கடல் அலையெழுந்து இடையிடையே வள்ளத்தைப் பக்கவாட்டில் ஆட்டிக் கொண்டேயிருக்குது.காற்றும் கொஞ்சம் கூடுதலா அடிக்குது.கைகூப்பிக் கும்பிட்டுக்கொண்டே,பக்தர்களும் பயத்தில்;"அம்மாளாச்சி,ஈஸ்வரி, பார்வதிதாயே,நாகதம்பிரானே,எங்களைக்காப்பாற்றும்" என வேண்டுதல்களாக உரத்துக்கத்தும் ஒலிகளே வள்ளத்திற்குள் நிரம்பி அதிருது. இந்தச் சத்தத்தையும் தாண்டி,வள்ளத்துக்குள்ள மாறி,மாறி தேவாரம், திருவாசகம் என பெரியவர்கள் பாடிக்கொண்டே இருக்கின்றார்கள்.
" ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே"என்று
அப்பாவும் பாடுகின்றார்.அதுக்குள்ள இருந்த குழந்தைகளும் வீரென்று கத்தி அழுகின்றன.
இப்படியான அவலம் நிறைந்த சந்தர்ப்பத்திற்கு காரணம்; விடிஞ்சா நயினாதீவு நாகபூஷணி அம்மாள் தேர்.அம்பாளைப்பார்க்க வெளிக்கிட்டு வள்ளத்தில போய்க்கொண்டிருக்கின்றோம்.
அப்போதுதான் இப்படியாக எல்லாமே நடக்குது.
"நான் அப்பவே சொன்னனான்,இந்தக்காத்துக்குள்ள 'இறுப்பிட்டி'யிலயிருந்து இப்ப வெளிக்கிடுவது எனக்கு நல்லதாப்படேல்ல.விடிய நேரத்துக்கு வெளிக்கிட்டாலும் தேர் ஓட்டம் பார்த்திடலாம்.தம்பி நான் சொல்றதைக்கேளுங்கோ"என்று அப்பா வள்ளத்தின்ர சுக்கான் பிடிப்பவரிடம் சொன்னதை நானும் கேட்டனான்.
வள்ளத்தின்ர மோட்டர் 'ப்டுப் ப்டுப் ப்டுப்ப்டுப்' என இயங்கிக்கொண்டேயிருந்தது. டீசல் புகையும் காத்தில பரவி வயிற்றைப்பிரட்டிச்சு.கையால சுக்கானைப்பிடித்துக்கொண்டே"இங்க இருந்து போற இதுதான் எங்கட கடைசி ஓட்டம்.யோசிக்காதைங்கோ.இப்ப வெளிக்கிட்டா நேரத்தோட போய்ச்சேர்ந்திடலாம். ஏறுங்கோ ஏறுங்கோ"என்றார் படகோட்டி.
'அப்படியே சப்பரத்திருவிழாவையும் பார்த்திட்டு,மேளக்கச்சேரி,பிரசங்கம் என்று அதுகளயும் கேட்டிட்டு,கோயில் வீதியிலேயே, அந்த மரங்களுக்குக்கீழ காத்தும் வாங்கிக்கொண்டு, குருமணலில பாயை விரிச்சுப்படுக்கலாம். விடிய நேரத்தோட எழும்பிக் குளிச்சிட்டு,அப்படியே கோயிலுக்குள்ளபோனா, வடிவாப் பூசையையும்,தேருக்குச்சாமி வாறதையும் பார்த்துக்கும்பிட்டிட்டு, அன்னதான மடத்தில போய் சாப்பிடலாம். எல்லாத்தையும் அம்மாளாச்சி பார்த்துக்கொள்ளுவா. "பிள்ளைகள் எல்லாரும் ஏறுங்கோ,ஏறுங்கோ"என்றார் பெரியப்பா.
வள்ளத்துக்குள்ள சரிசமமா பிரிச்சு ஆட்களை ஏத்தியாச்சு.முந்தின காலத்தில கப்பல் என்று சொல்வதே அரிது.எல்லாமே அனேகமாக படகுகளும்,வள்ளங்களுமாக பயணித்த காலமது. இறுப்பிட்டியிலிருந்து நயினாதீவுக்கு வள்ளங்களாக. குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கு கப்பல்களாக கடல் பயணங்கள் இருந்தன. நாங்களும்,சொந்தங்களுடன் ஏறிவிட்டோம்.
