இவ் ஓவியனின் தேடலை, தூண்டிவிட்டிருக்கும் கதைவருமாறு:
ஓவியன் சிறுவனாய் இருந்தபோது, பறவைகளின் கூடுகளைக் கலைப்பதற்காகக் குன்றின்மேல் இருக்கும் பாப்ளர் மரங்களின் உச்சிக்கு ஏறுகின்றான். மரங்களின் உச்சியை அடையும் சிறுவர்களின் முன் இயற்கை அப்படியே விரிந்து கிடக்கும். ‘பூமியின் மகத்துவம் எங்களை வியப்பில் ஆழ்த்தும். மங்கிய, சூடேறிய ஸ்டெப்பியின் காற்றில், கன்னிநிலம் ஒய்யாரமாய் படுத்துக்கிடக்கும் - ‘கண் பார்வை எட்டும் வரை ஒரே நீல பூமி... வார்த்தைகளுக்கு அகப்படாத பெரும் நிலப்பரப்பு’ ஆறுகள், தொடுவானத்தருகே மெல்லிய நூலிழையாகி மறையும். மரக்கிளைகளில் நாம் ஒன்றி படுத்தவாறே விண்ணுலகத்து காற்றின் ஓசைகளையும் ரகசியங்களையும் செவிமடுப்போம். இலைகள், அந்த ரகசியங்களை எல்லாம் எம்மிடம் அன்போடு முணுமுணுத்தன.
இப்படியாக, இயற்கையை அன்போடு விசாரிக்கும், இதே சிறுவர்களில் ஒருவன் மரங்களை நட்டவன் குறித்தும் கேள்விகளை எழுப்பிக்கொள்கின்றான்:
‘யார் இந்தமரங்களை, இக்குன்றுகளில் நட்டிருப்பவர்? நட்டவரின் நம்பிக்கை என்ன? அவரது கனவுதான் யாது?’
சிறுவனின் தேடல்கள் சிலவிடயங்களை எமக்குப் புகட்டுவதாய் உள்ளன.
பொட்டல் காடாய் இருந்த இக்குன்றில்தான், ‘தூய்ஷேன்’ பள்ளிக்கூடம் என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தூய்ஷேன், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை, இந்தப் பின்னடைந்த லம்பாடி கிராமத்தினரிடையை (அசோக மித்திரனின் பாஷையில்) பிரதிநிதித்துவம் செய்தவர் என்றும் கூறினர்.
தூய்ஷேன்தான் இந்தப் பள்ளிக்கூடத்தை இங்கு ஆரம்பித்தவராம். இப்போது சாந்தமான தாடிகார தபால்காரராய் இருக்கின்றார் இவர். 1924 இல், இக்கதையின் நாயகிக்கு. 14 வயதாய் இருக்கும்போது ஓர் இளைஞன் போர்வீரனின் மேல்கோட்டோடு, இந்தப் பின்தங்கிய கிராமத்திற்கு வந்துசேர்கின்றான்.
குட்டிப்போட்டால், அக்குட்டிகளையும் குதிரைகளையும், குளிர்காலத்தில் அடைத்துவைக்கும், வசதிபடைத்தோரின் இந்தக் களிமண் குதிரைக் கொட்டிலை, இவர்தான் ஆரம்பப் பள்ளியாக மாற்றியவர். சுற்றிலும் முட்புதர்கள். களைகள். சுவர்கள் மலையில் நனைந்து, நனைந்து கரைந்து இடிந்துபோய் நின்றன. கதவு ஆடிக்கொண்டிருந்தது.
ஆகவே, இவ் இளைஞன் முன் இரண்டு பொறுப்புகள் கிடந்தன. ஒன்று சீரழிந்து போன இம்மண் கொட்டகையை, சின்னஞ்சிறுசுகள் படிக்கக்கூடிய இடமாக எப்படி மாற்றுவது என்பது முதலாவது. அடுத்ததாய், இப்பள்ளிக்கான, சிறுபிள்ளைகள் கூட்டத்தை, இப்பின்னடைந்த கிராம மக்களிடையே இருந்து எப்படி இழுத்து வந்து சேர்ப்பது என்பது இரண்டாவது.
‘முல்லாதான் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருபவர்கள்...’
‘நான் முல்லா அல்ல. படிப்பு சொல்லித்தர, கம்யூனிஸ்ட் கட்சிதான் என்னை அனுப்பி வைத்திருக்கின்றது...’
‘சரி, சரி. உனக்கு விருப்பம் என்றால் படிப்பைச் சொல்லிக்கொடு... எங்களுக்கென்ன...’
‘ஆற்றின் குறுக்கே சிறுபாலம் போட்டாகவேண்டும்...’
எச்சிலைக் காறிப் பல்லிடுக்கு வழியாகத் துப்பிய ஒருவன் கண்ணைச் சுருக்கியப்படி கூறினான்: ‘ரொம்பதான் கத்துகிறாய்... உனக்கு, மென்மயிரில் கோட்டும் இல்லை. குதிரையும் இல்லை. துண்டுநிலமும் இல்லை ஆடோமாடோ ஒன்றுமே இல்லை... ஜீவனமே உனக்கு ஓர் பிரச்சினைதான்...’
