முன்னுரைபண்டைத் தமிழர்கள் மரபுகளைப் போற்றிக் காப்பவர்களாகவும், தம் முன்னோர் கற்றுக் கொடுத்த பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். இத்தகையச் சிறப்புகளுக்கு எல்லாம் அவர்களின் மரபே காரணமாக அமைந்தது. பழக்கம், வழக்கம், மரபு எனும் மூன்றும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க இயலாதவை. எளிதில் மாற்ற முடியாதவை. எனவே “பழக்கம் என்பது தனி மனிதனைச் சார்ந்தது என்றும், வழக்கம் என்பது சமுதாயத்தைச் சார்ந்ததென்றும், மரபு என்பது சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடு எனவும் கூறலாம்”1 அவ்வகையில் பழக்கம் வழக்கமாகி நிலைபெற்ற மடல் ஏறுதல் குறித்த தரவுகளைத் தொகுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
மடலேறுதல்
ஆடவன் ஒருவன், தான் விரும்பியப் பெண்ணை மணம் செய்வதற்காக மேற்கொள்ளும் வழிமுறைகளில் ஒன்று மடலேறுதலாகும். காதல் கைகூடாது கைவிட்டுப் போகும் என்ற அச்சத்தில், ஆண்மகன் தன் காதலை ஊரார்களின் முன்னிலையில் தெரியப்படுத்துவது அல்லது தன் காதலை உணர்த்தும் நிலையாகும்.
“ஏறிய மடல் திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே ” 2
பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் மடலேறுதல் நிகழ்வினைத் தொல்காப்பியர் எடுத்துரைத்துள்ளார்.
பனங்கருக்காற் செய்த குதிரை வடிவான ஒன்றில், தலைவி படமும் பெயரும் எழுதிய ஒன்றை வைத்துக் கொண்டு எருக்கம் மாலை முதலியன அணிந்து, அதன் மேல் ஏறி ஊர்வது, ரத்தம் கசிய உயிர் விடுவதாகும். மடலேறுவேன் என வாயால் அச்சுறுத்துவது அன்பின் ஐந்திணையுள் அடங்கும். அல்லாமல் மடலேறிவிடுவதில் முடியுமாயின், அது பெருந்திணையில் அடங்கும்.
மடலேறுதலின் நோக்கம்
தலைவன் தலைவியைக் காதலித்து அவளை அடைய முயன்று, தோல்வி அடைந்த பின்னர் இறுதி முயற்சியாக மடல் ஏறத் துணிகின்றான். அதற்காக அவன் தன்னுடைய நாணத்தையும் துறந்து மடல் ஏறுவான். தலைவன் மடல் ஏறினால் ஊரார் அவனுடைய துன்பத்தை அறிந்து, அத்துன்பநிலைக்குக் காரணமானத் தலைவியை அவர்கள் பழிப்பார்கள். அவனுடைய துன்பம் தீர்வதற்காகத் தலைவியைத் தலைவனிடம் சேர்த்து வைக்க முயலுவார்கள். அந்த காரணத்திற்காகவே தலைவன் மடல் ஏறுவான். மடலேறுதல் தன் எண்ணம் கைகூடாத நிலையில் நிகழ்கின்ற செயல் ஆதலால், மடலேறுதல் நாணம் துறந்த நிலையிலேயே நடைபெறும் என்பதைத் தொல்காப்பியர் வழி அறியமுடிகிறது.