நயினாதீவு தேருக்கு போறதென்றால் அனேகமாக சொந்தங்களுடன் ஒவ்வொரு வருசமும் தொடர்ந்து சேர்ந்து போவதுதான் எமக்கான சந்தோசம்.கோயிலடியிலேயும் அப்பாவழி,அம்மாவழியென்று இன்னும் நிறைய சொந்தங்களையும் காணலாம்.அதை நினைச்சா இன்னும் ஒரு படி கூடின புளுகம். எங்கட குடும்பம்.பெரியப்பா குடும்பம். அயலில இருந்தும் சிலர் சேர்ந்து கிட்டத்தட்ட எங்களிலேயே 15 உருப்படி இருக்கும்.பஸ்ஸும் நிறைஞ்சு நல்ல சிரிப்பாகவும்,கலகலப்பாகவும் இருக்கும்.
பண்ணைப்பாலத்தை பஸ் தாண்டவே எல்லாமே
புதுசா இருக்கும்.
வட்டக்குவளைக்குள்ள கலர்கலரா
தண்ணீர் நிரம்பி நிற்பதுபோல,
வானமும் கடலை நிரப்பி நீலம்,
வெள்ளை,சிவப்பு,மஞ்சள்
என்று எமக்கு வடிவாக்காட்டும்.
போகப்போக மண்ணின் நிறமே
மாறும்.
உயர்ந்த பனைக்கூட்டங்களும்,வடலிகளும்,
குட்டிக்குட்டியாய் கிடுகுகளால் வேய்ந்த வீடுகளும்,
பனை ஓலைகளால் கட்டிய மாட்டுக்கொட்டில்களுமாய்க்
காட்சிகள் மாறும்.
பனை மட்டைகளால் வரிந்துகட்டின வேலிகள்.
முருகைக்கல்லால் கட்டப்பட்ட
கருங்கற்பாறைகளே(Coral reefs) வேலிகளாக
ஒழுங்கமைச்சு நிரைச்சுக்கு நிற்கும்.
செக்கு இழுக்கும் மாடுகளையும் காணலாம்.
ஒவ்வொரு ஊருக்குள்ளும்,பஸ் நுழைந்து,
வளைந்து வந்து நிற்கும்
பஸ் தரிப்புக்கள்கூட ஆலமரம்,
அரசமரம்,வேம்பு,கோயில்,குளம்,
பள்ளிக்கூடம்,தேநீர்க்கடை,
பலசரக்குக்கடையென நகரத்தில்
இல்லாத வடிவங்கள் புதுமையாய்ச்
செழித்துக்கிடக்கும்.
கடைக்குள் இருந்து வரும் கருவாடு,
பினாட்டு, புகையிலையென
எல்லாம் கலந்த வாசம் என்று அனைத்துமே
இயற்கையுடன் கூடிவாழ்ந்த வாழ்வாய் பிரசன்னமாயின!
ஆடு,மாடு,சேவல்,கோழி,நாய்,பூனையென்று
ஏதோ சில எங்களை எட்டிப்பார்ப்பதுமாய்
இந்த உள்ளக்களிப்பில்தான்
நானும் கண்டு ரசித்தேன்.
ஆச்சி ஓலைப்பெட்டிக்குள்ள
பனங்காய்ப்பணியாரம் கொண்டு வருவா.
பெரியம்மாவும் நல்ல வாசத்தோட
தன்ர கையால சமைச்ச புளிச்சாதமும்
கட்டிக்கொண்டு வருவா.
இறுப்பிட்டி துறைமுகத்தை பஸ் நெருங்க
அடிக்கிற காத்தில பலகாரங்களின்
வாசம் அந்த மாதிரி கொண்டெழுப்பும்.
அம்மாவும்,முறுக்கு, பருத்தித்துறை வடை(தட்டுவடை)யென்று
செய்து கொண்டு வருவா.
