கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி எனது வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தியும் ஒரு படமும் வந்திருந்தது. அனுப்பியவர் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான நண்பர் தெய்வீகன். இலங்கையில் சில தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவரான இராசநாயகம் பாரதி, திடீரென உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக படத்துடன் அந்தச்செய்தி கூறியது. தற்போது இலங்கையில் நிற்கும் நண்பர் தெய்வீகனை தொடர்புகொண்டு, பாரதியின் சுக நலன் விசாரித்து, பாரதி விரைவில் நலம்பெறவேண்டுமென பிரார்த்தித்தேன். எமது பிரார்த்தனைகள் சில வேளைகளில் இந்த விதியின் செவிகளுக்கு எட்டுவதில்லைப்போலும் !? கடந்த 09 ஆம் திகதி ( இரண்டு வாரங்கள் கழித்து ) பாரதி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி வருகிறது. மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டியவரின் உயிரை காலன், இரக்கமின்றி பறித்துவிட்டானே என்ற கோபம்தான் எழுகிறது.
கவியரசு கண்ணதாசன், 1981 இல் அமெரிக்கா – சிக்காகோவில் திடீரென மறைந்தபோது, கவிஞர் வாலி சொன்ன கூற்றுத்தான் தற்போது நினைவுக்கு வருகிறது. வாலி இவ்வாறு சொன்னார்: “ எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருத்தன். அழகிய கவிதைப் புத்தகத்தை கிழித்துப்போட்டுவிட்டான். “
1997 ஆம் ஆண்டு கொழும்பு – மட்டக்குளியாவில் தினக்குரல் நாளிதழும் வார இதழும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே எனக்கு பாரதியின் அறிமுகமும் தொடர்பாடலும் கிடைத்தது. அதற்கு முன்னர், பாரதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகளில் பணியாற்றிய காலப்பகுதியில் நான் அவுஸ்திரேலியா வாசியாகிவிட்டேன். அக்காலப்பகுதி இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் போர் மேகங்களினால் சூழ்ந்திருந்தது.
ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம், இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் போன்று எமது ஊடகவியலாளர்கள் சிக்குண்டிருந்தனர். இலங்கை – இந்திய ஆயுதப்படைகளினாலும் ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களினாலும் பல ஊடகவியலாளர்கள் - எழுத்தாளர்கள் கொல்லப்பட்டனர். சிலர் காணாமலாக்கப்பட்;டனர். இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவானதன் பின்னர் வடக்கு – கிழக்கிற்குள் பிரவேசித்த இந்திய அமைதிப்படை ( ? ) தனது கைவரிசையை வடக்கிலிருந்து வெளியான தமிழ் ஊடகங்களிலும் காண்பித்தது.
பாரதி முதலிலும், அதன் பின்னரும் பணியாற்றிய யாழ். ஈழமுரசு மற்றும் முரசொலி ஆகியனவற்றின் பிரதம ஆசிரியராகவிருந்தவர் எஸ்.தி. என எம்மால் என்றும் அழைக்கப்படும் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் எஸ். திருச்செல்வம். முரசொலி பத்திரிகை இந்தியப்படையின் தளபதிகளின் அச்சுறுத்தலுக்கும் அழுத்தங்களுக்கும் ஆளாகியிருந்த வேளையில் பாரதியும் நெருக்கடிக்கு ஆளானவர். முரசொலி பத்திரிகை அலுவலகம் இந்தியப் படையினால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. அதன் பிரதம ஆசிரியர் எஸ். தி. யின் ஏக புதல்வனும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவனுமான சிறந்த துடுப்பாட்ட வீரர் செல்வன் அகிலன் நடுவீதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தியப்படைகளின் விசாரணைகளையெல்லாம் சந்தித்த அனுபவம் மிக்கவர்தான் பாரதி. பின்னாளில் கொழும்புக்கு இடம்பெயர்ந்த அவர், வீரகேசரி பத்திரிகையில் துணை ஆசிரியராக இணைந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் நடந்த வாகன விபத்தொன்றில் தனது வலது கரத்தையும் முற்றாக இழந்து அவதியுற்றார். பின்னர் செயற்கையான கையைப் பொருத்திக்கொண்டு, தன்னம்பிக்கையுடன், ஒரு கரத்தினால், கணினியை இயக்கி செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் பதிவேற்றி வந்தார். அத்துடன் வெளியிலிருந்து கிடைக்கப்பெறும் ஆக்கங்களையும் செம்மைப்படுத்தினார்.
