விலங்கு மருத்துவர் நடேசன் எழுத்தாளரான கதை ! வாழ்க்கைப்பயணத்தில் கனவுகளை நனவாக்கியவருக்கு இம்மாதம் 69 வயது ! - முருகபூபதி -
இலங்கை வடபுலத்தில் ஐந்து தீவுகள் சங்கமமாகும் இந்து சமுத்திரக்கரையோரத்தில் ஒரு காலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியளவு வாழ்ந்த மக்களின் பூர்வீகம் எழுவைதீவு கிராமம். பனையும் தென்னையும் பயன்தரு மரங்களும் மட்டுமல்ல ஆர்ப்பரிக்கும் கடலின் உணவுகளும்தான் அந்தக்கிராம மக்களுக்கு வாழ்வளித்தன. ஒருகாலத்தில் தீப்பெட்டிக்கும் எண்ணெய்க்கும் உப்புக்கும் மாத்திரம் கடைகளை நாடிச்சென்ற அந்தச்சிற்றூர் மக்களுக்கும் கனவுகள் இருந்தன. மின்சார வசதியில்லாத அக்கிராமத்து மக்களுக்கு தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கனவுகளும் அக்கறையும் இருந்தன.
எழுவைதீவு கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பிறந்து, படிப்படியாக கல்வியில் உயர்ந்து, தான் பிறந்த ஊருக்குப்பெருமை சேர்த்தவர்தான் விலங்கு மருத்துவர் நடேசன்.
ஒருவரது வாழ்வு கனவுகளுடன்தான் ஆரம்பிக்கின்றது. இளமைக்காலக்கனவுகள் , வளரும் பருவத்தில் நனவாவது குறிப்பிட்ட பலருக்கு மாத்திரமே சாத்தியம்! மருத்துவமனை வசதியே இல்லாதிருந்த எழுவைதீவு மக்கள் ஒரு காலத்தில் படகில் சென்றுதான் அயலூர் மருத்துவமனைகளில்தான் சிகிச்சைபெற்று வந்தனர்.