கடந்த வாரம் இலங்கை மலையகத்திலிருந்து எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, சிட்னியில் வதியும் மூத்த இசைக்கலைஞர் திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதனின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுத்தர முடியுமா..? எனக்கேட்டார். அவரது சில பாடல்களை அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஏற்கனவே இலங்கை வானொலிக்காக இசையமைத்து பாடியிருக்கிறார். அவற்றின் ஒலிநாடாக்கள் தொடர்பாக பேசுவதற்குத்தான் வடிவேலன் அருந்ததியின் தொடர்புகளைக் கேட்டிருந்தார்.
“நான் வசிப்பது மெல்பனில். அருந்ததி சிட்னியிலிருக்கிறார். எவ்வாறாயினும் முயற்சித்து அவரது தொடர்பிலக்கத்தை பெற்றுத் தருகின்றேன். “ என்று அவருக்குச்சொல்லிவிட்டு, சிட்னியில் வதியும் எழுத்தாளர்களும் வானொலி ஊடகர்களுமான கானா. பிரபா, மற்றும் நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசர் ஆகியோரை தொடர்புகொண்டு, அருந்ததி பற்றி விசாரித்தேன்
அவர்கள் அருந்ததியின் தொடர்பு இலக்கத்தை பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாகச் சொன்னார்கள். அதற்கிடையில் கடந்த 17 ஆம் திகதி திங்கட் கிழமை, அருந்ததி மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான தகவலை கானா. பிரபா சொன்னார். எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை என்பதை இசையரசி கலாநிதி அருந்ததியும் நிரூபித்துவிட்டார்.
அருந்ததி ஶ்ரீரங்கநாதனை முதல் முதலில் 1980 களில் இலங்கை வானொலி கலையகத்தில் சந்தித்திருக்கின்றேன். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவ்வேளையில் அங்கு தமிழ்ச்சேவைப் பணிப்பாளராகவிருந்த ( அமரர் ) வி. ஏ. திருஞானசுந்தரம். இவர் இலங்கை வானொலியில் கலைக்கோலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குமாறு கேட்டதுடன், அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் அருந்ததி ஶ்ரீரங்கநாதனை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒரு சில வருடங்கள் அந்த நிகழ்ச்சியை பதிவுசெய்வதற்காக அங்கே சென்ற சமயங்களில் அருந்ததியுடன் உரையாடும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அருந்ததி ஒரு கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அவ்வேளையில் அறிய முடிந்தது. அம்பிகா, ஞானா, யோகா, ஜெயலக்ஷ்மி, ஆகிய சகோதரிகளுக்குப்பின்னர் ஐந்தாவது பிள்ளையாக பிறந்தவர். அம்பிகா தாமோதரம், ஜெயலக்ஷ்மி கந்தையா ஆகியோரும் அருந்ததி ஶ்ரீரங்கநாதனும் எங்கள் நீர்கொழும்புக்கும் இசை மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்காக முன்னர் வந்திருப்பவர்கள்.
1964 ஆம் ஆண்டு எங்கள் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, சாதாரண தர வகுப்புகளைக்கொண்ட வித்தியாலயமாக இயங்கியகாலப்பகுதியில் அதன் அபிவிருத்தி நிதிக்காக நடன நர்த்தகி ஜெயலக்ஷ்மி கந்தையாவின் நாட்டிய நாடகம், நீர்கொழும்பு நகர மண்டபத்தில் நடந்தது. அவ்வேளையில் அருந்ததியும் பின்னணி பாடகராக அந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கவேண்டும் என்பது எனது ஊகம்! அம்பிகா தாமோதரம் 1975 இல் எமது கல்லூரி பழைய மாணவர் மன்றத்தின் நாமகள் விழாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு வருகைதந்தார். அருந்ததி ஶ்ரீரங்கநாதனை இறுதியாக 1997 ஆம் ஆண்டு நான் இலங்கை சென்றிருந்தளையில், எங்கள் ஊரில் நடந்த எனது நண்பரும் எழுத்தாளருமான கவிஞர் நீர்கொழும்பு தருமலிங்கம் அவர்களின் புதல்வியரின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் கண்டு உரையாடினேன். 1980 களில் ஒலிபரப்பான கலைக்கோலம் நிகழ்ச்சிகள் பற்றி பேசிக்கொண்டோம்.
