முன்னுரைமனிதன் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் கடைப்பிடிக்க கூடாத செயல்களை தொகுத்தும் பகுத்தும் உரைப்பதே பதினெண்கீழ்க்கணக்கு. இந்நூலில் அறத்தோடு அறிவியல் கருத்துகளும் பொதிந்து கிடந்துள்ளன என்று கூறின் மிகையாகாது. இயற்கையைக் கண்டு மனிதன் அஞ்சத் தொடங்கினான். இவ்வச்சத்தின் விளைவாக பண்டைத்தமிழன் ஐம்பூதங்களையும் வழிபட்டான். ஐம்பூத வழிபாட்டால் பருவத்தையும் நேரத்தையும் அளவிடுவதில் அதீத நாட்டம் கொண்டான். ஐம்பூதங்களில் முதன்மையானது நிலம். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைத்தமிழனின் வாழ்வில் இன்றியமையா இடத்தினைப் பெற்ற நிலம் சார் சிந்தனைகளை இலக்கியங்கள் வழி வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
நிலம்
உலகில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஐம்பூதங்களே. இவ்வைம்பூதங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்த தொடர்பினை உடையவை. இயற்கையோடு இயைந்த பழந்தமிழன், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் போற்றி வழிபட்டதோடு அவற்றின் நுட்பமான இயக்கங்களையும் தனது தொலை நோக்கு பார்வையால் அறிந்துள்ளான் என்பதனை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தெளிவாக்குகின்றன.
ஐம்பூதங்களுள் முதன்மையானது நிலம். உலகில் வாழ்கின்ற ஓரறிவு முதலாக ஆறறிவு உயிரினங்கள் வரையிலானோர் தங்குவதற்கு இடமளிக்கும் பரப்பளவே நிலம். மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவடையச் செய்வதில் நிலம் முக்கிய பங்காற்றுகின்றது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி நிலம் என்ற சொல்லிற்கு, “பயிர் செய்யும் இடம், பூமியின் மேல்பரப்பு, இயற்கைச் சூழலைக் கொண்டு பிரிக்கப்பட்ட நிலப்பரப்பு, தரை”1 என்று பொருள் உரைக்கின்றது. முதற்பொருளில் நிலத்தை முதன்மையாக தொல்காப்பியர் சுட்டும் முறையினை,
“முதல் எனப்படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பு எனமொழிப இயல்பு உணர்ந்தோரே”
(இளம்,தொல்,பொருள்,மரபு.நூற்.950)
என்ற நூற்பா உணர்த்துகின்றது. நிலங்களை அவற்றின் தன்மைக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பண்டைத்தமிழன் பாகுபடுத்தியதோடு காலத்தை அறிந்து கொள்வதற்கும் நிலத்தை உபயோகப்படுத்தினான் என்பதனையும் உணர முடிகின்றது.
காலம் கணித்தல்
பண்டைத்தமிழன் தான் கடந்து வந்த ஒவ்வொரு மணித்துளிகளையும் வானில் இயங்கும் நிகழ்வுகளைக் கொண்டு கணக்கிடத் தொடங்கியதன் விளைவாகவே ‘காலம்’ என்ற ஒரு முறையினை கண்டுபிடிக்க ஏதுவாகியது. வானையறிந்து பருவத்தைக் கணித்து பண்டைத்தமிழன் தொழில் செய்யத் தொடங்கினான். பதினெண்கீழ்க்கணக்கில் பண்டைத்தமிழன் கணித்த காலமுறைகளை,
மாத்திரை
நாழிகை
நாள்
சிறுபொழுது
வாரம்
மாதம்
ஆண்டு
பெரும்பொழுது
என்ற முறைகளில் பகுத்து ஆராயலாம்.