அதுக்குள்ள வாழையிலயில வைச்சு,நியூஸ் பேப்பரில சுத்தி
தோசையும்,சம்பலும் அயல் வீட்டுக்காரரும் கொண்டு வந்து,
எல்லோருமாகப்பகிர்ந்து சாப்பிடுவம்.
அடடா,என்ன சமத்துவ வாழ்க்கை அது!
எழும்பி அடிச்ச அலைகளில இருந்து வந்த
உப்புத் தண்ணி சில பேரின்ர முகங்களையும் கழுவுது.
ஒருவர் மாறி ஒருவராக
திரு ஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரமூர்த்தி நாயனார்
என உள்ளத்தை உருக்கியபடி,
"அம்மாளாச்சி எங்களைக்கைவிடமாட்டா"
என்ற நம்பிக்கையை தளரவிடாது
தேவாரங்களை பாடிக்கொண்டேயிருந்தனர்.
அவற்றை முழுமையாக உள்வாங்க என்மனம் மறுக்கிறது.எனக்கும் அழுகை வந்துவிட்டது. என்றாலும்கூட அந்த அம்மாளாச்சிதான் எனக்கு முன்னாள் இப்பவும் நிற்கிறாள். அம்மாவும் மடிக்குள் என்னைப்புதைத்து வைத்துக்கொண்டு,"என்ர குஞ்சு,கண்ணை மூடுங்கோ,சாமியைக் கும்பிடுங்கோ,ஒன்றுமே நடக்காது.கிட்ட வந்திட்டம் இன்னும் கொஞ்ச நேரம்தான். அதுக்குள்ள அம்மாளாச்சி தெரிவா"என்றா.
அந்தக் காட்சியை இன்றும்தான் என் மனம் பதித்து வைத்திருக்கின்றது.அந்தக் கணங்களை மறக்கவே முடியாது.
எப்போ போய்ச்சேருவோம், அடுத்த நிமிடமே கரை வந்திடாதா. கோபுரம் தெரியாதா. எங்களைக்காப்பாற்ற மீன்பிடிக்கப்பலாவது பக்கத்தில வந்தால்,எங்களை அவர்கள் காப்பாற்றி விடுவார்களே! 'நல்லூர்க்கந்தா செல்வச் சன்னதி முருகா' என்று இன்னும் பக்தர்களின் வேண்டுதல் நின்றபாடில்லை.
எழுந்து விழுந்த அந்த இராட்சச அலை மெல்ல,மெல்லத்
தனது தாண்டவத்தை நிறுத்திக்கொண்டது.
உப்புநீரின் நுரைகள் காணாமல் போயின.
காற்றின் வேகம் குறைந்ததை வள்ளத்தின் ஆட்டத்தால் கணிக்க முடிந்தது.
நயினாதீவு நாகபூசணியின் கோபுரம் பக்தர்களின் பார்வைக்கு அருளாகியது.
"அரோஹரா"என்று உள்ளம் உருகி அழுத பக்தர்களின் உரத்த ஒலிமட்டும்
அந்தத்தாய்க்கு ஏற்கனமே நிச்சயமாகக் கேட்டிருக்கும்!
50 வருடங்களின்பின் அதே நீலக் கடல்.
ஆனால்,இம்முறைப் பயணம் குறிகாட்டுவானிலிருந்து! 20,25 நிமிடங்களில்
நீரைக்கிழித்துக்கொண்டு கப்பல் சென்ற போதும்
பரவசத்தைத் தவிர,மனசுக்குப் பயம் ஏதும் இருக்கவில்லை
எனக்கு.நயினாதீவு நாகபூசணியின் கோபுரத்தை நெருங்க,நெருங்க,
நினைவுகளும் என்னை வருடி வருடி
தலைகோதித் தாலாட்டின!
நாகபூசணி அம்மாளும்,
அந்த வர்ணங்கள் நிறைந்த பூவரசம் பூக்களும்,
அந்த மண்ணும் தந்த உயிர்ப்புள்ள நேசத்தை
என்னைப்போல் இன்னும்
எத்தனையோ உறவுகள் உணர்ந்திருக்கலாம்!
[நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் தொடரும்]