முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று தன்மேம்பாட்டுரை அணி அணியாகும். தண்டியலங்காரத்தில் தன்மேம்பாட்டுரை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
தன்மேம்பாட்டுரை அணி
தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது தன் மேம்பாட்டுரை என்னும் அணியாகும்.
“தான்தற் புகழ்வது தன் மேம் பாட்டுரை”
(தண்டியலங்காரம் 44)
1.வாலி, தாரையிடம் தன்னைத் தானே புகழ்தல்
வாலியை சுக்ரீவன் போருக்கு அறைகூவல் விடுத்தான். வாலியும் போருக்குக் கிளம்புகிறான். அப்போது தாரை, சுக்ரீவனுக்கு உதவியாக இராமன் வந்துள்ளான் என்பதை, நம் அன்புக்குரியவர்கள் கூறியதை வாலியிடம் கூறினாள். அதற்கு பதில் அளிக்கும் போது, வாலி மூன்று என்று அமைந்துள்ள அழிவற்ற பெரிய உலகங்களில் உள்ள உயிர்கள் யாவும் கருத்தால் ஒத்து ஒருங்கு சேர்ந்தவையாகி, எனக்குப் பகையாக வந்து எதிர்த்தாலும் அவை அனைத்தும் தோல்வியடையும் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவற்றையெல்லாம் கூறுகிறேன் கேட்பாயாக. மந்திரம் என்னும் பெரிய மலை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பு முடிவில்லாமல் கடையும் கயிறாகவும், திருமால் அந்த மத்தாகிய மந்திர மலை ஆழ்ந்து போகாது தாங்கிக் கொள்ளும் ஆமையான அடைக்கலாகவும், சந்திரன் மத்தாகிய மந்திர மலையை அணைத்து நிற்கும் தூணாகவும் விளங்க, அக்கயிற்றைப் பெருமிதத்துடன் ஒருபுறத்தில் இழுத்துக் கடைபவர் இந்திரன் முதலிய தெய்வங்களும், மறுபுறத்தில் கடைபவர் அத்தேவர்களுக்கு எதிரான அசுரர்களும் ஆவர்.
“ மந்தர நெடு வரை மத்து வாசுகி
அந்தம் இல் கடை கயிறு அடைக் கல் ஆழியான்
சந்திரன் தூண் எதிர் தருக்கின் வாங்குநர்
இந்திரன் முதலிய அமரர் ஏனையோர்”
(வாலி வதைப்படலம் 252)
அந்த மத்தாகிய மந்திர மலையைப் பெயர்த்து சுழலுமாறு இழுத்து வலிமை இல்லாத தன்மையரான தேவர்களும், அசுரர்களும் தளர்ச்சி அடைந்த நிலையைப் பார்த்து நான் அவர்களை எல்லாம் விலக்கி, அதைத் தயிறு கடைவது போலக் கடைந்து அவர்களுக்கு அமிர்தம் கிட்ட செய்தது நீ மறக்க கூடியதாகுமோ. (வாலி வதைப்படலம் 253)
என்றும், ஆற்றல் இல்லாத தேவர்களும், அவுணர்களும் வலிமைக்குத் தோற்றனர். அவர்கள் எத்தனை பேர் என்று சொல்லும் தன்மையை உடையவரோ? எமனும் என் பெயரை மற்றவர் சொல்லக் கேட்டு அஞ்சி நடுங்குவான். ஆதலால் என் பகைவனான சுக்ரீவனுக்குத் துணையாக வந்து என்னை எதிர்க்கும் திறமையுடையவர் யார்? ஒருவரும் இல்லை ( வாலி வதைப்படலம் 254 )அறிவில்லாதவர்கள் எதிர்த்து போர் செய்வர் என்றாலும், அவர்கள் அடைந்துள்ள தவத்தால் பெற்றுள்ள வரங்களும் வலிமைகளுமாக உள்ளவற்றை சரிபாதி என்னுடையனவாகும். ஆதலால் என்னைப் பகைத்துப் போரிடுவது அவர்களால் எவ்வாறு முடியும்? ஆகையால் நீ கொண்ட துயரத்தை விடுவாயாக என்று தன்னைத் தானை புகழ்ந்து பேசுகிறான்.