பாரதியின் அருமைத்தந்தையார் சு. இராஜநாயகன். வடபுலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். எழுத்தாளர். மறுமலர்ச்சி இதழின் சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்றவர். அவ்வாறு அவர் படைப்பிலக்கியவாதியாக அறிமுகமானபோது திருநெல்வேலி சைவ வித்தியாசாலையில் எஸ். எஸ். சி. பயின்றுகொண்டிருந்த மாணவர். பின்னாளில் தூயகணித ஆசிரியராக யாழ். பரமேஸ்வராவிலும் யாழ். இந்துக்கல்லூரியிலும் பணியாற்றியவர்.
1973 ஒக்டோபர் மாதம் வெளியான மல்லிகை இதழின் முகப்பினை அலங்கரித்தவர் சு. இராஜநாயகன் ஆசிரியர். இவரது பள்ளி வகுப்புத் தோழர் த. தியாகராஜன்தான், இவரைப்பற்றிய விரிவான அறிமுகக் கட்டுரையை அவ்விதழில் எழுதியிருந்தார்.
1975 ஆம் ஆண்டு எனது முதலாவது கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் வெளியான வேளையில் அதே ஆண்டில் மல்லிகை ஜீவா யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அந்த நூலுக்கு அறிமுக அரங்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு, என்னை அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு இராஜநாயகன்தான் தலைமை தாங்குகிறார் என்ற தகவல், மண்டபத்தை சென்றடைந்த பின்னர்தான் எனக்குத் தெரியும். அக்காலப்பகுதியில் இராஜநாயகன் அவர்களின் இரண்டாவது புதல்வன் பாரதி பாடசாலையில் படிக்கும் 13 வயது மாணவன். இந்த பசுமையான நினைவுகளை பின்னாளில் கொழும்பில் பாரதியுடன் பகிர்ந்திருக்கின்றேன்.
பாரதியும் கல்லூரிப் படிப்பினையடுத்து, தமது தந்தையாரைப் போன்று எழுத்தாளனாகவும் ஊடகவியலாளனாகவும் மாறினார். இவரது அண்ணன் பரதன், சிறந்த ஒளிப்படக்கலைஞர். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் செய்தி ஊடகப்பிரிவிலும், நிதர்சனம் தொலைக்காட்சியிலும் பணியாற்றியவர். சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து சென்று, அவரும் திடீரென மாரடைப்பு வந்து காலமானார்.
பாரதி , 1990 இற்குப்பின்னர் கொழும்பு வந்து வீரகேசரியில் முதலிலும் பின்னர் தினக்குரலிலும் பணியாற்றினார். அவ்வேளையில் தினக்குரலில் உதவி ஆசிரியராக பணியாற்றிய தேவகியை மணந்தார். இவர்களின் மகன் பார்த்தீபன் தற்போது கனடாவில். பாரதி, தினக்குரல் வாரப்பதிப்பின் ஆசிரியராக பொறுப்பேற்ற காலப்பகுதியில் எனது சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியச் செய்தி மடல்கள், மற்றும் பயணத் தொடர் கட்டுரைகளையும் வெளியிட்டு எனக்கு சிறந்த களம் வழங்கினார்.
2007 – 2008 காலப்பகுதியில் கனடா, கியூபா, தமிழ்நாடு சென்று திரும்பிய பின்னர் நான் எழுதிய வட்டத்துக்கு வெளியே என்ற நீண்ட பயண இலக்கியத் தொடர் உட்பட, பல நூல் விமர்சனங்களுக்கும் தினக்குரல் வார இதழில் களம் தந்தார். நாம் அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் நடத்திவரும் தமிழ் எழுத்தாளர் விழா பற்றிய செய்திக்கட்டுரைகளையும் சிறப்பாக வெளியிட்டுள்ளார்.
அத்துடன், 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நாம் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலம் முதல், இறுதிவரையில் தினக்குரலில் போதிய செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு, எமக்கு பக்க பலமாகவும் இருந்தார். அவ்வேளையில் தினக்குரல் பிரதம ஆசிரியராக பணியாற்றிய நண்பர் வீரகத்தி தனபாலசிங்கம், தினக்குரலில் ஆசிரிய தலையங்கம் தீட்டி, மாநாட்டின் வெற்றிக்கு துணைசெய்தார். மாநாட்டின் தேவைகளுக்கான நிதிப்பங்களிப்பை தினக்குரல் நிருவாகத்தின் தலைவர் அன்பர் திரு. சாமி அவர்கள் வழங்குவதற்கும் பாரதியும், தனபாலசிங்கமும் பின்னணியிலிருந்தார்கள் என்பதற்கு நானும் ஒரு சாட்சி.
பாரதி, பல புகலிட எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் தொடர்ந்தும் தினக்குரலில் சிறந்த களம் வழங்கியவர். பாரதியின் திடீர் மறைவு அவர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை இந்த அஞ்சலிப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் உணருகின்றேன்.
