IV
“பொன்னுமணிதானே உன் பெயர்…”
“அடியன் ஓம்… ஏமானே…”
‘உன் அப்பன் பெரிய ரகளைக்காரனாமே…”
“நாங்க இஞ்ச வாலாட்டுத நாய்க… நண்ணி மறக்க மாட்டம்” (பக்கம் 77).
“உற்சாகமாக ஒரு நம்பூதிரியும் வந்தார். நம்பூதிரி சதுரங்கப் பலகையை முன்வைத்தார்…”
“பண்ணிமலை விஷயமாய்…”
“அது இப்போது…”
“பண்ணிமலைக்காட்டை இவனுக்கு…”
“கொடு… கொடு…”
“அடியன், நாங்க இந்த உப்ப தின்னுத சாதி, தின்ன நண்ணி ஒருக்காலும் மறக்கமாட்டோம்” என்றான் பொன்னுமணி. (பக்கம் 77-79).
V
இனி இப்படி பெறப்பட்ட, பண்ணிமலை காட்டுக்கு யாது நடக்கின்றது என்பது நாவலில், அத்தியாயம் 11ல் விபரிக்கப்படுகின்றது.
“அவர்கள் அங்கேயே தங்கினார்கள். வாழைக்காய்களையும் கிழங்குகளையும் காட்டிலிருந்து சேகரித்துச் சுட்டுத் தின்றபடியும், அவ்வப்போது முயல்களையும் பறவைகளையும் வேட்டையாடிச்சுட்டுத் தின்றபடியும் வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவருமே காட்டுக்குப் பழகிப் போனவர்கள். காலை முதல் இரவு விழும் நேரம் வரை உழைத்தார்கள். உழைப்பின் பலனைவிட, இயற்கையின் சவால் எழுப்பும் உற்சாகமே அவர்களை இயக்கியது” (பக்கம் 93).
“கொண்டு வந்திருந்த வெடிமருந்து சருகில் தூவப்பட்டது. பொன்னுமணி நெருப்பைச் சிறுகழியில் பற்றச் செய்து வீசி எறிந்தான். பற்றிக் கொண்டது. எல்லாரும் நெருப்பு அணுகாத பாதை நோக்கி ஓடி, ஏறிக்கொண்டார்கள். குபுகுபுவென்று புகை எழ, நெருப்புப் பரவியது. முதலில் சுவாலைகளே தென்படவில்லை. கரிய புகைமட்டும் மேகம் போல எழுந்து கொண்டிருந்தது. சடசடவெனப் பசும்புல் கருகும் ஒலி அப்பகுதியை நிறைத்திருந்தது. மெல்ல மெல்லப் புகை குறைந்தது. ஒளி அதிகரித்தது. சுடர்கள் அசைவதும், நிறமற்ற புகை வானோக்கிப் பரவி எழ, நெருப்பு வெகுவேகமாய்ப் பரவுவதும் தெரிந்தது. வெப்பம் வெகுதூரத்துக்குத்தகித்தது. தூரத்து மரங்களின் இலைகள்கூடப் பட்பட்டென்று சுருண்டு கொண்டன. தளிர்கள் பொசுங்கி பச்சை மணம் எழுந்தது. தேனீக்கள் கலைந்து மழை போல ஒலியெழுப்பின. பறவைகள் பறந்தகன்றன. மர இலைகளிலிருந்து பிடிப்புவிட்டுப் புழுக்கள் உதிர்ந்தன. சுடருக்கு மேலே மறுபுறம் தெரிந்த காடுகள் ஜலபிம்பம் போல நெளிந்தன. தீ ‘ட’ வடிவில் பரவிச் சென்றது. வெகு தூரத்துக்கு அப்பால், புல்லின் மேலே புகை எழுந்தது. அதுவரை தெரிந்திராத பறவைகள் உள்ளிருந்து குபீரிட்டு வானில் எழுந்தன. பறவைகளின் ஒலியால் அப்பகுதியே ரகளைத் தோற்றம் பெற்றது. சில பறவைகள் மட்டுமே பறந்து போவதில் ஆர்வம் காட்டின. பெரும்பான்மை இன்னது செய்வதென அறியாமல் தவித்தபடி, வானில் தங்கி நின்றன” (பக்கம் 93).