“அச்சமும் நாணும் மடறும் முந்துறுதல்
நிச்சமும் பொற்குரிய என்ப” 3
பெண் அச்சம், நாணம், மடம் என்னும் பண்புகளைத் தனக்குரியதாக் கொண்டவள். தன் குணத்தைப் பொதிந்து காட்டும் இயல்புடையவள். அதனால், பெண் மடலேறுதல் என்பது இல்லை. ஆனால் ஆண்மகன் தன் மனத்தில் உண்டான காதலின் காரணமாகத் தலைவியை அடையப் முடியாத நிலையில் மடலேறுதலாகிய செயலை நிகழ்த்தற்கு மனம் கொள்கிறான். மடலேறுதலி்ல் முதல்நிலை நாணத்தைத் துறத்தலாகும். மடலேறுதல் இழிவு என்றேக் கருதப்பட்டது. தலைவியை நினைத்து மிகுதியான காதலால் துன்புறுதல் தலைவனுக்கு உரியதே அன்றித் தலைவிக்கு இல்லை. தலைவி, காமம் மிக்க கழிபடர் கிளவியில் பேசுதல் மட்டுமே உண்டு என்பதை,
“எத்திணை மருங்கினும் மகடூ உ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான” 4
மடலேறுதல் நிகழ்வு பெண்களுக்கு இல்லை என்பதனைத் தொல்காப்பியர் வழி அறியமுடிகிறது.
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி’ (குறள் 1131).
மடல் என்பதைக் காமம் ஆகிய கடலை நீந்துவதற்குரிய தெப்பம் என்று இலக்கியங்கள் கூற திருவள்ளுவர் தலைவனின் காமத்துயரம் நீங்க மடல் ஏறுதல் ஒன்றே வழி என்று சுட்டுகிறார்.
மடலேறுபவன் தோற்றம்
மடல் என்பது பனை மடலால் (பனை மட்டையால்) செய்யப்படும் குதிரை. மடலின் இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பகுதிகள் இருக்கும். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல், அந்தக் குதிரையை அலங்கரித்து, ஊரில் உள்ள குழந்தைகள் அதில் கட்டிய கயிற்றைப் பற்றி இழுக்க, தெரு வழியாகத் தலைவன் செல்வான். மடல் குதிரைக்கு மலர் மாலையை அணிவிப்பான். மணியை அதன் கழுத்தில் தொங்கவிடுவான். அதன் உடலைச் சுற்றித் துணியைப் போர்த்துவான். தன்னுடைய உடலில் சாம்பலைப் பூசிக்கொள்வான். மேலும் மயில் தோகை, பூளை மலர், ஆவிரை மலர், எருக்கம் பூ மாலை , எலும்பு மாலையையும் அணிவதாகச் சில பாடல்களில் குறிப்புகள் உள்ளன.
“அணியலங் காவிரைப் பூவோ டெருக்கின்
பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப
ஓங்கிடும் பெண்ணை மடலூர்ந்தென்
எவ்வநோய்” 5
“மாவென் நுணர்மின் மடலென்று மற்றிவை
பூவல்ல பூளை யுழிங்கையோ டியாத்த
புனவரை யிட்ட வயங்குதார்ப் பீலி” 6
“ விழுத்தலைப் பெண்ணை வளையல் மாமடல்
மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி
வெள்ளென் பணிந்து பிறர் எள்ளத் தோன்றி” 7
மடல் ஏறுபவர்கள் பயன்படுத்தும் மலர்கள் பிறர் பயன்படுத்தாது விலக்கும் மலர்களாகும். அம்மலர்களே மடலேறுதலில் பயன்படுத்தியிருப்பதையும் மடலேறுதல் பிறரது கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் நோக்கத்திலும் இத்தகயைப் பொருட்கள் பயன்படுத்தியமை அறியமுடிகிறது.
இலக்கியத்தில் மடல் குறிப்புகள்
தலைவன் விரும்பிய பெண்ணுக்காக மடல் ஏறுதற்கான சூழல் இலக்கிய வழக்காகவே பெரும்பான்மையும் அமைந்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் மடல் குறித்த குறிப்புகள் உள்ளன..
“சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்
குவிமுகி ழெருக்கங் கண்ணி சூடி
உண்ணா நன்மாப் பண்ணி” 8
“வில்லாப் பூவின் கண்ணி சூடி
நல்லே முருவலெனப் பல்லூர் திரிதரு
நெடுமாப் பெண்ணை மடல்மா னோயே” 9
ஆண்கள் ஏறிச்செல்லுதற்கான மடல் என்னும் குதிரை, பெண்ணை எனும் பனை மடலால் செய்யப்படுவதாகும். பெண்ணை என்பது கூந்தல் பனையைக் குறிக்கும். நற்றிணை மடலை நன்மா என்றும் பெண்ணை மடல் என்றும் குறிப்பிடுகிறது.