‘சம்பளம் தருவார்கள். சிறிதுதான். ஆனால் அதைக் கொண்டு எப்படியாவது வாழ்ந்திடுவேன்...
‘ஓ...ஹோ...சம்பளம் வேறுகிடைக்கின்றதா’ அப்படியென்றால் ஆளை விடு. தலைக்குமேல் வேலை இருக்கு.’
பரட்டைத் தலைப்பெண்ணே! என்ன வாய்ப் பிளந்து நிற்கின்றாய்? ஓடு. வீட்டிற்கு ஓடு...’
இந்தப் பரட்டைத்தலை, பெண்தான் பிற்காலத்தில், உலகம் போற்றும் பேராசிரியர் அல்தினாய் சுலைமானாக, ஒரு பேரவை உறுப்பினராக, ஒரு பல்கலைக்கழகத்தின், தத்துவத்துறையின் தலைவராக மாறி, ஒரு 40 வருடங்கள் கழிந்தநிலையில், இதே பின்னடைந்த பாழும் கிராமத்திற்கு, அதன் புதிய பள்ளித் திறப்புவிழாவிற்கு தலைமைதாங்கும் சிறப்புவிருந்தினராக வருகை தருகின்றார்.
இச்சந்தர்ப்பத்திலேயே, எங்காவது, தனது சித்திரத்திற்கான, உந்துதல், கிடைக்குமா என ஓவியன் தேடித் தேடி அலைகின்றான்.
மண் கொட்டகையிலிருந்து, மேலெல்லாம் மண் ஒட்டியப்படி, தூய்ஷேன் உள்ளிருந்து வந்தான்.
‘சிறுமிகளே’ எங்கிருந்துவருகின்றீர்கள்’
நாங்கள் பொறுக்கி, சுமந்துவந்த, சாணமூட்டைகளின் அருகே, வெட்கத்துடன் தலைகுனிந்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்’
‘உள்ளே கணப்பு அடுப்பொன்றை வைத்துள்ளேன்;’ இதைப் பார்த்தீர்களா புகைப் போக்கி... குளிர்காலத்திற்குத் தேவைப்படும் விறகையும் சேகரிப்பதுதான் பாக்கி... தரையில் வைக்கோலைப் பரப்பி, படிப்பை ஆரம்பித்துவிடலாம். உங்கள் எல்லோருக்கும் படிக்கவிருப்பம்தானே? வருவீர்கள்தானே...?’
‘மற்ற குழந்தைகளையும் நீ அழைத்துவருவாயா?...’
அரிவாலையும், கயிறையும் எடுத்துக்கொண்டு தூய்ஷேன் வயலுக்குக் கிளம்பி விட்டார், வைக்கோல் எடுத்துவர. நாங்கள் மூட்டைகளை முதுகில் ஏற்றிக்கொண்டு கிராமத்திற்குப் புறப்பட்டுவிட்டோம்.
‘நில்லுங்கடி. இந்தச் சாணத்தை எல்லாம் பள்ளியிலேயே கொட்டிரலாமா?. குளிர்காலத்தில் எரிக்கலாம்...’
சூரியன் மலைகளுக்குப்பின் மறைந்துகொண்டிருந்தது... என் பாதைக்கு அது இன்று மெருகூட்டுவதாய் இருந்தது. என் காலடி பூமியில்... பூமி, இவ் இலையுதிர் காலத்தில் பழுப்பு, சிவப்பு, ஊதா நிறங்களில் எல்லாம் மின்னத் தொடங்கிவிட்டது. ஓரமாய் இருந்த மலர் கொத்துகள் கூடத் தீச்சுவாலைகள் போல் ஆடிக் கண்சிமிட்டன... என் கந்தல் ஆடையின் வெள்ளைப் பொத்தான்கள் சூரிய ஒளிப்பட்டுப் பிரகாசித்தன. நான் பூமியையும் வானத்தையும் பார்த்துச் சொன்னேன்: ‘நான் படிக்கப் போகின்றேன்’
இது, பேராசிரியர் அல்தினாயின் இளம்பிராயம்.
மூச்சுத்திணறி, புழுதியிலும் வேர்வையிலும் நனைந்தபடி வீட்டிற்கு ஓடிவந்து சேரும் இவளிடம், சித்தி கையிலிருந்த மூட்டையை பிடுங்கிக் கவிழ்த்தவாறே எரிந்துவிடுகின்றாள்: ‘நாள் முழுவதும் நீ பொறுக்கியது இவ்வளவுதானா?’
‘கறுப்பு ஜென்மமே... எதற்காகப் பள்ளிக்கூடம் பக்கம் போனாய்...’