மாத்திரை
காலத்தை கண்டறிய பழந்தமிழன் அறிந்த குறுகிய கால அளவீடுகள் மாத்திரை, நொடி, கணம் ஆகியனவாகும். இவற்றில் கண் இமைக்கும் பொழுதினையும் கை நொடிக்கும் கால அளவினையும் மாத்திரை என்ற அளவில் சுட்டும் முறையினை,
“கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே”
(இளம்,தொல்,எழுத்து,நூல்மரபு,நூற்.7)
என்ற நூற்பாவால் அறியலாம். தொல்காப்பியரின் கருத்திற்கு மாறாக அறிவியலறிஞர்கள் கண்இமைக்கும் பொழுதினை அரைகால் மாத்திரையாகவே கணக்கிடுகின்றனர். கணம் என்ற அளவீட்டை வள்ளுவர்,
“குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது” (பரிமேலழகர்,திருக்குறள்,29)
என்ற குறளில் இயல்பாக எடுத்துரைக்கின்றார். நல்ல குணத்தாரின் சினமானது கணப்பொழுதில் நீங்கி விடும் என்பதனை அறிய முடிகின்றது. இன்றும் ‘கணப்பொழுதில் வந்து விடுவேன், கணப்பொழுதில் செய்கின்றேன்’ என்ற முறைகளிலெல்லாம் இச்சொல் தற்காலத்தில் வழக்கில் உள்ளது.
நாழிகை
மாத்திரைக்கு அடுத்து பண்டைத்தமிழன் பயன்படுத்திய பெரிய கால அளவே நாழிகை. இந்நாழிகையின் அளவினை அன்னிதாமசு, “ஒரு நாழிகை என்பது 24 மணித்துளிகளை உள்ளடக்கியது. இதயத் துடிப்பாகிய நாடியே, நொடியை உருவாக்கிக் கணக்கிடச் செய்த இயற்கை உந்துதலாக அமைந்திருக்கலாம் எனில் அதுவே நாடி- நாழி - நாழிகை என்ற அமைப்புருவாக்கத்திற்கும் காரணமாகலாம்.”2 என்ற முறையில் தன் நூலில் பதிவிட்டுள்ளார். அறுபது நாழிகையே ஒரு நாளாகும். இதனையே ‘அல்லும் பகலும் அறுபது நாழிகை’ என்ற பழமொழி சுட்டுகின்றது. 7 ½ நாழிகை சேர்ந்த பொழுதினை யாமமாக கருதும் முறையினை,
“…..யாமமும்
நாழிகை யானே நடந்தன”
(பு.சி.புன்னைவனத்துமுதலியார்,நான்,பா.அடிகள்.74:1-2)
என்ற பாடலடிச் சுட்டுகின்றது. பழங்காலத்தில் நாளிகையை அளவிட்டு உரைப்பதற்கு ‘நாழிகைக் கணக்கர்’ இருந்தனர். அவர்கள் ‘நாழிகை வட்டில்’ என்ற கருவி கொண்டு காலத்தை அளவிட்டனர். சங்க கால வாழ்வியல் என்ற நூலானது நாழிகைக் கணக்கரை, “ஒரு நாட்பொழுதில் ஓரையைக் கணக்கிடும் சில்லறை அதிகாரிகள் நாழிகைக் கணக்கர்.”3 என்று குறிப்பிடுகின்றது. மேலும் இந்நாழிகைக் கணக்கர்கள் குறுநீர்க்கன்னல் மற்றும் ஞாயிற்றின் நிழலைக் கொண்டு அளக்கும் ‘ஞாயிற்றுக்கடிகை’ என்ற கருவிகளையும் பயன்படுத்தி நாழிகையை கணக்கிட்டுள்ளனர்.