“விந்தலைப் பெண்ணை விளையல் மாமடல்” 10
“ பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னூல் மாலைப் பனை படு கலிமா” 11
குறுந்தொகைப்பாடல்கள் மடலை பெண்ணை மாமடல் என்றும், பனை படு கலிமா என்றும் குறிப்பிடுகிறது.
ஊர் தூற்றுதல்
“சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்
குவிமுகி ழெருக்கங் கண்ணி சூடி
உண்ணா நன்மாப் பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள்” 12
“பொன்னே ராவிரை புதுமலர் மிடைந்த
பன்னூன் மாலைப் பனை படு கலிமாப்
பூண்மணி கறங்க வேறி நாணட்
... ... ... ... ... றவள் பழி நுவலு மிவ்வூர்” 13
மடலேறுதல் ஆண்மகனைப் பொறுத்தவரை நாணம் துறந்த செயலாகவும், ஊரார்களைப் பொறுத்தவரை இரக்கம் கொள்ளத்தக்கதாகவும், விளையாட்டுப் பருவத்தில் உள்ளவர்களுக்குக் கேலிக்குரியதாகவும், தலைவனின் இரங்கத்தக்க நிலை கண்டு ஊர் மக்கள் பேசும் நிலையினையும் சங்கப் பாடல் வழியாக அறியமுடிகிறது.
முடிவுரை
மடல் என்பது தான் விரும்பிய நிலையிலும், விரும்பாத நிலையிலும் பெண்ணை அடையும் பொருட்டுத் தாமாக தம் நாணத்தை விட்டுச் செய்யும் செயலாகும்.
தன் செயல் மூலம் பிறரின் இரக்க உணர்விற்கும், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி, நினைத்த பெண்ணை அடைவது இதன் நோக்கமாகும்.
தலைவன் தலைவியின் மீது கொண்ட அளவு கடந்த காதலையும், மனஉறுதிப்பாட்டினையும் அறியமுடிகிறது.
பண்டைக்காலச் சமூகத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகியல் மற்றும் இலக்கிய வழக்காக மடல் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.
அடிக்குறிப்புகள்
1.க .காந்தி, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், ப .15
2. தமிழண்ணல், தொல்.பொருள் .அகத் .54
3. தொல்.பொருள். அகத் .96
4. தொல்.பொருள். அகத் .38
5.கலி.138 :8-10
6.மேலது.139:3-5
7.குறுந். 182:1-3
8 . நற்.220 :1-3
9. மேலது ,146 :1-3
1 0. குறுந்.182:1
1 1. மேலது,173-2
1 2. நற்.220:1-4
1 3. குறுந். 220 :1-6
துணை நூற் பட்டியல்
1.இளம்பூரணனார் உரை, தொல்காப்பியம்,பொருளதிகாரம்,சாரதா பதிப்பகம்,முதற்பதிப்பு-2005
2. உ. வே. சாமிநாதையர் (பதி) , குறுந்தொகை, கழகவெளியீடு, சென்னை, இரண்டாம் பதிப்பு - 1947
3. உ. வே. சாமிநாதையர் (பதி), நற்றிணை நானூறு, கழக வெளியீடு, சென்னை, ஐந்தாம் பதிப்பு -1976
4. க. காந்தி, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், புலம் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2007
5.பதிப்பக்குழு,திருக்குறள், சாரதா பதிப்பகம், முதற்பதிப்பு – 2016
6. நச்சினார்க்கினியர் உரை - கலித்தொகை, கழக வெளியீடு, சென்னை, ஏழாம் பதிப்பு -1967
மின்னஞ்சல் – இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.