காதைப் பிடித்துத் திருகி, தலையில் குட்ட ஆரம்பித்துவிட்டாள்...சித்தி.
‘நான் அழ முயன்றேன்... பின் அடுப்பில் விறகுகளை வைத்தப்படியே, சத்தமின்றி, ரகசியமாக என்னுடைய சாம்பல் நிறப் பூனையைத் தடவிக்கொடுத்தப்படி அழுதேன். அந்தப் பூனைக்கு நான் எப்போது அழுதாலும் தெரிந்துவிடும். நான் அழும்போது என் முழங்கால் மீது ஏறி மடியில் அமர்ந்து கொள்ளும்... சித்தி என்னைப் பள்ளிக்கூடத்திற்குப் போகவிடமாட்டாள். அதற்காகத்தான் அழுதேன்...’
‘இறுதியில், பள்ளியில் சேர்க்கும் நாளில், சித்தப்பா, சித்திக்கு ஈவி ரக்கமின்றி அடி கொடுத்தார். அவளது வாய் கொழுப்பிற்காகக் கொடுக்கப்பட்ட அடி, இறுதியில் என்னைப் பள்ளியில் சேர்ப்பதில் முடிவடைந்தது.
‘பலகையை முழங்காலின் மீதுவைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் எழுத வசதியாக இருக்கும்’
‘பென்சிலை எப்படிப் பிடிப்பது என்பதைக் கூட அவர் சொல்லித் தந்தார்.’
ஒருநாள் நாங்கள் எவ்வித உட்பொருளுமின்றிக் கேட்டோம்: ‘லெனின் கையைப்பற்றி நீங்கள் குலுக்கியிருக்கின்றீர்களா?
அவர் குற்றஉணர்வோடு பெருமூச்சொன்றை விட்டார்.
‘இல்லை குழந்தைகளே... நான் லெனினைப் பார்த்ததும் கிடையாது’
அந்நாட்களில் நாங்கள் அவருக்காக உண்மையிலேயே ஏங்கத் தொடங்கி விட்டோம். ரகசியமாக, சித்திக்குத் தெரியாதபடி வேலி ஓரமாய்ச் சென்று நீண்ட நேரம், அவருக்காக ஸ்டெப்பி வழியில் அவர் தனித்து வருவதை உற்றுப் பார்த்தவாறு இருப்பேன்...
குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.
முதல் வெண்பனிவிழும் வரை, நாங்கள், ஆற்றைக் குறுக்காகக் கடந்தோம். சில்லிட்டு போன நீர், கால்களை உறையச் செய்தது. கண்களில் நீர்கூட வந்துவிட்டது. அப்போது தூய்ஷன், எங்களைத் தனது முதுகில் ஏற்றியும், கையில் தூக்கியும் ஆற்றைக் கடப்பார்.
சிவப்பு நரியின் மென்மயிர் தொப்பியும், விலையுயர்ந்த ஆட்டுரோம மேல்கோட்டையும் அணிந்தபடி, கொழுத்தக் கருப்பு குதிரைகளின்மீது, மலைகளிலிருந்துவந்த செல்வந்தர்கள் சத்தம்போட்டுக் கூவினர்: ‘பார். ஒருவன் முதுகில். மற்றொருவன் கையில்... ஆ... ஹா... ஹ’...
கண்ணைச் சிமிட்டியபடி சொல்வார்கள்: ‘இரண்டாவது கல்யாணம் செய்திருக்கலாம் என...’
தூஷ்யனோ வசைச் சொற்கள் எதும் கேளாதபடி செல்வார்.
தூய்ஷேன் எவ்வளவோ முயன்றும், ஆற்றின் குறுக்கே அவரால் பாலம் அமைக்க முடியவில்லை. பின் நானும், அவரும் சிறுகற்களைக் கொண்டுபாலம் ஒன்றை அமைக்க முடிவு செய்தோம். நாங்கள் ஆற்றின் குறுக்காகக் கற்களைப் போட்டபோது, தண்ணீர் மிகவும் சில்லிட்டுப்போய் இருந்தது. வெண்பனி வேறு பெய்யத் தொடங்கி இருந்தது. ஆனால் தூய்ஷேன் வெறுங்காலுடன் மூச்சுவிடாமல் வேலை செய்தார். எரியும் கரித்துண்டுகளின்மீது நடப்பது போல் நான் நடந்துசென்றேன். ஆனால், ஆற்றின் நடுவில் சென்றபோது, திடீரென காலில் தோன்றிய வலியால் நான் அப்படியே சரியத்தொடங்கினேன். கத்தவோ நிமிரவோ என்னால் முடியவில்லை. மெதுவாகத் தண்ணீரில் கவிழ ஆரம்பித்தேன். தூய்ஷன், கையிலிருந்த கற்களைப் போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடிவந்தார். கைகளினால் என்னைத் தூக்கி, கரைக்கு ஓடி, தன் மேற்கோட்டைக் கழட்டி, விரித்து, என் நீலம் பாரித்துப் போன கால்களை தன் கைகளால் தேய்த்துவிட்டார். உறைந்து போன என் கால்களைத் தனது வாயறுகே அழுத்திக்கொண்டு சூடான மூச்சுக்காற்றால் சூடேற்றினார். அதன் பின் அவர் என்னை பங்கேற்க விடவில்லை.