“ஆற்றல் இல் அமரரும் அவுணர் யாவரும்
தோற்றனர் எனையவர் சொல்லற் பாலரோ
கூற்றம் என் பெயர் சொலக் குலையும் ஆர் இனி
மாற்றவர்க்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார்”
(வாலி வதைப் படலம் 254)
2.இராவணன், மாரீசனிடம் தற்பெருமைப் பேசுதல்
இராவணன் மாரீசனிடம் வந்து சீதையைத் தூக்கி வர உதவிகேட்டபோது, மாரீசன் அறிவுரை கூறினான். மாரீசனின் அறிவுரையைக் கேட்ட இராவணன் கங்கை ஆற்றைத் தன் சடையில் தங்கச் செய்த சிவனோடு அவனது கயிலை மலையை ஒரு உள்ளங்கையால் அள்ளி எடுத்த ஆண்மைத் தொழில் புரியும் என் அழகான தோள்கள், இப்போது ஒரு அற்ப மனிதனுக்குத் தோற்கும் எளிமை பெற்றன என்று நீ கூறிவிட்டாய் என்று சொல்லி, தன் கொடிய கண்கள் அனலாக எறிய, புருவங்கள் நெறித்து, நெற்றி மேலே செல்ல பெருங்கோபம் கொண்டான். (மாரீசன் வதைப் படலம் 740)
திக்கு யானைகள் பயந்து ஒழிந்து கொள்ளவும், தேவர்கள் நிலை அழியும் படியும் வானுலகத்தை வாழும் இடமாகக் கொண்ட தேவர்களுடைய இருப்பிடங்களைக் கெடுத்து புகையும்படி செய்தும், எல்லா உலகங்களிலும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்துகின்ற என்னையா தசரதனின் புதல்வர்கள் வெல்வார்கள் இது நல்ல வலிமை அல்லவா?
“திக்கயம் ஒளிப்ப நிலை தேவர் கெட வானம்
புக்கு அவர் இருக்கை புகைவித்து உலகம் யாவும்
சக்கரம் நடத்தும் என்னையோ தயரதன்தன்
மக்கள் நலிகிற்பர் இது நன்று வலி அன்றோ”
(மாரீசன் வதைப் படலம் 749)
சொர்க்கலோகம், பூலோகம், பாதாளலோகம் என்னும் மூன்று உலகங்களுக்கும் ஒரு தனி தலைமைப் பெற்றேன். இப்போது எனக்கு பகைவர்கள் கிடைப்பார்களா? என் இதை காட்டிலும் இனியது வேறு உண்டோ இல்லை. அரசனுக்குப் பாதுகாப்பாக நிற்கும் அமைச்சர்கள் அது கடமையாக அறிவு கூறுவது. நீ செய்யத்தக்க கடமை அன்று நான் இடும் கட்டளைக்கு ஏற்ப உன் சிந்தனையைச் செலுத்தி, நான் சொல்லும் வேலையைச் செய் என்று இராவணன் கூறினான். (மாரீசன் வதைப் படலம் 750)
இவ்வாறு இராவணன், மாரீசனிடம் தன்னைத்தானே புகழ்ந்து பேசினான்.