சில வருடங்களுக்கு முன்னர் பாரதி கனடா தமிழர் தகவலின் விருதினையும் பெற்றிருந்தார். ஜெனீவாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தொடருக்காகவும் அங்கே சென்று, செய்திகளை உடனுக்குடன் அனுப்பிக்கொண்டிருந்தவர். தமிழ் ஊடகவியலாளர்களின் தேவைகைளுக்காகவும் உரிமைகளுக்காகவும் இயங்கி வந்திருக்கும் பாரதி , தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திலும் முக்கிய பதவிகளை வகித்தவர்.
சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த ஒன்றியத்தின் கூட்டம் ஒன்றிற்கும் என்னை அழைத்திருந்தார். இக்கூட்டத்திற்கு பாரதியே தலைமை தாங்கினார். 1997 ஆம் ஆண்டின் பின்னரே எனக்கு இலங்கை சென்று வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்வாண்டிலிருந்து, இலங்கை செல்லும் போதேல்லாம் பாரதியை சந்திப்பதற்கு நான் தவறுவதில்லை.
இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்டகாலமாக இயங்கும் எமது தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் யாழ். மாவட்ட மாணவர்களின் ஒன்றுகூடல் – நிதி வழங்கல் – தகவல் அமர்வு நிகழ்ச்சி, யாழ்ப்பாணம் அரச அதிபர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றவேளையில் , எனது அழைப்பினை ஏற்று பாரதியும் திருநெல்வேலியிலிருந்து வருகை தந்து கலந்துகொண்டு உரையாற்றினார். இவருடன், மற்றும் ஊடகவியலாளர்களான வீரகத்தி தனபாலசிங்கம், ரவி வர்மா, அரசியல் பத்தி எழுத்தாளர் தருமகுலசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
01 -07 -2023 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியே நான் பாரதியை நேருக்கு நேர் இறுதியாக சந்தித்த தருணம். அதன்பின்னர் அவ்வப்போது தொலைபேசி, மின்னஞ்சல் தொடர்பிலிருந்தேன். நான் மாத்திரமல்ல, நான் வதியும் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை சென்று திரும்பிய எழுத்தாளர்கள் ( அமரர் ) அருண், விஜயராணி, பேராசிரியர் ஆசி. கந்தராஜா, நொயல் நடேசன், ஆவூரான் சந்திரன், பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா, கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியன், நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் ஆகியோரும் பாரதியை நேரில் சந்தித்து உரையாடுவது வழக்கம். இவர்களின் நேர்காணல்களும் பாரதியின் முயற்சியினால், தினக்குரலில் வெளிவந்துள்ளன.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாடு எழுத்தாளர்களின் நேர்காணல்களுக்கும் இவர்தம் இலக்கிய பிரதிகளுக்கும் பாரதி, களம் கொடுத்து, ஊக்குவித்து வந்தவர். அதனால், பாரதியின் திடீர் மறைவு இவர்களை மனதளவில் பெரிதும் பாதிக்கிறது.
பாரதி திடீரென சுகவீனமுறுவதற்கு முன்னர் பல மாதங்களாக தமிழக தொலைக்காட்சி காணொளிகளிலும் இலங்கை அரசியல் நிலவரம் பற்றிய செய்திகளை தொகுத்து வழங்கிக்கொண்டுதானிருந்தார். இந்தப்பதிவினை படிக்கும் வாசகர்கள் அதில் ஒரு இணைப்பினை இங்கே காணலாம். இறுதியாக வீரகேசரியின் வடபிராந்திய பதிப்பின் ஆசிரியராகப் பணிபுரிந்தவேளையிலேயே பாரதி , திடீரென சுகவீனமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறைந்துவிட்டார்.
பாரதி, யாழ் . ஈழநாடு , மாலைக்கதிர், தமிழர் பொருண்மியம், இதழ்களிலும் கிறீன் மீடியா ஊடக இல்லத்திலும் பணியாற்றியவர். தனது அர்ப்பணிப்புள்ள சேவையின் ஊடாக, சமூகத்தினை பேசவைத்தவர். சுமார் 28 ஆண்டுகாலம் ( 1997 – 2025 ) இலக்கிய மற்றும் ஊடகத்துறையில் சக பயணியாக உடன் வந்த பாசத்திற்குரிய சகோதரன் இராசநாயகன் பாரதிக்கு எனது இதய அஞ்சலி. அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவருடை அன்பு மனைவி தேவகிக்கும் ஏக புதல்வன் செல்வன் பார்த்தீபனுக்கும் மற்றும் கலை, இலக்கிய ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.