ஆற்றைக் கடக்கும் பாதை தயாரானதும், தூய்ஷேன் காலணிகளை அணிந்துகொண்டு, என்னைப் பார்த்து புன்முறுவல் செய்தார்.
‘குளிர் குறைந்ததா? அன்று பள்ளியில் சாணத்தை விட்டுச் சென்றது நீயா?’
அந்தத் தருணத்தில் என் கன்னங்கள் நெருப்பில் வாட்டியதைப்போல சூடாகின. மகிழ்ச்சி கரை புரண்டோடியது. நான் ஆகாயத்தில் மிதந்தேன்.
‘நீ படித்தால்...’
‘ஓ... கடவுளே... இவரை என் சகோதரனாகத் தான் மாற்றேன்...’
காற்றில், மூச்சுத் திணறி, வெண்பனி குவியல்களின் மேல் தட்டுத் தடுமாறி, செங்குத்தான, அக்குன்றின்மீது ஏறி, தினந்தோறும் நாம் பள்ளிக்குச் சென்றோம். குளிர்காலத்தில், ஒருவர் மாறி ஒருவராய், கணப்பின் அருகே சூடு காய்ந்தோம். அப்படிப்பட்ட குளிர் நாட்கள் ஒன்றில் தூய்ஷேன், கழுகின் இறக்கைகளைப் போன்ற அவரது புருவங்களைச் சுருக்கியப்படி நடந்தார். அவரது முகம் இருண்டு பாறைபோல் இறுகியிருந்தது. ‘லெனின் இறந்துவிட்டார்’.
பள்ளியை, பனிச்சரிவு மூடியதுபோல் ஓர் நிசப்தம். ஓட்டைகளின் வழியே காற்று வீசியடிப்பதுகூட கேட்டது. வெண்பனி, வைக்கோல் கூரை மீது வாரி, வாரி இறைத்தது.
‘குழந்தைகளே. எவ்வளவு அற்புதமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கின்றது தெரியுமா?’ கை கட்டுப்போட்ட நிலையில், லெனின், சுவரிலிருந்து எம்மைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தூய்ஷேன் கண்ணைத் துடைத்தவாறே மெல்லச் சொன்னார்: ‘மாவட்டத் தலைநகருக்கு செல்கின்றேன். வர மூன்று நாட்களாகும்.’
இயற்கை நிம்மதியிழந்து தவித்தது. பூமி புரண்டு அலை மோதியது. பனிப்புயல் சற்றும் குறையாமல் வீசியடித்தது.
நான் அழுதேன். என்னுடைய மௌனக் கூவலை ஸ்டெப்பி செவிமடுக்கவில்லை.
நூல் நூற்கும்போது கூட, கைகள் சரியாக வேலை செய்ய மறுத்துவிட்டன. நூல்கள் அறுப்பட்டன.
‘என்ன ஆச்சு? உன் கை என்ன மரக் கட்டையா?’ அவளுக்கு மேலும் மேலும் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. பொறுமை எல்லை கடந்தது. ஈற்றில் வெடித்துச் சிதறியது. ‘ஒழிந்து போ சனியனே. சைக்கால் பாட்டியின் சாக்குப் பையையாவது கொண்டுபோய் கொடுத்துவிட்டுவா...’.
நான் சந்தோஷத்தில் துள்ளிகுதித்தேன். ஏனெனில் சைக்கால் பாட்டியின் வீட்டில்தான் தூய்ஷேன் வசித்து வந்தார். அவர்கள், ஒருமுறையில், எங்களுக்குத் தூரத்துச் சொந்தம். அவ்வப்போது அங்கு நான் தங்கி விடுவதுமுண்டு.’
‘எவ்வளவு சலிப்பேற்றுகிறாய் நீ. போ... போய் ராத்திரி அங்கேயே தங்கு. என் கண்ணில் படாமல் இருந்தால் போதும். ஓடு...’
சந்தோஷத்தில் நான் துள்ளிக் குதித்தேன் வீட்டைவிட்டு வெளியே பாய்தேன். காற்று ஓர் மந்திரவாதியைப் போல் மூர்க்கம் கொண்டு வீசியடித்தது. முள்ளைப் போல் முகத்தில் குத்தியது. வெண்பனியை வாரி இறைத்தது. நான் சாக்குப்பையை அக்குளில் இடுக்கிவாறு, குதிரைகளின் காலடியில், புதிதாய் ஏற்படுத்தியிருந்த தடத்தின் வழியாக, கிராமத்தின் மறுகோடியை நோக்கி ஓடினேன்.
‘ஆசிரியர் இன்றுவந்திருக்கமாட்டாரா?’ என்ற எதிர்பார்ப்பு ஒன்றே என்னுள் தேங்கியிருந்தது.