நாள்
இருபத்தி நான்கு மணிநேரம் ஒரு நாளாக கருதப்படுகின்றது. நாள் என்ற சொல்லினை தமிழ் லெக்சிகன், “காலை, விடியல்”4 என்று பொருள் கொள்கின்றது. அன்னிதாமசு நாளினை, “பகல்பொழுது என்னும் நாள் கதிரவனை அடிப்படையாக்கியும், ஒரு நாள் அல்லது முழுநாள் என்பது விண்மீனை அடிப்படையாக்கியும் பொருந்துகின்றது எனல் தகும்”5 என்கிறார். மேலும் நாளின் தோற்றத்தினை அன்னிதாமசு தன் நூலில், “கதிரவன் மறைந்து இருள் சூழும் நேரத்தில் மட்டுமே விண்மீனை நாண்மீனைக் காண்டல் இயலும் என்ற நிலையில் இவ்வந்திப்பொழுது மாலை நேரம் முதன்மை பெறுகின்றது. பகலின் தொடக்கம், சூரியன் தோற்றத்தில் அமைந்தாலும் நாளின் தொடக்கம் விண்மீன் தோன்றும் மாலையில் தொடங்குகின்றது.”6 என்று குறிப்பிடுகின்றார். தற்காலத்தில் நாளின் தொடக்கம் நள்ளிரவு என்பதனை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் கொண்டு நாம் அறியலாம். நாட்கள் கழிவதை அறிந்தும் அது நிலையாக இருக்கின்றது என்று நம்புவர்கள் தங்களின் வாழ்நாளும் கழிகின்றது என்பதனை உணராதவர்கள் ஆவார் என்றுரைக்கும் நாலடியாரின் பாங்கினை,
“வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்” (இளவழகனார்,நாலடி,பா.எ.39)
என்ற பாடலடிகளால் அறியலாம். நாள் ‘வைகல்’ என்ற சொல்லினால் சுட்டப்படுகின்றது. வைகல் என்ற சொல்லின் பொருளை பெ.துரைசாமி தன் நூலில், “வைகல் என்பது தங்குதல் என்றும், கழிதல் என்றும் பொருள்படும். ஒளியும் இருளும் தங்குதலும் ஒளியும் இருளும் அகலுதலும் கருதி வைகல் என்றும், பொழுதைப் பாகுபாடு செய்தல் கருதிப் பகல் என்றும் வழங்கப்பட்டுள்ளது.”7 என்ற முறையில் விளக்கம் தருகிறார். இதே போல் நாள் என்பது ‘உயிரை வாங்கும் நாளாகும் என்பதனை வள்ளுவம்,
“நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்” (பரிமேலழகர்,திருக்குறள்,334)
என்ற குறளில் வெளிப்படுத்துகின்றது. மேலும் நாட்களை பழந்தமிழன் வீட்டுச் சுவரில் ஒவ்வொரு கோடாக போட்டு எண்ணி வந்த முறையினை வள்ளுவர் உணர்த்தும் பாங்கினை,
“வாள்அற்றுப் புற்கொன்ற கண்ணும் அவர்சென்ற
நாள் ஒற்றித் தேய்ந்த விரல்” (பரிமேலழகர்,திருக்குறள்,1261)
என்ற குறளால் அறியலாம். இதே போல் தலைவனைப் பிரிந்த தலைவி சூரியன் மறையும் பொழுதில் வருந்தி தன் மெல்விரலால் தலைவனைப் பிரிந்த நாட்களை எண்ணும் முறையினை,
“……மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் துணைமேற் கிடந்து” (இளவழகனார்,நாலடி,பா.அடிகள்.394:2-4)
என்ற பாடலடிகளால் அறியலாம். சூரியனின் தோற்றம் மட்டுமின்றி சுவற்றில் கோடு இட்டும், விரல் எடுத்தும் பண்டைத்தமிழன் நாட்களை கணக்கிட்டுள்ளான் என்பதனை அறிய முடிகின்றது.
