* ஓவியம் - AI
59 இல் நான் பிறந்தபோது என் ஞாபககார்த்தமாக அப்பா ஒரு றலி சைக்கிள் வாங்கினார்.அப்போது அதன்விலை 150 ரூபா. யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் அப்போது சாம்பசிவம், மணியம் சைக்கிள் கடைகளென இவையிரண்டும்தான் பிரபல்யம்!சாம்பசிவத்திலேயே தரமான Brooks சீற்றும்,Miller டைனமோவும் சேர்த்து வாங்கினாராம்.அன்று தொடக்கம் அதுவும் எம்மோடு ஒன்றாய் வாழ்ந்தது.மழையில அது நனையக்கூடாது.மழையில் அது நனைந்தாலும் உடனே முழுமையாக மென்மையான மஞ்சள் துணியால் சைக்கிளை துடைத்துவிட்டுத்தான் சாப்பிடுவார் அப்பா.
அப்பாவைப்போல துப்புரவா, மினுக்கிக்கொண்டு வெளிக்கிட்டு றலி ஒரு மிடுக்காத்தான் நிற்கும்.புழுதியில் படிந்த தூசியை நித்தம் துடைத்து,கீறு விழாது பக்குவமா பாதுகாத்து,அதையும் போக வர பார்த்து மகிழ்வதே அப்பா அதன்மீது கொண்ட நிரந்தரப் பாசம். இவற்றையெல்லாம் நான் பார்த்துப் புரிந்துகொள்ள அதற்கும் ஏழு வயதாகிவிட்டது.தம்பியும் பிறந்து அவனிற்கும் 4 வயதாகிவிட்டது. வீட்டில ஒரு விலையுயர்ந்த அன்றைய ஆடம்பர பொருளென்றால் அது றலிதான்.அதுதான் வாழ்க்கைக்கு முதுகெலும்பா நின்று உழைச்சுக்கொடுத்தது என்றும் சொல்லலாம்.வீட்டுக்கு ஒன்று என்று படலையடியிலயோ அன்றி கேற்றடியிலயோ ஒன்று நின்றது.அது நின்றால் வீடும் தனியழகுதான்.
முற்றத்து மூலையில ஒரு பூவரசு.
பக்கத்தில பூத்துக்குலுங்கும் செம்பருத்தி.
அருகில வாழையோ மாமரமோ அத்துடன்
விவசாயம் செய்கின்ற செம்மண் ஊருக்குள்ள
சோடிச்சுக்கொண்டு றலியும் நிற்பதைப்பார்த்தாலே
இதன் வடிவு ஒரு படி மேல!
அப்பா வேலைக்குச்சென்று மத்தியான இடைவேளைக்கு வீட்டுக்கு வருவார். வீடு நெருங்க ஒழுங்கை முடக்கால் வீட்டுக்கு திரும்பும்போது எப்போதும் ஒரு முறையாவது சைக்கிளில் பூட்டிய பெல்லை அடித்துக் கொண்டே வருவது வழக்கம். அது போதும், வளர்த்த ஆடுகள் 'ம்பா...' என்று உரத்துக்கத்தி ஊரைக்கூட்டுங்கள்.
'அம்மா,எத்தனை சைக்கில்கள் இதால போகுது,அதெப்படி எங்கட சைக்கிளின்ர பெல் மட்டும் இதுகளுக்கு விழங்குது?"
' எங்களுக்கு எப்படி அதுகளில பாசமோ,அதேபோல அப்பாவிலயும்,அந்த சைக்கிள்லயும் அதுகளுக்கும் அளவுகடந்த புரிதல் இருக்கும்தானே,அதுகள் மணந்து பிடிச்சிருங்கள்' என்று அம்மா சொன்னதெல்லாம் எனக்குள்ளேயும் ஆழமாய்ப்பதிஞ்சிட்டுது.