பாட்டிப் பயந்து விட்டாள்.
‘ஏன் இப்படி ஓடிவந்தாய்... ஏதும் நடந்துவிட்டதா...’
‘இன்று இரவு இங்கேயே தங்கட்டுமா? சாக்குப் பையைக் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்கள்.’
‘தங்கு கண்ணே. அடிபாவி. பாட்டியைப் பய முறுத்திவிட்டாயே. நெருப்புப் பக்கத்தில் வந்து உட்கார். இறைச்சியை எடு...’
‘தூய்ஷனும் இப்போது வந்துவிடுவான்’ குளிர்கால காலணியைத் தைத்து பழுதுபார்த்துக் கொண்டிருந்த கர்தன்பாய் கூறினார்.
நள்ளிரவானது. கர்தான்பாய் சோர்வோடு கூறினார்: ‘ஏய் கிழவி படுக்கையை போடு... ஏதேனும் தாமதமாயிருக்கும்...’
‘பனிப்புயல் வீசப் போகிறது’ பாட்டி முணுமுணுத்தாள்.
ஆனால், தூய்ஷன் நடு இரவில், ஓநாய்களிடமிருந்து தப்பி வந்து சேர்ந்தார். அவரது குதிரையை ஓநாய்கள் கிழித்து தின்றிருக்கின்றன. இக்காரணத்தினாலேயே, அவரும் தப்பி வரக்கூடியதாக இருந்தது. மயிரிழையில் தப்பி வந்தவர் துப்பாக்கியைக் கேட்டார்.
எல்லாம் கனவுபோல் இருந்தது. தூய்ஷன் உயிரோடு பாதிப்பின்றி வந்ததே பெரும் பாக்கியம். நீண்ட நேரம் என்னால் பேசவே முடியவில்லை. பதட்டம் தணியும் வரை நான் அழுதேன். தேம்பித் தேம்பி அழுதேன். அக்கணத்தில் அக்குடிசை, அவ் இரவுகள், ஓநாய்கள் குதறிய அவர்களது ஒரே குதிரை, யாவும், ஒன்றும் என் நினைவில் இல்லை. ஒளியைபோல், முடிவற்ற, அளவற்ற அச்சாதாரண மகிழ்ச்சி என் உடல் முழுவதும் விரவி ஓடியது. விசும்புவது கேட்கக் கூடாதென்பதற்காக என் தலையை போர்த்தி மூடி, வாயை இறுக மூடிக்கொண்டேன்.
இருந்தும், தூய்ஷன் கேட்டார்: ‘யார் அங்கே கணப்பின் பின் விசும்புவது...?
அவர் முழங்காலிட்டு, என்னருகே அமர்ந்து, என் தோள்களைத் தொட்டார்: ‘அல்தினாய், ஏன் விசும்புகிறாய்? என்ன ஆயிற்று உனக்கு...?
நானோ அவரை நோக்கி திரும்பி, முன்னைவிட அதிகமாகக் கண்ணீர் விடதொடங்கிவிட்டேன்.
‘என்னைப் பாரு’
நான் தூய்ஷேனை, இறுகக் கட்டிபிடித்து, அவரது தோள்களில், என் ஈரமான முகத்தைப் புதைத்துத் தேம்பி அழத் தொடங்கிவிட்டேன்.
‘ஏய் கிழவி... எதையாவது மந்திரி... அவளுக்கு நெஞ்சு வலித்து விடபோகிறது.
சைக்கால் பாட்டி, ஏதோ மந்திரம் சொல்லி, என் முகத்தில். குளிர் நீரையும், வெந்நீரையும் மாற்றி மாற்றி அடித்தாள்.
மகிழ்ச்சியால் என் நெஞ்சு வலித்தது என்ற உண்மை மாத்திரம் அவர்களுக்கு தெரிந்திருந்தால்...
பனிக்காலம் மறைந்து கொண்டிருந்தது... அநேகமாக இதுவே என் பதின் பருவத்தின் முதல் வசந்தமாயிருக்க வேண்டும்... மலைகளிலிருந்து ஏதோ கைகளை விரித்தப்படி பூமியானவள் ஓடி வருவதைப் போல் இருந்தது... சூரியனும், புகைமூட்டமும், ஸ்டெப்பியும் தொடுவானமும்... பனி உருகியதால், நீல நிறத்தில் மின்னும் சிறு ஏரிகளும், தொலை தூரத்தில் கணைக்கும் குதிரைகளும், வானத்தில் பறக்கும் நாரை கூட்டமும், எம் இதயங்களை எங்கு அழைக்கின்றன?