சிறுபொழுது
இருபத்தி நான்கு மணிநேரம் சேர்ந்த ஒரு நாளினை தொல்காப்பியர் ஆறு பிரிவாக பகுத்தார். இதனையே சிறுபொழுது என்பர். ஒவ்வொரு பத்து நாழிகையினையும் ஒரு சிறு பொழுதாகக் கணக்கிட்ட பண்டைத்தமிழன் பொழுதுகளுக்கு மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு என்று பெயரிட்டனர். மேற்கு மலையில் கதிரவன் மறையும் மாலைப்பொழுதில் வெண்ணிற திங்கள் தோன்றும் மாலைப் பொழுதினை,
“….வாழிபோல் ஞாயிறு கல்சேரத் - தோழியோ!
மான்மாலை தம்மு னிறம்போன் மதிமுளைப்ப
யான்மாலை யாற்றே னினைந்து”
(அ.நடராசப்பிள்ளை,திணை.மா.நூற்,பா.அடிகள்.97:1-3)
என்ற பாடலடி விளக்குகின்றன. தலைவனைப் பிரிந்த மகளிர்க்கு மாலைப் பொழுது துன்பம் தரும் முறையினை,
“…..மற்றியாருமின் னெஞ்சினே மாகி யுறைவேமை
யீரு மிருண்மாலை வந்து” (அ.நடராசப்பிள்ளை,ஐந்.ஐம்,பா.அடிகள்.6:2-4)
“இருன்பரந் தாழியான் றன்னிறம்போற் றம்மு
னருள்பரந்த வாய்நிறம் போன்ற - மருள்பரந்த
பால்போலும் வெண்ணிலவும்….”
(அ.நடராசப்பிள்ளை,திணை.மா.நூற்,பா.அடிகள்.96:1-3)
என்ற பாடலடிகளால் அறியலாம். யாமத்தின் இறுதிப்பகுதி வைகறையாக கணக்கிடப்படுகின்றது. இருள் அகலும் காலமே வைகறையாகும். தொல்காப்பியத்திற்கு அடுத்து தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கில் மாலையன்றி வைகறைப் பொழுதே முதன்மையாக கணக்கிடப்பட்டுள்ளது என்பதனை அறிய முடிகின்றது.
வாரம்
ஏழு நாட்கள் சேர்ந்ததே ஒரு வாரம் ஆகும். ஏழு கோள்களின் பெயர்களே வார நாட்களுக்கு பெயர்களாக கொடுக்கப்பட்டுள்ளன. வாரம் பற்றிய குறிப்பு கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தில் காணப்படுவதை பொன்சாருமதி தன் நூலில், “மத்திய இந்தியாவில் உள்ள சாகர் என்னுமிடத்தில் காணப்படும் கி.பி.484 ஆம் ஆண்டுக் கல்வெட்டுத் தான் முதல் முதலாகக் கிழமை பற்றிக் குறிப்பிடுகின்றது.”8 என்ற முறையில் குறிப்பிடுகின்றார். கொண்டல் சு.மகாதேவன் என்பவர் வாரநாட்கள் பற்றிய தெளிவான வரையறையை, “தேய்ந்து வளரும் திங்களது பிறைகளைக் கொண்டுதான் மனிதன் ஏழுநாள் கொண்ட வாரத்தை அமைத்தான்.”9 என்ற முறையில் தெளிவுப்படுத்துகின்றார். பிரிந்தவர் திரும்பி வருதலை எதிர்பார்த்து ஏங்கி இருப்பவர்களுக்கு ஒரு நாள் பொழுதும் ஏழுநாள் கொண்ட வாரமாக திகழ்கின்ற முறையினை வள்ளுவர்,
“ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேண்சென்றார்
வருநாள் வைத்துஏங்கு பவர்க்கு” (பரிமேலழகர்,திருக்குறள்,1269)
என்ற குறளில் வெளிப்படுத்துகின்றார்.