அவர் சிட்னிக்கு வந்துவிட்டார் என்பதை அறிந்திருந்தாலும் நேருக்கு நேர் மீண்டும் சந்தித்து பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று தற்போது வருந்துகின்றேன். இலங்கை வானொலி தொடங்கப்பட்டு நூறு வருடங்களாகின்றன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர் உலகெங்கும் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. அதன்பின்னர் கணினியின் தோற்றத்தையடுத்து இணையத்தளத்தின் அறிமுகம் வந்ததும், மேலும் வானொலி நேயர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆயினும், இன்றும் வானொலி நேயர்களின் ரசனைக்கும் பயன்பாட்டிற்கும் வானொலிகள் இயங்கியவண்ணமிருக்கின்றன. வாகனத்தை செலுத்திக்கொண்டே வானொலியை இயக்கவிட்டு கேட்டுக்கொண்டு பயணிப்பவர்கள், கைத்தொலைபேசியில் கேட்பவர்கள், இணையத்தின் வழியே கேட்பவர்களின் எண்ணிக்கை குறையவேயில்லை.
இந்தப்பின்னணிகளுடன்தான் கொழும்பு ரேடியோ என்ற பெயரில் 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இலங்கை வானொலிதான் உலகிலேயே இரண்டாவது வானொலி நிலையம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது. இனி நாம் அருந்ததியின் இனிமையான குரலை இணையங்களின் ஊடாகத்தான் கேட்கப் போகின்றோம்.
நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் ( 1970 ) தொலைக்காட்சி இருக்கவில்லை. இலங்கை வானொலியின் தேசிய சேவையும், வர்த்தகசேவையும் இலங்கையில் மூவின மக்களையும் பெரிதும் கவர்ந்திருந்த ஊடகமாகத் திகழ்ந்தது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டினரும் விரும்பிக்கேட்ட நிகழ்ச்சிகள் இலங்கை வானொலியில்தான் ஒலிபரப்பாகின. நடிகர் கே. ஏ. தங்கவேலுவும் ஒரு திரைப்படத்தில் இலங்கைவானொலி அறிவிப்பாளர் மயில்வாகனம் பற்றிப்பேசுவார். அந்தளவுக்கு தமிழகத்து நேயர்களையும் கவர்ந்திருந்தது இலங்கை வானொலி.
இலங்கை வானொலிக்கலைஞர்கள் சுந்தா சுந்தரலிங்கம், காவலூர் இராஜதுரை, வி. என் மதியழகன், சில்லையூர் செல்வராசன், கே. எம். வாசகர், அருந்ததி ஶ்ரீரங்கநாதன், பி.எச். அப்துல்ஹமீத், ஜோர்ஜ் சந்திரசேகரன், ஜோக்கின் பெர்னாண்டோ, புவனலோஜனி, ராஜேஸ்வரி சண்முகம், நடராஜசிவம், புஷ்பரத்தினம், கே.எஸ். ராஜா, ஹரிகர சர்மா, சற்சொரூபவதி நாதன், இராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், விவியன் நமசிவாயம், சிவஞானம் , எழில் வேந்தன் ஆகியோருடனும், தமிழ்ச்சேவைப்பணிப்பாளர்கள் கே.எஸ். நடராஜா, பொன்மணி குலசிங்கம், வீ. ஏ. திருஞானசுந்தரம், ஞானம் இரத்தினம் ஆகியோருடனும் தற்போதைய பணிப்பாளர் கணபதிப்பிள்ளை ஆகியோருடனும் எனக்குத் தொடர்புகள் வந்தன. இந்தப்பத்தியில் நான் குறிப்பிடும் சிலர் இன்று எம்மத்தியில் இல்லை. அருந்ததியும் அந்தப்பட்டியலில் இணைந்துவிட்டார்.
அருந்ததி ஶ்ரீரங்கநாதன் இலங்கை வானொலியில் கலைக்கோலம் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இயங்கியபோது, நூல் அறிமுகம், கலந்துரையாடல், நேர்காணல், திரைப்பட விமர்சனம் உட்பட சில நிகழ்ச்சிகள் கலைக்கோலத்தில் இடம்பெறும். கலை, இலக்கியவாதிகள் பெரிதும் விரும்பும் நிகழ்ச்சியாக கலைக்கோலம் அக்காலத்தில் விளங்கியது.