காரணமின்றிச் சிரித்தோம். சித்திக்கு இம்மகிழ்ச்சி சிறிதும் பிடித்ததாயில்லை. திட்டினாள்: ‘என்னடி முட்டாளே... கும்மாளம் அடிக்கின்றாய். உன் வயதில் எப்போவோ எனக்குத் திருமணமும் முடிந்துவிட்டது. குழந்தை குட்டிகளுடன்... நீயோ பள்ளிக்குப் போவதாய் வேடிக்கை காட்டுகிறாய்... இரு இரு. உன்னை ஒரு வழி பண்ணாவிட்டால் என் மனம் சாந்தியடையாது.
ஆனால், இப்போதெல்லாம், இதை நான் மதித்தேனில்லை. அந்த வசந்த காலத்தில், நான் மேலும் சற்று வளர்ந்து விட்டேன்.
‘பரட்டைத்தலைச் சிறுமி’: தூய்ஷன் கூட சிரித்தார். பெரியவளாகி, மணப்பெண்ணானதும் இப்படியா நானிருப்பேன்-பரட்டைத்தலையோடு? அப்போது சித்தி பார்ப்பாள் - நான் எவ்வளவு அழகாய் இருக்கின்றேன் என.
ஆனால், ஒருநாள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முற்றத்தில் இரண்டு கொழுத்த குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. சேனங்களைப் பார்த்தால், மலையில் இருந்து வந்தவர்களாய் இருக்கவேண்டும்.
வாசலில் நுழையும் போதே சித்தி நமுட்டுச்சிரிப்புடன் கூறிக்கொண்டிருந்தாள்: ‘ரொம்பதான் சங்கடப்படாதே மருமகனே. இந்தப் பறவை உனக்குத்தான்... என்ன கண்ணே வந்துவிட்டாயா? வாம்மா! உள்ளேவா!’
அவர்கள் வோட்கா பாணம் அருந்தினர். இறைச்சி சாப்பிட்டனர். சீட்டு விளையாடினர். என்னுடைய சாம்பல் நிறப்பூனை மெத்தை விரிப்பின் மீது ஏறப்பார்த்தபோது, அந்தச் சிவப்பு முகத்தான் தன் கை விரல்களைப் பொத்தி, அதன் தலையில் ஓங்கி ஒரு அடி விட்டான். அது பயங்கரமாய்க் கத்திக் கொண்டு, துள்ளிக்குதித்து, மூலையில் பதுங்கிக்கொண்டது.
‘மகளே, பாத்திரத்தில் சாப்பாடு வைத்திருக்கின்றேன். சூடு ஆறுவதற்குள், போய் சாப்பிடும்மா...’
சித்தியின் நடத்தை பெரும் செயற்கையாக இருந்தது. நிம்மதியற்று என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. என்னை அறியாமல் நான் எச்சரிக்கையானேன். இரண்டு மணிநேரம் கழித்து, குதிரைகளில் ஏறி, அவர்கள் மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்,
ஒருநாள், சைக்கால் பாட்டி, சித்தியின் வீட்டிற்குவந்தாள். இருவரும் காராசாரமாக எதைப் பற்றியோ சண்டைபோட்டனர்: ‘நீ அவளை அழிச்சுடுவே...’
மறுநாள், தூய்ஷேனின் முகம் இருண்டு கிடந்ததையும், அவர் ஆழ்ந்த சிந்தனையுடனும், கவலையுடனும் இருப்பதையும் அவதானித்தேன். புறப்படும்போது கூறினார்: ‘அல்தினாய் நில்... வீட்டிற்குப் போக வேண்டாம்... இப்போதைக்கு எங்களுடனேயே இங்கே தங்கு...’ எனது முகமும் இருண்டிருக்க வேண்டும். ‘பயப்படாதே’. சிரித்துக்கொண்டே சொன்னார். ‘நீண்டதூரம் தனியாகப் போகாதே... பள்ளிக்கு வழமைப் போல் வா... படி...’
ஆனால், என் சித்தி எப்போது வேண்டுமானாலும் வலுக் கட்டாயமாக என்னைத் தூக்கிச் செல்ல முடியும். இதுவும் எனக்குத் தெரிந்த ஒன்றே. தூய்ஷேனுக்கும் இது புரிந்திருக்கும்,
மறுநாள் இரண்டு மரக்கன்றுகளைப் பள்ளிக்கு எடுத்து வந்தார். இந்த பப்ளர் மரகன்றுகளை இங்கே நாம் நடலாம்... நீ வளர்ந்து முடிக்கையில், இவையும் பெரிய மரங்களாகி விடும்... நீ படிக்கும் விதத்தைப் பார்த்தால் ஓர் விஞ்ஞானியாய் உருவெடுப்பாய் என என் உள்மனம் கூறுகின்றது... நன்றாய் படி...’
மலையடிவாரத்தில் காற்று வீசியடித்தது. சின்னஞ்சிறு பப்ளர் மரக்கன்றுகள் அக்காற்றில் நடுநடுங்கி ஆடின. ஒரு புதிய உணர்வு என்னுள் பீரிட்டுக் கிளம்பியது. ‘அன்புள்ள ஆசிரியரே... உங்களுக்கு நன்றி... உங்களைப் கட்டிப்பிடித்து முத்தமிட விரும்புகிறேன்...’ ஆனால், அப்படி நான் சொல்வதென்பது எனக்கு அப்போது வெட்கமாய் இருந்தது. ஒருவேளை வெட்கத்தைவிட்டு அப்படி நான் சொல்லியிருக்க வேண்டுமோ... தெரியவில்லை...’
