அண்ணளவான பரப்பிற்குள் இப்படியொரு கட்டடக்கலையா?"
தெருவிலிருந்து உயர்ந்து நிற்கும் அளவிற்கு அத்திவாரம் எழுப்பி,கார்கள் சுற்றிவந்து வெளியேறுவதற்கான பாதையை அகலமாக்கி, அதற்குச் சமமாக மழைநீர் நிரம்பி வழிந்து ஓடுவதற்கான ஒழுங்கமைப்பும் இப்பாதைக்குள் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதேபோல நுழைவாயிலின் மூன்று பக்கங்களிலிருந்தும் அகன்ற, நீண்ட படிகளும் பளிங்குக்கற்களுமாய்,சீரான செம்மண்நிறத்து வட்டத்தூண்களுமாய் புதுப்பொலிவுடன் அரங்கேறிய காலமது.
- 14.1.1977 வெளியான யாழ் ஈழநாடு பத்திரிகை விளம்பரம் -
1977 இல் 'அபூர்வ ராகங்கள்' படம் பார்ப்பதற்காக,பதினாறாகிய இளவட்ட வயதில் முதன்முதலாக தியேட்டர் வாசலிற்குள் நானும்,நண்பனுமாக காலடி எடுத்து வைத்தோம். பொழுது மெல்லச்சாயும் வேளை. சிறிய ஓடைக்குள் கால்கள் கடுக்க காத்து நின்று இடிபட்டு,காற்று வராமல் கஷ்டப்பட்டு,வேர்த்து விறுவிறுத்து, சண்டை பிடித்து ரிக்கற் எடுக்கின்ற எம்ஜிஆர் படம் அல்ல இது. ஆரம்பத்தில் "கே.பாலசந்தரின் படமென்றாலே,பார்க்கப்போறவர்கள் படிச்ச,டீசன்ற் ஆன'பெல் பொட்டம்' போட்ட ஸ்ரைலான வர்க்கம். அவரது படங்களில் சண்டையே இருக்காது.அதனால எம்ஜிஆரின்ர படங்கள்போல தியேட்டர் நிரம்பி வழியாதடாப்பா" என்று நண்பர்கள் அடக்கி வாசிச்ச காலமும் அந்தக்காலம்தான்! தவிர, வசதியாக வெளியிலே வரிசையில் பொறுமையாக நின்று ரிக்கற் எடுத்துப்போவதற்காக அனைத்து டிக்கெட் கவுண்டர்களும் திட்டமிட்டு வடிவமைத்ததும்கூட வின்சருக்கான இன்னுமொரு சிறப்புத்தான்!
நாங்களும் பெல்பொட்டம் போட்டுக்கொண்டு, பொறுமையா நின்று,ஒழுக்கத்தையும் கடைப்பிடிச்சு 'செக்கண்ட் கிளாஸ்'ரிக்கற்றையும் எடுத்துக்கொண்டு உள்ளே போனோம். மெல்ல மெல்ல சனக்கூட்டம் அங்குமிங்குமாக அமர்ந்திருப்பதை எம் கண்கள் அளந்தன. கலரியையும் செக்கண்ட் கிளாசையும் பிரித்து நீண்ட இடைவெளி நிரம்பிய படிக்கட்டை முதலில் பார்த்ததும் எனக்குள் பிரமிப்பு!அதிலிருந்து ஆரம்பமாகியதுதான் என் நீண்ட அவதானிப்பு.திட்டமிட்டு ஒருங்கிணைத்த பல்கனியின் தோற்றமும்,அழகும்கூட கட்டிடக்கலைஞரின் கெட்டித்தனம்தான். அடுத்து அண்ணாந்து மேலே கூரையைப்பார்த்தேன்.நீண்ட உயரத்தில், அதன் உச்சியில் காற்றாடிகள் சுற்றிக்கொண்டிருந்தன.உச்சியில் பரந்து,ஒளிபாய்ச்சிக்கொண்டிருந்தன வட்டமான சின்னஞ்சிறிய வெள்ளை லைற்றுக்கள்.
இருக்கைகளின் ஒவ்வொரு வரிசைகளுக்கும் இடையிலான சமமான படிகள் உயர்ந்து செல்லும் வடிவமைப்பைப்பார்த்ததும்; ஆஹா, கட்டடக்கலை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும்'என்றேன் நண்பனிடம்.