நாங்களும் வளர,வளர றலி மாறிமாறி எங்களுடனும் சேர்ந்து ஊரெல்லாம் சுற்றியது. எம்மையும்,அத்தனை பாரங்களையும் வைத்து தானே சுமந்தது.அப்பாவைப்பார்த்துப்பார்த்து கற்றுக்கொண்டதை றலியுடன் நாமும் பகிர்ந்துகொண்டோம்.சைக்கிள்கடைக்கு, சைக்கிளை கழுவிப்பூட்ட காலையிலேயே கொண்டுபோய் பாட்ஸ் பாட்ஸ் ஆகக் கழற்றி, மண்ணெண்ணெயும்,கழிவு டீசலும் கலந்து கழுவி எடுத்து அந்த 'போல்ஸ்'இற்கு 'கிரீஸ்'போட்டு புது டயரும்,ரியூப்பும்,பிறேக் கட்டையும் மாற்றி முழுமையாப் பூட்டி முடிக்கவே நாலு ஐந்து மணித்தியாலங்களா கிவிடும்.பூட்டி முடிச்சா சீமான் புது மாப்பிளைபோல கம்பீரமா நிற்பார். கழுவிப்பூட்டவே அன்று ஏழு ரூபா ஐம்பது சதம்தான் கூலி.காற்றடிக்கவும் 10 சதம் தான் என்று அப்பா அடிக்கடி சொல்வார்.அப்படியே வீட்ட கொண்டுபோய் வடிவாத்துடைத்துவிட்டு இன்னுமொருக்கா ஒரு வெள்ளோட்டம் ஓடினாப் பந்தயக்குதிரைபோல அவன் பாயுற வேகத்தை கட்டுப்படுத்தவே முடியாது. அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.உண்மையாத்தான் சொல்றன். எங்கட வீட்டின்ர இன்னொரு உயிராகத்தான் அது வாழ்ந்திச்சு.போர்ச்சூழலிலும்கூட தன்னை வருத்தி எத்தனையை அதுவும் சுமந்திச்சு?
அத்தனை பலமும்,வைராக்கியமும்,கதையும் நிறைந்த றலி சைக்கிள்போல வருமா?
தெருக்களில் நீண்ட தெரு விளக்குக்கள் இல்லாத காலமது.அந்த கும்மென்ற இருட்டில் மில்லர் டைனமோவின் பங்களிப்பால் வெளிச்சத்தைப்பரப்பி எம்மை வீடுவரை கூட்டிச்சென்ற பங்காளியல்லவா றலி!
காலத்திற்கேற்றவாறு வீட்டுக்கு வீடு வாகன வளர்ச்சிகள் பெருகிவருகின்ற வசதியான சூழலிலும்கூட,அன்றைய ஆடம்பரமற்ற நடுத்தர வாழ்வின் அனுபவத்திலும் ஏதோ ஒரு சுகம் இருந்தது என்பதை ஒருபோதும் மறந்திடமுடியாது.
முதலில் நாம் மட்டும் ஊர் பிரிந்தோம்.
காலம் விரைந்தோட
முதுமையில் அம்மாவும்,அப்பாவும்
மெல்ல மெல்ல தளர்ந்து போக
'றலி'க்கும் வயசு போய்ட்டுது.
அப்பாவாலயும் முந்தினமாதிரி றலியை
பராமரிக்க முடியேல்ல.
'இரத்த உருத்தான மருமகனுக்கு நெடுக றலியில ஒரு கண்'என்று அப்பாவுக்கு தெரியும்.அப்படியே அவரைக்கூப்பிட்டு றலியை அவரிட்டயே ஒப்படைத்தாராம்.
"கடவுளைப்போல எங்கள வாழவைத்த இதுவும் இன்னொரு தெய்வமடா,கவனமாப்பார்த்துக்கொள்'என்று கண் கலங்கியபடி சரியாக்கவலைப்பட்டுக்கொண்டுதான் கொடுத்தாராம்'என்று அம்மா சொன்னா.
எம்மைப் பெற்று வளர்த்த தெய்வங்கள் இன்றில்லை.
நீயும் இன்னும் இருக்கிறியோ,இல்லையோ!
என் நினைவுகள் ஏனோ இன்றும்
உன்னோடுதான் றலி..!
[ இனிக்கும் நினைவுகள் தொடரும்.]