நாட்டுப்புறப் பழமொழிகளின் பொருண்மையும் கருத்தாக்கமும் - பி.மோகன பிரியா, முதுகலைத் தமிழிலக்கியம் முதலாமாண்டு, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும், அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி-05 -
ஆய்வுச் சுருக்கம்
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி" தமிழ்க் குடியினர் ஆவார். இத்தகைய தமிழர்கள் தொடக்க காலத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையினை வாழ்ந்து வந்தனர். தாம் வாழும் சூழலை பிறருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவும், தாம் உணர்ந்துக் கொண்ட கருத்தினை பிறருக்கு கூறும் வகையில் மனிதரிடமிருந்து தோற்றம் பெற்றதே வாய்மொழி இலக்கியமான பழமொழியாகும். பழமொழிகளைப் போலவே விடுகதைகளும் வாய்மொழி இலக்கியமாகக் கருதப்படுகின்றன. மக்கள் தங்களின் வாழ்க்கை முறையில் பயன்படுத்திய பழமொழிகளையும் விடுகதைகளையும் வாய்மொழி வழியாகவே வழங்கி வந்தனர். ஆனால் அவற்றினை ஏடுகளில் எழுதவில்லை. அதனால் தான் பழமொழியினை வாய்மொழி இலக்கியம் என்று குறிப்பிடுகின்றனர். ஒருவர் செய்யும் செயலில் ஏதேனும் சில குறைபாடுகள் இருப்பின் அத்தகைய செயலினைச் சுட்டிக்காட்டி அமையக்கூடிய சிறு கருத்தே பழமொழியாகும். நாட்டுப்புற மக்களின் மகுடமாக விளங்கக் கூடியவை நாட்டுப்புற பழமொழிகளாகும் . அன்றைய காலகட்டத்தில் பழமொழிகள் இல்லாத சமுதாயத்தினை நாம் காண முடியாது. ஏனென்றால் அந்தளவிற்கு பழமொழிகள் மக்களிடம் மிகுந்த செல்வாக்கினை பெற்றவையாகவே விளங்கின.
இத்தகைய பழமொழிகள் ஒருவரின் அனுபவப் போக்கினை பிறர் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்தவையாகும். மக்களின் வாழ்வில் சிறப்பு பெற்ற பழமொழிகள் இன்றைய காலத்தில் எவ்வாறு வழங்கப்படுகின்றன, அவற்றினைப் பற்றிய கருத்துகள் என்ன? அவை எந்த பொருண்மையில் மக்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன என்பதைக் குறிப்பிடும் வகையில் இவ் ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.