மாதம்
மாதம் என்பது திங்கள் என்று சுட்டப்படும். மயிலை சீனிவேங்கடசாமி மாதத்தினை, “பண்டைக் காலத்திலே மக்கள் திங்களின் (நிலாவின்) தேய்வையும், நிறைவையும் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டார்கள். திங்களாகிய வெண்ணிலா பதினைந்து நாள் வளர்ந்து, பதினைந்து நாள் தேய்கிற காலத்தை - முப்பது நாட்களை - ஒரு திங்கள் என்று கணக்கிட்டு வணங்கினார்கள்.”10 என்று விரித்துரைத்துள்ளார். புவி ஞாயிற்றைச் சுற்றிவரும் நீள்வட்டப் பாதையை 12 பகுதிகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நாள்மீன் குழுக்களுக்கு ஒவ்வொரு பெயரிட்டு ஓரை என அழைத்தனர். ஒவ்வொரு ஓரையிலும் ஞாயிறு தங்கிச் செல்லும் கால அளவே மாதமாகும். கார்த்திகைத் திங்களில் நிரை நிரையாக விளக்கிட்டு திருவிழா கொண்டாடும் முறையினை,
“நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி….” (ந.மு.வே,கார்,பா.அடிகள்.26:1-3)
“…தாக்கி யெறிதர வீழ்தரு மொண்குருதி
கார்த்திகைச் சாற்றிற் கழி விளக்கைப்
போன்றனவே….” (ந.மு.வே,களவழி,பா.அடிகள்.17:2-3)
என்ற பாடலடிகளால் அறியலாம். இன்று வரை கார்த்திகை மாதம் விளக்கேற்றும் வழக்கம் நம்மிடையே வழக்கில் உள்ள முறைமையினை அறிய முடிகின்றது.
ஆண்டு
பன்னிரு மாதங்கள் சேர்ந்தது ஓர் ஆண்டாகும். புவி ஞாயிற்றைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவான 365 நாட்களும் ஓர் ஆண்டாகும். இலக்கியங்களில் யாண்டு என்று பதிவு செய்துள்ளனர். தற்காலத்தில் ஆண்டு, வருடம் என்று அழைக்கப்படுகின்றன. எனவே யாண்டு என்பதன் திரிபே ‘ஆண்டு’ என்றாக மாறியிருக்கும். ஆண்டின் பெயர்க்காரணத்தை மாத்தளை சோமு என்பவர், “ஆண்டு என்ற சொல்லைக் கூட இயற்கையிலிருந்து பெற்றிருக்கின்றனர் தமிழர். வருடை என்பது ஒரு வகை ஆட்டினத்தின் பெயர். இது ஆண்டிற்கு ஒரு முறையே குட்டி போடும். எனவே இதன் பெயரால் தான் வருடை, வருடம், வருசம் ஆகிய சொற்கள் உண்டாயின”11 என்று குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் யாண்டு என்ற சொல்லாடலை கையாளும் முறையினை,
“வேண்டிய கல்வி யாண்டுமூன்று இறவாது”
(இளம்,தொல்,பொருள்,கற்பியல்,நூற்.47)
என்ற நூற்பா விளக்குகின்றது. பழங்காலத்தில் ஊழி என்ற பேரெல்லை கால அளவீடும் பயன்பாட்டில் இருந்தன. ஆண்டுகளானது ஊழி என்று மட்டும் கருதினர். எத்தனை ஆண்டுகள் சேர்ந்தன ஊழி என்ற வரையறை இல்லை. இதே போல் நான்மணிக்கடிகை ஆண்டுகளால் ஆனது ஊழி என்பதனை,
“ஊழியும் யாண்டெண்ணி யாத்தன….”
(பு.சி.புன்னைவனத்துமுதலியார்,நான்,பா.அடி.74:1)
என்ற பாடலடிச் சுட்டுகின்றது. இதேபோல் ஊழிகளாலானது வெள்ளம் என்ற பேரெல்லை அளவீட்டால் கணக்கிடப்படுகின்றது என்பதனையும் அறிய முடிகின்றது.