3.இராவணன், சீதையிடம் தன்னைத் தானே புகழ்தல்
சீதையைத் தூக்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இராவணன் அவளைக் காண வயதான முனிவர் வேடத்தில் வந்தான். சீதை இராவணனிடம் முதிர்ந்த முதுமைப் பருவமுடையவராய் இருக்கிறீர் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளையும் வெற்றிகொள்ள நினைக்கின்றீர். கொடுமையான காட்டு வழியில் நடந்து வருத்தமடைந்துள்ளீர். இப்பொழுது நீர் எங்கிருந்து இங்கு வந்தீர் என்று இராவணனிடம் வினவினாள். தன்னைப் பற்றி தானே புகழ்ந்து அந்த இராவணன் கூறத் தொடங்கினார். இராவணன் என்ற ஒருவன் இருக்கின்றான். அவன் தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுக்கும் தலைவன் ஆவான். சித்திரத்தில் தீட்ட முடியாத அழகுடையவன். பிரம்மனது குலத்தில் பிறந்தவன். தேவலோகத்தோடு மற்றுள்ள எல்லா உலகங்களையும் ஆளுகின்றவன். மந்திரங்கள் நிறைந்த அருமையான வேதங்களை ஓதும் நாவை உடையவன்.(சடாயு உயிர் நீத்த படலம் 843)
சிவபெருமான் வீற்றிருக்கும் புகழ் பொருந்திய பெரிய கைலாய மலையை முன்னொரு காலத்தில் அதனுடைய ஊசி போன்ற சிறிய வேரோடு பறித்து எடுத்த வலிமை உடையவன். திக்குகளைச் சுமந்து கொண்டிருக்கின்ற சிறந்த போர் புரியும் திக்கு யானைகளைத் தாக்கி போரிடும் தந்தங்களைத் தூளாக்கிய தோள்களை உடையவன் அந்த இராவணன். .(சடாயு உயிர் நீத்த படலம் 844)
அவன் தலை வாயிலில் பணி செய்வதற்காக திரண்டு நிற்பவர்கள் தேவர்கள். இன்னும் அவனது பெருமையை எடுத்துச் சொல்ல முயன்றால் சொற்கள் போதாமல் குறைவுபடும். கற்பக மரம் முதலிய தேவலோகத்து செல்வங்கள் அவன் கை வசத்தில் உள்ளன. அவனது அழகிய உறைவிடம் பெருமை மிகுந்த கடலால் சூழப்பட்ட இலங்கை எனும் பொன்னகரமான நல்லகராகும். .(சடாயு உயிர் நீத்த படலம் 845)
தேவர்களின் பொன்னகரான அமராவதியிலும், அழகு பொருந்திய நாகர்களின் போதவதி எனும் பழமையான நகரத்திலும், இந்த மண்ணுலகில் தொடர்ச்சியாக உள்ள சிறந்தவையான எல்லா நகரங்களிலும் உள்ளவையான இன்பம் தருவனவும், குற்றமற்றவையுமான பொருள்கள் அனைத்தும் திரண்டு இராவணனது நல்ல நகரத்திலே உள்ளன.
“பொன்னகரத்தினும் பொலன் கொள் நாகர்தம்
தொல் நகரத்தினும் தொடர்ந்த மா நிலத்து
எந் நகரத்தினும் இனிய ஈண்டு அவன்
நல் நகரத்தன நவை இலாதன”
(சடாயு உயிர் நீத்த படலம் 846)
அந்த இராவணன் பிரம்மன் அளித்த அழிவில்லாத ஆயுளுடன் கூடிய வாழ்க்கையைப் பெற்றவன். சிவபெருமான் அளித்த வாளை ஏந்திய பெரிய கைகளை உடையவன். வலிமை மிகுந்த நவக்கிரகங்களை அடைத்து வைத்த சிறைச்சாலையை உடையவன். எல்லா குணங்களிலும் சிறப்பு பெற்றவன். கொடுமையற்ற நல்ல ஒழுக்கம் உடையவன். பரந்த கேள்வி ஞானம் பெற்றவன். நடுவுநிலைமை உடையவன். மன்மதனும் கண்டு மனம் தடுமாறும், உடல் அழகை உடையவன். எங்களைப் போன்ற முனிவர்கள் அனைவரும் தமக்கு தலைவர் என்று எண்ணி வணங்கும் மும்மூர்த்திகளுடைய சிறப்புகளை முற்றிலும் பெற்றவன்.