இப்பொழுதுதான் இருபக்கச்சுவர்களையும் பார்த்தேன்.வளைந்த கோடுகளை,அடுத்த வளைந்த கோடுகளுடன் இணைத்து செதுக்கியிருக்கும் அந்த அழகான பெருஞ் சுவர் கொண்ட சித்திரத்தைப்பார்த்ததும், அளவிடமுடியாப்புளகாங்கிதம் எனக்கு! இதைக்கூட நானும், நண்பனும் பகிர்ந்து மகிழ்ந்தோம்.அந்தச்சுவர்களில் பதித்த அந்த வடிவங்கள் வழங்கிய சிறப்பு என்னவென்றால்; ' ஒலியை உள்வாங்கி சமபங்கு தரமானதாக அரங்கிற்குள் கடத்தும்'என நாளடைவில் நாமும் அறிந்தோம்.அத்தனை நுட்பங்கள் நிறைந்த திரையரங்கானது வின்சர் அன்று.
"இனியாவது இருப்போமா" என்றான் நண்பன்.அங்கே பார்,அவர்களும் புதுசு போல,இன்னும் இருந்தபாடில்லை'என்று நானும் சிரித்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்தேன்.அப்போதுதான் டி.எம்.எஸ்ஸின் பத்திப்பாட்டு ஒலித்துக்கொண்டிருப்பதை என்னால் கிரகிக்க முடிந்தது.இதுவும்கூட எமக்குப்புதிதுதான்.
"வின்சர் தியேட்டரில் பக்திப்பாட்டுக்கள் மட்டும்தான் ஒலிக்கும்" என்பதை இன்றுவரையிலும் சிலரால் மறக்கமுடியவில்லை! உண்மைதான்.மனசுகளை அப்படியே ஆசுவாசப்படுத்தி ஒரு நிலையில் அமைதியுடன் கட்டிப்போட நிச்சயமாக இத்திரையரங்கால் முடியுமென்பதை அத்தருணமே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.சத்தமில்லா,இரைச்சலில்லா மென்மையான இரண்டாவது மணிகேட்க, திரைச்சீலையும் மெல்ல விலக,அகண்ட திரையில் கண்ணைக்கவரும் கறுப்பு வெள்ளைப்படமாக 'அபூர்வ ராகங்கள்' ஆரம்பித்தது.
இரவு மறுபடியும் பூத்தது.
நிலா தன்னை உடுத்தி
நிலவை ஊரெங்கும் பரப்பிவிட்டு,
திறந்திருந்த திரையரங்கின்
யன்னல்வழியாக எங்களையும் தழுவிக்கொண்டது.
மாலை 6.30 மணிக்காட்சி ஆரம்பித்து 1 மணி நேரம் கடக்க,படத்தோடு மக்கள் கூட்டமும் ஒன்றிப்போக,திரையரங்கின் யன்னல்களை திறந்துவிடுவார்கள்.
இதமான காற்று
உள்ளே வந்து
முகத்தை வருடும்.
வானத்தில் உலாவரும்
நிலவையும் இருக்கையில் இருந்தபடியே
எம் கண்கள் காதல் கொள்ளும்.
உள்ளம் பரவசப்படும்.
இந்த அரவணைப்பு
அனைத்தையும் தந்தது 'வின்சர்'அன்று.
அது எம் பொற்காலம்.
பார்த்த அருமையான படம்.
மனதைக் கொள்ளை கொண்ட
இசை.பாவங்களை நடிப்பால்
செதுக்கிய அத்தனை சிறப்பான நடிகர்கள்.
இதமான சூழலை எமக்காக அர்ப்பணித்த
அந்த இரவு.
கண்ணுக்குள் காட்சியாய் எப்போதும் பிரிந்து விடாது
ஒளிவீசிக்கொண்டிருக்கும் வின்சர் எனும்
கட்டடக்கலையின் பிரமாண்டம்.
அந்தக்காலம் மீண்டும் வருமா?
- வின்சர் திரையரங்கின் இன்றைய நிலை -
யாராவது யாழ் மண்ணின் பாரம்பரிய கட்டடக்கலையின் சிறப்புக்குள் ஒன்றான வின்சரையும் மீட்டெடுப்பார்களா? இதைக்கூட அருங்காட்சியகம் ஆக்கினால், ஆயிரமாயிரம் கதையிருக்கு எம்மிடம்.அனைத்தையும் படைப்புகளாக்கி, யன்னல்களை அகலத்திறந்துவிட்டு,அந்த நிலாவுடன் நாமும் குந்தியிருந்து ரசிக்கலாமே?
சிறைச்சாலைபோல வின்சரையும் அடைத்து வைத்திருக்கின்றீர்களே! அதனை முழுமையாக அகற்றி தயவு செய்து விடுதலை செய்யுங்கள். 'வின்சர்' என்ற இந்த உறவையும் மீண்டும் சந்தித்து, எம் பழைய நினைவுகளை பரிமாறி மகிழ்ந்திடுவோம்.அதுபோதும்.
[இனிக்கும் நினைவுகள் தொடரும்]