திடீரெனக் காதில் விழுந்த குதிரைகளின் குளம்படிசத்தம் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. கதவு படார் எனத் திறந்தது. பள்ளிவாசலில் சித்தி நின்றாள். ‘உனக்கு என்ன வேண்டும்’. ‘உனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. என்னுடைய பெண்ணை நான் திருமணம் செய்துதரப் போகின்றேன். ஏய் அநாதையே...’ சித்தி எனை நோக்கி வர, தூய்ஷேன் குறுக்கிட்டார்: ‘இது பள்ளிக்கூடச் சிறுமிகள் இருக்குமிடம். யாருக்கும் இங்கே திருமண வயது வந்து விடவில்லை...’
இருந்தும் சித்தி, அல்தினாவை, மலையிலிருந்து வரும் கரும்படை செல்வந்தர்களிடம் ஒப்படைத்தாள். அவர்கள் தூய்ஷேனைக் காயப்படுத்தி, அவரது கையையும் உடைத்து அவரை ஒரு குட்டையில் தள்ளியபின், அல்தினாவைக் குதிரைகளில் கடத்திச்சென்று, மலையில், ஓரு கூடாரத்தில் அடைத்து வைக்கின்றனர்.
அங்கிருக்கும் அடிமை போன்ற ஒரு கருப்புப் பெண்மணி, அல்தினாவின் தோள்களை உலுக்கி, அவளை எழுப்புகின்றாள். அந்தக் கருப்புப் பெண்மணியின் உயிரற்ற கண்கள் அல்தினாவிற்குக் கல்லறையை மாத்திரமே நினைவுப்படுத்தின. அன்றிறவு, அவளது பதினைந்தாவது வயதில் அல்தினா தன் கற்பைப்பறி கொடுக்கின்றாள். எது நடந்தாலும் சரி என மூன்றாம் இரவில் கூடாரத்திலிருந்து தப்பிப்போகும் எண்ணத்துடன், கூடாரத்தை ஒட்டியிருக்கும் நிலத்தைத் தோண்ட ஆரம்பிக்கின்றாள். நகங்கள் விரல்கள் யாவும், மரத்து இரத்தம் வடிய வடிய...
ஆனால் எங்கிருந்தோ குதிரைகளில், மூவர் அக்கூடாரத்தை அணுகுகின்றனர். அதில் ஒருவனுக்குத் தலையில் கட்டு. தூய்ஷேன். மற்ற இருவரும் சிகப்புப் கோடுகள் இட்ட மேல்கோட்டுகளை அணிந்திருக்கின்றனர்.
குடி போதையில் தூங்கும் சிகப்பு முகத்தானை எழுப்பி, திமிரும் அவனைக் குண்டுகட்டாகக் கட்டிக் கைது செய்கின்றனர். தூய்ஷேன், அல்தினாவைக் கிராமத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றார்.
சல சலவென்று ஓடிக் கொண்டிருந்த ஓர் தெளிந்த சிற்றாறின் அருகே தூய்ஷேன் கூறினார்: ‘அல்தினாய் குதிரையில் இருந்து இறங்கு. இதோ சவர்க்காரம். தாராளமாய் போட்டுக்கொள். நான் அப்பக்கமாய் சென்று குதிரையைப் புல் மேய்க்க விடுவேன். ஆடையைக் கழற்றி விட்டு, நீ ஆற்றில் குளிக்கலாம்... பாரம் குறையும்’.
நான் தலையை ஆட்டினேன். ஆடைகளை மெதுவாக கழற்றிவிட்டு, கவனமாக ஆற்றில் இறங்கினேன். எனது கால்களில் நீல நிற நீரலைகள் வந்து வந்து மோதின. படிகம் போன்ற, நிர்மலமான அந்நீரலைகளை ஏந்தி மார்பின் மீது அள்ளிதெளித்துக் கொண்டேன். குளிர் நீர் என்னைச் சில்லிட்டுச் சிலிர்க்கச் செய்தது. மீண்டும் மீண்டும் மெதுவாய் தண்ணீரை வாரி அடித்த பின், ஆற்றின் ஆழத்தை நோக்கி படிபடியாக சென்றேன். மூழ்கினேன்: ‘நதியே, இந்நாளின் மொத்த அழுக்குகளையும் அடித்து செல்வாய். என்னைத் தூய்மையானவளாக ஆக்கு. நீ நிர்மலமாய் இருப்பது போலவே...’ இப்படியாய் ஏதேதோவெல்லாம் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டேன். ‘இந்தபூமிக்கு, இந்தச் சூரியனுக்கு நன்றி’ இருநாள் கழித்து தூய்ஷேன் என்னைப் புகை வண்டி நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்: ‘படி, படி நன்றாகப் படி’ தூய்ஷேன் கூறிக்கொண்டே ரயிலுடன் ஓடிவந்தார்... ‘நீ பெரியவளாகி இங்கே வரும் போது...’