“வெம்மை தீர் ஒழுக்கினன் விரிந்த கேள்வியன்
செம்மையோன் மன்மதன் திகைக்கும் செவ்வியன்
எம்மனேனார் அனைவரும் இறைவர் என்று எணும்
மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான்”
(சடாயு உயிர் நீத்த படலம் 848)
எல்லா உலகங்களிலும் உள்ள அழகு நிறைந்த மங்கையர் மிக பலர் அந்த இராவணனது அருளைப் பெறும் விருப்பமுடையவர். அந்த மங்கையர் எப்போதும் அவனையே நினைத்து உருகுவதை உணர்ந்தும் அவர்கள் இன்பம் பெறுமாறு தன்னை அளித்து உதவி செய்ய உடன்படாதவன். ஆனால் தன் மனதுக்கு இனியவளாகிய ஒரு மங்கையை அவன் தேடிக் கொண்டிருக்கிறான். இத்தன்மைகளைப் பெற்ற இராவணன் வீற்றிருந்து ஆட்சி செய்யும் சிறப்பு பெற்ற அந்த இலங்கை நகரில் மிக விருப்பத்தோடு சில நாட்கள் தங்க விரும்பிச் சென்றேன். ஆனால் அந்த இராவணனைப் பிரியும் மனம் இல்லாதவனாய், அங்கே நீண்ட காலம் தங்கி இருந்தேன். இப்போதுதான் அங்கிருந்து திரும்பி வந்தேன் என்று தன்னைத்தானே இராவணன், சீதையிடம் புகழ்ந்து கூறினார். (சடாயு உயிர் நீத்த படலம் 850)
4.இராவணன், வீடணனிடம் தற்பெருமைப் பேசுதல்
வீடணன், இராவணனுக்கு அறிவுரை கூறினான். அதைக்கேட்ட இராவணன் ஐயனே நான் விரும்பத் தகாத உறுதிப்பொருட்களைச் சொல்வேன் என்று சொல்லத் தொடங்கினாய். பித்தர் சொல்லுகின்றனவாய் சொல்லுவனவற்றைச் சொன்னாய். என் பேராற்றலை அற்பமான மனிதர் வெல்வர் என்றாய், நீ அவ்வாறு சொன்னது அவர்களிடம் உள்ள அச்சத்தினாலோ அல்லது அவர்களிடம் நீ கொண்ட அன்பினாலோ அல்லது வேறு எதனாலோ? (இராவணன் மந்திரப் படலம் 112)
இங்கு மனிதர்களாகிய பசுக்களை வெல்வதற்கு நான் வரம் பெறவில்லை என்றாய். உலகத்துடன் எட்டுத் திசைகளையும் தன் ஆற்றலால் தாங்கும் திசை யானைகளை விலகச் செய்த தீ வண்ணனான சிவபெருமானை வெள்ளிமலையுடன் பெயர்த்தெடுக்கவும் நான் வரம் பெற்றதுண்டா? இல்லையே எனவே நீ தீங்கைக் கூறினாய். (இராவணன் மந்திரப் படலம் 113)
உள்ளத்தில் சிந்தித்துப் பார்க்காமல் பொருள் இல்லாதவற்றைப் பேசினாய். போர்க்களத்தில் தேவர்களின் சினம் வாய்ந்த படைகள் என்னை என் செய்தன? மானுடர் எனக்கு வலியராகாமை நிற்க, இந்த அரக்கர் குலத்தில் என்னுடன் தோன்றிய உனக்கு அந்த மானுடர் வலியர் என்று தன்மை உள்ளதோ? (இராவணன் மந்திரப் படலம் 114)
சொல்லத்தக்க சொற்கள் இவை என்று நீ அறிந்தாய் இல்லை அப்பகைவர் என்னிடம் பலமுறை தோற்றும், என்னை ஒரு முறையேனும் வெல்லும் ஆற்றல் பெற்றார் இல்லை. வானத்தையும் பேர்த்தெடுக்கும் பெரு வன்மை கொண்டு என் சுற்றத்தாரையும், என்னையும் போரில் வெல்லும் வீரர் உள்ளனர் என கொள்ளுதலும் கொள்கையாகுமோ? (இராவணன் மந்திரப் படலம் 115)
என் பேராற்றல் தேவர்களிடம் பெற்ற வரத்தால் ஆனது என்று கூறுவாயானால் திரு மூர்த்திகளும், காளையை ஊர்தியாக உடைய சிவனுடன், எல்லாவற்றையும் காக்கும் திருமாலையும் வென்றது எவரிடத்தில் பெற்ற வரத்தினால்? சொல்வாயாக. (இராவணன் மந்திரப் படலம் 116)
ஏற்கனவே ஊனமான சிவனது வில்லை ஒடித்து, ஓட்டையாய் இருந்த பெரிய மராமரத்தின் உள்ளே அம்பைச் செலுத்தி, கூனியின் ஆலோசனையால் அரசாட்சியை இழந்து பெரும் காட்டை அடைந்து, நான் ஒரு சூழ்ச்சியைச் செய்யவும் அதனால் தன் மனைவியை இழந்து இனிய உயிரைச் சுமந்து கொண்டிருக்கும் மனிதனான இராமனின் வலிமையை உன்னையன்றி மதித்துக் கூறுபவர் யார் இருக்கிறார். (இராவணன் மந்திரப் படலம் 120)