நான் கலைக்கோலம் நடத்திய காலப்பகுதியில் பத்திரிகையாளர்கள் எஸ். எம். கார்மேகம், வீரகத்தி தனபாலசிங்கம், அன்னலட்சுமி இராஜதுரை, பிரணதார்த்தி ஹரன் ( தற்போதைய தினக்குரல் பிரதம ஆசிரியர்) ராஜஶ்ரீகாந்தன் ( முன்னாள் தினகரன் பிரதம ஆசிரியர்) ஆகியோரையும் அழைத்துச்சென்று அருந்ததிக்கு அறிமுகப்படுத்தி கலந்துகொள்ளவைத்திருக்கின்றேன். ஒலிப்பதிவின்போது அருந்ததி உடனிருந்து ஆலோசனைகளையும் வழங்குவார். எமது உச்சரிப்புகளையும் திருத்துவார். ஈழம் என்ற சொல் எமது உரைகளில் வந்துவிடாதிருப்பதிலும் அவரும் பணிப்பாளர் திருஞானசுந்தரமும் மிகுந்த கவனத்துடன் இருந்தனர். எழுத்தாளர்களாகிய நாம் அடிக்கடி ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற பிரயோகத்தை பயன்படுத்துவது இயல்பு. “அதனை உங்கள் பத்திரிகைகளில், இலக்கிய இதழ்களில் வைத்துக்கொள்ளுங்கள் . இங்கே வேண்டாம் “ என்று சிறிய புன்னகையுடன் அருந்ததி சொல்வார்.
இலங்கை தமிழ் இசையுலகில் அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஒரு சாதனைப் பெண்தான். இலங்கை அரசின் கலாசூரி தேசிய விருது, சங்கீத நிகழ்ச்சித் திட்டத்துக்கான யப்பான் விருது, சர்வதேசப் பெண்களமைப்பின் சாதனைப் பெண்மணி விருது, வானொலியின் சிறந்த அறிக்கையாளர் விருது, இன்னிசைக் கலாநிதி, சங்கீத கலாநிதி, கலைச்செம்மல், இசைஞான கலாநிதி, விஸ்வப்பிரசாதினி, சங்கீத சிரோன்மணி, சார்க் அமைப்பின் திறமையான பெண்மணி விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர் .
இலங்கை வானொலிக்காக புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் டி. கே. பட்டம்மாள் ( 1919- 2009 ) கே. ஜே. ஜேசுதாஸ் ஆகியோர் உட்பட பலரை நேர்கண்டு ஒலிபரப்புச்செய்தவர்.
வானொலி – தொலைக்காட்சி உட்பட செய்தி ஊடகங்கள் போட்டி – பொறாமை – சூழ்ச்சி – புறங்கூறல் முதலான இலட்சணங்களையும் உள்ளடக்கியே இருக்கிறது. ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த இந்த ஊடகத்துறையில், தனது, தனித்துவமான ஆற்றல்களை மாத்திரமே நம்பி, படிப்படியாக பல பதவிகளுக்கு உயர்ந்தவர்தான் அருந்ததி ஶ்ரீரங்கநாதன்.
இலங்கை வானொலியில் தாங்கள் கற்றதையும் பெற்றதையும், ஏற்கனவே சுந்தா சுந்தரலிங்கம், ஜோர்ஜ் சந்திரசேகரன், இராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், பி.எச். அப்துல்ஹமீத், பி. விக்னேஸ்வரன், வி. என். மதியழகன், ஞானம் இரத்தினம், வி. ஏ. திருஞானசுந்தரம் ஆகியோர் நூலுருவில் எழுதி வெளியிட்டுள்ளனர். அருந்ததியும் அவ்வாறு எழுதக்கூடியவர்தான். ஆனால், அவர் தான் ஆழமாக நேசித்த இசைத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பினை வழங்கிவிட்டு தமது 83 வயதில் விடைபெற்றுவிட்டார். அன்னாரின் மறைவினால் ஆழ்ந்த துயரத்திலிருக்கும் அவரது புதல்வர்கள் மற்றும் இசை ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன். அருந்ததியின் இனிய குரல்தான் அவர் பற்றிய நினைவுகளுடன் காணொலிகளில் தற்போது எஞ்சியிருக்கிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.