முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று இலேச அணி அணியாகும். தண்டியலங்காரத்தில் இலேச அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
இலேச அணி
கருதியதை வெளிப்படுத்தும் சத்துவமாகிய குணங்களைப் பிறிதொன்றால் நிகழ்த்துவனவாக மறைத்துக் கூறுவது இலேசம் என்னும் அலங்காரமாகும்.
"குறிப்பு வெளிப்படுக்கும் சத்துவம் பிறிதின்
மறைத்துரை யாடல் இலேசம் ஆகும்"
(தண்டியலங்காரம் 38)
சொல்லில் மறைத்துக் கூறுதல், உடல் மொழி வழி வெளிப்படுத்துதல்.
இலேச அணியின் வகைகள்:2
"புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்
பழிப்பது போலப் புகழ்புலப்படுத்தலும்
அவையும் அன்னதென்று அறைகுநர் உளரே"
(தண்டியலங்காரம் 39)
ஒன்றைப் புகழ்ந்துரைத்தலைப் போன்று காட்டிப் பழித்தலும், பழித்தலைப் போன்று காட்டிப் புகழை விளம்புதலும் ஆகிய இவ்விரண்டும் இவ் இலேச அலங்காரத்தின் வகையாக உரைப்பவரும் உள்ளனர்.
புகழ்வது போலப் பழித்தல்:
ஒருவரை அல்லது ஒன்றினைப் புகழ்வது கூறுவதுபோல உரைத்து அதன் வழி மேவும் பழிப்பினைக் கூறுதலாகும்.
பழிப்பது போலப் புகழ்தல்:
ஒருவரை அல்லது ஒன்றினைப் பழிப்பது போல சாற்றிப் புகழ்ந்துக் கூறுதல் ஆகும்.
இராவணன் ஒரு குரங்காலே என் பெருமையும் நகரமும் அழிந்தன. இந்த தாழ்வைத் தரும் செயலுக்கு மேல் தாழ்மையைத் தருவன இனி என்ன இருக்கின்றது. இவ்வாறு தாழ்வை அடைந்த என் ஆட்சியையும், படையின் அமைதியும், அரண் முதலியவற்றுடன் கூடிய நாடும் நன்றாக இருக்கின்றன என்று இகழ்ச்சி தோன்ற தன் மனத்தினுள் எண்ணினான்.
“தாழ்ச்சி இங்கு இதனின் மேல் தருவது என் இனி
மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர்
ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று எனா
சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான்”
(இராவணன் மந்திரப் படலம் 22)
வீடணன், இராவணனுக்கு அறிவுரை கூறியதைக் கேட்டு விடத்தை விட கொடியவனான இராவணன் சினம் கொண்டு செய்யும் போரில் நீ என்னுடன் வரவேண்டாம். பாதுகாவல் கொண்ட இலங்கை மிகுதியான இடத்தைக் கொண்டது. இங்கே தங்கி இருப்பாயாக. அஞ்ச வேண்டாம், அஞ்ச வேண்டாம் என்று வீடணனை நோக்கி கூறி, பக்கத்தில் இருந்தவர் முகத்தைப் பார்த்து கையுடன் கையைத் தாக்கி இடிமுழக்கம் போல வெளிப்பட சிரித்தான்.
“வெஞ்சினம் தரும் போரின் எம்முடன் எழ வேண்டா
இஞ்சி மாநகர் இடம் உடைத்து ஈண்டினிது இருத்தி
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து உரும் என நக்கான்”
(இராவணன் மந்திரப் படலம் 128)
கும்பகர்ணன், இராவணனை நாம் குற்றமில்லாத பிறர் மனைவியரை அழகிய சிறையில் வைப்போம். அதற்குப் பயனாகக் குற்றமில்லாத புகழை விரும்புவோம். சிறப்பு மிகுமாறு நாம் பேசுவதோ வீரம். அங்ஙனம் பேசும்போதே நாம் கொண்டிருப்பது காமம். நாம் அஞ்சுவது வலிமையற்ற மனிதரை, நம் ஆற்றல் மிகவும் நன்று என்று கூறினான்.