நான் இந்திரனைப் பெரிய சிறையில் வைத்த போதும், தேவரின் யானையான ஐராவதத்தின் கொம்பு ஒடிய முறித்த போதும், அந்தத் திருமாலே என் மீது வந்த போர் தொறும் புறமுதுகிட்டு ஓடும்படி அவனைத் துரத்தியபோதும், தேவர்கள் என் எதிரே நில்லாமல் அஞ்சி ஓடுமாறு அவர் உலகை வென்ற போதும், நீ சொல்லியே அந்தத் தேவன் சிறியவனாய் இருந்தானோ, சிவபெருமானும், நான்முகனும் திருமகளுடன் கூடிய திருமாலும் மற்றுமுள்ள தேவர்களும் என் ஆட்சியில் தங்கி அடங்குமாறு மூன்று உலகங்களையும் நான் ஆண்டது கை கொண்ட போர் செய்வதற்குரிய வில்லை ஏந்திய அந்த இராமன் இல்லாததாலோ அல்லது அவன் வன்மை ஒடுங்கி இருந்ததாலோ கூறுவாயாக.
வலிமையுடையவனான திருமால் தன் விஸ்வரூபத்துக்கு உரிய ஆயிரம் பெரும் தோள்களையும், ஆயிரம் தலைகளையும் கொண்டு மிகப் பெரிய மண் உலகையும் உள் அடிக்குள் அடக்கவல்ல பெரிய வடிவத்தை இது தீயது சிறுமையுடையது என்று எண்ணி, நாம் தின்கின்ற வலிமை குறைந்த மனித வடிவத்தை எடுத்தானோ? சிவனும் திருமாலும் என் பெயரைக் கேட்ட அளவில் தளர்ந்த உள்ளம் கொண்டவராய்ச் சென்ற இடமெல்லாம் அவர்கள் ஏறிச் சென்ற காளையிலும், கருடப் பறவையிலும் முதுகில் தைத்த அம்புகள் மலையில் இடி விழுந்த தடம் போல இன்றும் நிலைத்திருக்கின்றன. (இராவணன் மந்திரப் படலம் 127)
இவ்வாறெல்லாம் இராவணன், , வீடணனிடம் தன்னைத் தானேப் புகழ்ந்து கூறினான்.
5.இராவணன், கும்பகர்ணனிடம் தன்னைத் தானேப் புகழ்தல்
கும்பகர்ணன், இராவணனுக்கு அறிவுரை கூறும் போது பதில் அளிக்கும் முகமாக இராவணன் அற்ப மனிதர் இருவரை வணங்கி மேலும் அந்த உடல் வளைந்த குரங்கையும் கும்பிட்டு, உயிர்ப் பிழைத்து வாழும் தொழில், உடம்பைப் பாதுகாத்துக் கொள்வதையே விரும்பும் உன் தம்பி வீடணனுக்கும், உனக்குமே கடமையாகும். மானம் இழந்த செயலை நான் செய்ய மாட்டேன். நீ எழுந்து செல்க என்று கூறினார். (கும்பகர்ணன் வதைப்படலம் 1304)
இவ்வாறெல்லாம் இராவணன், கும்பகர்ணனிடம் தன்னைத் தானேப் புகழ்ந்து கூறினான்.
6.இராவணன், இந்திரஜித்திடம் தன்னைத் தானேப் புகழ்தல்
நிகும்பலை யாகம் வெற்றி பெறாததைத் தொடர்ந்து மிகவும் வருத்தத்துடன் இந்திரஜித், இராவணனை சந்தித்து சில அறிவுரைகளை வழங்க, இராவணன் இந்திரஜித் பரிந்துரைக்கும் போது, முன்பு இப்போரில் ஈடுபட்டு உயிரை இழந்தவரும், இறவாமல் பின்னர் நின்றவர்களும் நீயும் இராம லக்மணர்களை வென்று வெற்றியைத் தருவீர்கள் என எண்ணி நான் இப்போரை மேற்கொள்ளவில்லை. என் வலிமையை நம்பியே இந்தப் பெரிய பகையைத் தேடிக் கொண்டேன். அறியாமையால் இப்படி பேசினாய் உலகம் யாவும் தன் நிலையினின்றும் மாறும் போதும் என் புகழுடன் அழியாத வரலாற்றுப் பாடலுடன் நிறைபேறடையுமாறு தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, நீர் மீது எழும் குமிழி போன்று விரைவில் அழியும் இந்த உடலை விட்டு விடுவேனேயன்றி, எனது இருபது தோள்கள் இருக்க, நான் சீதையை விடுதல் உண்டோ இல்லை.
“பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகு எலாம் பெயரப்பேராக்
காதை என் புகழினோடு நிலைபெற அமரர் காண
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால்
சீதையை விடுவது உண்டோ இருபது திண்தோள் உண்டால்”
(இந்திரசித் வதைப் படலம் 3065)
நான் இராமனைப் போரில் வெற்றி பெறவில்லை என்றாலும், வேதம் உலகில் நிலைபெறும் வரை, இராமன் பெயர் நிலைக்கும் காலம் வரை, இராமன் பெயர் நிலைக்கும் என்றால் என் பெயரும் நிலைக்குமன்றோ? ஏதேனும் ஒரு காலத்தில் காதல் என்பது இல்லாமலே போகுமா? இறப்பு அனைவருக்கும் பொதுஅன்றோ? இன்று இருப்பவர்கள் நாளை மாள்வர் ஆனால் புகழுக்கு சாவுண்டோ இல்லையே. .(இந்திரசித் வதைப் படலம் 3066)
சீதையை நான் விட்டு விட்டேன் என்று கேட்டால் தேவர்கள் என்னை நெருங்கி என்னைப் பிணிப்பதல்லாமல் என்னை ஒரு பொருளாக மதிப்பார்களா? இராமனிடம் தோல்வியடைந்து நான் இறப்பேன் என்றாலும், நான் எளிதில் இறக்க மாட்டேன் நான். பத்து திசைகளையும் வென்றவனாவேன். (இந்திரஜித் வதைப் படலம் 3067)
இவ்வாறெல்லாம் இராவணன், இந்திரஜித்திடம் தன்னைத் தானேப் புகழ்ந்து கூறினான்.
7.அக்க குமாரன் தன்னைத்தானே புகழ்தல்
அனுமனை பிடிக்க தனக்கு அனுமதி அளிக்கும்படி இராவணனிடம் வேண்டும்போது, தூணின் பிளவிலிருந்து தோன்றிய நரசிங்கன் ஆனாலும், வராகமானாலும் என்னுடன் போரிடும் ஆற்றல் இன்றி, அண்டத்தைக் கடந்து அப்பால் போய் மறைந்து கொள்ளுமேஅன்றி, எதிர் நிற்க மாட்டார். இங்கு வந்துள்ள சாதாரணக் குரங்கை உன் முன் கொண்டு வந்து நிறுத்தாவிட்டால் எனக்குத் தண்டனை தருக என்று அக்க குமாரன் வேண்டுகிறான்.
“துண்டத்தூண் அகத்துத் தோன்றும் கோளரி சுடர் வெண் கோட்டு
மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும் மலைதல் ஆற்றா
அண்டத்தைக் கடந்து போகி அப் புறத்து அகலின் என்பால்
தண்டத்தை இடுதி அன்றே நின்வயின் தந்திலேனேல்”
(அக்க குமரன் வதைபடலம் 937)
இவ்வாறெல்லாம் இராவணிடம் தன்னைத் தானேப் புகழ்ந்து கூறினான்.
முடிவுரை
தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது தன் மேம்பாட்டுரை என்னும் அணியாகும்., வாலி தன் மனைவி தாரையிடமும், இராவணன்,மாரீசனிடம், சீதையிடம்,கும்பகர்ணனிடம்,வீடணனிடம்,இந்திரசித்திடமும் தன்னைத் தானே புகழ்ந்து பேசிகிறான் என்பதையும், இராவணனின் மகன் அக்ககுமரனும் தன்னைத் தானே புகழ்ந்து பேசியதையும் கம்பராமாயணத்தின் வழி நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
2.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
3.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
4.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.