பெரும்பொழுது
இன்று வரை பன்னிரு மாதங்கள் ஓர் ஆண்டுகளாக கணக்கிடப்படுகின்றன. தொல்காப்பியர் இரண்டு மாதங்கள் இணைந்த பொழுதினை பருவங்களாகப் பதிவு செய்துள்ளார். அதாவது கார், கூதிர், முன்பனி, பின்பனி, முதுவேனில், இளவேனில் ஆகிய பருவங்கள் பெரும்பொழுதாக பகுக்கப்பட்டுள்ளன. இப்பருவங்கள் ஒவ்வொன்றும் இரு மாதங்களின் இணைப்பாகும்.
பதினெண்கீழ்க்கணக்கில் கார்பருவம் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியர் வகுத்த பெரும்பொழுதில் கார்பருவமே முதன்மையானது. தற்காலத்தில் இப்பருவம் ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களைக் குறிக்கும் காலமாகும். மழை பெய்யும் காலமாதலின் இஃது கார் காலம் என்று சுட்டப்பட்டது. தலைவனின் வருகைக்காக காத்திருக்கும் தலைவியின் மேனி மிளிர்கின்ற கார்கால பருவங்களை,
“…..கார்தரு மாலை கலந்தார் வரவுள்ளி
யூர்தரு மேனி பசப்பு” (அ.நடராசப் பிள்ளை,கைந்,பா.அ.27:3-4)
என்ற பாடலடி விளக்குகின்றது. பிரிவாற்றமையை பிரிந்த தலைவன் கார்பருவத்தில் நீக்க மாட்டாரோ, என்பதனை,
“…..வார்கலி வானம் பெயறொடங்கிக் - கார்கொள
வின்றாற்ற வாரா விடுவார்கொல் காதல….”
(அ.நடராசப்பிள்ளை,ஐந்.எழு,பா.அடிகள்.23:2-3)
என்ற பாடலடி விளக்குகின்றது. மேலும் கார்காலச் சிறப்பினை கார்நாற்பது என்ற நூல் மிக அழகுற காட்சிப்படுத்தியுள்ளது.
தொகுப்புரை
இயற்கையின் சீற்றத்தைக் கண்டு மனிதன் அச்சப்பட்டதின் விளைவாகவே ஐம்பூதங்களையும் இறைவனாக வழிபடத் தொடங்கிய முறையினை அறிய முடிகின்றது.
ஐம்பூதங்களின் கலப்பே உலகம் என்பதனையும் ஐம்பூதங்களில் முதன்மையானது நிலம் என்பதனையும் இலக்கியங்கள் வழி அறிய முடிகின்றது.
நிலத்தின் தன்மைக்கேற்ப ஐந்து வகையாக நிலங்களை பாகுபடுத்திய முறைமையினை அறிய முடிகின்றது.
பண்டைத்தமிழன் மிகக்குறுகிய கால அளவான மாத்திரைத் தொடங்கி பேரெல்லை அளவான வெள்ளம், ஊழி வரையிலான காலக்கட்டத்தை இயற்கையை நோக்கி நுட்பமான முறையில் கணித்துள்ள பண்டைத்தமிழனின் நிலம் சார் சிந்தனை அளவிடற்கரியது.
குறிப்புகள்
க்ரியாவின் தற்காலத் தமிழ்அகராதி,ப.829
அன்னிதாமசு,தமிழியல்,ப.16
சங்ககால வாழ்வியல்,ப.130
தமிழ் லெக்சிகன், தொகுதி4, ப.2232
அன்னிதாமசு,தமிழியல்,ப.13
அன்னிதாமசு, தமிழியல், ப.14
பெ.துரைசாமி, தமிழரின் வானியல் கோட்பாடுகள்,ப.212
பொன்சாருமதி, தமிழ்ச்செவ்விலக்கியங்களில்வானியல், ப.242
கொண்டல்.சு.மகாதேவன்,கோள்களின்குறும்பு,ப.93
மயிலை சீனிவேங்கடசாமி, அஞ்சிறைத்தும்பி,ப.49
மாத்தளை சோமு, வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,ப.231
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.