உயிர்களில் உயர்வும் தாழ்வும் உண்டாம்
உலகம் நோக்கிய உத்தமம் இதுவாம்
கீழ்சாதி மேல்சாதி இரண்டாம் - இவை
அனைத்தும் செய்யும் தொழிலின் பிறப்பாம்
பணக்காரனும் ஏழையும் வேறாம் - இப்படி
பகர்பவன் பகுத்தறியாத பண்பற்ற பிணமாம்
முதலாளி – தொழிலாளி இருதுருவ வடிவாம்
சுரண்டலும் அடக்குமுறையும் இதற்குச் சுவராம்
பொறாமை தனில் பொங்கும் பேதையரும்
வஞ்சனை அரக்கனை வாஞ்சிக்கும் வரிசையினரும்
பெண்ணடிமைப் பேயைப் பேணிக்கொள்ளும் காளையரும்
ஆடவரை அடக்கி ஆளும் பெண்டிரும்
சக மனிதனையே சமமில்லை என்போரும்
குருதியின் நிறம் சிவப்பென நினையாதவரும்
இனம், மதம் வேற்றுமை பாராட்டுபவரும்
ஜகத்தில் ஜனித்து ஜனித்து மடிகின்றனரே…!
பகுத்தறியும் பண்பினரில்லா பார் தனிலே
சிந்திக்கும் சிந்தயைச் சிதறவிட்டவர் ஆறறிவினரோ…?
அறியாமை இருளுக்கு அறிவொளி பாய்ச்சிட
அனைவரும் அன்புடன் கரம் கோர்த்திட
ஆறறிவால் அண்டம் அகம் மகிழ்ந்திட
கூடிக் குழு அமைப்போம் வாறீர்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.