தீ நிதானமாய் சுடர ஆரம்பித்தது… நீல நிறமாக நெருப்புக்குழம்பு போல, தழல் அலை மோதியது… சிக்கியப்பறவைகள் சிறகடிக்க அவகாசமில்லாமலேயே கருகி விழுந்தன… அன்றிரவு முழுக்க எரிய நேர்ந்தால்… இரவு தாழ்ந்து வந்தது… “பின்பு எங்கும் கருகல் மணம் வியாபித்திருந்தது. அவர்கள் அனைவரையும் ஒரு விதமான களிவெறித்தான் ஆட்கொண்டிருந்தது. மாமன் மச்சான் முறைவைத்துக் கெட்ட வார்த்தை சொல்லிச் சிரித்தார்கள். பொன்னுமணி அவர்களுடன் சேரவில்லை” (பக்கம் 94).
இயற்கையை வெற்றி கொள்வதும், உழைப்பைப் பராட்டுவதும், மனிதன் தன் வெற்றியைக் கொண்டாடுவது, மாத்திரமல்ல-ஆனால், அவர்களில் ஒருவன் அந்நியப்படுவதும் எழுந்து நின்று - இங்கே வர்ணஜாலம் காட்டுகின்றது. இவ்வர்ணஜாலத்தின் ஊடேயே நாவலின் அரசியல், வலி தெரியாதபடி, வாசகனில் ஏற்றப்படுகின்றது.
VI
40 வருடங்கள் கழிந்திருந்தன. அக்காட்டை விற்ற செல்வந்தர், இன்று அனைத்தையும் இழந்தவராய் (நாயர்-பிராமணன்!) இதே பெருவட்டனை (பொன்னுமணியை) தேடிவந்த காட்சியை, நாவலின்படி, மகன் இப்போது நினைத்துப் பார்க்கின்றான் :
40 வருடங்களுக்கு முன்… அக்காட்சி… கண்ணுக்குள் இருந்தது… “மண் நிறமான சுருங்கிய வேட்டி. அது கணுக்காலுக்கு மேல் தூக்கி நின்றது. பெரிய வெள்ளிப் பூண் போட்ட கைத்தடி. அள்ளி ஒருபுறமாய்ச் சரித்துக் கட்டப்பட்ட நரைத்த குடுமி. இரண்டு வாரத் தாடி. தோளில் ஜரிகை பழுத்த பழைய அங்கவஸ்திரம். இடக்கையில் வெள்ளியிலான வெற்றிலைச் செல்லம்”.
“என்ன வேணும்?”
“பெருவட்டரைப் பார்க்கவேண்டும். நான் ஊரிலிருந்து வருகிறேன் என்றார். அவரது மலையாள உச்சரிப்புக் கூட வித்தியாசமாகப் பிராமணர்கள் பேச்சுப் போல இருந்தது”.
“சற்று நேரத்தில் பொன்னுப் பெருவட்டர் வந்தார்” (பக்கம் 72).
பறிப்பு பின்வரும் விதத்தில் நடந்தேறுவதை நாவல் விஸ்தரிக்கின்றது :
“என்னைத் தெரியவில்லையா, நான்…”
“அறியலாம்-காரியத்த செல்லும்…”
கிழவர் முகம் சுருங்க நின்றார்.
பெருவட்டர் தலைத்துண்டை எடுத்து, துடைத்து, மடியில் போட்டுக் கொண்டார். அரிவாளால் உள்ளங்கையில் உலர்ந்த சேற்றைச் சுரண்டியபடி சரித்துப் பார்த்தார்.
“பாட்டமும் மிச்சவாரமும் ஒன்றும் இப்போது தருவதில்லை.”
“பாட்டமா?”
கிழவர் பதில் சொல்லவில்லை.
“நீரு எனக்குப் பாட்டத்துக்கு என்னவே தந்தீரு?”
கிழவரின் தலை வெடவெடவென்று நடுங்கியது. உதடுகள் துடிக்கத் தொடங்கின. வெற்றிலைப் பெட்டியை இறுகப் பிடித்துக் கொண்டார்.
“வல்ல ரேகையும் உண்டுமா?”