“ஆசில் பரதாரம் இவை அம் சிறை அடைப்பேம்
மாசில் புகழ் காதலுறுவேம் வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் குற்றம்”
(இராவணன் மந்திரம் படலம் 63)
பழிப்பது போலப் புகழ்தல்
அணி வகுப்புப் படலத்தில் மாலியவான், இராவணனுக்கு அறிவுரை கூறும்போது, சுக்ரீவன், அவனுடைய கிரீடரத்தினங்களை எடுத்துச் சென்றதைப் பற்றி கூறினான். இந்த ஊரைச் சாம்பலாக்கிப் போனவற்கு, கையில் சக்கரம் உண்டோ? தசமுகனாம் இராவணன் தலைகள் என்று சொல்லப்படும் இந்த மலைகள், பத்தின் மேல் சூடிய கிரீடங்கள், தரமான இரத்தினங்களைக் கவர்ந்து சென்ற சுக்ரீவனுக்கும் சூலாயுதமும், வேலாயுதமும் வாளும் உளதோ? என்று கூறுகிறான்.
“புக்கெரி மடுத்து இவ்வூரைப் பொடி செய்து போயினார்க்குச்
சக்கரம் உண்டோ, கையில் தசமுகன் தலைகள் ஆன,
இக்கிரி பத்தின் மௌலி இனமணி இடந்து கொண்ட
சுக்ரீவற்கும் உண்டோ, சூலமும் வேலும் வாளும்”
(அணிவகுப்புப்படலம் 901)
இராவணனின் பகைவனான இராமனுக்கும், அவரது கூட்டத்தினருக்கும் அதிக சக்தி இல்லாத நிலையிலும் அவர்களால் இராவணனது மகுடத்திற்கு பங்கம் வந்து விட்டதே என்று பேசியதால் இது பழிப்பது போலப் புகழ்தலேயாகும்.
புகழ்ந்து கொண்டு வந்து இறுதியில் பழித்தல்
தண்டியலங்காரத்தில் கூறாத ஒன்றை மூன்றாவதாக, முதலில் புகழ்ந்து கூறிக் கொண்டே வந்து இறுதியில் பழித்தல் என்பதைக் கம்பர் தம் காப்பியத்தில் பயன்படுத்தியுள்ளார்.
அங்கதன் தூதுப் படலத்தில் அங்கதன், இராவணனுக்கு இராமன் சொல்லி அனுப்பியக் கருத்துக்களைக் கூறும்போது, தண்ணீரிலே தோன்றியவை, சூழ்ந்துள்ள நெருப்பிடையே தோன்றியவை, பரந்துபட்ட மண்ணிலே தோன்றியவை, வான்வெளியிலே தோன்றியவை நீ எதிர்த்து செய்த போர்க்களத்தில் இறந்தொழியப் போர் செய்த நீ, இப்போது எதிர்த்து நிற்க மாட்டாமல் ஒழித்து, உன்னுடைய நகரத்திலேயே உள்புகுந்தபடியே இறந்தாய் என்றால், என்று பிறர் இகழ்ந்து சொன்னால், அது உனக்குப் பழியேயாகும் என்று அங்கதன், இராவணன் மனம் கொதிக்கும்படி சொன்னான்.
“நீரிலே பட்ட சூழ்ந்த நெருப்பிலே பட்ட நீண்ட
பாரிலே பட்ட வானப் பரப்பிலே பட்ட எல்லாம்
போரிலே பட்டு வீழப் பொருத நீ ஒளித்துப் புக்கு உன்
ஊரிலே பட்டாய் என்றால் பழி என வுளையச் சொன்னான்“
(அங்கதன் தூதுப் படலம் 952)
முடிவுரை
கருதியதை வெளிப்படுத்தும் சத்துவமாகிய குணங்களைப் பிறிதொன்றால் நிகழ்த்துவனவாக மறைத்துக் கூறுவது இலேசம் என்னும் அலங்காரமாகும். புகழ்வது போலப் பழித்தல்,பழிப்பது போலப் புகழ்தல் இவை இரண்டும் இலேசஅணியின் வகைகளாகும். முதலில் புகழ்ந்து கொண்டே வந்து இறுதியில் பழிப்பது போலவும் கம்பர் தம் காப்பியத்தில் பாடியுள்ளதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இலேச அணி குறித்துக் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லை நிலையம்,சென்னை, 2019.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.