புகைவண்டி சுரங்க வழியைக் கடந்து, நேராக திரும்பி, ஸ்டெப்பி சமவெளியைக் கடந்து, என் புதிய வாழ்க்கையை நோக்கி அழைத்துச் சென்றது.
நான் தொழில் துறையில் படித்தபோது, அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் அவரை நான் நேசிப்பதையும், காலம் முழுவதும் அவருக்காகக் காத்திருக்கப் போவதாகவும் நேரடியாகவே அதில் நான் குறிப்பிட்டேன். ஆனால் அவர் அக்கடிதத்திற்குப் பதில் கடிதம் எழுதினாரில்லை. ஒருவேளை, எனது படிப்புக்கு அது இடையூறாக இருக்கலாம் என்ற கருத்தில், அவர் தொடர்பைத் தவிர்த்துக் கொண்டாரா என்பதும் தெரியவில்லை. என் முதல் ஆய்வுரையை மாஸ்கோவில் சமர்ப்பித்தேன். ஃபுரூன்ஸே நகரத்திற்கு இடம்மாறி சென்றபோது, என் சொந்த கிராமத்திற்கு ஒருமுறை சென்றேன். அனைத்துமே மாறியிருந்தன. புதிய கிராமங்கள், புதிய வயல்கள், புதிய சாலைகள். புதிய பாலங்கள்...
எத்தனை வருடங்கள். கிராமம் நெருங்க நெருங்க நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். நான் அறியாமலேயே, பள்ளி இருந்த குன்றை நோக்கி என் பார்வைத் திரும்பியது. மூச்சே நின்றுவிடும்போல் இருந்தது. இரண்டு பாப்ளர் மரங்கள் இப்போது காற்றில் மெதுவாக அசைந்தாடிக் கொண்டிருந்தன. என் கண்ணீரைப் பார்த்த வண்டியோட்டி கவலையுடன் கேட்டார்: ‘என்ன ஆச்சு?’
நீண்ட நேரம் அங்கேயே நின்று, இலையுதிர்கால இலைகளின் ஓசையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். கால்வாய் முழுவதும் தெளிந்த நீர் சலசலத்துக் கொண்டிருந்தது. அதில் பப்ளர் மரங்களின் பழுப்புநிற இலைகள் மிதந்து வந்துக் கொண்டிருந்தன.
ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. நான் என் கிராமத்திலிருந்து, பள்ளித் திறப்பு விழா முடிந்ததும், திடீரென ஏன் புறப்பட்டுச் சென்றேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்காது. வெட்கம்தான். என் மனநிலை பெரிதும் பாதிப்புற்றிருந்தது. முதலாவதாகப் புதிய பள்ளித் திறப்பு விழாவில் என்னைவிட தூய்ஷேனுக்கே அதிக உரிமை உண்டு என எண்ணினேன். இந்தப் பள்ளிக்குக்கூட ‘தூய்ஷேன் பள்ளி’ எனப் பெயர் சூட்டுவதே பொருந்தும் என்பேன்.
ஜன்னல்களை நான் அகலத் திறக்கின்றேன். தூய காற்று உள்ளே நுழைகின்றது. என் சித்திரத்தில் முதல் நிலை மாதிரிகளைப் பார்வையிடுகின்றேன். முக்கியமானதை, இப்போது நான் கண்டுபிடித்துவிட்டேனா? சிந்தனையில் ஆழ்கின்றேன். ஆனாலும் என் சித்திரத்தை நான் தீட்டத்தான் போகின்றேன். எதை? எப்படி?? தேடத்தான் போகின்றேன்-ஆரம்பத்திலிருந்தே. ஆனால் இக்கதையை நான் பாழ்படுத்தி விடக்கூடாது. அதற்கான உரிமை என்றுமே எனக்கில்லை என்பதும் எனக்கு தெளிவான ஒன்றே.
இதுவே ஐத்மாத்தாவின் கதையாக இருக்கின்றது. அதாவது, அவரது ஓவியனும் சரி, அல்லது, ஓவியனின் சித்திரமும் சரி, அல்லது அவ்ஓவியனை ஊக்குவிக்கும் இந்த கதையும் சரி-இவையனைத்துமே மனிதன் தனது வரலாற்றில், படைத்த, ஒரு காலகட்டத்தின் கதையாகவே இருக்கின்றன. இக்காரணம் தொட்டோ என்னவோ, இக்கதையானது, எமது தமிழ் இலக்கியங்கள் சிலவற்றுடன் ஒப்புநோக்கும் சாத்தியங்களையும் உட்கொண்டு இயங்கத் தலைப்படுகின்றன எனலாம்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.