“ஆதாரம் இல்லை என்பதற்காகக் கொடுத்தது கொடுக்கவில்லை என்று ஆகிவிடுமா”
“ஆருவே குடுத்தது? குடுக்கியதுக்கு நீரு ஆருவே? காட்டைக் கை காட்டி விட்டீரு. ஒமக்க காடு எண்ணு ஆரு சென்னா? சோர நீராக்கி அத்துவானிச்சு பொன்னு வெளையச் செய்தது நாங்க. இப்பம் வந்து கைய நீட்டுதிரு. நான் ஆருகிட்டயும் கடன் செல்லுயதுக்கு இல்ல. இது எனக்க மண்ணு. ஒரு சில்லிப்பைசா ஒரு பயலுக்கும் தர ஒக்காது. செண்ணு சோலியப் பாரும் வேய்…”
“பெருவட்டரே, கடவுள் என்று ஒருவர் உண்டு.” (பக்கம் 73).
“ஒமக்க காடுன்னு யாரு சொன்னா?... கைய நீட்டினீரு… பொன்னு வெலைய செய்தது நாங்க…” பொதுவுடமை மக்கள் முன்வைக்கும் உழைப்பின் தர்க்கத்தை ஒத்த தர்க்கம் இங்கு வெளிக்கிளம்புவது தற்செயல் அல்ல. திட்டமிடப்பட்ட, நுண் அரசியல் இது என்பதும், இது தனியாக வேறு இடத்தில் முழுமையாக ஆயக்கூடியது என்பதும் வேறு விடயம்.
இதில், இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று, வரலாற்றின் ஒரு கட்டத்தில், காட்டைப் பறித்தெடுத்த ஒரு உயர்சாதியிடமிருந்து, இப்போது, காடு இரண்டாக முறையாக பறிக்கப்படுகின்றது. ஆனால் இவ்இரண்டாம் பறித்தெடுப்பு உழைக்கும் மக்களுக்கானது இல்லை. மாறாக, ஒரு தனிநபரால், தனது மக்களையே, உறிஞ்செடுக்கத் தயாராகும், ஒரு தனிநபரின் பறித்தெடுப்பே இதுவாகும். ஆனால், இப்படியான பறித்தெடுப்பை ஆற்றுவதற்கான நியாயப்பாட்டின், ஒரு பகுதி, முற்போக்குச் சிந்தனையிலிருந்து, அல்லது உழைப்பாளர் அரசியலில் இருந்து பெறப்படுவதாய் இருக்கிறது என்பதே ஜெயமோகனின் அரசியல் சித்து விளையாட்டின் ஆரம்பமாகிறது. அதாவது, ஒற்றைக் கல்லில் இரட்டை மாங்காய். இதுவே, ஜெயமோகன் முன்வைக்கும் அரசியல்.
சுருக்கமாகச் சொன்னால், ஒரு தாழ்ந்த குலத்தோனின் வளர்ச்சி எவ்விதம் அணுகப்படல் வேண்டும் என்பதே நாவல் கட்டமைக்கும் முதல் அரசியலாகின்றது.
இங்கே முக்கியத்துவப்படுவது, இவ்வகை பறிப்பு, ஓர் உயர்குலத்தின் பார்வையிலிருந்து பார்க்கப்படுகின்றது என்பதேயாகும். மேலும், இவர்களை வக்கிரம் மிகுந்தவர்கள் எனத் தேர்ந்து, கேவலப்படுத்திக் காட்டுதலும், இவர்களது பறிப்பு மாத்திரமே இவ்வுலகில் அக்கிரமானது என வாதிப்பதும், இவர்களது பழைய வாழ்நிலை அருவருக்கத்தக்கது என நிறுவிக்காட்டுவதும் இப்பழி தீர்க்கும் வக்கிர மனநிலையின் ஓர் கூறாகவே இருக்கின்றது.
இது முடிய, நாவலின் இரண்டாம் பகுதியில், மூன்று தலைமுறைகளைக் கண்ட இக்குடும்பம் தனது வளர்ச்சி போக்கில் இழைக்கக் கூடிய அநீதிகளையும், அது இறுதியாய் அடையக்கூடிய பொருளாதார நெருக்கடிகளையும் விஸ்தரிப்பதாய் அமைகின்றது.
இவை அனைத்தும் யாருடைய கண்ணோட்டத்தில், யாருக்காகப் படைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதே, உயர் வாசிப்பு கோரக்கூடிய, அம்சமுமாகின்றது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.